Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆண்களே! தைரியமாக அழுங்கள்!!


   திகமா சிரிக்கும் பெண்களையும் அழுகின்ற ஆண்களையும் நம்ப கூடாது என்று சொல்வார்கள் அதாவது இதன் அர்த்தம் என்னவென்றால் ஆண்கள் அழக்கூடாது அழுகை என்பது ஆண்களுக்கு இல்லை என்பதாகும் உண்மையில் ஆண்கள் அழக்கூடாதா? அழுதால் என்னவாகிவிடும்?

நமது பண்பாட்டில் மட்டுமல்ல உலகத்தின் எந்த மூலையில் போய்கேட்டாலும் கம்பீரத்தின் இலக்கணமாக ஆண்கள் மட்டுமே காட்டப்படுகிறார்கள் விதிவிலக்காக ஆண் தன்மையுடைய பெண்களில் சிலர் கம்பீர வடிவாக காட்டபட்டாலும் அதிகமாக குறிப்பிடுவது ஆண்களை தான்

கம்பீரம் வீரம் போன்றவைகள் அழக்கூடாது அழுவது என்பது கோழைத்தனத்தின் அடையாளம் அஞ்சி நடுங்குபவர்கள் சோதனைகளை எதிரிகொள்ள முடியாதவர்கள் மட்டுமே அழ வேண்டுமென்று பொதுவான ஒரு நீயதி உலக முழுவதும் நடைமுறையில் இருக்கிறது இந்த நடைமுறை பழக்கம் இந்தியாவில் சற்று அதிகம் அதனால் தான் கோழைகளை நம்பாதே என்று சொல்வதற்காக அழுகின்ற ஆண்களை நம்பாதே என்று சொன்னார்கள்


எல்லாம் சரி அழுவது என்பது கோழைத்தனமா? அழுபவர்கள் அனைவரும் கோழைகளா? மனிதனாக பிறந்தவர்கள் அழாமல் இருக்க முடியுமா? முடியும் என்றால் அழுகின்ற உணர்ச்சியை ஆண்டவன் மனிதனுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்னை கேட்டால் அழுவது கோழைத்தனமல்ல திக்கு தெரியாத காட்டில் தன்னந்தனியாக தவிப்பவர்களுக்கு ஒற்றையடி பாதை வெளிச்சத்தை காட்டுவது போல் உணர்சிகளின் கொந்தளிப்பில் கிடந்தது உழலும் மனிதனுக்கு அழுகை என்பது தெளிவை காட்டும் ஞான வெளிச்சம் என்பேன்

கோழைதனத்தால் வருகின்ற அழுகை வேறு நயவஞ்சகத்தை மறைப்பதற்கு வடிக்கும் நீலி கண்ணீர் வேறு சோகத்தை தாங்க முடியாமல் வாய்விட்டு அலறி புலம்பும் அழுகை என்பது வேறு எனக்கொரு மகள் இருந்தாள் அவள் பூமியில் பிறந்தநாள் முதல் அவளை மண்ணில் நடக்க விடவில்லை நான் கைகளில் தாங்கினேன் அவளது ஒவ்வொரு சிரிப்பிற்கும் நான் ரத்த வேர்வை வடித்தாலும் அது எனக்கு சுகமாக இருந்தது அப்படி வளர்த்த அன்பு மகள் தன்னை எவனோ ஒருவன் காதலிக்கவில்லை என்று மரத்தில் கயிறு போட்டு தொங்கிவிட்டாள் இந்த நிலையில் நான் அழாமல் இருக்க முடியுமா? என்னை அழக்கூடாது என்று யாரும் தடை போட முடியுமா?

மரணத்தால் வருகின்ற இழப்புகளை தாங்க முடியாத துயரங்களை தாங்கி கொள்ள அழுகை என்பது அவசியம் ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் அழவில்லை என்றால் அவன் மனதில் எதோ ஒரு பாதிப்பு இருக்கிறது கண்ணீரால் நனைக்கபடாத துயரங்கள் மனதிற்குள் பெறுக பெறுக மனம் இறுக்கமாகிவிடும் நந்தவனத்தில் வாழ்ந்தாலும் இனம்புரியாத சூன்யத்திற்குள் கிடப்பது போல வாழ்நாள் முழுவதும் எரிந்த சாம்பலாகி விடும்


அழ வேண்டும் கண்களில் உள்ள கண்ணீர் வற்றி போகும் வரை அழவேண்டும் ஒரு துணியை தண்ணீரில் போட்டு காயவைப்பதற்கு பினிவது போல அழவேண்டும் ஒரு சொட்டு கண்ணீர் கூட மிச்சமில்லாத அளவிற்கு அழவேண்டும் அப்படி அழுதால் தான் துயரங்களை தாண்டி அதற்கு அப்பாலுள்ள வசந்த காலத்தை இருகரம் நீட்டி வாரி அனைத்து கொள்ள முடியும் எனவே ஆண்கள் அழக்கூடாது என்பது போலி வேஷம் அழாத ஆண்கள் இல்லை என்பதே எதார்த்த உலகம்

கடவுளின் வடிவான ராமன் கூட அழுதான் தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய தகப்பன் தசரதன் இறந்த செய்தி கேட்டு அழுதான் தனது காதல் மனைவி தன்னைவிட்டு எங்கோ காணமல் போனபோது அழுதான் தன தோளோடு தோள்நின்று தனது துயரத்தை தன் துயரமாக ஏற்றுக்கொண்ட சகோதரன் யுத்த களத்தில் காயப்பட்டு வீழ்ந்த போது அழுதான் அந்த அழுகையை யாரும் கோழைத்தனம் என்று சொல்லவில்லை மாறாக அது ராமனின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாகத்தான் அறியப்பட்டது

இந்த உலகம் வேண்டாம் என்று சொல்வது காரியமுடிக்க நயவஞ்சகமாக சிரித்தாளே சூர்ப்பனகை அந்த சிரிப்பு பெண்ணுக்கு வேண்டாம் என்கிறது காரியமுடிக்க வஞ்சகமாக அழுதானே சகுனி அந்த அழுகை ஆண்களுக்கு வேண்டாம் என்று சொல்கிறது மற்றப்படி நீ அழவே கூடாது என்று யாரவது சொன்னால் அவன் உன்னை மனநோயாளியாக்க முயற்சிக்கிறான் என்று தான் அர்த்தமாகும்


அதனால் நீ அழு நன்றாக அழு இரவு முடிந்து விடியற்காலை பொழுது வரும் பொழுது மனமும் உடலும் சந்திக்குமே ஒரு விதமான மலர்ச்சி அந்த மலர்ச்சியை அழுது முடித்தபிறகு நீ அனுபவிப்பாய் அந்த அமைதியில் தான் நீ எடுக்க வேண்டிய அடுத்தகட்ட முடிவுகள் தெளிவாகத்தெரியும் எனவே அழுகை என்பது தடைகல் அல்ல படிக்கல் என்பதை மனதில் வைத்து துயரங்களை போசுக்க அழு நன்றாக அழு.



Contact Form

Name

Email *

Message *