Store
  Store
  Store
  Store
  Store
  Store

கனவுகள் மட்டுமே மிச்சம்...!


    ரசாங்க பஸ்ஸில் ஏறினாலே பாதி வழிதான் போகமுடியும் மீதி வழிக்கு நடராஜா சர்வீஸ் தான் தலையெழுத்து

பாதிவழிக்கு வந்தாலே கடவுளுக்கு நன்றி சொல்லணும் இது பெயரு பஸ்ஸா சரியான கட்ட வண்டி பாடி சரியில்ல உட்காரும் சீட்டும் சரியில்ல பல பஸ்சுல பிரேக்கே இல்ல இப்படியிருந்தும் வண்டிய ஓட்டிகிட்டு வாரான்பாறு அவனுக்கு மெடலே குத்தனும்.

இனி இந்த பஸ்சு எப்ப கிளம்பி எப்ப ஊர் பேய் சேர்வது. வண்டி நகரும் வரையும் காத்திருக்க வேண்டியது தான்.

இந்த பேச்சு சத்தங்கள் வசந்திக்கு கனவில் கேட்பது போல இருந்தது. மூன்று நாட்களாக கண்களை மூடாமல் செங்கல் அறுத்தது உடல் முழுவதும் வலித்தது. ஊருக்கு கிளம்ப பஸ்ஸில் ஏறி அமர்ந்தாளோ இல்லையோ அலுப்பில் கண்கள் இழுத்துக்கொண்டு போனது. பஸ்ஸின் ஆட்டமும் சாலையின் மேடு பள்ளமும் அவளை ஒன்றும் செய்யவில்லை களைப்பு வரும்போது சுகபோகம் கேட்பதற்கு அவள் உடம்பென்ன ராஜா வீட்டில் பிறந்து வளர்ந்ததா?


பஸ்ஸிற்குள் சலசலப்பு அதிகமாக கேட்கவே சுயநினைவுக்கு வந்தாள். பக்கத்தில் இருந்த வயதான மூதாட்டி பாழாய்போன வண்டி ரிப்பேர் ஆயிடிச்சாம் இனி வேறு வண்டி வந்தால் தான் போகமுடியுமாம். என்றாள் வசந்திக்கு பகிர் என்றது இப்போதே நேரம் உச்சி பொழுதை தாண்டிவிட்டது இனி அடுத்த பஸ் வந்து ஊருக்கு போகவேண்டும் என்றால் வானம் கருத்துவிடும். பஸ்சும் வேண்டாம் பயணமும் வேண்டாம் என்று பொடிநடையாக நடந்து போனால் கூட காட்டுப்பையூருக்கு பத்து மையில் நடக்க வேண்டும். வழிநெடுக காடு ஒத்த பொம்பளை நடந்து போவது ஆபத்தான காரியம்.

பேருந்தின் ஜன்னல் வழியே வெளியில் பார்த்தாள் நல்லவேளை எதோ ஒரு பெரிய ஊருக்குள் தான் வண்டி ரிப்பேராகி நின்று இருக்கிறது குடிப்பதற்கு தண்ணியாவது கிடைக்கும். பேருந்து நடத்துனர் சொன்னார் டிப்போவிற்கு போன் போட்டிருக்கிறோம் இன்னும் ஒருமணி நேரத்தில் வேறு வண்டி வரும் அதுவரையில் வெளியில் எங்கும் போவதாக இருந்தால் போய்விட்டு வந்து விடுங்கள்.

வசந்திக்கு அது சரியென பட்டது ஓடாத வண்டியில் எத்தனை நேரம் கால்களை மடக்கி உட்காந்திருப்பது கீழே இறங்கி காலாற நடக்கலாம் அல்லது ஊரையாவது வேடிக்கை பார்க்கலாம் என்று நினைத்து கீழே இறங்கினாள். என்ன ஊர் இது அனந்தபுரமாக இருக்குமோ? இருக்கலாம் நமக்கென்ன பல ஊர் சுற்றி அனுபவமா இருக்கிறது. பார்த்தவுடன் இது இன்ன ஊர் என்று கண்டுபிடிக்க ஆனாலும் ஊர் சற்று பெரியதாகதான் இருந்தது. இரண்டு டீ கடை ஒரு முனியாண்டி விலாஸ் ஓட்டல் சற்று தள்ளி ஒரு ஜவுளிக்கடை என்று ஊர்தனது வளமையை காட்டியது.


