Store
  Store
  Store
  Store
  Store
  Store

விதவைகள் தாலி அணியலாமா?


    குருஜி அவர்களிடம், மிக முக்கியமான கேள்வி ஒன்றை கேட்கப் போகிறேன். அதற்கு எந்தவித மறைபொருளும் இல்லாமல் பதில்சொல்ல வேண்டுகிறேன். ஐயா சில கோவில்களில் குங்குமம் மட்டுமே பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. ஆலயத்தில் சுவாமியை வழிபட பலதரப்பட்டவர்களும் வந்திருப்பார்கள். அவர்களில் கணவன் இல்லாத பெண்கள் கூட இருக்கலாம். அப்படி, கணவன் இல்லாத பெண்கள் குறிப்பிட்ட ஆலயத்திற்கு வரும் போது குங்கும பிரசாதம் பெற்றுக் கொள்ளலாமா? அவர்களுக்கு குங்குமம் கொடுக்கலாமா? என்பதை விளக்கவும். மேலும் பிரசாதமாக பெற்ற குங்குமத்தை அத்தகைய பெண்கள் அணிந்து கொள்ளலாமா? அது முறைப்படி, அதாவது சாஸ்திரப்படி சரியானது தானா? என்பதற்கு தெளிவான விளக்கங்களை தருமாறு பணிவோடு வேண்டுகிறேன். 

எஸ்.வினோதினி,
புனே.


   ருநாள், மதிய வேளை உணவை முடித்து விட்டு சற்று இளைப்பாறலாம் என்று படுக்கப்போனேன். படுத்து, கண்ணயரும் போது தொலைபேசி வந்தால் இடைஞ்சலாக இருக்கும் என்ற எண்ணத்தில் அதை அனைத்து வைக்கப் போனேன். அந்த நேரம் பார்த்து தொலைபேசி மணியும் அடித்தது. சரி பேசிவிட்டு, பிறகு அணைத்துக் கொள்ளலாம் என்று தொலைபேசியை எடுத்தேன். ஒரு அம்மையார் பதற்றத்தோடும் அழுகையோடும் பேசினார்.  ஐயா! எனது கணவர் இறந்து ஐந்து மாதங்கள் ஆகிறது. அவர் திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். அவருடைய இழப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. அவர்களின் வாழ்வுக்காக நான் வாழ்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதனால் கணவனின் இழப்பையும் தாங்கி கொண்டு ஒரு நடைப்பிணம் போல வாழ்ந்து வருகிறேன். 

என் கணவர் உயிரோடு இருந்த காலத்தில், நீ என்னிடமிருந்து பெற்றது எதையும், எந்த காலத்திலும், எந்தச் சூழலிலும் இழக்க கூடாது. உன் ஆயுள் காலம் வரையில் அவைகள் உன்னுடனே இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். அவர் என் மனதில் ஆழ பதிந்ததை போல அவர் சொல்லிய இந்த வார்த்தைகளும் ஆழ பதிந்து விட்டது. இதனால் அவர் எனக்கு தந்த எந்த ஒரு சிறிய பொருளாக இருந்தாலும் கூட, அதை பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறேன். 

என் கணவர், எனக்கு வீடு வாங்கி தந்தார். அதுவும் என்னோடு இருக்கிறது. அவர் தனது தாய், தந்தையரை மாமனார், மாமியார் என்ற உறவில் எனக்கு தந்தார். அவர்களும் என்னோடு இருக்கிறார்கள். எனது வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தை தந்த இரண்டு குழந்தைகளை அவர் எனக்கு தந்தார். அவர்களும் என்னோடு கூடவே இருக்கிறார்கள். அவர்களையும் நான் கைவிடப் போவது கிடையாது. 

வீடு, மனையை சொந்த பந்தங்களை தந்த அதே கணவன் தான் எனக்கு மஞ்சள், குங்குமம், தாலி போன்ற மங்களப்பொருட்களையும் தந்தார். மற்றவைகளை நான் கைவிடாத போது, இவைகளை மட்டும் கைவிட்டால் அவருடைய ஆத்மா என்னை மன்னிக்காது என்று உள்ளுணர்வு சொன்னதனால் இன்றுவரை நான் அவைகளை விலக்கவில்லை. இழக்கவும் இல்லை.

நான் எடுத்த இந்த முடிவை என் வீட்டார் யாருமே எதிர்க்கவில்லை. காரணம், அவர்கள் என்னை முழுமையாக புரிந்தவர்கள். ஆனால், உறவினர்கள் என்னை வெறுக்கிறார்கள். ஒழுக்கம் கெட்டவளை ஒதுக்குவது போல ஒதுக்குகிறார்கள். நான் வெளியில் சென்றால் காதுபடவே விமர்சனம் செய்கிறார்கள். சிலர் இது சாஸ்திர விரோதம் இப்படி நீ செய்வது உன் தலைமுறையை பாதிக்கும் என்றும் அறிவுரை தருகிறார்கள்.

நான் விமர்சனங்களை கண்டு அஞ்சவில்லை, காரணம் என் பிள்ளைகளும், மாமனாரும் மாமியாரும் என்னை புரிந்து கொண்டு வாழும் போது மற்றவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை. வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் என்று அந்த விமர்சனங்களை புறக்கணித்து விடுகிறேன். ஆனால் சாஸ்திர விரோதம் தலைமுறையை பாதிக்கும் என்று கூறப்படும் அறிவுரைகள் மட்டும் எனக்கு அச்சத்தை தருகிறது. 

