Store
  Store
  Store
  Store
  Store
  Store

தமிழர்கள் விதியை நம்பாதவர்களா ?



        ந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் திருமதி,இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் ஜக்கிய நாட்டு சபையில் ஒரு முறை உறையாற்றுகின்ற போது இந்தியர்களின் உயரிய மனப்பான்மையை உலக மக்களுக்கு எடுத்து காட்ட தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற வரியான “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தத்துவத்தை உரக்க சொன்னார், இந்த சம்பவத்திற்கு முன்பே தமிழக அளவில் புகழ் பெற்றிருந்த இந்த வார்த்தை இந்திய அளவிலும் புகழுக்குரியதாக கருதப்பட்டது,

        சமிபத்தில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் லட்சிய வரிகளாக நமது முதல்வர் அவர்களால் இந்த வரியே பிரதானப்படுத்தப்பட்டது, தமிழ் இலக்கியத்தின் வாசனையை கூட அறியாத மிக சாமான்ய மக்கள் தங்களது குலப்பெருமையை நிலை நாட்டுவதற்காக அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் வாசகமாகவும் இது ஆகிவிட்டது, அப்படி உபயோகிப்பவர்களில் பலருக்கு இதன் உண்மையான அர்த்தம் கூட தெரியவில்லை, சமீபத்தில் ஓமன் நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு நண்பர் வயிற்ற பிழைப்பிற்காக பல நாடுகளுக்கு ஓடவேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எதை தங்களது சொந்த ஊர் என்பார்கள், அப்பன் பிறந்த ஊரையா? தான் பிறந்த ஊரையா? எதையுமே உரிமை கொண்டாட முடியாது, “யாதும் ஊரோ யாவரும் கேளிர்” என்று போக வேண்டியது தான் என்றார்,
   
        குழந்தைகளுக்கு எது சொந்த ஊர் என்பது இருக்கட்டும், எல்லோரும் எதிலேயும் உரிமை கொண்டாட முடியாத நிலை வருகின்ற போது யாதும் ஊரே என்று தமிழ் இலக்கியத்தை வம்புகிழுத்து சோர்வாக இதை சொல்லுகிறீர்களே அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று அவரிடம் கேட்டேன், அவர் என்னை முழுமையாக அறிந்தவர் போதுமான உலக அறிவு எனக்கு கிடையாது என்ற ரகசியம் அவருக்கு எப்படியே தெரிந்திருக்கிறது, அதனால் எனது இலக்கிய அறியாமையை போக்க சிறப்பான விளக்கம் ஒன்றை தந்தார், நான் பிறந்த ஊரில் மட்டும் தான் மரம் மட்டை இருக்கிறதா என்ன? உலக்திலுள்ள எல்லா ஊர்களிலும் தான் அவைகள் இருக்கின்றன, எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் சக்கரை இனிக்கிறது, மிளகாய் காரமாக இருக்கிறது, அதனால் இது என்னது அது உன்னது என்று போட்டி எதற்கு? எல்லா ஊருமே நம்ம ஊருதான் என்பதை எல்லோரும் கேட்டுக் கொள்ளுங்கள் என்பது தான் அந்த பழமொழியின் விளக்கம் , என்று நான் புரிந்து கொள்ளும் வண்ணம் சொன்னார், பல காலமாக தமிழ் இலக்கியத்தை படித்துக் கொண்டிருந்தாலும் கேளிர் என்ற வார்த்தைக்கு உறவினர் என்று தப்பாக பொருள் கொண்டு இருக்கிறோமே எல்லோரும் கேளுங்கள் என்றல்லவா கனியன் பூங்குன்றனார் எழுதி இருக்கிறார் , என்று உலகை நொந்து கொள்வதற்கு பதிலாக என்னை நொந்து கொண்டேன்.
             தமிழர்களாகிய நாம் எப்போதுமே வைர மேடையில் உட்கார்ந்து கொண்டு பிச்சை எடுப்பதில் கெட்டிகாரர்கள், சில காலத்திற்கு முன்பு தமிழர்களை ஒரு விசித்திரமான நோய் தாக்கியது, ஜன்னி கண்டவனுக்கு கை. கால்கள் இழுத்து கொள்வது போல இந்த விசித்திர நோய் அதிகமாக தாக்கியவர்கள் ராமர் படத்தை விளக்குமாரால் அடித்தார்கள், தெருமுனையில் தேமே என்று உட்கார்ந்துயிருந்த பிள்ளையாருக்கு அசிங்கமானதால் அபிஷேகம் செய்தார்கள், திடிரென்று ஒரு நாள் இந்த நோயின் உச்சகட்ட தாக்குதலால் தூங்கி கொண்டிருந்த திருமூலரை தட்டியெழுப்பி அவர் எழுதி பரன் மீது போட்டிருந்த “ஒன்றே குலம். ஒருவனே தேவன்” என்ற வாசகத்தை பிடுங்கி வந்து தெரு தெருவாக பிலாக்கணம் செய்தார்கள்,

