Store
  Store
  Store
  Store
  Store
  Store

கூரை ஏறி கோழி பிடிக்காதவன்


        மாபெரும் ஜனத்திரள் ஆரவாரம் செய்கிறது வானத்திலிருந்து ஆகாய விமானம் மலர்களை தூவுகிறது. மேடையின் மீது பிரகாசமான வெளிச்சம் பாய்கிறது. மேடை படிக்கட்டுகளில் துள்ளல் நடையோடு ஏறுகிறான் சதிஷ்குமார் அறிவிப்பாளர் இனிய குரலில் அவனை வரவேற்கிறார் இந்திய கலையின் மணிமகுடம் சரஸ்வதி தேவியின் தவப்புதல்வன் தனது திறமையால் வெற்றியின் சிகரத்தை தொட்ட மாமேதை இதோ உங்கள் முன்னால் என்று ஆரவாரத்தோடு அறிவித்து வரவேற்கிறார்.

சதீஷ்குமாருக்கு விருது வழங்க வந்திருக்கும் நாட்டு தலைவர் சதிஷ்குமார் இந்தியாவின் பொக்கிஷம் அவருக்கு கொடுக்கப்படும் இந்த விருதால் விருது பெருமை அடையும் கலைத்தாயின் செல்ல குமாரனுக்கு விருது வழங்கும் வாய்ப்பு கிடைக்க நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும். என்று சொல்லி அவனை கட்டி அணைக்கிறார். கூட்டத்தினரை பார்த்து பெருமிதத்தோடு கையசைக்கும் அவன் இன்னொரு கையால் விருதை லாவகமாக வாங்கி உயர தூக்கி பிடித்து அசைத்து காட்டுகிறான். கூட்டத்தாரின் ஆராவாரம் விண்ணை முட்டுகிறது. 

பகல் நேரத்தில் தூங்குவதே இவனுக்கு பொழைப்பா போச்சி சூரியன் உச்சிக்கு வந்த பிறகும் படுக்கையை விட்டு எழும்பாம இருந்தால் வீடு உருப்படுமா? எழுந்து போய் பல்லை தேய்த்து குளி என்று அம்மாவின் அர்ச்சனை மொழி கனவில் வந்த ஆராவாரத்தையும் மீறி காதில் விழுந்ததனால் எரிச்சலோடு எழுந்தான் சதீஷ் குமார் போம்மா உனக்கு வேறு வேலையே இல்லை கொஞ்சநேரம் தூங்க விடமாட்ட நான் இன்னைக்கு குளிக்கல டிபன் இருந்தா உடனே தா என்று கோபமாக கேட்டான். குளிக்காம பச்ச தண்ணி கூட தரபோறது இல்ல ஒழுங்கு மரியாதையா போய்குளி என்று சொன்ன அம்மா சமையல் கட்டுக்கு போய்விட்டாள் 

இனி குளிக்காமல் ஆகாது அம்மாவின் பிடிவாதம் அவனுக்கு தெரியும் வேண்டா வெறுப்பாக போய் குளித்தான் அம்மா கொடுத்த ஆரிய இட்லியை வாய்க்குள் அனுப்பும் போது ஒழுங்கா சாப்பிடிட்டு மணிலால் சேட்டு கடையில் உனக்காக அப்பா வேலைக்கு சொல்லியிருக்காராம் சேட்டை போய் பார்த்திட்டு நாளையிலிருந்து வேலைக்கு போ இருபத்தி மூணு வயசான பிறகும் தெண்டமா ஊர் சுற்றுவது நல்லா இல்லை என்று அம்மா சொன்னதை கேட்டவுடன் அவனுக்கு தூக்கி வாரி போட்டது. வேலைக்கு போகனுமா? நாளைக்கே நாடு போற்றும் கலைஞனாக வரபோகிறவன் சேட்டு கடையில் வேலை செய்தான் என்றால் எவ்வளவு கேவலம் என்று நினைத்தவன் தட்டிலிருந்த மீதி உணவை வழித்து சாப்பிட்டு விட்டு வீதியில் இறங்கி நடந்தான். 