வசந்திக்கு தொண்டையை நனைக்க தண்ணீர் குடித்தால் பரவாயில்லை என்று தோன்றியது. பக்கத்திலிருந்த பெட்டிகடைக்கு சென்று குடிக்க தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டாள் ஒரு பாக்கெட் தண்ணீர் இரண்டு ரூபாய் உனக்கு எத்தனை பாக்கெட் வேண்டுமென்று கடைக்காரர் கேட்டார் அடப்பாவி எங்கள் ஊர் வாய்க்காலில் வழிந்து ஓடும் தண்ணீரை பிடித்து பாக்கெட்டில் அடைத்து அநியாய விலைக்கு விக்கிரீர்களே நியாயமா இது என்று கேட்க தோன்றியது ஆனால் வாயை மூடிக்கொண்டு ஒரு பாக்கெட் தண்ணீர் வாங்கி குடித்தாள் அப்போது தான் பெட்டிக்கடையில் விற்பதற்காக வைத்திருந்த சிறிய மண் உண்டியல்களை பார்த்தாள்.

அம்மா எனக்கு உண்டியல் வாங்கிகொடு நான் அதில் காசு சேர்த்து புதுசட்டை எடுப்பேன் என்று கண்களில் கனவுகள் விரிய மகன் கேட்டது நினைவுக்கு வந்தது இந்தமுற சூளைக்கு போய்விட்டு வரும்போது கண்டிப்பாக வாங்கி தாரேன் நீ நன்றாக படி என்று அவனை சமாதான படுத்தியதும் அவளால் மறக்க முடியாது. மணிகண்டன் தாய் சொன்னதை கேட்டு தலையாட்டினான் அவனுக்கு அவள் பேச்சில் அசைக்க முடியாத நம்பிக்கை எப்போதுமுண்டு அம்மா சொன்னால் கண்டிப்பாக செய்வாள் என்பது அவனது எண்ணம்.

வசந்திக்கு மணிகண்டன் ஒரே பையன் தான் அடுத்த பிள்ளை பெற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லாமல் கட்டிய புருஷன் போய் சேர்ந்துவிட்டான் அவன் உயிரோடு இருந்தால் மட்டும் இன்னும் இரண்டு பிள்ளைகளை பெற்றுயிருக்கலாமே தவிர வேறு எந்த பயனும் இருக்காது. தாகம் அடங்கிய அந்த சிறிய நேரத்தில் புருஷன் நினைவு அவளுக்கு வந்து போனது சாராய நாற்றமில்லாமல் அவனை எப்போதும் நினைத்து பார்க்கவே முடியாது. கட்டிட வேலைக்கு போவான் சுண்ணாம்பு அடிக்க செல்வான் எப்படியாவது தினசரி சிலநூறுகளை சம்பாதித்து விடுவான். ஆனாலும் பயன் என்ன?


ரேசன் கடையில் வாங்கும் புழுத்த அரிசிக்கு சாம்பார் வைக்க பத்துரூபாய் தருவான் மீதமெல்லாம் சாராய கடைக்கும் சீட்டாட்ட மேடைக்கும் போய்விடும். சில நேரங்களில் இந்த அனந்தபுர டவுனுக்கு வந்து பெண்களோடு சுற்றுவானாம். கதிரறுக்க வழியில்லாதவனுக்கு காது குத்த தங்க குச்சி வேண்டும் என்பது போல பெண்டாட்டி பிள்ளைகளுக்கு சோறு போட துப்பில்லாதவனுக்கு பக்கத்துக்கு இரண்டு வைப்பாட்டி வேண்டுமாம். தட்டி கேட்டால் அடி உதை இதுதான் கணவனிடம் அவள் பெற்ற பரிசுகள்.