        அப்போது கூட நம் அம்மாஞ்சி தமிழனுக்கு இவர்களுக்கு பிடித்திருப்பது பகுத்தறிவு என்ற விசித்திர நோய் என்று தெரியவேயில்லை, கடவுள் இல்லை என்று சொன்ன போதும் கைதட்டினான், ஒன்றே தேவன் அதாவது ஒரு கடவுள் உண்டு என்று சொல்லிய போதும் கைதட்டினாள், இப்படி கைதட்டி. கைதட்டியே தமிழனுக்கு தனது சொந்த இலக்கிய மரபுகள் எல்லாமே மறந்து போய்விட்டது,பழங்கால தமிழன் நாத்திகன்  என்று ஒரு கூட்டம் இன்றைக்கும் உறுதியாக நம்பிக் கொண்டு நாட்டில் திரிகிறது,

        பகுத்தறிவாளர்கள் என்ற இந்த திருகூட்டத்தார் இப்போதுயெல்லாம் தங்களை தமிழறிஞர்கள் என்றும். தமிழ் ஆர்வலர்கள் என்றும் அழைத்து கொள்கிறார்கள், இவர்கள் மேடையில் முழங்கும் கருத்துக்களை ஏதாவது ஒரு தொல் பழங்கால புலவன் தப்பி தவறி உயிர் பெற்று வந்து கேட்டு விட்டால் நடுத்தெரு புளியமரத்தில் தூக்கு போட்டு கொண்டு விடுவான், ஆதிகால தமிழனுக்கு இறையுணர்வே கிடையாதா? விதி. கர்மா. மறுபிறப்பு என்பதில் எல்லாம் நம்பிக்கையே கிடையாதா? சங்ககால தமிழ் மன்னர்கள் யாரும் நெற்றியில் திருநீறு கூட பூசுவது கிடையாத இவர்களுக்கு எப்படிதான் நீறு  பூசாத மன்னனின் படம் கிடைத்ததோ தெரியவில்லை, அல்லது இவர்கள் எடுத்த சினிமாவை தான் சங்ககால ஆதாரமாக வருங்கால தமிழகம் ஏற்றுகொள்ள வேண்டும் போல் உள்ளது,

        செம்மொழி மாநாட்டை பற்றி திருக்குவளை திருமகனார் உடன்பிறப்புகளுக்கு எழுதியிருந்த கடிதத்தை மறுமுறை படித்து பார்க்கும் போது ஓவென்று கதறி சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும் போல் உள்ளது, பண்டைய தமிழ் புலவர்கள் விதியை நம்பும் கூனர்களை நிமிர்த்தி வைத்தார்களாம், அதுவும் எந்த பாட்டை பாடியென்றால் புறநானூற்றில் உள்ள யாதும் ஊரே என்ற பாடலை பாடித் தானாம் தமிழ் மக்களுக்கு இலக்கிய அறிவே கிடையாது, அவர்கள் படித்தது எல்லாம் “டாலாக்கு டோல் டப்பிமா”. போன்ற அரிய கவிதைகளை தான் என்று முடிவுக்கே வந்து விட்டார்கள் போல இருக்கிறது, இவர்கள் பேச்சை எல்லாம் கேட்க்கும் போது சங்ககால தமிழ் இலக்கியங்கள் எல்லாமே கடவுள் மறுப்பு இலக்கியங்கள் தானோ என்ற எண்ணம் சாதாரணமாக எல்லோருக்கும் வந்துவிடுகிறது, அதை தடுத்து உண்மையான தமிழ் இலக்கியத்தின் முகத்தை உலகுக்கு காட்ட வேண்டும், என்று நினைப்பவர்களின் குரல்களை தற்கால ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை அல்லது  புறகணித்து விடுகிறது, சரி இந்த கந்த கூலங்களின் கருத்துக்களை எல்லாம் மூட்டை கட்டுவோம், உண்மையில் கனியன் பூங்கன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலில் உலக பொதுவுடமை சித்தாந்தத்தை பற்றி தான் பேசுகீறாரா அல்லது வேறு எதை தான் சொல்லுகிறார், இந்த பாடலின் முழுமையான பொருள் என்ன என்று அறிந்து கொள்வதற்கு இலக்கிய ரசனையே இல்லாதவனுக்கு கூட ஆர்வம் ஏற்படுவது இயற்கை, அந்த ஆர்வத்தை தீர்த்து கொள்ள நாமும் கூட கொஞ்ச நேரம் புறுநானூறு என்ற சங்கதமிழ் பூஞ்சோலைக்குள் சென்று உலாவி வரலாமே
        அழகான நீலவானம் திடிரென மகா காளியின் கோர உருவம் போல் கருத்துவிடுகிறது, தூர தூர பிரதேங்களில் அலைந்து கொண்டிருந்த மேககூட்டம் எல்லாம் ஒன்றாக ஒரே இடத்தில் கூடி விட்டன, இரவு வந்துவிட்டதோ என பறவை கூட்டங்கள் கூடு தேடி பறக்க ஆரம்பித்து விட்டன, வனவிலங்குகள் புதருக்குள்ளும் குகைகளுக்குள்ளும் மறைத்து கொண்டன, கறுத்த வானத்தில் நெடிய வாளால் வெட்டி கிழித்தது போல் மின்னல் வெட்டுகிறது, ஒன்று இரண்டுயென அடுக்குகடுக்கான மின்னல் சரங்கள் பூமியை நோக்கி பாய்கின்றன, நெஞ்சம் கிடுகிடுக்கும் வண்ணம் இடி பேரோசை செய்கிறது, இடிகின்ற இடியின் எதிரொலி கருவிலிருக்கும் குழந்தையின் காதுகளை கூட செவிடாக்கிறது,        சரம் சரமாக மழைத்துளிகள் பூமியின் மீது இறங்குகின்றன, சின்ன கத்திகளாக வந்த துளி ஈட்டிகளாக நீள்கிறது, சிறிது நேரத்தில் வானத்திலிருந்து கருங்கல் குவியல் கொட்டுவது போல் மளமளவென மழை பூமியெங்கும் வெள்ள காடாக பெருக்கெடுத்து ஓடுகிறது, நிற்காத. நிதானிக்காத மழை வெள்ளம் ஆரம்பத்தில் குழாங்கற்களை உருட்டிக் கொண்டு ஓடியது, சிறிது நேரத்தில் பாறாங்கற்களை புரட்டி போட்டது, நேரம் செல்ல செல்ல பெரிய பெரிய பாறைகளையே உருட்டிக் கொண்டு பேரிச்சலோடு வெள்ளமாய் பாய்ந்தோடியது, மழை இப்போது மட்டுபடுகிறது,

