( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )30 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சினிமா சோறு போடுமா...?


    ன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம் கடிதம் எழுதி உங்களை படிக்க வைத்து உங்கள் நேரத்தை வீணடிக்க கூடாது என்று நினைக்கும் பலரில் நானும் ஒருவன் பாம்பு வந்து கடிக்கும் போது பாழும் உடல் துடிக்கும் போது யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு என்று கண்ணதாசன் சொல்வாரே அதே போல சொந்த பிரச்சனைகள் மனதை வாட்டி வதைக்கும் போது மனதிற்குள் வைத்திருக்கும் சங்கல்பங்கள் எல்லாம் காற்றில் பறந்து போய் விடுகிறது. அப்படி பறந்து போனதனால் எழுதப்படும் கடிதமே இது உங்களை சிறமபடுத்துவதில் வருத்தம் வருகிறது. ஆனாலும் வேறு வழி இல்லை மன்னிக்கவும்.

கிராமத்தில் இருந்து சினிமா கனவுகளோடு கோடம்பாக்கத்தில் காலடி வைத்து தவமாக தவம் கிடக்கும் எத்தனையோ கனவுலக இளைஞர்களில் நானும் ஒருவன் நான் சென்னைக்கு வந்து பத்து வருடங்கள் ஓடி போய்விட்டன இதுவரை சாதித்தது என்பது எதுவுமில்லை ஆனால் பல கோடிகள் கொடுத்தாலும் பெறமுடியாத அனுபவங்கள் பலவற்றை பெற்றிருக்கிறேன் இதனால் எது சரியான பாதை எது தவறான பாதை என்பதை மிக தீர்க்கமாக முடிவு செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டும் தகுதியும் எனக்கு இருக்கிறது. ஆனால் நான் போகவேண்டிய வழிதான் எது என்பது எனக்கு புரியவில்லை.

நீங்கள் ஒரு துறவி ஆன்மீக வாதி இது உலகம் உங்களை பார்க்கும் விதம் ஆனால் நான் உங்களை இப்படியாக மட்டும் பார்க்கவில்லை தொடர்ந்து உங்களது எழுத்துக்களை வரிக்கு வரி படித்து வருவதனால் பல்துறையிலும் நீங்கள் பெற்றிருக்கும் அபார ஞானம் என்னை பிரம்மிக்க செய்கிறது. உங்களுக்கு சம்மந்தமே இல்லாத சினிமா துறை பற்றி கூட நுணுக்கமாக தெரிந்து வைத்திருப்பதை அறியும் போது வியாப்பாகவும் இருக்கிறது. இன்றைய சினிமா உலகில் பலரும் உங்களிடம் ரகசியமாக ஆல்சோனை கேட்பதை நான் அறிவேன் ஆனாலும் அவர்களோடு நீங்கள் எந்த வகையிலும் நெருக்கமான உறவை வைத்து கொள்வதில்லை என்பதை அறியும் போது சினிமா உலகை பற்றி முழுமையாக நீங்கள் புரிந்து வைத்திருப்பதை தெரிந்து கொண்டேன்.

இன்றைய சினிமாக்களை பற்றி நீங்கள் அறியாதது அல்ல கதை வேண்டாம் கருத்து வேண்டாம் அடிப்படை அறிவு கூட வேண்டாம் பணம் மட்டும் இருந்தால் போதும் ஒரு முழு சினிமாவை உருவாக்கி விடலாம் நடிப்பை பற்றி அரிச்சுவடி கூட தெரியாதவர்களை நடிகர் திலகம் அளவிற்கு தூக்கி வைத்து பேச ஆள் இருக்கிறது. வெகு ஜன ஊடகங்கள் இருக்கிறது. மின்னலை போல வந்து மறைந்து போகும் சில அற்ப ஜந்துக்கள் தங்களை சந்திரனாகவும் சூரியனாகவும் பிரகடன படுத்திக்கொள்ள சினிமா உலகம் மட்டுமே இடம் தரும்.

ஆனால் ஒன்றுமட்டும் நிஜம் நிறையப்பேர் வரலாம் போகலாம் ஆனால் திறமை இருப்பவன் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் இது சினிமா துறையிலும் சரி மற்ற துறையிலும் சரி பொதுவான உண்மையாகும் இந்த உண்மை பலபேருக்கு தெரிவதில்லை என்னிடம் ஓரளவு சினிமா பற்றிய ஞானம் இருக்கிறது. ஆனால் மற்றவர்களை கால்பிடித்து நடக்கும் குணமில்லை இதனாலேயே பல வாய்ப்புகளை நான் இழக்கிறேன் ஒருவேளை என் திறமையே அவ்வளவு தான? என்பதும் புரியவில்லை நல்லதோ கெட்டதோ நாற்பத்தி ஐந்து வயதான பிறகும் எனக்கு சினிமா எழுத்து இவைகளை தவிர வேறு தொழில் தெரியாது. எழுத தெரியாத சிலருக்கு வசனங்கள் எழுதி கொடுத்து வாழ்க்கையை நடத்தி வருகிறேன் நல்ல வேளை மனைவி குழந்தைகள் என்று சுமைகளை ஏற்றிக்கொள்ள வில்லை

