Store
  Store
  Store
  Store
  Store
  Store

வாழ்ந்தவனுக்கு மட்டும் தான் தெரியும்


   ன்று காலையில் இருந்தே மனது சரியில்லை.  எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை.  பரபரப்பாக இருக்கிறது.  எல்லோர் மீதும், எல்லாவற்றின் மீதும் ஆத்திரம் பீறிட்டு கொண்டு வருகிறது.  கட்டுப்படுத்தவே முடியவில்லை.  சின்ன விஷயம் கூட பெரிய சண்டையில் முடிந்துவிட்டது என்று பலர் பேசுவதை கேட்டு இருக்கிறோம்.  காலையில் இருந்து மதியம் வரை ஒன்றும் பிரச்சனை இல்லை.  அந்த சிவராமனை பார்த்தாலும் பார்த்தேன் எல்லாம் தலைகீழாகிவிட்டது.  சின்ன பசங்ககிட்ட கூட கோபமாக வருது.  அது என்னவோ தெரியலை அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ஆனா அவனை பார்த்தா வீணா டென்ஷனாகி விடுகிறேன் என்றும் சிலர் பேசுவார்கள்.

  அர்த்தமில்லாத எரிச்சலும் கோபமும் ஏன் வருகிறது.  ராத்திரி நேரத்தில் ஒழுங்காக உறக்கமில்லாமல் இருந்தால் சரியான உணவு இரவில் எடுத்து கொள்ளவில்லை யென்றால் அல்லது வேறு எந்த வகையிலாவது உடல் சோர்வு இருந்தால் காலையில் மனது பரபரப்பாகத்தான் இருக்கும்.  காரணமில்லாமல் கோபம் வரும் என்று நமக்கு நாமே சமாதானம் கூறிக் கொள்ளலாம்.


   யாரை பார்த்தாலும் வராத கோபம் சிவராமனை பார்த்தவுடன் ஏன் வருகிறது என்றால் நமக்கு பிடிக்காத ஏதோ ஒரு அம்சம் சிவராமனின் தோற்றத்தில் இருக்கலாம்.  அந்த தோற்றத்தின் சாயல் மனித வடிவமாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை.  சின்ன வயதில் நம்மை கடித்த அல்லது பயமுறுத்திய நாய் பூனையாக கூட இருக்கலாம்.  அதை சிவராமனிடத்தில் பார்க்கும் போது நமக்கு கோபகோபமாக வருகிறது என்று விஞ்ஞான பூர்வமாக விளக்கமும் தரலாம்.

  ஆனால் உண்மையில் இந்த கோபதாபங்கள் ஏன் ஏற்படுகிறது என்பதை நாம் ஆழமாக சிந்திப்பதில்லை.  அதற்கு காரணம் அக்கறையின்மை என்று சொல்வதை விட நமது பலவிதமான வேலைபளுவே ஆகும்.  முடிக்க வேண்டிய கணக்கு பக்கம் பக்கமாக கிடக்கிறது.  மின்சார வரி, தண்ணிர் வரி, இன்சுரன்ஸ் பாலிசி கட்ட வேண்டிய வேலை வேறு பாக்கி நிற்கிறது.  இவ்வளவு இடஞ்சல்களுக்கு மத்தியில் இந்த இனப்புரியாத கோபத்தை பற்றிய ஆய்வு நடத்த முடியுமா?


  சொன்னால் உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும்.  இப்படிப்பட்ட கோபங்கள் என்றில்லை பொதுவாக மனிதனுக்கு வர கூடிய கோபங்கள் எல்லாவற்றிற்குமே ஆசை தான் மூலக்காரணம் என்று பல பெரியவர்கள் சொல்கிறார்கள்.  பஞ்சுமிட்டாய் வாங்க ஆசைபடுவதற்கும், சாலைகளில் குண்டும் குழியுமாக போட்டிருக்கும் அரசாங்கத்தின் மீது கோபபடுவதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம்.  இதற்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ எனக்கு தெரியாது.  நமக்கு வருகின்ற பல கோபங்களுக்கு ஆசைகள் தான் காரணமாக இருப்பது சத்தியமான உண்மை.

  சின்ன வயதில் சினிமாவுக்கு போக ஆசைப்படுகிறோம்.  கொட்டுகிற மழையில் சொட்ட சொட்ட நனைய ஆசைப்படுகிறோம்.  சினிமா பார்க்க அப்பா காசு தர மறுக்கிறார்.  மழையில் நனைய விடாமல் வீட்டுக்குள் போட்டு அம்மா அடைத்து விடுகிறாள்.  உடனே நமக்கு என்ன வருகிறது.  அழுகையும் ஆத்திரமும் தானே, இவை இரண்டும் அதிகரித்து விட்டால் கடைசியில் வருவது தாங்க முடியாத சோகம்.  மனதில் ஆராத ரணம் என்று நம்மால் சொல்லப்படும் அனைத்து நிகழ்வுகளும் இப்படி நடந்தவைகளாகத் தான் நிச்சயம் இருக்கும்.



   பல நாட்களாக தேனீக்கள் கஷ்டப்பட்டு கட்டிய கூட்டை ஒரு சிறிய கல் ஒரு நிமிடத்தில் சிதைத்துவிடும்.  இதை போன்று தான் நமக்கு பல நேரங்களில் வருகின்ற கோபம் நமது வாழ்க்கையின் போக்கையே திசை மாற்றி விடுகிறது.  சில வருடங்களுக்கு முன்பு பாண்டிச்சேரி சிறைசாலையில் தியான வகுப்பு எடுக்க சென்ற போது ஒரு கொலை குற்றவாளியை சந்தித்தேன்.