   பெருங் கூச்சல் போட்ட வெள்ள பெருக்கு ஆரவாரத்தை குறைக்கவில்லை என்றாலும் வேகத்தை மட்டுபடுத்திக் கொண்டு சமநிலத்தை நோக்கி ஆற்று வெள்ளமாக பாய்ந்தோட ஆரம்பித்தது, நிலமகளை தொட்டவுடன் வருண தேவனுக்கு காதல்வெறி ஏறிவிட்டது போல் ஆற்றின் கரையும் உடைத்து கொண்டு ஊருக்குள் புகுந்தும் சமூத்திரத்தை நோக்கி ஓட ஆரம்பித்தது, நதி வெள்ளம் அப்படி போகும் போது எதிர்பட்ட பொருட்களை  எல்லாம் அடித்து புரட்டி தன்னோடு இழுத்துக் கொண்டு முன்னேறியது, ஆடு. மாடு. கோழி வண்டி. மரக்கட்டை. வீட்டு கூரை இன்னும் விதவிதமான பொருட்கள்  எல்லாம் ஆற்று வெள்ளத்தில் முட்டி மோதி போகின்றன, அவைகள் ஒன்றையொன்று தொடுகின்றன, தள்ளுகின்றன, பிரிந்து தள்ளி போகின்றன, சுற்றி. சுற்றி வருகின்றன, சுழலுக்குள் அகப்பட்டு அடி ஆழத்திற்கு போய் மீண்டும் மேல் ஏழும்பி பாய்ந்து ஓடுகின்றன, இந்த செயல்கள் எல்லாம் நீரோட்த்தில் மிதந்து கொண்டு தான் நீரோட்டத்தின் விருப்பப்படி தான் நடக்கிறது,
     பொருட்கள் நீர் சக்தியைவிட்டு வெளியேற முடியாது, எதிர்நீச்சல் போட நினைத்தால் எதுவும் நடக்காது, ஆற்றில் மிதந்து செல்லும் பொருட்கள் எப்படி வெள்ளத்திற்கு கட்டுபட்டதோ அதே போல தான் உலக மாந்தர் வாழ்க்கை எல்லாம். விதி என்ற வெள்ளோட்டதிற்குள் கட்டுப்பட்டு இயங்குகிறது, விதி என்பது ஒருவழி பாதை, அதில் முன்னோக்கி நடந்து கொண்டு இருக்கலாமே தவிர திருப்பி நடக்க முடியாது, இந்த விதி மனிதனை மட்டுமல்ல அண்டசரா சரங்கள் அத்தனையும் கட்டுப்படுத்துகிறது,
       
