Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஹசராயை கொத்தும் காக்கைகள்

              மாசு இல்லாத தண்ணிர்,தூசு இல்லாத காற்று, இராசாயனம் இல்லாத மண், வஞ்சகமில்லாத மனிதன் எப்படி அரிதானதோ எப்படி தேடினாலும் கிடைக்காததோ, எப்படி கனவில் கற்பனையில் மட்டுமே காண கூடியதோ அப்படிப்பட்ட அதிசய பொருள் தான் ஊழல் இல்லாத பொது வாழ்க்கை. இன்று லாபம் தரக்கூடிய தொழிலாக இருக்க கூடியது பொறியியல் கல்லூரி நடத்துவதும், ரியல் எஸ்டேட் பண்ணுவதும் தான். ஆனால் இவைகளுக்கு கூட முதல்கட்ட முதலும் சற்று கடினமான உழைப்பும் தேவை. ஆனால் உழைப்பும் தேவையில்லை முதலும் தேவையில்லை, மற்றவர்களை ஏமாற்றுவது தெரியாமல் ஏமாற்ற தெரிந்தால் போதும் பல லட்சம் கோடிகளை சம்பாதித்து விடலாம் என்ற நிலையில் இருப்பது அரசியல் ஒன்றாகும்.


 எனக்கு தெரிந்த ஒருவர் சொந்த கிராமத்தில் சாதாரண ஓட்டு வீடு ஒன்றே அவரது சொத்து. காலையில் சாராயகடைக்கு போனார் என்றால் இரவில் தான் வீடு திரும்புவார். தாய் தகப்பனை பிடித்து வெளியில் தள்ளிவிட்டு பெண்டாட்டியை அடித்து உதைத்து மூலையில் எரிந்துவிட்டு பெருக்காத தரையில் கால் கையை பரப்பி படுத்தார் என்றால் அதிகாலை பத்து மணிக்குதான் எழுந்திருப்பார். மனைவி கூலி வேலைக்கு போனால் தான் வீட்டில் அடுப்பு எரியும். திடிரென அவர் ஒரு ஜாதி கட்சியில் சேர்ந்து விட்டார். அது புதியகட்சி என்பதினால் வேறு ஆள்கிடைக்காமல் இவரை ஒன்றிய செயலாளர் பதவியில் நியமித்தும் விட்டார்கள்.
          
         பிறகென்ன ஊரில் எதாவது வம்பு வழக்கு என்றால் கட்ட பஞ்சாயத்து பேசவது அடிக்கடி போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று வருவது என பொது சேவையை தொடங்கி விட்டார். கிழிந்த லுங்கியும், பனியனும் போய் வெள்ளை வேட்டியும் சட்டையும் என சீருடைக்கு புரொமோஷன் ஆகிவிட்டார். கட்சிக்கான அடிதடி கூட்டம் கப்பம் வசூலித்து கொள்கை விளக்க பொதுகூட்டம் சாலைகளை மறித்தும், பேருந்தில் கல் எரிந்தும் சில பல அறப்போரட்டங்களை நடத்தி கட்சி தலைமையின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார்.


      சில மாதத்திற்கு முன்பு நண்பர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று இருந்தேன். மண்டபத்தில் திடிர் பரபரப்பு என்னவென்று விசாரித்தால்  M.L.A  வருகிறார் என்றார்கள். அவரும் வந்தார் சாட்சாத் சாராயம் குடித்துவிட்டு அவிழ்ந்த லுங்கியை கட்டமுடியாமல் தள்ளாடி தள்ளாடி நடந்து தலை குப்புற விழந்த அந்த குடி மன்னர்தான் இப்போதைய M.L.A ஒட்டு வீடும் மாறிவிட்டதாம். பல வீடுகள் கட்டி வாடகைக்கு வேறு விடுகிறாரம். ஐம்பது ஏக்கருக்கு மேல் நஞ்சை நிலம் உள்ளதாம். உள்ளுர் கரும்பாலையில் பெரிய பங்கு இவருக்கு சொந்தமாம். பழைய மனைவியின் மீது போனால் போகட்டும் என்று கருனை காட்டி வீட்டோடு இருக்க செய்துவிட்டு வெளியில் நான்கு வைப்பாட்டிகளாம்.