  நம்புவதற்கு சற்று கஷ்டமாக இருக்கும்.  பத்து பைசா பாக்கு பொட்டலத்திற்காக ஒருவனை கொலை செய்து இருக்கிறான் அவன்.  ஒரு அல்ப பொருளுக்காக ஏன் கொலை செய்தாய்  அந்த கொலையால் செத்தவனின் குடும்பமும் உன் குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதே என்று அவனிடம் கேட்ட போது, அவனிடம் பாக்கு பொட்டலம் தா என்றேன்.  தர மாட்டேன் என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை பாக்கு வாங்க கூட துப்பு இல்லாதவனா நீ என்று கிண்டலாக கேட்டான்.  எனக்கு ஆத்திரம் பொங்கி வந்துவிட்டது.  அருகில் இருந்த கம்பியை எடுத்து அவன் பின்புற கழுத்தில் ஓங்கி அடித்தேன்.  ஒரே அடியில் செத்துவிட்டான்.


   ஒரு விநாடி ஆத்திரம் என்னை உயிரோடு கொன்றுவிட்டது என சொல்லி அழுதான்.  நன்றாக யோசித்து பாருங்கள் இந்த கொலை பாக்கின் மேல் கொண்ட ஆசையால் நிகழ்ந்தது அல்ல தன் சுய கௌரவத்தின் மீது வைத்திருந்த அளவுக்கு அதிகமான ஈடுபாட்டால் நிகழ்ந்தது ஆகும்.  விருப்பம், ஈடுபாடு, ஆர்வம் என்று பல பெயரில் அழைக்கப்பட்டாலும் அவை எல்லாமே ஆசையின் வேறு வேறு பெயர்கள் தான்.

  ஆசைப்படாமல் வாழ முடியுமா?  அப்படி வாழ்ந்தால் மனிதனும் ஒரு சிறு புழுப்போல வாழ்வை முடித்து கொள்ள வேண்டியது தானே.  இன்று உலகத்தில் நிகழ்த்தப்பட்டு இருக்கின்ற சாதனைகள் எல்லாமே இந்த உலகம் மனித முயற்சியால் பெற்றிருக்கும் கொடைகள் எல்லாமே ஆசையாலும் ஆர்வத்தாலும் கிடைக்க பெற்றது அல்லவா?  எல்லோருமே பற்றற்ற நிலையில் கண்களை மூடிக் கொண்டு இருந்தால் இலை தழைகளையும் பச்சை மாமிசத்தையும் தானே மனித குலம் இன்று வரை தின்று கொண்டிருக்க வேண்டும் என்று நமக்கு தோன்றும்.  அந்த எண்ணம் நியாயமாகவும் படும்.


   பாளையங்கோட்டையையும் திருநெல்வேலியையும் ஒரு சிறிய பாலம் எப்படி பிரிக்கிறதோ அதே போலத்தான் ஆசை என்பதையும், முயற்சி என்பதையும் சுய நலம் என்ற சிறு பாலம் பிரிக்கிறது.  அதாவது சுய நலம் இல்லாத முயற்சி மனித சமூகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும்.  சுய நலம் மிகுந்த ஆசை மனித சமூகத்தை கேடுடையதாக ஆக்கிவிடும். 

  இதை சரித்திர நோக்கில் பார்த்தால் மகாத்மா காந்தியிடம் இருந்த ஆசை ஒரு நாட்டை அடிமைதனத்தில் இருந்து மீட்டது.  ஹிட்லரிடம் இருந்த ஆசை பல நாடுகளை அடிமைப்படுத்தி ரசித்தது.


   நான் படிக்க வேண்டும், வேலைக்கு போக வேண்டும், நாலு காசு சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது ஆசை என்று சொல்லப்பட்டாலும் அதன் பெயர் ஆசையல்ல காரணம் அதனுள் என் நலம் மட்டும் மறைந்திருக்கவில்லை, என் குடும்பத்தின் நலனும், என் சமூகத்தின் நலனும் மறைந்திருக்கிறது.  ஆனால் நான் மட்டுமே படிக்க வேண்டும், நான் மட்டுமே காசு சம்பாதிக்க வேண்டும் என்பது தான் நிஜமான ஆசை.  இந்த ஆசையே எனக்கு கோபத்தை உருவாக்குகிறது.  மீளாத துயரத்தில் என்னை ஆழ்த்துகிறது.  முடிவில் என்னை பாதாளத்தின் விளிம்பிலும் கொண்டு போய் நிற்க வைத்து விடுகிறது.

   நிறைவேறாத சின்ன சின்ன ஆசைகள் தான் இனம் புரியாத கோபத்தின் தாய்வீடு.  ஏதோ அந்த கோபம் வரும் போகும் அதனால் ஒன்றும் பெரிய பாதிப்பு இல்லை என்று சொல்லி விட முடியாது.  காரணம் அந்த கோபத்தாலும் ரத்தம் கொதிக்கிறது, நரம்பு தளர்கிறது.  உடம்பில் பல உபாதைகள் ஏற்படுகின்றன.  பல நேரங்களில் நமது வாழ்க்கை பயணமே குடை சாய்ந்து போய் விடுகிறது.  அதனால் தான் சின்னது தானே என்று கோபத்தை அலட்சியப்படுத்தாதீர்கள்.  கோபம் வராமல் இருக்க ஆசை வளராமல் பார்த்து கொள்ளுங்கள்.  இந்த இரண்டும் இல்லாமல் வாழ்வதில் கிடைக்கின்ற சுகம் வாழ்ந்தவனுக்கு மட்டும் தான் தெரியும்.

 


Contact Form

Name

Email *

Message *