        விதி வழி தான் எல்லாம் நடக்கிறது என்பது புதிய கண்டுபிடிப்பல்ல, வாழ்க்கையில் உள்ள சகல விதமான இன்பதுன்பங்களையும் ஆண்டு அனுபவித்து அறிவால் தெளிந்து எத்தனையோ சான்றோர்கள் சொல்லி சென்றிருக்கிறார்கள், அவர்களின் ஆப்த வாக்கியம் குழம்பிய எத்தனையோ மனங்களை தெளிவடைய வைத்து இருக்கிறது, எனவே விதி தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது, என்பது குழப்பமோ. கலக்கமோ. மயக்கமோ. சந்தேகமோ இல்லாத உண்மையாகும்,     
     விதி என்ற வெள்ள பிரகாவத்தில் இழத்த இழப்புகளுக்கெல்லாம் உடன்பட்டு செல்லுகின்ற மாந்தர் குலத்தில் பெரியவர் யார் ? சிறியவர் யார்.?  உயர்ந்தவர் யார் ? தாழ்ந்தவர் யார் ? மன்னன் யார் ? குடிமகன் யார் ? யாரை எப்படி பிரித்து எடுப்பது எல்லோருமே அடிப்படையில் சரி நிகர்  சமமானவர்கள் தான், விதி என்ற நீதி சட்டத்தில் இயக்கப்படுகின்ற சாமானியவர்கள் தான் அனைவருமே

   கடவுளின் பெருங்கருணையாகிய விதி என்ற வெள்ளம் மனிதர்களை குழந்தையை போல் இடுப்பில் வைத்துக் கொண்டு நடந்து போகிறது, அது எங்கே கொண்டு சேர்க்க போகிறது, என்னவாக மாற்ற போகிறது, மனிதர்களின் இறுதி கட்டம் எப்படி இருக்க போகிறது, எதையுமே கற்பனை செய்து பார்கக் கூட முடியாத நிலையில் தான் மனிதன் இருக்கிறான்,

        எது முடிவு. எது விடிவு என்று தெரியாத மண்ணுலக வாழ்வில் எதுவரை இருப்போம். எப்போது போவோம் என்ற நிலையற்ற வாழ்க்கை இருக்கும் வரையில் நான் பெரியவன். நீ சிறியவன். நீ அரசன். நான் அடிமை என்ற பேதங்கள் எதற்கு என் நாடு உயர்ந்து. எனது கிராமம் அழககானது. அந்த நாடு எதற்கும் உதவாத குப்பை தொட்டி. அந்த மனிதர்கள் சுத்த அயோக்கியர்கள். அவன் என்னை கெடுத்து விட்டான், உலகத்து கஷ்டத்தை எல்லாம் நான் ஒருவன் மட்டுமே அனுபவிக்கிறேன், என் பசிக்கு உணவு தந்தவன் இவன் என் நோய்க்கு மருந்து தந்தவன் இவன் என்று நன்றி பாராட்டுவதிலோ. கோபம் கொண்டு ஒதுக்கி வருவதிலோ எந்த பயனும் இல்லை
    மரணத்தை கண்டும் பயப்படுவது மடமையானது, அது நீ விரும்பினாலும். விரும்பாவிட்டாலும் ஒரு நாள்  வந்தே தீர கூடியது, உயிர்களுக்கு மரணம் என்பது புதிதானதல்ல, நோயும் என்பதும் புதிதல்ல, வருவதும். போவதும் இயற்கையானது தான், இன்ப துன்பங்கள் என்பதும் வெற்றி தோல்வி என்பதும் காலகாலமாக மாறாமல் இப்படியே  இருக்கும் போது வாழ்க்கையை பற்றி என்ன முடிவு எடுக்க முடியும், வாழ்க்கை என்பது இன்பத்தால் நிறைந்த சாகரமும் அல்ல, துன்பங்கள் சூழந்த ஆகாஷமும் அல்ல, இதனால் சந்தோஷப்படுபவதும். துக்கப்படுவதும். சிறபிள்ளைதனமானது,

        அறிவில் சிறந்த அறிவாளிகளும். ஞானிகளும். மாபெரும் வீரர்களும். தியாகிகளும். போற்றுதலுக்குரியவர்கள் அல்ல, முட்டாள்களும். அசடர்களும். கொலைகாரர்கலும். கொள்ளைக்காரர்களும் வெறுத்து ஒதுக்க தக்கவர்களும் அல்ல, இவர்கள் எல்லோருமே நமக்கு சொந்தகாரர்கள் தான், கல்லானாலும், மண்ணாலும்  நமக்கு சொந்த ஊர்கள் தான், எதிலும் பேதமில்லை, யாரும் அந்நியமில்லை, எல்லாம் நமது சொந்த பூமி. எல்லோருமே நமது சொந்த ரத்தம். இது தான் கனியன் பூங்குன்றனாரின் அற்புத பாடலுக்கு ஆழமான அர்த்தம்,

அவர்.
 ""யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!""

