Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆதலினால் காதல் செய்வீர்...!

   லகைப் படைத்து காத்து ரட்சித்து கொண்டிருக்கும் சர்வ வல்லமை பொருந்திய இறைவனின் மீது தீராத காதல் கொள்வதே பக்தியாகும்.

 மனிதர்கள் மீது வைக்கின்ற காதல் மோகத்தை அடிப்படையாக கொண்டிருக்கும்

 கடவுள் மீது வைக்கின்ற காதல் மோகத்தை அழித்து அதன் மீது முளைப்பதாகும்.

  உணர்வுகளை உலக மயமாக்கி அகம்பாவத்தை அழித்து சிறுமையை தவிர்த்து தியாகம் செய்ய கூடியவனாக மனிதனை மாற்றுவது பக்தி யோகமாகும்


 இந்த பக்தியின் உயர்ந்த நிலையை நாரத பக்தி சூத்திரம் சாண்டில்ய பக்தி சூத்திரம் பகவத் கீதை பாகவதம், திருவாசகம் போன்ற நூல்கள் பக்தியின் சிறப்பை விவரித்து கூறுகின்றன.

  மனிதனாக பிறக்கின்றவன் வாழ் நாள் முழுவதும் எதையாவது நேசித்த வண்ணமே இருக்கிறான்.

  குழந்தையாக இருக்கும் போது பொம்மையின் நேசம்,

 பாவாடை கட்டி தாவணி போட்டவுன் மீசை முளைத்த பையன் மீது நேசம், கணவன் மீது நேசம், பிள்ளைகள் பிறந்தவுடன் அவைகளின் மீது நேசம்,

 அதன் பிறகு பேரக் குழந்தைகள் என நேசத்தின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.  


 நேசத்தின் சொந்த சகோதரன் துவேசமாகும்

  இதுவும் நமது வாழ்க்கையோடு பின்னி பிணைந்து கூடவே வருகிறது.

 புளியங்காய் பறித்து உப்பு மிளகாயில் நசுக்கி கண்ணில் நீர் சொட்ட தின்றதை அம்மாவிடம் சொல்லி விட்ட தோழியின் மீது துவேசம்

 நழுவும் புடவையை வெறித்து பார்த்த பக்கத்து வீட்டு பையன் மீது துவேசம்,

தொட்டால் குற்றம்.  நின்றால் தப்பு என கத்தும் கொட்டும் மாமியார் மீது துவேசம்

 கணவனின் விரோதி மீதும் பட்டு புடவை கட்டி அதிக நகை போட்டு அலங்காரம் செய்யும் பக்கத்து வீட்டு மாமி மீதும்
 துவேசம் என துவேச பட்டியலும் நீண்டு கொண்டே போகும்.


   இந்த விருப்பு, வெறுப்புகளை ஆன்மிக நோக்கில் பயன்படுத்துவதே பக்தி யோகத்தின் சிறப்பாகும்.

 கடவுளை நேசி, ஆசையை துவேசி என்பதே இதன் தாரக மந்திரம்.

  மனிதனுக்கு கடவுள் தந்திருக்கும் எல்லா உணர்வுகளுமே இறைவனை நோக்கி நகர செய்யும் வாகனமே யாகும் என்பது இதன் மூலம் நன்றாக தெரிகிறது.

  கெட்ட எண்ணங்கள் என்று ஒதுக்க கூடிய உணர்வுகள் கூட பக்தி யோகத்தால் புனிதமடைந்து விடுகிறது.

 உதாரணமாக ராதையின் பொறாமை, கோபிகைகளின் காமம், விருஷ்னி வம்சத்தினர் கண்ணன் எங்கள் ஜாதி என்ற இன வெறி, சிசுபாலனின் வெறுப்பு, பாண்வடவர்களின் பாசம், கம்சனின் பயம் என்பதெல்லாம் தீமையானது தான்


   என்றால் கூட அவையெல்லாம் உலகை படைத்த மாயக் கண்ணனை நோக்கி இருப்பதால் காமமும், கோபமும், பொறாமையும் கூட தெய்வீக மயமாகி விடுகிறது

  நமது உணர்வுகள் கடவுளை நோக்கி சென்றால் அது தான் பக்தி யோகம் என்று சொல்லும் முக்தி நெறியாகும்.

 வித்வேஷ பக்தி, ஞான பக்தி, மூட பக்தி என பக்தி மூன்று வகை என்று யோக சாஸ்திரங்கள் சொல்கிறது.

 வித்வேஷ பக்தி என்பது கடவுளின் மீது கோபமும், வெறுப்பும் கொண்டு அன்பு செலுத்துவது ஆகும்.