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி நோயில் விழுந்து ஒருநாள் செத்துபோனான் அப்போது மணிகண்டனுக்கு நான்கு வயசு தான் இருக்கும். பிணமாக கிடக்கும் தகப்பனை பார்த்து அம்மா இனி அப்பா எழுந்துவர மாட்டார்தானே அப்படியே கிடக்கட்டும் எழுப்பி விட்டுவிடாதே வந்தால் உன்னை அடித்தே கொன்றுவிடுவார். என்றான் அவளுக்கு மகனின் பாசத்தை எண்ணி அழுவதா? இப்படி ஒரு பிள்ளைக்கு அப்பனாக இருக்க முடியாமல் செத்துபோன மூடனை எண்ணி அழுவதா என்று தெரியவில்லை.

மணிகண்டனுக்கு நிறைய கனவுகள் உண்டு கிழிந்துபோன அவள் புடவையை சானதரையில் விரித்து கால்மேல் கால்போட்டு படுத்துகொள்வான் அம்மா நான் பெரியவனானதும் ரஜினிகாந்த் போல சண்டை கற்றுகொள்வேன் நம்ம அப்பா மாதிரி குடிகாரர்களை அடித்தே திருத்துவேன் என்பான் தீடிரென அவனுக்கு சந்தேகம் வந்துவிடும். குடித்தால் செத்து போய்விடுவோம் என்று தெரிந்தும் குடிக்கிறார்களே அது ஏன்? எங்க வாத்தியார் அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்ய தான் இருக்கிறது என்கிறார் அப்புறம் ஏன் அவர்களே குடிப்பதற்கு கடை நடத்துகிறார்கள். என்று கேட்பான் அவளால் பதில் சொல்ல முடியாது.

பல நேரம் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்மேட்டில் உட்கார்ந்து காய்ந்துபோன புற்களை பரித்தவண்ணம் சிந்தனையில் இருப்பான் அவனது அழகான முகம் அவன் எண்ணங்களை பிரதிபலிக்கும் பிள்ளை நினைப்பது தாய்க்கு தெரியாதா என்ன? இத்தனை நல்ல மகனை எப்பாடு பட்டாவது மனிதனாக்க வேண்டும் என்று ஆசைபடுவாள் மகன் பக்கத்தில் சென்று நீ பெரியவன் ஆனதும் உன்னை போல இருக்கும் பிள்ளைகளுக்கு உதவ வேண்டும் அதற்கு நீ நன்றாக படிக்க வேண்டும் என்று சொல்வாள்

நீ கவலைபடாதே எங்கள் கிளாசில் நான்தான் முதல் மார்க் நம்ம ஊரு பஞ்சாயத்து தலைவர் பையன் கூட எட்டாவது ரேங் தான் நான் படிச்சி கலெக்டரா வருவேன் நம்ம ஊருக்கு ரோடு போடுவேன் கரண்டு கம்பத்துல லைட் போடுவேன் எல்லோர் வீட்டிற்கும் தண்ணீர் கொடுப்பேன் என்று சொல்லி எழுந்து நின்று மறைகின்ற சூரியனை உற்று பார்ப்பான். ஒருநாள் இல்லை என்றாலும் ஒருநாள் உன்னை வந்து கண்டிப்பாக தொடுவேன் என்று அவன் எண்ணுகிறானோ என்று அவளுக்கு தோன்றும் தரையில் கிடக்கும் ரப்பர் பந்தை சூரியனை நோக்கி மகன் உதைப்பான் அந்த பந்து சூரியனில் போய் விழுவது போல அவளுக்கு தோன்றும் காரணம் தன்னால் முடியாததை முடிக்க போவது மகன்தான் என்பது அவளது நம்பிக்கை அந்த நம்பிக்கையின் முன்னால் அவள் மகன் அவளுக்கு சூரியனையே பந்தாக கொண்டு ஒருநாள் கொடுப்பான் என்று தோன்றியது.