இப்போது நான் கேட்க வருவது ஓரளவாவது வாழ்வில் நியாய தர்மத்தை கடைபிடிக்க நினைக்கிறேன் அந்த விரதத்தோடு சினிமா துறையில் என்னால் வெற்றி பெற முடியுமா? மிக முக்கியமாக சினிமா தொழிலை என் ஜீவாதார தொழிலாக ஏற்றுக் கொள்ளலாமா? அது எனக்கு சோறு போடுமா? அல்லது ஊர் பக்கமாய் போய் எதாவது மளிகைக்கடை வைத்து பிழைப்பை நடத்தி கொள்ளலாமா? வீம்புக்காக ஒரே இடத்தில் போராடுவது இளமை இருக்கும் வரையில் தான் அது தீர்ந்து போன பிறகு ஆறுதலாக துணைவர பணமும் வேண்டும் நாலு மனிதனும் வேண்டும் அது சினிமாவில் கிடைக்கும் என்றால் இருக்கிறேன். இல்லை என்றால் நடையை கட்டுகிறேன். வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பதிலை சொல்லுங்க. என் அதிக பிரசங்கி தனமான வார்த்தைகளுக்கு மன்னியுங்கள். சில காரணங்களுக்காக என் பெயரை வெளியிட வேண்டாம்.

பெயர் சொல்ல விரும்பாத வாசகர்

 
 
        சினிமா என்பது ஒரு கனவு தொழிற்சாலை விளக்கை நோக்கி விட்டில் பூச்சிகள் வருவது போல் இதில் வந்து விழுந்து சாம்பலாகும் ஜீவன்கள் நிறைய துரதிஷ்டவசமாக தோல்விகளை மறைத்து துயரங்களை பூசி மெழுகி வெற்றிகளை மட்டும் அதிர்வேட்டுகளோடு கொண்டாடும் அதிசய பூமி திரைப்பட பூமி அங்கு வென்றவர்களை விட தோற்றவர்களின் எண்ணிக்கையே மிக அதிகம்.

ஆனாலும் வருடம் தோறும் சினிமா என்ற காகித மலரை நாடி செல்லும் வண்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது கோடம்பாக்கத்தில் கனவுகளை கண்களில் சுமந்து கொண்டு வயிற்றில் ஈரம் இல்லாமல் அலையும் நூற்றுக்கணக்கான மனிதர்களை பார்க்கும் போது நல்ல கால் கையும் உடல்திரமும் அறிவு கூர்மையும் இருந்தும் எதற்காக இவர்கள் தங்கள் வாழ்நாளை வீழ்நாளாக மாற்றிகொள்கிறார்கள் என்று நமக்கு தோன்றுகிறது.

பசி எடுத்தாலும் தாகத்தால் நாவு வறண்டு போனாலும் மூச்சி விடுவதற்கு இம்மி இடம் கூட இல்லாமல் நெருக்கடியில் சிக்கினாலும் மீண்டும் மீண்டும் அவர்கள் அதில் போய் விழுவது ஏன் அடக்கவே முடியாத கலை ஆர்வமா? புதுமைகளை படைக்க வேண்டும் என்ற உத்வேகமா? இரண்டுமே பலரிடம் கிடையாது புகழின் மீது ஆசை சுகபோகங்களின் மீது ஆசை நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை இன்னும் சொல்ல போனால் குறைந்த உழைப்பில் நிறைய சம்பாதிக்கலாம் என்ற பேராசை என்றே சொல்லாம் ஆனாலும் ஒன்றிரண்டு கலை ஆர்வலர்கள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

சினிமாவில் ஜெயிக்க கலை ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது தனக்குள்ள ஆர்வத்தை மற்றவர்களுக்கு புரியும் வண்ணம் சொல்ல தெரிய வேண்டும் அதை தெரிந்தவனே சினிமாவில் வெல்ல முடியும் என் மேதாவி தனத்தை புரிந்து கொள்பவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளட்டும் மற்றவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை என்று நினைக்கும் எவனும் திரைப்பட துறையில் வென்றதாக சரித்திரம் இல்லை. தன்னை மேதாவிகளாக நினைத்து கொண்ட ஜாம்பவான்கள் ஒதுங்கி ஓரமாக கிடப்பதை கண்ணெதிரே பார்க்கலாம்