        என்று பதிநான்கே வரிகளில் நீண்ட நொடிய வாழ்க்கை அனுபவத்தை அழகான ஓவியமாக வரைந்து தந்துவருகிறார், இதுவரை இந்த பாடலின் முழுமையான கருத்தை தெரியாதவர்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும், கணியன் பூங்குன்றனார் தற்கால மேதாவிகள் வாய் கிழிய பேசுவது போல் அனுபவத்திற்கு ஒத்துவராத கருத்துக்கள் எதையும் பேசி விடவில்லை என்ற திருப்தியும் ஏற்படும், அப்படி திருப்தி அடையும் பல மனங்களில் ஒரு கேள்வியெழும்பி நிற்கும்,

        மனித வாழ்க்கை முழுவதுமே விதி என்ற சட்டத்தின் கீழ் தான் நடக்கும். நடந்து கொண்டிருக்கிறது என்றால் அவனது சொந்த கருத்து. முயற்சி. உழைப்பு என்பதெல்லாம் அர்த்தமே இல்லாத விஷயமல்லவா? ஆயிரம் மூட்டைகளை சுமந்து ஏற்றி இறக்கினாலும் ஒரு பிடி சோறு கிடைக்காது என்ற போது முயற்சி எதற்கு? உழைப்பு எதற்கு?
      மனித முயற்சிகள் எதுவும் இல்லை என்றால் அன்றாட வாழ்க்கை மாற்றமேயில்லாத பாறாங்கல்லாய் அல்லவா கிடக்கும், சிந்து சமவெளி நாகரிகம். கிரேக்க நாகரிகம். மாயன் நாகரிகம் என்பவைகள் எப்படி தோன்றியிருக்கும், இன்று கணிப்பொறி. இணையதளம். செயற்கை கோள் என்று எப்படி முன்னேறியிருக்கும், இன்று வளாந்து இருக்கும் உலகம் பெற்றிருக்கும் வசதிவாய்ப்பு அனைத்தும். தனிமனிதன் மற்றும் சமுதாயத்தின் ஓய்வில்லாத உழைப்பால் கிடைத்ததல்லவா? விதிப்படி தான் அனைத்துமே நடக்கும். விதியை மாற்ற இயலாது. என்று கன்னத்தில் கை ஊன்றி முழங்காலை கட்டிக் கொண்டு உட்கார்ந்து இருந்திருந்தால் சாலையில் பேருந்து ஏது? வயலில் நெல்மணி தான் ஏது? என்ற அந்த கேள்வி விஸ்வரூபம் எடுத்து விடை காண துடித்து நிற்பது இயற்கை, இன்னொரு கேள்வி கூட தோன்றும், பழங்கால தமிழ் இலக்கியங்கள் கடவுளை மறுக்கவில்லை விதியை எதிர்க்கவில்லை என்பது இருக்கட்டும் மனித முயற்சியில் விதியை மாற்றலாம் என்ற ஒரு புலவன் கூட அந்த காலத்தில் சிந்திக்கவில்லையா? அப்படியெதுவும் ஆதாரம் இல்லையா? என்ற சிந்தனையும் எழும்பும்,

        விதியின் மேல் நம்பிக்கை என்பது தமிழ்நாட்டிற்கோ. இந்தியவிற்கோ சொந்தமானது மட்டுமல்ல, உலக முழுவதுமே அந்த நம்பிக்கை காலகாலமாக இருந்து வருகிறது, இந்த நம்பிக்கையிலிருந்து முழுமையாக இல்லை என்றாலும் சிறிதளவு மாறுபட்ட தேசம் எது என்று கேட்டால் கிரேக்கம் என்று  சொல்லலாம், ஆதிகால கிரேக்க மக்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் தெய்வங்கள் தான் தீர்மானிக்கின்றன என்று நம்பினார்கள், ஒரு விளையாட்டு மைதானத்தில் கிடைக்கும் பந்தை வீரர்கள் தங்களது விருப்பப்படி உதைத்து விளையாடுவது போல் மனித வாழ்க்கையும் தெய்வங்கள் தங்கள் இஷ்டப்படி பந்தாடுவதாக அவர்கள் நம்பினார்கள், பேரழிவுகள். யுத்தங்கள் போட்டி பூசல்கள் நிறைந்த சதுரங்க உலகில்  மனித காய்களை உருட்டி தெய்வங்கள் விளையாடுவதாக கிரேக்கர்கள் நம்பியதை மகாகவி ஷேக்ஸ்பியர் அழகான கவிதை வரிகளில் நமக்கு சுட்டி காட்டுகிறார்,

        பறக்கும் பட்டாம்பூச்சியை பிடித்து
        சிறகை உடைக்கும் குழந்தை போல்
        மனிதர் வாழ்க்கையை எடுத்து
        களி நடம் புரியும் தெய்வம்