மணிகண்டன் தீடிரென்று ஒருநாள் அம்மா நீ செங்கல் சூளைக்கு வேலைக்கு போகவேண்டாம் நாம் ஒரு பசுமாடு வாங்குவோம் பள்ளிக்கூடம் போய்வந்த பிறகு புல்பரித்து வருகிறேன் நீ பாலை கறந்தால் நான் கடையில் ஊற்றிவிட்டு வருகிறேன் லீவு நாளில் மாட்டை ஒட்டி போய் மேய்க்கவும் செய்கிறேன் என்றான் மகனின் பொறுப்பு அவளுக்கு பெருமையாக இருந்தது. அவன் அப்படி சொல்வதன் உள்ளர்த்தமும் அவளுக்கு புரிந்தது. செங்கல் சூளைக்கு வேலைக்கு போனால் வாரத்தில் ஓர்முறை தான் வீட்டுக்கு வரமுடியும் அதுவரையும் அவனுக்கு பக்கத்து வீட்டு பாட்டி தான் சாப்பாடு கொடுக்கிறாள் ஒருநாள் அம்மாவோடு இருப்பதே அவனுக்கு சொர்க்கம் அந்த சொர்க்கத்தை நிரந்தரமாக்கி கொள்ள ஆசைபடுகிறான். அதனாலேயே மாடு வேண்டும் என்கிறான். வசந்திக்கு அதை நினைக்க நினைக்க அழுகை வந்தது ஒருமகனை பெற்று பக்கத்தில் இருக்க முடியவில்லையே என்று எத்தனையோ இரவுகள் அழுதிருப்பாள்


நீ இல்லாத போது வீட்டில் நான்தான் தனியாக படுத்து கொள்கிறேன். எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது யாரவது திருடன் வந்தால் நான் என்ன செய்வது பாட்டியை கூப்பிட்டால் கூட அவளுக்கு காது கேட்கவில்லை கண்ணும் தெரியாது என்னையும் உன்னோடு கூட்டிபோ என்று அடம்பிடிப்பான் அதுவும் சிறிது நேரம் தான். செங்கல் சூளைக்கு வந்துவிட்டால் பள்ளிக்கூடம் எப்படி போவாய் பெரிய மனுஷனாய் எப்படி ஆவாய் என்று கேட்டவுடன் அடங்கி விடுவான். அந்த நேரம் அவள் அடிவயிறு கலங்குவதை வெளிக்காட்ட கூட முடியாது.

ஏம்மா நீங்க ரிப்பேரான பஸ்ஸில் ஊருக்கு போறவங்களா உங்களையெல்லாம் கூட்டிபோக வேற பஸ் இப்போ வந்திடுமாம் பஸ் பக்கத்துல போய் நில்லுங்க இங்க இருந்திங்கனா விட்டுட்டு போனாலும் போயிடுவானுங்க என்று ஒருவர் வந்து இவளிடம் சொன்னார். மகன் எண்ணத்திலேயே ஊரிகிடன்தவள் நிகழ் உலகத்திற்கு வந்தாள். இவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது ஒவ்வொரு மனிதனுக்காகவும் காத்து நின்றால் இந்த நாட்டில் எந்த கடமையுமே நடக்காது அவனவன் வேலையை அவனவன் பார்த்துக்கொள்ள வேண்டும். கவனம் தவறினால் இதில் சிரமம் தான் படவேண்டும்.

வசந்தியின் பார்வை பெட்டிகடையில் இருந்த உண்டியல்களை நோக்கி மீண்டும் சென்றது ஒவ்வொரு உண்டியலும் மண்ணால் உருட்டி செய்த லட்டுகள் போல் அழகாக இருந்தது. உண்டியலின் தலையில் காசுபோடுவதற்காக இருந்த வாய் ஒரு குழந்தையின் உதடுகள் போல் அவளை பார்த்து சிரித்தன இந்த உலகமென்பது உண்டியல் மாதிரி உருண்டை இதிலுள்ள ஓட்டை தான் மனிதர்களின் ஆசை அதில் எவ்வளவு காசு போட்டாலும் நிறையவே நிறையாது மாறாக உண்டியல் தான் உடையும் இன்றைய உலகமும் மனித ஆசையால் உடைவதற்கு தானே தயாராக இருக்கிறது.