      ஆனானப்பட்ட அம்பானி கூட வெறும் கையால் கர்ணம் போட்டு இவ்வளவு சம்பாதித்து இருக்கமாட்டார். ஆளுங்கட்சியிலும் இல்லை எதிர்கட்சியாகவும் இல்லை. சாதாரண ஒரு கட்சியின் M.L.A வாக இருந்தே இத்தனை சம்பாதிக்க முடிகிறது என்றால் ஆளுங்கட்சி M.L.A ஆகவோ அமைச்சராகவோ வாரிய தலைவரோ இருந்தால் நினைத்து பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. ஆக பொது வாழ்கை என்பது தான் இன்றைய நிலையில் லாபத்தை மட்டுமே தர கூடிய தொழிலாக இருக்கிறது.

              எங்கே திரும்பினாலும் லஞ்சமும் ஊழலும் தான் கண்ணில் படுகிறதே தவிர நேர்மை என்பதை மருந்துக்கு கூட காண  முடியவில்லை. அரசாங்க துறையில் மட்டுமே கோலோச்சி கொண்டிருந்த லஞ்ச லாவண்யம் இன்று தனியார் நிறுவனங்கள் வரையிலும் பல்கி பெருகிவிட்டது. ஒரு தனியார் ஆலையில் ஹெல்பர் வேலையில் சேர கூட பல ஆயிரம் ருபாய்க்கள் அன்பளிப்பு வழங்கினால் தான் காரியம் ஆகுகிறது.


      அதிகார மட்டத்தை தூய்மையாக்க வேண்டுமென அயராது பாடுபட்ட பல நல்ல தலைவர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டார். பாறையில் மோதினால் மண்டைதான் உடையும். பாறைக்கு எதுவும் ஆகாது. என்பது போல லஞ்சம் இன்று குன்றென நிமிர்ந்து நிற்கிறது. நம் நாடு மட்டுமல்ல உலகில் எந்த மூலையிலும் லஞ்சம் இல்லாமல் எதுவும் நடக்காது என்ற நிலை நிரந்தரமாகிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில் அன்னாஹசாரே என்பவர் ஊழலை ஒழித்து தீருவது என்று உறுதியுடன் செயல்பட ஆரம்பித்து இருக்கிறார்.

  சில வருடங்களுக்கு முன்பு குமுதம் அல்லது ஆனந்த விகடனில் ஒரு செய்தி படித்த ஞாபகம் இருக்கிறது. மதுரைக்கு பக்கத்தில் ஒரு பெரியவரும் அவரது மகனும் பேரனும் நீண்ட தலைமுடியோடு இருக்கிறார்களாம் முடியை வெட்டிக்கொள்ள அவர்கள் மறுப்பதற்கு சுவாராசியமான ஒரு காரணம் சொல்கிறாரார்களாம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் நேரில் வந்து இவர்களை அழைத்து கொண்டு குல தேவதை கோவிலுக்கு போவார்களாம். அங்கே ஐந்து பேரும் சேர்ந்து மொட்டை போட்டு கொள்வார்களாம். அதுவரை முடி துறப்பது இல்லையென்று உறுதியோடு இருக்கிறார்கள்.


  இப்படி நாட்டில் சில அப்பாவிகள் தங்கள் மனதில் இருக்கும் உன்னதமான கற்பனை என்றாவது ஒரு நாள் நிறைவேறியே தீரும் என நம்பி கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அப்பாவிகள் அன்னாஹசாரேவின் நல்ல எண்ணம் ஈடேறும் என்று நம்புகிறார்கள் தவறான கனவு என்றால் அதை நாம் கலைக்கலாம். இது நல்ல கனவு என்பதினால் கலைப்பதற்கு நமக்கு மனம் வரவில்லை.

          அன்னாஹசாரே கோருகின்ற படி லோக்பால் மசோதா வந்துவிட்டால் நிஜமாகவே ஊழலும் முறைகேடும் மறைந்தே போய்விடுமா? என்றால் நிச்சயமாக அவரால் ஆம் என்ற பதிலை தரமுடியாது. லஞ்சத்தை ஒழிப்பதற்கென்று இன்று பல சட்டங்கள் இருக்கின்றன. சட்டத்தின் பிடியில் சிக்கி கொண்டால் தப்பிக்கவே முடியாத தண்டனைகளும் இருக்கின்றன. அதனால் என்ன பிரயோஜனம்?