  
         As flies to wanton boys
              are we to gods;
        They kill us for their sport
     மேல் நாடெங்கும் விதி பற்றிய நம்பிக்கை பரவி கிடந்ததற்கு இந்தியாவின் கருத்துக்கள் அங்கு பரவியிருந்தது என்பது உண்மையா? அல்லது அங்கிருந்து தான் அந்த கருத்துக்கள் இங்கே பரவியதா? என்பதை ஆராய்ச்சி செய்வது நமது நோக்கமில்லை என்றாலும் விதி என்ற எண்ணம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானதே என்பதை சுட்டிக்காட்ட விரும்பினேன் மேலும் கணியன் பூங்குன்றனார் இப்படியொரு பாடலை எழுத வேண்டிய அவசியமென்ன, அந்தகால புலவர்களில் பலர் நாடாளும் ; மன்னர்களையும் பணக்காரர்களையும். இந்திரன். சந்திரன் என்ற எழுதி பரிசுகளை பெற்று போவது போல் இவரும் எதையாவது. எந்த மன்னனையாவது போற்றி பாடிய போயிருக்க வேண்டியது தானே. அதை விட்டுவிட்டு எல்லோரும் சமம் தான் என்று பாட வேண்டிய அவசியமென்ன? 
 
       நமது தமிழர்களுக்கு தலைவர்கள் என்றால் மிகவும் பிடிக்கும், தங்களுக்கு பிடித்தமான தலைவர்களுக்கு ஏதாவது குற்றங்குறைகள் நடந்துவிட்டால் தலையை மொட்டை அடித்து கொள்வார்கள். நெருப்பு மிதிப்பார்கள், பெட்ரோலை ஊற்றி தங்களையும் எரித்து கொள்வார்கள். மற்றவர்களையும் எரித்து பார்ப்பார்கள். சோறு போட்ட அப்பனை அடித்து போட்டு மனங்கவர்ந்த தலைவர்களின் சினிமா படத்திற்கு காத்து கிடக்கும் எத்தனையோ தமிழர்களை நாம் அன்றாடம் பார்க்கின்றோம், இது தமிழனுக்கு இன்று நேற்று ஏற்பட்ட வியாதியல்ல, சங்ககாலத்திற்கு முன்பே பற்றி கொண்ட தீராத வியாதியாகும், பக்கத்து நாட்டு அரசன் பையனுக்கு பெண் தரவில்லை  என்று போருக்கு கிளம்பி. தோற்றுபோவான் மன்னன், மன்னன் தோற்றுவிட்டானே என்று எங்கோ மூலையில் இருக்கும் இளைஞன் தன் உயிரை மாய்த்து கொள்வான், இது நேற்றயை தினதந்தி செய்தியல்ல, சங்ககால வரலாற்று பதிவாகும்,

        பல் போகும் காலம் வரையில் மற்றவனுக்கு பல்லக்கு தூக்கியே பழக்கப்பட்ட தமிழனை. தலைவன் என்பவன் கடவுளுக்கு சமமானவன் என்று தூக்கி வைத்து கொண்டாடும் தமிழனை. தலைவனின் நலத்திற்காக தன் பெண்டாட்டி. பிள்ளையை கூட பலி கொடுக்க தயங்காத தமிழனை பார்த்த கணியன் பூங்குன்றனார் நெஞ்சு பதபதைக்க பார்த்து தலைவன் என்பவன் தனியான ஒரு இனமல்ல உன்னை போலவும். என்னை போலவும் சாதாரண மனிதன் தான். நீயும். நானும் அம்மாவின் வயிற்றில் பத்துமாதம் இருந்தது போலவே தான் அவனும் இருந்தான், தலைவன் என்பதற்காக பதினைந்து மாதம் கருவறை வாசம் அவனுக்கு   கிடையாது, விதி என்ற நதியில் உருண்டு ஓடும் பல கட்டைகளில் ஒரு கட்டை தான் அவன், அவனுக்கென்று தனியாக மரியாதை தருவதோ. அவனுக்காக மற்றவர்களை அவமரியாதை செய்வதோ சரியான முறையல்ல, எல்லோரையும் சமமாக பார்க்க பழகி கொள் என்ற சமூக அக்கறையோடு தான் பூங்குன்றனார் இந்த பாடலை பழுதி இருக்கிறார், அதற்கு  எல்லா தரப்பு மக்களிடமும் அழகாக பதிந்து இருந்த விதி என்ற நம்பிக்கையை கவிதை கருவுக்கு பின்னியாக எடுத்துக் கொண்டார், 
          மற்றப்படி ஆதிக்கால தமிழர்கள் விதியை நம்புவார்களாக மட்டுமில்லை சில பேர் அதை விமர்சனம் செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள், ஆனால் அந்த விமர்சனம் இப்போது சிலர் செய்வது போல் அர்த்தம் இல்லாததாகவும். மற்றவர்களின் மனதை புண்படுத்துவதாகவும் அமையவில்லை என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்,

