Store
  Store
  Store
  Store
  Store
  Store

காலையில் எழு! கடவுளை தொழு!


   விடியற்காலையின் மென்மையான குளிர்ச்சியை அனுபவித்தவர்கள் அந்த சுகத்தை எதற்காகவும் பலி கொடுக்க மாட்டார்கள்

நமக்கு பூபாள ராகம் தெரியாது ஆனால் வெங்கடேசப் பெருமாளுக்கு பாடும் சுப்ரபாதம் தெரியும்

அதன் மேன்மையான ராக லயத்தின் சுகானுபவம் தெரியும்

அதுவும் விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் சுப்ரபாதத்தைக் கேட்கும் ஆனந்தம் இருக்கிறதே அதற்கு சொர்க்கமும் ஈடாகாது

இப்படி எத்தனையோ நல்ல விஷயங்களுக்காகத்தான் அதிகாலையில் கண்விழிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன

இன்றைய சூழலில் அது முடியவில்லை என்று பலர் சொல்கிறார்கள்
 

இன்றைக்கு ஐம்பது வருஷங்களுக்கு முன்பு கூட நமது நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் கிடையாது.

 சரியான போக்குவரத்தும் மருத்துவ வசதியும் கிடையாது.

மாலை ஆறு மணி ஆகிவிட்டாலே மக்கள் வீட்டிற்க்குள் முடங்க ஆரம்பித்து விடுவார்கள்.

 காரணம் தெருவில் வெளிச்சம் இருக்காது.  நாய் மற்றும் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

  இருட்டில் வெளியில் நடமாடினால் அவைகளால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

  அது மட்டுமல்ல தொழில்களை சரிவர செய்ய முடியாது. 

இதனாலேயே மனிதர்கள் சூரியன் மறையத் துவங்கியவுடன் இரவு உணவை முடித்து விட்டு உறங்க ஆரம்பித்து விடுவார்கள். 

ஏழு மணிக்கு உறங்க ஆரம்பிப்பவன் அதிகாலை மூன்று மணிக்கு துயில் எழுவதனால் எந்த கஷ்டமும் படமாட்டான்.

 நான்கு மணிக்கு எல்லாம் வயல் வேலையில் இறங்கினால் சூரியன் உச்சிக்கு வரும் போது சேற்றிலிருந்து எழுந்து விடலாம். 

ஆனால் இன்று நிலைமை வேறு விதம்.

 கிராம தெருக்களை கூட சோடியம் விளக்குகள் அலங்கரிக்கின்றன. 

உடல் வளைந்து செய்யும் வேலைகளை போலவே உடகார்ந்து செய்யும் வேலைகளும் அதிகமாகி விட்டது.

  உட்கார்ந்து செய்யும் வேலைக்கு வெப்பமான பகல் பொழுதை விட சற்றேனும் குளிர்ச்சியான இரவு பொழுது நன்றாகவே இருக்கும்.

 ஆகவே நள்ளிரவை தாண்டியும் மனிதன் வேலை செய்கிறான்.

 இரவு ஒரு மணிக்கு உறங்க செல்பவன் நான்கு மணிக்கு எழுவது என்பது ஆகாத காரியம். 

சந்தியாவந்தனம் செய்வது, பூஜை புனஸ்காரங்கள் செய்வது போன்றவற்றை அதிகாலையிலிருந்து நகர்த்தி காலை பத்து மணிக்குள் முடித்துக் கொள்ளலாமா?  என்று இன்றைய நவீன மனிதன் கேட்கிறான்.

  அவன் கேட்பதில் தவறு இருப்பதாக சொல்ல முடியாது.

 நவீன மருத்துவர் ஒருவர் என்னிடம் ஒரு தகவலை சொன்னார்.  

 

    முன்பெல்லாம், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தான் வியாதிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். 

இந்த வயதில் இந்த வியாதி தான் வரும் என்று எளிதாக சொல்லிவிடலாம்.

 ஆனால் இப்பொழுது அறுபது வயதில் வரக்கூடிய வியாதி இருபது வயதில் வருகிறது. 

சில வியாதிகள் எதனால் வருகிறது இது என்ன வியாதி என்று கூட தெரியவில்லை என்றார். 

இந்த நிலைக்கு காரணம் என்ன?

 மிக முக்கியமாக இரண்டு விஷயத்தை சொல்ல வேண்டும்.

 ஒன்று நமது உணவு முறை மாறிவிட்டது.

 மற்றொன்று நமது பழக்க வழக்கங்களும் மாறிவிட்டது.

 உயிர்களாக படைக்கப்பட்ட எல்லாமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்ய வேண்டும்.

 குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். 

தண்ணீர் துவங்கி மனிதன் வரைக்கும் இரவு பொழுது என்பது உறக்கத்திற்கும் ஓய்வெடுப்பதற்கும் ஆகும்.

 உறங்க வேண்டிய நேரத்தில் விழித்து இருந்தால் நோய்கள் எல்லாம் நம்மை நோக்கி வரும்.

 அதனால் தான் நமது பெரியவர்கள் அதிகாலையில் எழ வேண்டும் என்றார்கள்.

  நாம் நமது இரவு நேரத்தை அமெரிக்கர்களின் பகல் பொழுதிற்காக பலி கொடுக்கின்றோம்.

 இஸ்லாமியர்கள் ஐந்து வேளை தொழுவார்கள் என்று நமக்கு தெரியும். 

அவர்களின் மிக முக்கியமான தொழுகை அதிகாலை மூன்று மணிக்கு உண்டு.

 மூன்று மணி முதல் மூன்று ஐந்து நிமிசம் வரை பிரபஞ்சம் முழுவதும் ஒரு வித அமைதி நிலவுகிறது. 

அந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கின்ற பல பிராத்தனைகள் கண்கூடாக நிறைவேறியிருக்கிறது.

 நமது பெரியவர்களும் பிரம்ம முகூர்த்தம் என்பது அந்த நேரத்தில் தான் துவங்குகிறது என சொல்கிறார்கள்.

  நம்மால் மூன்று மணிக்கு எழுந்திருக்க முடியுமா என்று சொல்வதெல்லாம் வெறும் சப்பை கட்டுதல் ஆகும்.

 மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்.  என ஒரு அழகான கவிதை வரி உண்டு. 

நம் வேலைகளை திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி கொண்டால் அதிகாலை துயில் எழுச்சி என்பது சாத்தியப்படாத விஷயமே அல்ல. 

ஆரோக்கியம் வேண்டுபவர்கள் ஒழுங்கும் கட்டுப்பாடும் வேண்டுபவர்கள் காலையில் கண் விழிப்பது சாலச்சிறந்ததாகும். 

மனிதர்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காகவே சாஸ்திரங்கள் அதிகாலை துயில் எழுச்சியை வலியுறுத்துகின்றன.






Contact Form

Name

Email *

Message *