  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த சட்டங்கள் எல்லாம் புத்தகங்களில் பதுங்கி அலமாரிகளில் ஓய்வெடுக்கிறதே தவிர தப்பு செய்த ஒரு சுண்டெலிக்கு கூட தண்டனை வாங்கி கொடுக்கும் திராணி அதுக்கில்லை. அதே போலத்தான் லோக்பால் மசோதா நிறைவேறி சிலருக்கு பதவிகளை கொடுத்து குளிருட்டப்பட்ட அறைகளில் கருத்து அரங்கு நடத்தி பத்திரிக்கையில் ஏதோ ஒரு மூலையில் கட்டடம் கட்டி சின்ன செய்தியாக வருமே தவிர எதுவும் நடந்து விடபோவதில்லை.


    அதாவது நமது நாட்டிலுள்ள சட்டங்கள் அனைத்துமே சரியானது தான். அதை அமுல்படுத்த கூடிய மனிதர்களிடம் தான் குறைகள் மண்டி கிடைக்கிறது. இப்போது தேர்தல் கமிஷனின் புண்ணியத்தால் நமது காதுகள் செவிடாகாமலும் வீட்டு சுவர்கள் ஆபாசாகாமலும் தப்பித்து கொண்டோம். முதலமைச்சர் கூட கமிஷனின் கெடுபிடிகளை பார்த்து அதிர்ந்து போய் இருக்கிறார். பத்து பதினைந்து வருடத்திற்கு முன்பு கூட இப்போது இருக்கின்ற அதிகாரம் தான் தேர்தல் கமிஷனுக்கு இருந்தது. ஆனால் அப்போது வேட்பு மனுக்களை வாங்குவதும் வெற்றி தோல்விகளை அறிவிப்பது மட்டுமே அதனுடைய பனியாக இருந்தது.

 ஆனால் டி.என்.சேஸன் என்பவர் எப்போது தேர்தல் கமிஷனராக வந்தாரோ அப்போது தான் அதன் அதிகாரம் என்னவென்று மக்களுக்கு மட்டுமல்ல தேர்தல் அதிகாகளுக்கே தெரிந்தது. ஆக சட்டத்தாலோ, குழுக்களாலோ ஆகப்போவது ஒன்றுமில்லை, துணிச்சலும், பொதுவாழ்வில் நேர்மையும் உடைய மனிதர்கள் சட்டத்தை அமுல் நடத்துவதில் காட்டும் அக்கரையில்தான் எல்லாமே இருக்கிறது என்பது புரிந்தது

    ஆனால் ஒன்றை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஹசாரே என்ற தனிமனிதரின் போராட்டத்திற்கு நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் பல லட்சமக்கள் தங்களது ஆதரவை பல வழிகளில் பதிவு செய்து இருக்கிறார்கள். அதுதான் அது ஒன்று தான் அரசாங்கத்தின் இரும்பு திரை போட்ட கண்களை திறந்து பார்க்க வைத்திருக்கிறது. பல ஊழல் பேர்வழிகளின் மனதில் கடைசி மூலையில் சிறிது அச்ச நெருப்பை மூட்டவும் செய்திருக்கிறது. இன்று இல்லையென்றாலும் வெகு விரைவில் ஒரு நாள் நன்றாக உறங்கி கொண்டிருக்கும் கடைசி இந்தியன் விழித்தெழுவான். பாதகம் செய்பவரை கண்டால் பயந்தொழியாமல் மோதி மிதித்து கீழே தள்ளி முகத்தில் உமிழ்வான் என்ற எண்ணம்  துளியளவு படபடப்பை ஏற்படுத்தியுள்ளது.


     அப்பாவி இந்தியன் கண் விழித்து விட்டால் படுபாவிகளின் கதி என்னாவது? அதனால் ஹசாரே என்ற சிறு நெருப்பு பற்றி கொள்வதற்கு முன்பாகவே அனைத்து விட வேண்டும் என்று நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள அண்டங் காக்கைகள் கரைய ஆரமித்து விட்டன. காக்கை கூட்டத்தின் தென்னக பிரதிநிதியான அய்யா மானமிகு கி . வீரமணி அவர்கள் ஹசாரே உண்ணாவரதம் இருந்த மேடையை பார்த்திர்களா? அங்கே பாரத மாதா படம் வைக்கப்பட்டிருக்கிறது. காவிக்கொடி ஏற்றப்பட்டிருக்கிறது. எனவே ஹசாரே மதவாத சக்திகளின் ஊது குழல் தான் என்ற பெரிய அங்காலாயிப்பு  புராணத்தை அவிழ்த்து விட ஆரம்பித்து விட்டார்.