        ஒவ்வொரு தனி மனிதனும் தனது வாழக்கையில் விரும்பியோ. விரும்பாம்பலோ ஏற்படுகின்ற இன்ப துன்பங்களை விதியின் பரிசு என்ற மன திருப்தியோடு ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை அமைதியுடன் நடத்துகிறான், தன் வாழ்வில் ஏற்படுகின்ற ஒவ்வொரு துயரத்திற்கு யாரோ ஒருவர் காரணம் என்று மனிதன் பொங்கி எழுந்தால் சமுதாய அமைதி கெட்டுவிடும் என்பதை விட மனிதனின் உடல்நலமும் பாழ்பட்டுவிடும், அனுபவத்தின் வாயிலாக பார்க்கும் போது விதியை நம்புவதினால். பாதிப்புகள் எதுவும் பெரியதாக ஏற்பட்டுவிடவில்லை, தன் சொந்த வாழ்க்கையில் விதியை நம்பும் தமிழன் பொது வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளை விதி என்று அமைதியாக ஏற்றுக் கொண்டு போனதாக சரித்திரம் இல்லை,

        கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி காலையில் ராமனை அரசாள வாவென்று அழைத்தான் மன்னன் மாலையில் காடாள போவென்றாள் சிற்றன்னை இதைக் கேட்ட தம்பி லஷ்மணன் அண்ணன் ராமனுக்காக பெற்ற தந்தையின் படையினரையே தாக்க ஆயத்தமாகிவிட்டான், தசரதனின் பெரும்படையால் பூமியில் பாரம் ஏற்பட்டுவிட்டது, அதனால் அவன் படையை ஒழிப்பேன், எதிர்த்து நின்றால் தகப்பன் என்றும் பாராமல் தசரதனோடும் மோதி வெற்றிக் கொள்வேன், வேறு யார் தடுக்க வந்தாலும் அவர்களையும் வெட்டி வீழ்த்துவேன், ரத்ததின் மீது தான் அண்ணன் ராமன் சிம்மாசனம் ஏறுவது என்று  இருந்தால் அதை நிறைவேற்றியே தீருவேன் என்று வீர முழக்கம் செய்தான்,

    தம்பியின் போர்க்கோலம் அண்ணனுக்கு தெரிந்தது, நெஞ்சு படபடக்க தம்பியை தடுக்க ஓடி வந்தான். தடந்தோள் ராமன், கோபம் என்பதே என்னவென்று அறியாத குணக்குன்றல்லவா நீ ? ஆயுதம் தூக்கலாமா? அதுவும் வணங்கத்தக்க தகப்பானாருக்கு எதிராக? கூடாது, அமைதி கொள் என்று தம்பியை சாந்தப்படுத்துகிறான், இளைய பெருமானின் கோபம் அப்போதும் தனியவில்லை, அண்ணா! இப்போதே உனக்கு மூடி சூட்டியாக வேண்டும், அதை தடுக்க நினைப்பவர்களை எரியூட்டியாக வேண்டும், என்ற கோப நெருப்பை கொப்பளிக்கிறான், அவனது ஆத்திரம் ராமனுக்கு வருத்தத்தை தந்தது, தகாத மொழியால் தம்பி தகப்பானரையும். தாயாரையும் பேசுவது பிடிக்கவில்லை, எவ்வளோ சமதாப்படுத்த முயலுகிறான், ராமன் நில் என்ற வார்த்தையை உச்சரிக்க நினைக்கும் போதே நின்றுவிடும் லட்சுமணன் ராமனுக்காக வந்த கோபத்தை ராமன் தடுத்தும் நிறுத்த முடியவில்லை, அதனால்

        “நதியின் பிழையன்று
            நறும்புனல் இன்மை அற்றே
        பதியின் பிழையன்று பயந்து
            நமைப்புரந்தாள்
        மதியின் பிழையன்று. மகன் பிழை
            அன்று. மைந்த
        விதியின் பிழை. நீ இதற்கு
            என்னை வெகுண்டதென்றான்”,


        என்று கூறி சமாதானப்படுத்த முயற்சித்தான் நேற்ற வரை இரு கரையும் தொட்டு ஓடிய ஆற்று வெள்ளம் இன்று காய்ந்து போய்விட்டது என்றால் அது நதி செய்த குற்றமா? வரத்தை கொடுத்தது தந்தையின் குற்றமா? அதை வேண்டி கேட்டது தாயின் குற்றமா? அல்ல தம்பி அல்ல. யாரும் குற்றம் செய்யவில்லை, தம்பி பரதன் கூட குற்றவாளியல்ல, பிறகு யார் குற்றவாளி என்று நினைக்கிறாயா இது யார் செய்த குற்றமென்று கலங்குகிறாயா இது விதி செய்த குற்றம், விதியால் வந்த குற்றம், இதற்காக கோபப்படுவது தவறு என்கிறான், நடந்த துயரத்திற்குகெல்லாம் காரணமாக இருப்பது கண்ணுக்கு தெரியாமல் எங்கோ மறைந்திருக்கும் விதி எனும் போது கருவிகளான மனிதர்களை வெறுப்பது பாவம் என்பது ராமனின் எண்ணம்,
        ராமணின் வார்த்தையில் அறிவு மட்டுமல்ல அனுபவமும் கலந்திருப்பது இளைய பெருமானின் மனதிற்கு தெரிகிறது, ஆனால் அறிவு அதை ஏற்று கொள்ள மறுக்கிறது, நிகழ்ந்துவிட்ட அநீதியை சகித்துக்கொள்ள அறிவால் இயலவில்லை, அண்ணன் காட்டிற்கு போக போகிறான் என்பதை நினைக்க நினைக்க உலையிலிருந்து நெருப்பும் புகையும். பொங்கி வருவது போல் லஷ்மணனின் இதயம் கொதித்தது, சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் அறியாமையை கண்டு வறுமையை கண்டு. தீய இயல்புகளை கண்டு ஒரு நல்ல தலைவனின் மனம் என்ன பாடுபடுமோ அதே பாட்டை லஷ்மணன் பட்டான்,