இதை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால் அத்தகைய கலை கர்வம் உங்களிடம் இருக்கிறது. உங்கள் சட்டை பையில் இருக்கும் பேனா பத்து பக்கங்கள் மட்டுமே எழுதும் ஆனால் நீங்கள் நூறு பக்கத்திற்கு எழுதிவிடலாம் என்று கற்பனை செய்கிறீர்கள் அதாவது உங்கள் தகுதியை மீறிய எதிர்பார்ர்பு நிறையவே உங்களிடம் இருக்கிறது முதலில் அதை குறைத்து கொண்டாலே பாதி வெற்றியை நீங்கள் பெற்று விடலாம் சூறைக்காற்று அடிக்கும் போது ஓங்கி நிற்கும் பனைமரம் கூட தலைகுப்புற சாய்ந்து விடும் வளைந்து கொடுக்கும் நாணல் தான் எந்த காற்றுக்கும் அஞ்சாது அதாவது முதலில் பணிய கற்றுக்கொள்ளுங்கள் பணிவு சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலுமே வெற்றியை தேடி தரும். சரியான சாதனம் அதற்காக நான் காக்கா பிடிக்க சொல்லவில்லை.

பொதுவாக ஜோதிடத்தில் கலையின் அதிபதியாக சுக்கிரனை சொல்வார்கள் இந்த சுக்கிரன் குருவோடு எதாவது ஒரு வகையில் சம்மந்தம் வைத்தால் கலை ஆர்வம் என்பது இயற்கையாகவே வரும் அது உங்கள் ஜாதகத்தில் இருக்கிறது அதனால் நீங்கள் மளிகைக்கடை வைத்து பிழைப்பை நடத்தி கொள்ள வாய்ப்பில்லை கலைத்துறை தான் உங்களுக்கு சோறு போடும் என்று ஜாதகம் தெளிவாக சொல்கிறது அதே போல் நீங்கள் இயக்குனராக மட்டுமே ஆவேன் என்று பிடிவாதம் பிடித்தால் அது நடக்காது.

உங்கள் ஜாதகத்தில் குரு இருக்கும் ராசியில் இருந்து மூன்றாவது இடத்தில் சுக்கிரனும் புதனும் இருப்பதனால் நல்ல கற்பனை வளமும் எழுத்தாற்றலும் இயற்கையாகவே உங்களிடம் உண்டு அதனால் திரைப்பட கதை ஆசிரியாராக ஆவதற்கு முயற்சி செய்யுங்கள் அதில் வெற்றியும் பெறலாம் ஒன்று மட்டும் நீங்கள் மறக்க கூடாது சினிமாவில் நீங்கள் அடையும் வெற்றி வாழ்க்கையை சங்கடம் இல்லாமல் ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு அமையுமே தவிர நீங்கள் நினைப்பது போல் வானாளாவிய புகழை வாங்கி தராது இதை மனதில் வைத்து ஆசைகளை சுருக்கி வீணான கற்பனையை விட்டு எதார்த்தமான உலகை மனதில் வைத்து பாடுபடுங்கள் நல்லது நடக்கும் வரும் குரு பெயர்ச்சி உங்கள் வாழ்வில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் நாராயணன் அருள்வான்.+ comments + 3 comments

***சினிமா என்ற காகித மலரை **** சினிமாவைப் பற்றிய அற்புதமான, அப்பட்ட உண்மையை எடுத்துரைக்கும் வார்த்தைகள் இவை.. சினிமா என்பது மாயை.. அது ஒரு போலிபிம்பம்.. அதை உண்மையென நினைத்து உயிரைவிடுவோரும் உண்டு. மானத்தை விற்போரும் உண்டு. மாய்ந்து மடிவோரும் உண்டு. தங்களின் கருத்துகள் அனைத்தும் உண்மை..

பகிர்வினிக்கு மிக்க நன்றி.!!

மக்களுக்கு சினிமா உலகை பற்றிய கருத்தை மிக அழகாகவும் , விட்டில் பூச்சிகளுக்கு ஆணித்தனமாகவும் இந்த பதிவு எடுத்துரைக்கும் . மிக்க நன்றி .

//அடையும் வெற்றி வாழ்க்கையை சங்கடம் இல்லாமல் ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு அமையுமே தவிர நீங்கள் நினைப்பது போல் வானாளாவிய புகழை வாங்கி தராது இதை மனதில் வைத்து ஆசைகளை சுருக்கி வீணான கற்பனையை விட்டு எதார்த்தமான உலகை மனதில் வைத்து பாடுபடுங்கள்// நல்ல ஆலோசனை. வாசகரின் மன உளைச்சலுக்கு சரியான மருந்து. அவர்பால் தாங்கள் காட்டிய கனிவுக்கு நன்றிகள் பல.


Next Post Next Post Home
 
Back to Top