வழியில் அவனோடு படித்த மாதவன் எதிரே வந்தான். என்ன சதீஷ் எப்படி இருக்க உன்ன பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. நான் உள்ளூரில் இல்லை அதனால் தான் பார்க்க முடியவில்லை என்று நலம் விசாரித்தான். எதோ இருக்கேன் மாதவன் நீ எப்படி இருக்க எந்த ஊரில் இருக்கே என்று கேட்கவும் செய்தான். நான் சென்னையில் இருக்கிறேன். ஒரு கம்பெனியில் வேலை செய்கிறேன் மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பளம் தருகிறார்கள் என்று மாதவன் பதில் சொல்லவும் சதிஷுக்கு அவனை பார்த்து பரிதாபமாக ஆகிவிட்டது. போயும் போயும் இருபதாயிரம் ரூபாய்க்கு வேலை செய்வதா? அதுவும் அடுத்தவருக்கு அடிமையாக என்ன பிழைப்பு இது. இதில் பெருமையாக வேறு சொல்லி கொள்கிறான். என்று தோன்றியது.

ஆனால் அதை வெளிகாட்டாமல் சரி மாதவா நான் வருகிறேன் என்று நகர ஆரம்பித்தான் மாதவன் அவனை விடவில்லை சதீஷ் நீ +2 முடித்து விட்டாயா? இரண்டு பாடத்தில் தோற்று போனாய் அல்லவா? இப்போது அதை எழுதி கல்லூரிக்கு போகிறாயா? அல்லது எதாவது வேலை செய்கிறாயா? என்று கேட்டான். சதிஷுக்கு தாங்க முடியாத கோபம் வந்தது ஆனாலும் அடக்கி கொண்டான் கல்லூரிக்கு போய் படிப்பவன் எல்லாம் புத்திசாலியா படித்து வருவதல்ல அறிவு அது தானாக வரணும். எனக்கு அடுத்தவர்களிடம் வேலை செய்ய பிடிக்காது. நான் சினிமாவில் பெரிய ஆளாக வரப்போகிறேன் என்று காரசாரமாக பதில் சொன்னான். 

அடடே அப்படியா என் கூட படித்த ஒருவன் சினிமாவில் சாதிக்க போகிறான் என்றால் எனக்கும் பெருமை தான் எல்லாம் சரி சினிமாவில் என்னவாக போகிறாய் நீ நடிக்க போகிறியா? இயக்க போகிறியா? இல்ல கதை வசனம் எழுத போறியா? என்று மாதவன் கேட்கவும் சதீஷ் குமார் திக்கு முக்காடி போனான். இவ்வளவு நாளும் சினிமாவில் சாதிக்க போவதாக நினைத்தோமே தவிர எதில் எப்படி சாதிப்பது என்று முடிவு செய்ய வில்லையே என்று எண்ணிய அவன் அதை வெளிகாட்டாமல் நடிக்கத்தான் போகிறேன் என்று வாய்க்கு வந்த பதிலை சொன்னான். 

மாதவன் விடவில்லை நடிப்பது என்றால் கதாநாயகனாகவா? காமெடியனாகவா? வில்லனாகவா? என்று கேள்விக்கு மேல் கேள்வியை கேட்டான். சதிஷுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியைல்லை. ஒரே குழப்பமாக இருந்தது. என்ன மாதிரி கேள்வி கேட்கிறான் இவன்? யார் இவனுக்கு கேள்வி கேட்க கற்று கொடுத்தது? கேட்பது ரொம்ப சுலபம் பதில் சொல்வது தான் கஷ்டமென்று இவனுக்கு தெரியாதா? இன்று விழித்த முகம் சரியில்லை எல்லாமே ஏடாகூடமாக நடக்கிறது. என்று நினைத்த சதீஷ் நான் உன்னை அப்புறம் பார்கிறேன் என்று மாதவனிடம் கூறிவிட்டு வேகமாக நழுவினான். 

