Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...!

  விஞ்ஞானியாக மாறுவதற்கு வழியிருக்கிறது விமானியாக ஆவதற்கும் மார்க்கம் இருக்கிறது கணிப்பொறி வல்லுனராக கட்டிட பொறியாளராக மாறுவதற்கும் வழியிருக்கிறது அந்த வழி எது என எல்லோருக்கும் தெரியும்

ஆனால் நல்லவனாக நாடு போற்றும் உத்தமனாக மனிதர்களில் மாணிக்கமாக வாழ்வதற்கு வழியிருக்கிறதா?

அப்படி இருந்தால் அது நிறைய பேருக்கு தெரியவில்லையே ஏன்? நிறைய பேர் அதை விரும்பி தேடவில்லையே ஏன்?

காரணம் இருக்கிறது ஒரு நீதிபதியாக தொழில் செய்வது வெகு சுலபம் ஆனால் நீதிபதியாக வாழ்வது மிகவும் கடினம் அதாவது மனிதன் சுலபமானவற்றை சுகமானவற்றை விரும்புகிறானே தவிர கடினமானவற்றை விரும்புவது இல்லை 


  நல்லவனாக வாழ்வது மிகவும் சிரமம் அப்படி வாழ மனதில் துணிச்சலும் வீரமும் எதையும் தாங்கும் தன்மையும் தேவை இது நிறைய பேரிடம் துளி கூட இல்லை அதனால் தான் நாட்டில் நல்லவர்களை காண்பது அறிதாக இருக்கிறது

பலர் நல்லவர்களாக இல்லை என்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? நான் நல்லவனாக வாழ வேண்டும் அதற்கு என்ன வழி இருக்கிறது என்று சிலருக்கு கேள்வி கேட்க தோன்றும்

நல்லவனாக வாழ்வதற்கு மாறுவதற்கு பல வழிகள் இல்லை ஒரே ஒரு வழிதான் இருக்கிறது நமது இதயத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் அல்லது தூய்மை படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்

இன்றைய மனித இதயங்கள் பல அழுக்கடைந்து கிடக்கின்றது இப்படி சொல்லுவது கூட தவறுதலாக இருக்கலாம் இன்று மட்டும் அல்ல என்றுமே மனித இதயங்களில் பல அழுக்காக தான் இருந்திருக்கிறது இருந்தும் வருகிறது

உள்ளத்தில் தூய்மை இல்லாதது தான் ஒவ்வொரு மனிதனும் சோகத்தை அனுபவிக்க காரணமாக இருக்கிறது

இந்த மன அழுக்கே சமூதாயத்தில் பல தீங்குகள் நடைபெற மூலமாகவும் உள்ளது 


மனித மனம் எப்போதும் துயரமே இல்லாத இன்பத்தை நாடுகிறது அந்த இன்ப கடலில் விழுந்து நீந்தி கழிக்க ஏங்கி கொண்டிருக்கிறது

இந்த இன்ப வேட்கையால் தான் பதவி சண்டை வருகிறது கள்ளக்கடத்தல் நடக்கிறது கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும் நடை பெறுகிறது

மனித மனமானது தூய்மை பெற்று விட்டால் எல்லாமே அன்பு மயமாகி விடும் அன்பு கொண்ட மனிதன் அராஜக பாதையை தேர்வு செய்ய மாட்டன்

பொறாமை போட்டி கோப தாபங்கள் எல்லாவற்றையும் கால்களில் போட்டு நசுக்கி புதிய சாம்ராஜ்யம் உருவாக காரண கர்த்தாவாக மாறிவிடுவான்

உள்ளத்தை தூய்மை படுத்த வேண்டும் என்றால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்

கடிவாளம் இல்லாத குதிரை இலக்கில்லாமல் நாலா திசையும் ஓடி தனது உடல் சக்தியை விறையமாக்கி கொள்ளும் அதை போலவே தான் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு விட்ட மனது நிலையற்ற பலகீனங்களை நிரந்தரமானது என்று கருதி நம்மை எப்போதும் படு குழியில் தள்ளி மேலே வர முடியாமல் அழுத்தி வைத்து கொள்ளும் 

எனவே உணர்ச்சி வழி செல்வதை சிறிது சிறிதாக குறைத்து கொண்டு வருவோமானால் இருண்ட இதயத்திற்குள் ஒரு சிறிய ஒளி மெதுவாக தோன்றும்

நிதானமாக வருகின்ற வெளிச்சம் மன இருட்டை முற்றிலுமாக அகற்றி விடும்

தட்டுமுட்டு சாமான்கள் உடைந்து சுவரெல்லாம் காரை பெயர்ந்து எங்கு பார்த்தாலும் சிலந்தி வலை பின்னி வவ்வாலும் ஆந்தையும் கரும்பூனையும் உலவுகின்ற வீட்டில் நிம்மதியாக வாழ முடியுமா?

ஏறகுறைய நமது இதயமும் ஆசைகள் சூழ்ந்து இந்த பாளடைந்த வீட்டை போல தான் இருக்கிறது இப்படி பட்ட இதயத்தை சுமந்து கொண்டு ஒரு போதும் நல்லவனாக வாழ முடியாது

எனவே நல்லவனாக வாழ விரும்புகின்ற எவனும் இதயத்தை நல்ல எண்ணங்களால் நல்ல செயல்களால் தூய்மையாக்குங்கள்

சரித்திர புருஷர்கள் மட்டும் அல்ல சாமான்யரான நாமும் நல்லவன் என்ற பட்டத்தை பெறலாம் 

இவ்வளவு கஷ்டப்பட்டு இதயத்தை தூய்மையாக்கி நல்லவனாக மாற வேண்டிய அவசியம் என்ன? நல்லவனாக இருந்தால் கிடைக்க கூடிய சன்மானம் என்ன? என்று சிலர் கேட்கலாம்

அவர்களுக்கு நாம் சொல்லுகின்ற பதில் ஒன்றே ஒன்று தான்

ஒவ்வொரு மனிதனும் பிறவி தோறும் தேடிக்கொண்டிருப்பது மனசாந்தியைதான்

அந்த சாந்தியை பெற தான் வாழ்க்கை பாதையில் ஒவ்வொரு ஜீவனும் ஓடி கொண்டே இருக்கிறது

நீ நல்லவனாக மாற முயற்சி செய்! நாளை காலையே உன் வீட்டு வாசலில் வந்து அமைதியும் சந்தோசமும் கதவை தட்டும்




Contact Form

Name

Email *

Message *