    பாரத மாதா படத்தை வைத்திருப்பவர்கள் அனைவரும் மதவாதிகள் என்றால் தமிழ் தாய் படம் வைத்திருப்பவர்கள் மட்டும் தமிழ் தீவிரவாதிகளாகி விட மாட்டார்களா? தமிழ் பேசும் அனைவருக்கும் தமிழ் தாய் படம் எப்படி பொதுவானதோ அதே போலவே ஒருங்கினைந்த இந்தியாவை நேசிக்கும் எவருக்கும் பாரத மாதா படம் பொதுவானது.

 இன்று மதசார்பின்மை பற்றி வாய்கிழிய பேசிக்கொண்டிருக்கும் காங்கிரஸ்காரர்கள் தான் ஒரு காலத்தில் பாரத மாதாவை தெய்வ திருவுறுவாக சித்தரித்து நாடு முழுக்க பிரச்சாரம் செய்தார்கள், இன்று அவர்களுக்கு பாரத மாதா பதவியையும், பணத்தையும் தராமல் சோனியா மாதாவே அவை எல்லாத்தையும் தருவதினால் பாரத மாதாவை தெருவில் நிறுத்திவிட்டு போய்விட்டார்கள்.

  
மற்றவர்கள் ஏதோ பாரத மாதாவின் மீது துளியளவு இரக்கம் கொண்டு அவளை நினைவில் வைத்திருக்கிறார்கள். என்றால் அய்யா வீரமணி போன்றோர்களுக்கு அதுவும் பிடிக்கவில்லை போலும். இனி காவி கொடிக்கு வருவோம். காவி என்பது இந்து மதத்தை மட்டும் குறிக்கும் நிறமல்ல, தியாகம் அற்பணிப்பு போன்றவைகளையும் உணர்த்தும் வண்ணமாகும். அதை இந்து மதத்தோடு தான் சம்மந்தப்படுத்த வேண்டுமென்ற அவசியமில்லை பசுமையை குறிக்கும் பச்சை நிறத்தை இஸ்லாத்தோடு தான் சம்பந்தபடுத்தி பார்பேன் என்ற யாராவது பிடிவாதம் செய்தால் அது எப்படி அறியாமையோ அப்படித்தான் இதுவும்.

            மேலும் நாத்திக கொள்கையை உண்மையென்று நம்பி கடைபிடிக்க வீரமணி அவர்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அதே உரிமை இந்துத்துவா கொள்கையை உண்மையென நம்பினால் அதை முழுமையாக கடைபிடிப்பதற்கு ஹசாரேக்கும் உரிமை உண்டு.

 யார் என்ன கொள்கையை நம்புகிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்களால் சமுதாயத்திற்கு என்ன கிடைக்கிறது என்பது தான் முக்கியமானது. ஹசாரே தான் பின்பற்றும் சுதேசிய கொள்கையை செயல்படுத்தி தன்னால் முடிந்தளவு ஒரு கிராமத்தையே தன்னிறவு அடைய செய்திருக்கிறார்.

 ஆனால் வீரமணி போன்றோர்கள் தாங்கள் நம்புகின்ற நாத்திக கொள்கையால் தங்களை தன்னிறவு பெற்றவர்களாக ஆக்கி கொண்டதை தவிர வேறு என்ன செய்ய முடிந்திருக்கிறது? முதலில் இவர்கள் சமுதாய அக்கறை கொண்டவர்கள் என்றால் மேடையில் பேசுவதை விட்டுவிட்டு களத்தில் இறங்கி தமிழகத்தில் எதாவது ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதற்கு செய்ய வேண்டிய ஆக்கபூர்வ பணிகளை செய்துவிட்டு பேசினால் நன்றாகயிருக்கும்


 அதற்காக லோக்பால் மசோதாவில் அன்னாஹசாரே உறுதியோடு இருக்கிறார் என்று நான் சொல்ல வரவில்லை. ஹசாரேயின் முயர்ச்சிகளுக்கு நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்தவுடன் தனது மதசார்பின்மையை காட்டி கொள்ள படாதபாடு பட்டுவிட்டார் ஹசாரே

 ஒருவரை மதவாதி என்று பத்து பேர் பேசுவதினால் அவருடைய நற்செயல்கள் மறைந்து போய்விடாது. மோடியின் மத சிந்தனையில் நமக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரது நேர்மையில், மக்கள் பணியில் குறை சொல்வதற்கு எந்த காரணங்கலும் கிடையாது.