இடுப்பில் சொருகி இருந்த பையை கையில் எடுத்து கடைகாரரிடம் உண்டியலின் விலை என்ன என்று கேட்டாள் ஒரு உண்டியலை எடுத்து ஆசையாக தடவியும் பார்த்தாள் போனவாரம் வரையில் இந்த உண்டியலின் விலை பதினைந்து ரூபாய் இப்போ ஐந்து ரூபா ஜாஸ்தியா ஆயிடிச்சு என்று கடைகாரர் சொன்னார். மண்ணை மிதித்து பதபடுத்தி கைகளால் பிசைந்து பானைகள் செய்து விற்ற காலம் மலையேறி விட்டது. இன்று மண்பானை காட்சி கூடத்தில் தான் இருக்கிறது. அதை செய்கின்ற குயவனின் வாழ்வும் அப்படியே ஆகிவிட்டது. அவன் வயிற்றில் ஈரதுணியை போர்த்தாமல் இருக்க இப்படி எதாவது பொருளை செய்து தான் ஆக வேண்டிய நிலையில் நாடு இருக்கிறது. அதனால் இதற்கு இத்தனை ரூபாயா என்று பேரம் பேசுவது நன்றாக இருக்காது.

வசந்தி கையில் உள்ள ரூபாயை மனதில் கணக்கு போட்டு பார்த்தாள் அரிசி பருப்பு சீட்டு பணமென்று எல்லாம் போனால் கையில் ஐம்பது ரூபாய் கூட மிச்சம் இருக்காது. இதில் இருபது ரூபாய்க்கு உண்டியல் வாங்கி விட்டால் திரும்பவும் செங்கல் சூளைக்கு பஸ்பிடித்து வர யாரிடமாவது கடன் தான் கேட்க வேண்டும். வாய்க்கும் கைக்கும் போராட்டம் நடத்தும் காட்டுப்பையூரில் இவளுக்கு கடன் கொடுக்கும் அளவிற்கு யாருக்கும் வசதி இல்லை அவரவர் கஷ்டம் அவர்ரவருக்கு.

இருபது ரூபாய் கொடுத்து உண்டியல் வாங்கி விடலாம் இதில் போட்டு வைக்க காசு வேண்டுமென்று மகன் கேட்டால் என்ன பதில் சொல்வது எப்படி பணம் கொடுப்பது வெற்று உண்டியலை பார்த்து அவன் கனவுகள் காணவேண்டியது தானா? வேண்டாம் அவனுக்கு காண்பதற்கென்று ஏராளமான கனவுகள் காத்து கிடக்கின்றன அதில் காசுக்காகவும் அவன் கனவு கண்டால் இளைய மனம் கருகுமென்று அவளுக்கு தோன்றியது. காசு கேட்ட பிள்ளைக்கு கொடுக்க முடியாமல் வாரம் முழுவதும் தானும் அழ வேண்டும் என்றும் அவளுக்கு தோன்றியது. அவள் அழுவற்கென்றே நிறைய விஷயங்கள் இருக்கின்றன அவற்றில் இந்த ஒரு பாரமும் கூட கூடாது என்று நினைத்தாள் அதனால் எடுத்த உண்டியலை கடையில் வைத்து விட்டு அடுத்த முறை வந்து வாங்கிகொள்கிறேன் என்று ரிப்பேரான பேருந்தை நோக்கி நடந்தாள் அவளுக்கென்னவோ தனக்கு பின்னால் நிறையப்பேர் வருவது போல் தோன்றியது. தன்னை போல.

Contact Form

Name

Email *

Message *