Store
  Store
  Store
  Store
  Store
  Store

சொந்த ஊருக்கு எழுதும் மடல்


அம்மாவைப்போல்
என்னை
வளர்த்த ஜென்மபூமியே
உன்மணல்
புழுதியில்
உருண்டு விளையாடிய
சின்னமகன் எழுதும் அன்புக் கடிதம்

நீ நலமா ?
உன் கருவேலம் முட்களும்
கள்ளிச் செடிகளும் நலமா?

என்னை
நீ நலமாவென திருப்பிக்கேட்டால்
சொல்லுவதற்கு
என்னடம்
நல்ல பதிலே இல்லை
உன்னை விட்டு
வெகுதூரம் சென்ற நான்
எப்போதாவது வரும்
உன்னினைவால் பெருகின்ற
சந்தோஷத்தை தவிற
பெரிதாக எதையும் பெற்றிடவில்லை

ஒட்டைவிழுந்த
கால்சட்டையும்
ஒருபிடி சோறும்தான்
உன்னிடம் இருக்கும்போது இருந்தது
ஆனாலும்
நெஞ்சம் எல்லாம் நிறைந்துக் கிடந்தது


உன்னோடு
உள்ளபோது பெற்ற சாந்தியை
இங்கே வந்து
விற்று வசதிகளை வாங்கினேன்
இன்று
வசதிகளை விற்றாலும்
அமைதி கொள்ள வழியில்லை

நாசியை விற்று
பூக்களை வாங்கியவன்போல்
கண்களை விற்று
கண்ணாடி வாங்கியவன்போல்
மழலையை விற்று
வீணை வாங்கியவன்போல்
மனைவியை விற்று
இல்லறம் வாங்கியவன்போல்
உன்னை விற்று
ஆடம்பரம் வாங்கிய நான்
ஒரு முட்டாள் வியாபாரி!

கல்யாணம் செய்த
பிறகுதான்
பிரமச்சரியத்தின் பெருமை தெரியும்
விடிந்த பிறகுதான்
இரவின் இனிமை புரியும்


கொத்தியப்
பிறகுதான் நாகத்தின் அழகு தெரியும்
கொட்டியப் பிறகுதான்
பாதரசத்தின் வலிமை புரியும்
இழந்தப் பிறகுதான்
எளிமையின் வளமை தெரியும்
ஆம்!
உன்னை இழந்தப் பிறகுதான்
உன் சௌந்தர்யம் தெரிகிறது
உன் சௌகர்யமும் புரிகிறது
பானையை உடைத்து விட்டு
பதபதைத்து ஆவதென்ன
உன்னை
பிரிந்து  விட்டு உருகி
அழுவதால் என்ன பயன்


என் கதை கிடக்கட்டும்
எப்போதும் அது திருப்பதி குப்பைதான்
கிளற கிளற  சிக்கல்களே வரும்
என்னைப்போல்
உனக்கு
ஏராளமான பிள்ளைகள் உண்டு
அவர்களெல்லாம் நலமா ?
அவர்களின் வாரிசுகளும் நலமா ?

காலையும் மாலையும்
உன்னை
அலங்கரிக்க நீண்ட துடப்பத்துடன்
கம்பீரமாய் நடப்பானே பகடை!
அவனும்
அவன் சாராயபுட்டியும்
அவனின் ஒவ்வொரு அடிக்கும்
புதுப்புது கெட்ட வார்த்தைகளை உதிர்ப்பாளே
அவன் மனைவி
அவளும் நலமா ?
சலவைக்குப் போட்ட
கால் சட்டையை
தொலைத்து விட்டதனால்
கல்லால் அடிப்பதாக
கந்தனை திட்டினேன்
அந்தக் கந்தன் நலமா ?
அவனுக்கு அழகான
ஒருபெண் உண்டே
அவள்
பெயர் கூட மறந்து விட்டது
அவளும் நலமா?

உன் வடபுரத்தில்
வரிசையாக
நிற்குமே தென்னை மரங்கள்
அதில் அசைந்தாடியப்படி
தொங்குமே
தூக்கணாங் குருவிக் கூடுகள்
அவைகள் நலமா ?


வாசகச்சாலை
மதில்சுவர் மீது வரிசையாய்
உட்கார்ந்து
கிசுகிசு பேசுமே சிட்டுக் குருவிகள்
அந்தக் குருவிகளை பிடிக்க
பதுங்கி நிற்பார்களே
கால்சட்டை போடாத பொடிசுகள்
பொடிசுகளை
சின்னக்கல் வீசி துறத்துமே
பல்போன பெருசுகள்
அவர்கள் எல்லோரும் நலமா?

நாராயண ஸ்வாமி கோயில்
கிணற்றிலிருந்து
தண்ணீர் எடுத்துவரும்
மங்கையரின் நடையழகை
கண்களால் தின்பதற்கு
வீட்டுத் தின்ணைகளில்
வரிசையாய்
காத்திருக்குமே வாலிபக் கொக்குகள்.....