 இதற்கு உதாரணமாக ராவணன், இரண்ய கசிபு, கம்சன் ஆகியோர்கள் பகவானிடம் சண்டையிட்டே அவனை அடைந்ததை சொல்லலாம்.

   அடுத்ததாக அறிவும், அன்பும் கொண்ட ஞான பக்தி ஆகும்.  ருக்மணி கண்ணனையும், சபரி ராமனையும் தொழுத முறையை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

  அடுத்ததாக உள்ள மூட பக்தி என்பது அன்பு பித்தமாகி சித்தத்தை முழுமையாக கவ்வி கொண்ட நிலையாகும். 

கோபியர்கள் கிருஷ்ணன் மீது கொண்ட பக்தியும், திண்ணனார் சிவபெருமான் மீது கொண்ட பக்தியையும் உதாரணமாக கொள்ளலாம்.

 பக்தி யோகத்தில் ஒன்பது வகையான வழிவகைகள் முக்திக்கு இருக்கிறது என பாகவத புராணம் கூறுகிறது.

  ஜெனமஜேயன் விஷ்ணு சகஸ்ர நாமத்தை கேட்டறிந்தது போல் பரிஷித்து மகாராஜா பாகவதம் கேட்டறிந்தது போல் அர்ஜுனன் கீதையை கேட்டறிந்தது போல் கடவுளின் பெருமையை காதார கேட்டு இறையுணர்வு பெரும் சிரவண என்பது முதலாவது வழி,


 துக்காராம், துளசிதாசர், வால்மீகி, திருஞான சம்பந்தர் போன்றோர்கள் இறைவனின் புகழையும் மகிமையையும் திருநாமத்தையும் பாடி பரவி இன்புற்று சரணாகதி அடைவது போன்ற கீர்த்தனா வழி இரண்டாவது ஆகும்.

  இறைவனை இடையறாது நினைத்து கடவுள் பாதம் சேர்ந்த பூசலார் நாயனார் போல் பரகதி அடையும் ஸ்மரம் என்ற மூன்றாவது வழி,

 நான்காவதாக பாத சேவை, ஐந்தாவதாக அர்ஜனை, ஆறாவதாக வந்தனம், ஏழாவதாக தாசியம் என்ற தொண்டு, எட்டாவதாக நட்பு கொள்ளும் சாக்கியம், ஒன்பதாவதாக தன்னையே அர்பணிக்கும் ஆத்ம நிவேதனம் என்று ஒன்பது வழிகள் கூறப்பட்டுள்ளன.

 இதில் எது நமக்கு சுலபமாக வருமோ அந்த வழியை நமது விருப்பப்படி தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

  பக்தி யோகம் பகவானும் பக்தனும் என்ன மாதிரியான உறவு கொள்ளலாம் என்று விவரங்களையும் தருகிறது. 

விசுவாமித்திரர் ராமனை ஞானமும் அன்பும் கொண்டு நேசித்த சாந்த பாவம் 


மகாகவி பாரதி, ராதா தேவி, கண்ணன் மீது கொண்ட காதல் என்ற காந்த பாவம்,

 தியாகராஜர், அப்பர் ஆகியோர் இறைவனுக்கு தங்களை அடிமையாக்கி கொண்ட தாஸ்ய பாவம்,

 சுந்தரர், அர்ஜுனன்  போன்றோர் கொண்ட நட்பு முறையிலான சாக்ய பாவம்,

 ராமகிருஷ்ண பரமஹம்சர் பராசக்தியை குழந்தையாய் பாவித்த வாச்சல்யா பாவம் என்ற ஐந்து வகை உறவுகளை காட்டுகிறது.

 இதில் எதையாவது ஒன்றை பிடித்துக் கொண்டாலும் சாருப்பிய முக்தி, சாமிப்பிய முக்தி, சலோக்கிய முக்தி, சாயுஜ்ய முக்தி ஆகிய நால்வகை முக்திகள் நிச்சயமாக கிடைக்கும்.

  பக்தி யோகத்தால் பக்தனுக்கும் பாகவானுக்கும் அல்லாது சமுதாயத்திற்கும் பல நன்மைகள் உண்டு.

 இன்று இந்தியாவில் உள்ள இசை சித்திரம், சிற்பம், கட்டிட கலை, இலக்கியம் எல்லாமே பக்தி மரத்தில் பழுத்த பழங்கள் தான்.

 மேலும் பக்தியால் சமூக இணக்கம், மனித நேயம் போன்றவைகள் செழிப்போடு வளர்கிறது.

  பக்தி என்ற மென்னையான உணர்வு மோகன் தாஸ் கரம்சந்த் போன்ற பலகீனமான மனிதனை மகாத்மா காந்தி என்ற உறுதிமிக்க தெய்வ புருஷனை சமூகத்திற்கு தரும்.




 

Contact Form

Name

Email *

Message *