   அண்ணா? என் மனம் ஆற மாட்டேன் என்கிறது, நீ காடு செல்ல வேண்டும் பரதன் நாடாள வேண்டும் என்று விரும்புகின்ற கைகேகியை என்னால் மன்னிக்க முடியவில்லை, அவளின் சூழ்ச்சிக்கு தோள் கொடுக்க தேவாதி தேவர்கள் வந்தாலும் நீ விதி விதி என்று சொல்கிறாயே அந்த விதியே கண் முன்னால் வந்து நின்றாலும் எல்லாவற்றையும் வெல்லுகின்ற மாபெரும் விதியாக என்கையில் வில் இருக்கிறது, இது சாதாரண வில் அல்ல அண்ணா. வெல்ல முடியாத விதியை கொல்லும் எமன் இது. என்று அண்ணனின் ஆறுதலுக்கு மறுமொழி சொல்கிறான் தம்பி,

        “,,,,,,,,,,,,, கோள் இழைத்தாள்
            மதி மயக்கும்மதியாய். முதல்
        வானவர்க்கும் வல் இதாம்
            விதிக்கும் விதியாகும் - என்
        வில்(த்) தொழில்
            காண்டி” என்றான்
                    (கம்பராமாயணம்)


        நன்றாக முற்றி பழுத்த பலாசுலையை கொம்பு தேனில் ஊற வைத்து மாம்பழ சாற்றுடன் பிசைந்தெடுத்தால் என்ன சுவையோ  அந்த சுவை தான் கம்பனின் இந்த பாட்டு சுவை, பாடலின் சுவையை அனுபவிப்பது எல்லாம் இருக்கட்டும், விதியை நம்பு என்கிறான் அண்ணன், விதியை கொல்வேன் என்கிறான் தம்பி இருவருக்குள் இத்தனை முரண்பாடு ஏன்? அண்ணனனின் கூற்றை நம்புவதா? தம்பியின் கூற்றை நம்புவதா? குழப்பம் நமக்கு ஏற்படுகிறது, ஆனால் ஆழ்ந்து சிந்திக்கும் போது குழம்ப வேண்டிய அவசியமேயில்லை என்பது தெளிவாக தெரிகிறது,

    அரசு பதவி போனது ராமனை பொறுத்து வரை தனிப்பட்ட விஷயம், அதனால் அவன் விதிவசம் என்று தன்னை சமாதானப்படுத்தி  கொண்டான், இளைய பெருமாளுக்கோ அது பொது விஷயம். தேச நலன் சம்பந்தப்பட்ட விஷயம், அதனால் அவனால் விதி என்ற சும்மா உட்கார்ந்து விட முடியவில்லை, போராட எழுந்து விட்டான், விதி என்பது உண்டா? இல்லையா? என்று ஆராயும் தருணம் இதுவல்ல விதி கொள்கை தமிழர்களுக்கு உண்டா? இல்லையா? என்பதே நம் முன்னால் நின்ற கேள்வியாகும், அந்த கேள்விகளுக்கு விடைகாண தான் நாம் கணியன் பூங்குன்றனாரையும். கவிசக்கரவர்த்தி கம்பனையும் உரசி பார்த்தேன், இருவரும் இன்றைய தமிழர்களின் வாழ்க்கை தத்துவம் எந்த நோக்கில் பார்க்கப்படுகிறதோ அதே நோக்கில் தான் ஏறக்குறைய அன்றும் பார்க்கப்பட்டு இருக்கிறது, பகுத்தறிவுவாதிகள் சொல்வது போல் பழம் தமிழர்களின் சிந்தனை மரபு இந்து மதத்திற்கு எதிரானது அல்ல, தமிழ் பண்பாட்டின் சாயல் தான் இந்து பண்பாட்டின் சாயலாக எப்போதுமே வெளிபட்டுக் கொண்டிருக்கிறது, இதை மக்கள் முழுமையாக புரிந்து கொள்ள உண்மையான இலக்கியவாதிகள் முன்வந்து உழைத்தால் போலி மத்தாப்புக்கள் பெட்டிக்குள் அடங்கி கொள்ளும்,


Contact Form

Name

Email *

Message *