கொக்குகளை துரத்துவதாய்
பாசாங்கு செய்து
தானும் மேயுமே கிழட்டு நாரைகள்.....
கொக்குகளையும்
நாரைகளையும் கண்மறைத்து
படகுகளுக்கு தூண்டில்
போடுமே மான்விழி மீன்கள்.....
அந்தக்
காட்சிகளை இப்போதும்
காண முடியுமா
உன் வீதி முனையில்  ....?

பைப்படியில்
சத்தமிடும் பெண்கள்
அந்த சந்தத்திற்கு
தலையாட்டும் ஆண்கள்
கைப்பிடியில்
அடங்காத பிள்ளைகள்
பம்பரம் கோலி
பந்தாட்டம்
கில்லி என்று
குதியாட்டம் போடும்
அரைக்கால் சட்டைகள்



பிரண்டையில் ராட்டிணம்
பப்பாளி கிளையில் ஊதுகுழல்
ஆட்டாம் புழுக்கை குத்திய ஓலைக்காற்றாடி
குருவி முட்டை அவியல்
தலை உடைந்தப் பானையில்
கூட்டாஞ்சோறு
ஓணானுக்கு துண்டுபீடி
பிஞ்சுபோன சைக்கிள் டையரில் ரேஸ்
என்று எவ்வளவோ கும்மாளம்
இந்தக் கும்மலில்
காலத்தை
மறந்த சில நரைமுடிகள்

நெஞ்சை நிமிர்த்தி
கைகளை பின்னால் கட்டி
ஆண்பிள்ளைப் போல் நடப்பாளே
நவலடியாள்!
அவள்
முதுகுக்குப்பின்
பதுங்கி நடப்பாரே பூனை புருஷன்?
அவர்
முதுகு இப்போதாவது நிமிர்ந்திருக்கிறதா?


ஆவணிமாதத்து
அம்மன் கொடைவிழாவில்
தாவணிப்போட்ட
பட்டாம்பூச்சிக்களை வலைவீசி பிடிக்க
தலைசீவி
நடைபழகும் விடலைமீசைகள்
முளைப்பாரி பின்னால்
கையில் பக்தியும் கண்ணில் தூண்டிலுமாய்
திரிவார்களே
அவர்கள்
இப்பவும் அப்படியே இருக்கிறார்களா?

ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்
கோரோசனை வாங்கலையோ கோரோசனை!
குடை ரிப்பேர்
அம்மி கொத்தனுமா அம்மி
என்ற குரல்கள்


வளையல்காரனிடமும்
பூக்கார முனியனிடமும்
வம்பளக்கும் பெண்களின் வெடிச்சிரிப்பு

வண்டியிழுக்கும்
மாடுகளின் மணியோசை
அவ்வப்போது ஏழும்பும்
குடிகாரர்களின் ஓலம்
இப்படி எல்லா ஓசைகளும்
இப்போதும் உன் வீதிகளில் கேட்கிறதா?


சங்குடு பாட்டி
இன்றைய மாலை
நேரத்திலும்
வைகுண்டஸ்வாமி கோயிலுக்கு போகிறார்களா?
மதியக் குழம்புக்கு
மீன் வாங்க
மீன்கார துரைராஜ் வீட்டுக்கு முன்னால்
காலையிலிருந்தே காத்திருக்கிறார்களா கிழவிகள்?

காதலனுடன்
ஓடிப்போகும் போது மாட்டிக் கொண்ட
சிவராஜக்கனி அக்காவிற்கு
அர்த்தராத்தியில்
கல்யாணம் நடந்த அரசமர மேடை
இன்னும் அப்படித்தான் இடிந்து கிடக்கிறதா?
அந்த மேடையில்தான்
பிடிபட்ட
சில்லரைத் திருடர்களை
இன்னும் கட்டி வைக்கிறார்களா?


 மாதாக் கோயில் மணியோசையும்
அம்மன் கோயில் மேளமும்
ஒரே நேரத்தில்தான் ஒலிக்கிறதா?

சுருட்டுப் புகைத்தப்படி
நகைச்சுவை நறுக்குகளை
வாரி இரைப்பாரே
லிங்கத்துரை அண்ணன்
அவர் அதே இளமையோடுதான்
வாழைக்கு நீர் பாய்க்க செல்கிறாரா?

தினம்தினம்
இரவு நேரம்
விளக்கு கம்பத்தின் கீழ்
குழந்தைகளை
வட்டமாய் உட்கார வைத்து
நல்லத்தங்காள் அல்லி அரசானி
கதைகளை
ஒப்பாரி பாடலுடன் சொல்வார்களே
தங்கபுஷ்பம் பெரியம்மா
அவர்கள் இன்னும்
அதே வித்தைக் கர்வத்துடன்தான் நடக்கிறார்களா?


 எல்லாமே அப்படித்தான்
உள்ளதென்றால்
ஒரு சின்ன அஞ்சல் அட்டையில்
""ஆம்''
என்று மட்டும் எழுதிப்போடு
அடுத்த நொடியே
அங்குவருகிறேன்
இல்லையென்றால்
மௌனமாய் இங்கு முடங்கிக்
கொள்கிறேன்
மொட்டை மரத்தைப்
பார்க்கும் தைரியம் எனக்கில்லை



  • மேலும் குருஜியின் கவிதைகள் படிக்க இங்கு செல்லவும்



  • Contact Form

    Name

    Email *

    Message *