Store
  Store
  Store
  Store
  Store
  Store

நான் தான் அறிவாளி...! நீ முழு முட்டாள்!


   சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய மனிதர் என்னை காண வந்தார் தன்னை பற்றியும் தனது குடும்ப பாரம்பரியத்தை பற்றியும் மிக விரிவாக புகழ்ச்சியாக என்னிடம் எடுத்து சொன்னார்

சுமார் ஒரு மணி நேரம் அவர் என்னோடு பேசு கொண்டிருந்திருப்பார் என நினைக்கிறேன்

அவர் பேச்சி முழுவதும் தான் ஒரு மாபெரும் திறமைசாலி தன்னை வெல்வதற்கு இந்த உலகில் யாருமே இல்லை கடவுள் கூட தனது சொற்படி தான் பலன்களை தருகிறார் தோல்வி என்பதே தனது சரித்திரத்தில் இல்லை என்பது போல பேசினார்

ஒரு மனிதன் தன்னை உயர்வாக நினைத்து கொள்வதும் நம்புவதும் தவறல்ல 


ஆனால் அந்த நினைவுகளால் அவனுக்கு அகங்காரம் என்பது ஏற்படுமானால் அதனால் சக மனிதனுக்கும் ஏன் அந்த மனிதனுக்கே கூட ஆபத்து நேரிடலாம்

எனது பூர்வாசிரம காலத்தில் ஒரு நண்பர் இருந்தார் அவர் நல்ல படிப்பாளி அறிவாளி மிகவும் நேர்மையானவரும் கூட

இவற்றால் எந்த சிக்கலும் இல்லை ஆனால் அவர் தனது நேர்மைக்கு சோதனை வரக்கூடாது தன்னை யாரும் குறை சொல்ல கூடாது என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தார்

நான் அவரிடம் ஒரு மனிதன் என்று இருந்தால் அவன் செயல் படுபவனாக இருந்தால் நிச்சயம் அந்த செயலால் யாரவது ஒருவன் சிறிய பாதிப்பையாவது அடைந்திருப்பான் 


அவன் நிச்சயம் எதிரியாக தான் நடந்து கொள்வான் குறை சொல்வான் ஆகவே யாருமே குறை சொல்லாமல் வாழ வேண்டும் என்று நினைப்பது புத்திசாலி தனமாகாது

காந்தியை கூட குறை உள்ளவராக கண்டதனால் தான் கொலை செய்யப் பட்டார் என்று சொல்வேன் அதை அவர் ஏற்று கொண்டதே இல்லை

ஒரு சமயம் அவர் அலுவலகத்தில் ஒரு பொருள் காணமல் போய் விட்டது

யாரோ ஒருவர் அலுவலகம் முடிந்தும் இவர் தான் வெகு நேரம் இருந்தார் என்று காது பட சொல்லியிருக்கிறார்

உடனே இவருக்கு தன்னை திருடனாக மற்றவர்கள் பார்கிறார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டு சில நாட்களாக மன அழுத்தத்தில் அவதிப்பட்டு கடைசியில் தற்கொலை செய்து கொண்டார்  


எவ்வளவு படிப்பும் அறிவும் இருந்து என்ன பயன்? தன்னை மிக உயர்ந்தவனாக நம்பியதன் விளைவு ஒரு சிறிய சங்கடத்தை கூட தாங்க முடியாமல் போய் விட்டது

தன்னை உயர்ந்தவனாக நினைத்து கொள்வதில் சங்கடங்கள் இருப்பது போல வேறு சங்கடங்களும் இருக்கிறது

சில மனிதர்கள் என் பக்கத்து வீட்டுக்காரன் இருக்கிறானே அவன் பலே கில்லாடி எப்பாடு பட்டாவது காரியத்தை சாதித்து கொள்வான் நம்மால் அது முடியவே முடியாது என்பார்கள்

இன்னும் சிலரோ தன்னால் ஒரு தாலுக்கா அலுவலகம் சென்று கூட ஒரு சிறிய கையெழுத்து வாங்க முடியாது விவபரம் தெரிந்த யாரையாவது தான் கூட்டி போக வேண்டும் என நினைக்கிறார்கள் 

கிராமத்தில் இவன் வீடு வாங்க போவான் அதை கொடுப்பவனும் தயாராக இருப்பான் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்து விடலாம் ஆனால் இதில் யாரவது ஒருவன் ஊர் முக்கியஸ்தரை கூட்டி வந்து விடுவான்
அவர் நல்லவராக இருந்தால் விவகாரம் இல்லை ஒரு மாதிரி பட்டவராக இருந்து விட்டால் புதிது புதிதாக வம்புகள் முளைக்கும்

ஜக்கு பந்தி சரியில்லை என்பார் சர்வே எண் தவறு என்பார் வாங்குபவனையும் விற்பவனையும் வயிற்றை கலக்க செய்து செலவுக்கு மேல் செலவாக இழுத்து விட்டு விடுவார்