அவனுக்காக காத்திருந்தது பிள்ளையார் கோவில் அரசமர மேடை தினசரி இங்கு வந்து தான் உட்கார்ந்து கொள்வான். பெருவாரியான நேரங்களில் அவனையும் பிள்ளையாரையும் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். அவன் கற்பனை குதிரை தறிகெட்டு பறக்கும். ராஜஸ்தான் பாலைவனம் குஜராத் காடுகள் அமெரிக்க நகரங்கள் எல்லாம் வினாடி பொழுதில் அவன் மனதில் வண்ணத்திரையில் ஓட துவங்கும்.ஆனந்தமாக தனி உலகத்தில் சஞ்சாரம் செய்த வண்ணம் இருப்பான். இன்றும் வந்து தூசியை தட்டி விட்டு உட்கார்ந்தவன் கற்பனை குதிரையை அவிழ்த்துவிட பார்த்தான் . அது நகரவில்லை ஒரே இடத்தில் நின்று முரண்டு பிடித்தது. 

என்ன கேள்வி கேட்டுவிட்டான் அவன் பதில் சொல்ல முடியாமல் அவமானமாக போய்விட்டதே என்று நினைக்க நினைக்க அழுகை வந்துவிடும் போல் இருந்தது. ஆண்பிள்ளை அழகூடாது. என்று தன்னை தேற்றி கொண்டான். மாதவன் கேட்டதில் எதோ ஒரு நியாயம் இருப்பது போல் அவனுக்கு பட்டது. சினிமாவில் சேர வேண்டும் என்று நினைக்கிறோம் அங்கு போய் என்ன செய்ய போகிறோம். என்று நினைத்தோமா? அது தப்ப்பு தானே என்று நியாயம் படிப்படியாக அவன் யோசனையில். விரிந்தது 

நான் நடிகனாகலாமா? நடிகன் ஆவது என்றால் நீளமாக வசனம் பேச வேண்டும். அதற்கு மனப்பாடம் செய்ய வேண்டும். பள்ளிபாடத்தையே மனபாடம் செய்ய முயாத நமக்கு கதை வசனத்தை மனப்பாடம் செய்ய இயலுமா? பிறகு நாட்டியம் பழக வேண்டும் சண்டை போட கூட ஓரளவு தெரியவேண்டும் . நமக்கு அதுவெல்லாம் சரியாக வராதே என்ன செய்யலாம் என்று யோசித்தவன் வெகு நேரமாக அதே சிந்தனையில் இருந்தான் மீண்டும் மீண்டும் அவனுக்கு குழப்பம் தான் வந்ததே தவிர தெளிவு பிறக்கவில்லை 

அந்த நேரத்தில் பிள்ளையார் கோவில் மைதானத்தில் மேய்ந்து கொண்டிருந்த தனது மாடுகளை வீட்டுக்கு விரட்ட வந்த மாரிமுத்து தன் கூடவே வந்த ஒருவனிடம் கூரை ஏறி கோழிபிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா? முதலில் உள்ளூர் மாட்டை மேய்த்து காட்டு அப்புறமா நாலு ஊரை பார்க்கலாம் என்று சொன்னான். நம்ம சதீஷ் குமாருக்கு கன்னத்தில் அறைந்தது போல இருந்தது. இவன் சொல்வது கூட சரிதானே என்று பட்டது 

உடனே மேடையிலிருந்து எழுந்தான் ஆடைகளில் ஒட்டியிருந்த தூசியை தட்டி விட்டான் அண்ணே மாரிமுத்து அண்ணே கடைதெருவில் மணிலால் சேட்டு கடை எந்த பக்கம் இருக்கிறது என்று கேட்டான். மாரிமுத்து தனக்கு தெரிந்த பரிபாசையில் நீட்டி முழங்கி பதில் சொல்லவும் அது புரியாமல் வாயில் இருக்கிறது வழி என்று அப்பா சொல்லும் பழமொழியை நம்பி கடைத்தெருவை நோக்கி நடையை கட்டினான்..........

Contact Form

Name

Email *

Message *