 நரேந்திர மோடியை போலவே அச்சுதானந்தன், புத்தேவ் பட்டாச்சாரியா, நிதிஸ் குமார், போன்றோர்களும் நியாயமான முதலமைச்சர்களே ஆவார்கள். அதற்காக அச்சுதானந்தன் ஒரு சமூக சேவகரை பாராட்டுகிறார் என்றால் அந்த சேவகரை கம்யூனிஸ்ட் கட்சிகாரர்கள் என்று முத்திரை குத்திவிட முடியுமா? எனவே ஹசாரே மோடியின் பாராட்டுதலை கேட்டு அச்சப்பட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

  இதைவிட கொடுமை காங்கிரஸ் காரர்களின் விமர்சனத்தை கண்டு சோனியாவற்கு கடிதம் எழுத வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை. இதனால் தான் ஊழல் ஒழிப்பில் உங்களோடு நானும் இணைவேன் என்று சோனியா உண்ணாவிரத அறப்போராட்டத்தையே தமாஸ் போராட்டமாக மாற்றிவிட்டார்.

 நாட்டுக்கு விடுதலை வேண்டுமென்று காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்தால் நானும் உங்கள் பக்கம் தான், என்னையும் போராட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள் என இங்கிலாந்து அரசியார் கடிதம் எழுதினால் எப்படி அது நகைச்சுவையோ அப்படித்தான் இதுவும். எனவே ஹசாரேயின் லோக்பால் மசோதா சம்பந்தமான போரட்டத்தில் உறுதியும் தெளிவும் இருப்பதாக நம்மால் நம்ப முடியவில்லை.


    இன்னொரு முக்கியமான விஷயத்தை இங்கு சொல்லவேண்டும். ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்தை கட்டபஞ்சாயத்துக்கு சமம் என்று வீரமணி அவர்கள் திருவாய் மலர்தருளி உள்ளார். அது மட்டுமல்ல கூடவே காந்தியின் உண்ணா நோன்பை கூட பெரியார் ஏற்றுகொள்ளவில்லை என்ற ஒரு முத்தை உதிர்த்தும் உள்ளார்.

 நாடே விடுதலைக்காக வரிந்துகட்டி போராட்டத்தில் மும்பரமாக இருந்த போது விடுதலையே வேண்டாம் சுகந்திர நாள் என்பது துக்கதினமென கொண்டாடியவர் பெரியார். அவர் எப்போதுமே நடைமுறைக்கு சாத்தியமுள்ளதை ஏற்று கொள்ளமாட்டார். அவர் சீடரால் மடடும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

 உண்ணாவிரதம் என்பது கட்டபஞ்சாயத்து முறை என வீரமணி அவர்கள் சொல்வது நிஜமென்றால் இலங்கை தமிழர்களுக்காக கலைஞர் அவர்கள் மதிய உணவு வரை உண்ணாவிரதம் இருந்தாரே அப்போதும் இவர் இதே கருத்தை சொல்லியிருந்தால் வீரமணி அவர்களின் சமுதாய அக்கரையை உண்மையென நாம் நம்மலாம். அதை விட்டுவிட்டு இதை மட்டும் பேசும் போது தான் நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்கு சந்தேகமே வருகிறது.

           எனவே அன்னாஹசாரே போன்றவர்களிடத்தில் காந்திக்குரிய கொள்கைப்பிடிப்பு வரும்வரை வீரமணி போன்றோர்கள் கரைந்து கொண்டுதான் இருப்பார்கள். அப்படி கரையும் காக்கை கூட்டத்தில் நாமும் ஒன்றாக இல்லாமல் கருடனாக மாற வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் காந்தி காட்டிய வழியில் போவது மட்டுமல்ல காந்தியாகவே மாறியாக வேண்டும் அப்போது தான் நாடு உருப்படும்  


Contact Form

Name

Email *

Message *