கடேசியில் பிரச்சனையை கிளப்பிய அவரே நாட்டாமை தீர்ப்பு சொல்லி தன்னால் தான் எல்லாம் ஆனதாக தம்பட்டம் அடித்து கொள்வார்

இது என்னவோ அந்த காலத்தில் நடந்திருக்கலாம் இப்போது கூடவா இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்க கூடும் 

உங்கள் ஊரிலேயே இப்படி பட்ட மனிதர்களை நீங்கள் காணலாம் கிராமத்திற்கு பத்து பேராவது இப்படி இருக்கிறார்கள்

எதுவும் தன்னால் முடியாது மற்றவர்கள் மட்டுமே விபரம் தெரிந்தவர்கள் என்று நினைப்பது அப்பாவி தனம் படிக்காதவர்கள் தான் இப்படி எல்லாம் இருப்பார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம்

படித்து பட்டம் பெற்ற பலரே பத்து பேர் முன்பு தன் கருத்தை எடுத்து சொல்ல முடியாமலும் தயங்கி கொண்டும் இருப்பதை காணலாம்

இவர்களை கூட மன்னிக்கலாம் எதோ சிறிய வயதில் பெற்றோர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு வளர்ந்ததனால் இந்த இயல்பு அவர்களுக்கு வந்து விட்டது என்று ஒதுக்கி விட்டு விடலாம்

வேறு சிலர் இருக்கிறார்கள் இவர்களை மன்னிப்பது கூட சற்று சிரமம்

சமூதாயத்தில் புகழ் பெற்றவர்களை பிரபலமானவர்களை பணக்காரர்களை வெற்றியாளர்களை கடவுளாகவே நினைப்பார்கள்

ஒரு சினிமா நடிகன் புகழ் பெற்றவனாக இருந்தால் அவன் தத்து பித்தென்று உளறினாலும் அதை சாக்ரடிசின் தத்துவம் போல எடுத்து வைத்து கொண்டு ஆடுவார்கள்

 உலகிலேயே அந்த நடிகருக்கு இணையான அறிவாளி இல்லை என்றும் பேசுவார்கள்

இவர்களை சுய நம்பிக்கை இல்லாதவர்கள் என்று கூட கருத இயலாது முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று சொல்லலாம்
தன் சுய முகத்தை பார்க்கும் திராணி இல்லாதவர்கள் என்றும் சொல்லலாம்

இப்படிப் பட்டவர்களை தங்களது அடிவருடிகளாக வைத்து கொள்ளும் பல பிரபலங்கள் தங்களிடம் இல்லாத பராக்கிரமம் இருப்பதாக நினைத்து கொண்டு ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுகிறார்கள்

தாங்கள் தான் கடவுளுக்கே உலகத்தை படைக்க கற்று கொடுத்ததாகவும் பேசுவார்கள்

இப்படி பட்ட இவர்கள் எல்லோருமே ஒன்றை யோசிக்க வேண்டும்

ஒரு கோடாலி இருப்பதாக வைத்து கொள்வோம் ஆனை கூட அசைக்க முடியாத மரத்தை அது பிளந்து விடும்

தொடர்ச்சியாக அடித்தோம் என்றால் கற்பாறையும் இரும்பும் கூட கோடாலியின் வசமாகி விடும் 

 அந்த கோடாலியை வெகு நாட்களாக பயன் படுத்தி பழக்கப் பட்ட மனிதனாக இருந்தால் கூட தவறாக பிரயோகம் செய்தால் அவனையும் பதம் பார்த்து விடும்

அப்படி வலுவான கோடாலியை கொண்டு ஒரு பஞ்சு மூட்டையை வெட்டி விட முடியாது

கல்லையும் இரும்பையும் எதிர்கொள்ளும் கோடாலி சாதாரண பருத்தி பஞ்சியின் முன்னால் தோற்று போய் விடும்

அதை போல தான் எவ்வளவு சக்தி வாய்ந்த மனிதனாக இருந்தாலும் எதாவது ஒரு விஷயத்தில் மண்ணை கவ்வி விடுவான்

இவன் சக்தியற்றவன் எதற்கும் உதவாதவன் என்று ஒதுக்கப்படும் சாதாரண மனிதன் கூட எதாவது ஒரு விஷயத்தில் வெற்றி வாகை சூடி விடுவான்

எனவே இந்த உலகில் நிரந்தர வெற்றியாளனும் கிடையாது தொல்வியாளனும் கிடையாது

கடவுள் படைப்பில் உதவாக்கரை என்று யாருமே இல்லை

ஒவ்வொரு மனிதனுள்ளும் சாதனை நிறைந்திருக்கிறது சோதனையும் மறைந்திருக்கிறது

இதை உணராமல் ஆணவப்படுவதோ மனத்தளர்ச்சி அடைவதோ மனித வாழ்க்கைக்கு உகந்தது அல்ல



Contact Form

Name

Email *

Message *