உண்மையாகவே கணவனை இழந்த பெண்கள், தாலியை அணியக் கூடாதா? பூவும், பொட்டும் வைத்து கொள்ளக் கூடாதா? இது சாஸ்திரத்திற்கு விரோதமானதா? இதனால் குடும்பத்திற்கு பாதிப்பு வருமா? என்று எனக்கு தெரியவில்லை. அறியாமை என்பதே அச்சத்தின் காரணம் என்று எனக்கு தெரியும். எனவே நீங்கள் எனக்கு ஆறுதலான பதிலை அல்ல. நிஜமான பதிலை தாருங்கள். அதையே வேத வாக்காக ஏற்றுக்கொள்கிறேன் என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். 

அந்த அம்மையாருக்கு, சொன்ன பதிலை எப்படியாவது வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் பல நாட்கள் விரும்பினேன். அதற்கான வாய்ப்பாக இந்த கேள்வி அமைந்திருந்தது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. பொதுவாக என்னால் பூசி மெழுகி பதிலை தர இயலாது. அதை நான் விரும்புவதும் இல்லை. மனதில் பட்டதை சொல்லி விடுவேன் தெரியாது என்றால், வெட்கமே இல்லாமல் தெரியாது என்று ஒத்துக்கொள்வேன். இதில் என் பலமும் உண்டு. பலவீனமும் உண்டு.

நமது வேதங்கள், உபநிஷதங்கள், பகவத் கீதை, பிரம்ம சூத்திரம் போன்ற மிக புனிதமான நமது மதத்தின் ஆதார நூல்கள் எதுவும் விதவைக் கோலத்தை பற்றி எந்த தகவலையும் தரவில்லை. கணவனை இழந்த பெண் இப்படி இருப்பது தான் முறை. இதுவே தர்மம் என்று ஆதிகால தர்ம சாஸ்திரங்கள் எதுவும் கட்டளை போடவில்லை. மிக பிற்காலத்தில் தோன்றிய சில சாஸ்திர நூல்கள், விதவா சடங்கை பற்றி பேசுகிறது. அதுவும் சில பழக்க வழக்கங்கள் மக்கள் மத்தியில் பல காலமாக நடைமுறையில் இருக்கிறது என்று தான் சொல்கிறதே தவிர கட்டாயப்படுத்தி எதையும் சொல்ல வில்லை.

நமது மதத்தை பற்றி மிக தவறுதலான கருத்துக்கள் பல இருக்கிறது. உதாரணமாக, இந்து மதம் வரதட்சணை வாங்க சொல்கிறது. என்று சிலர் பேசுகிறார்கள். இதற்கு என்ன ஆதாரம் என்று அவர்களுக்கே தெரியாது. ஆனாலும், மக்கள் மத்தியில் உள்ள வழக்கங்களை, சாஸ்திரங்கள் தான் சொல்கின்றன என்று தவறாக புரிந்து கொண்டு பேசுகிறார்கள் என்று தான் கூற வேண்டும். அதைப் போலவே விதவைகள் மங்களப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுவதாக சொல்வதும்

ஒரு காலத்தில், இறந்த கணவனோடு தானும் இறந்து போகும். பெண்ணே பத்தினி என்று நம்பமாட்டாள். அதற்காக உயிரோடு எரிக்கப்பட்ட பெண்கள் எத்தனையோ பேர் உண்டு. அதன் பிறகு, கணவனை இழந்த பெண்ணுக்கு மொட்டை அடித்து, காவி வஸ்திரம் கொடுத்து மூலையில் உட்கார வைக்கும் பழக்கம் வந்தது. அதுவும் இப்போது முற்றிலுமாக மறைந்து விட்டது. கணவனோடு, மனைவியை எரி என்று சாஸ்திரம் சொல்லி இருந்தால் மொட்டை அடி என்று அது கட்டளை போட்டிருந்தால், அவைகளை மீறுவது பாவமாக அல்லவா மாறி இருக்கும்.

எனவே அவைகள் சாஸ்திரங்கள் சொன்ன சடங்குகள் அல்ல. சில காலச் சூழலுக்கு ஏற்றவாறு செய்து கொண்ட பழக்கங்களே ஆகும். அதைப் போலதான் பூவும், பொட்டும் விலக்கும் பழக்கமும் மக்கள் மத்தியில் நிலைத்து வருகிறது. இதற்கு எந்தவிதமான சாஸ்திர வேத ஆதாரங்கள் இல்லவே இல்லை. எனவே கணவனை இழந்த பெண்கள், தாங்கள் விருப்பப்பட்டால் தாலியோடு கூடவே குங்குமத்தையும் பயன்படுத்தலாம். அதற்கு மதம் எந்த தடையும் விதிக்கவில்லை.


கணவனை இழந்த பெண் குங்குமத்தோடு வாழ்ந்தால், அவள் ஒழுக்கம் கெட்டவள் என்று எந்த சமூகம் சொன்னாலும், அந்த சமூகத்தை குருட்டு சமூகம் என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை. காரணம் ஒரு பெண்ணின் ஒழுக்கம் என்பது அவள் மனதில் இருக்கிறதே, தவிர இந்த பொருள்களில் இல்லை.


இப்போது இந்த கேள்விக்கான பதிலுக்கு வருகிறேன். குங்குமத்தை மட்டுமே பிரசாதமாக கொடுக்கும் ஆலயங்களில் விதவைகள் குங்குமத்தை தாராளமாக வாங்கலாம். காரணம், இறைவனுக்கு முன்னால் சுமங்கலியும் ஒன்றுதான் அமங்கலியும் ஒன்றுதான். அவருக்கு எந்த பேதமும் கிடையாது. ஆனால், பிரசாதமாக பெறுகின்ற குங்குமத்தை அணிவதும் அணியாமல், இருப்பதும் அவரவர் சொந்த விருப்பம். அதில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடையாது.





Contact Form

Name

Email *

Message *