( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மோடி சற்று பொறுக்கலாம் !


நரேந்திர மோடியின் மூன்றாவது முறை வெற்றி இந்தியாவிற்கு ஒரு திறமையான பிரதமர் கிடைத்திருக்கிறார் என்ற அறிவிப்பாக எடுத்து கொள்ளலாமா? என்ற கேள்விக்கு ஆமாம் எடுத்து கொள்ளலாம் என்ற பதிலை சொல்வதற்கு முன்னால் சில அடிப்படையான விஷயங்களை சிந்திக்க வேண்டிய சூழல் இருக்கிறது. காரணம் மக்கள் இன்று கட்சியை பார்த்து ஓட்டுபோடுவதை விட்டு விட்டு நபரை பார்த்து இவர் தக்கவரா தகாதவரா என முடிவு செய்து ஒட்டு போடும் மனோநிலைக்கு வந்திருக்கிறார்கள். அந்த வகையில் நரேந்திர மோடியின் வெற்றியை அரசியல் அல்லாத பார்வையில் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் நரேந்திர மோடி தன்னையும் அறியாமலோ அல்லது அறிந்தோ ஒரு உண்மையான தகவலை பல இடங்களில் வெளியிட்டார் தான் விரும்பிய படி வளர்ச்சி பாதையை நோக்கி குஜராத் மாநிலத்தை அழைத்து செல்ல இன்னும் கடுமையாக பாடுபட வேண்டும் என்பதே அவர் சொன்ன உண்மையாகும். அதாவது குஜராத் மாநிலம் இன்னும் முழுமையான தன்னிறைவை அடையவில்லை என்பதே இதன் அர்த்தமாகும். 

ஒரு மாநிலத்தின் சிறப்பான வளர்ச்சிக்கு இருபது வருடகாலம் என்பது போதுமான காலக்கெடு இல்லை அதுவும் குறிப்பாக நமது நாட்டை பொறுத்தவரை பல காலமாகவே நாட்டின் அடிப்படை கட்டுமானத்தை எந்த அளவு கெடுக்க வேண்டுமோ அந்த அளவு கெடுத்து வைத்திருக்கிறோம். அந்த சீர்கேட்டை சீர்படுத்துவதற்கு இருபது வருடம் போதாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. 

நமது தேசியத்திற்க்கான ஒரு பொது நோக்கு இருக்கிறது. அந்த நோக்கு மாநிலத்துக்கு மாநிலம் வெகுவாக மாறுபடும் என்றாலும் குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை தேசிய பொது நோக்கு மிக அதிகமாகவே மாறுபடும் என்று உறுதியாக சொல்லலாம். குஜராத் மக்கள் மராட்டியர்களை போலவோ தமிழர்களை போலவோ ஆடம்பரமான செலவாளிகள் கிடையாது. தங்கள் கையிலிருந்து செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் அழுத்தமான காரணம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்கள். விளங்கும்படியாக சொல்ல வேண்டும் என்றால் மற்ற மாநில மக்கள் வேலை செய்து சம்பளம் வாங்குவதில் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். குஜராத்திகள் அப்படி அல்ல. சுய தொழில் செய்வதிலையே அதிக ஈடுபாடு அவர்களுக்கு உண்டு. 

கல்வி கற்றால் மட்டுமே ஒருவன் மேல்நிலைக்கு வரமுடியும் என்பது நமது கருத்து ஆனால் குஜராத்திகள் அப்படி நினைப்பது இல்லை கல்வி என்பது வயிற்று பிழைப்பை நடத்துவதற்கு உதவும் கருவி அல்ல ஒன்றை இரண்டாக மாற்றுவதற்கு வழிகாட்டும் கருவி என்று நினைப்பவர்கள் அவர்கள். இன்று நம் நாட்டிலும் பல வெளிநாட்டிலும் கோடிஸ்வரர்களின் பட்டியலில் குஜராத்திகளின் பெயர்களே அதிகம் இருப்பதை காண வேண்டும். நான் அறிந்தவரை குஜராத்தில் உள்ள கிராமவாசிகள் வரை பணத்தை இரட்டிப்பாக்குவதில் வல்லவர்கள் என்றே சொல்ல வேண்டும். அந்த மக்கள் மத்தியில் அரசியல் நடத்துவதற்கும் பரந்த இந்தியா முழுவதும் அரசியல் நடத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. 

நம் ஊர் மக்கள் இலவசமாக டிவி தருகிறேன் லேப்டாப் தருகிறேன் என்றவுடன் எதையும் யோசிக்காமல் ஒட்டு போட்டுவிடுவார்கள். சிறிய கரி துண்டை வீசிவிட்டு பெரிய இஞ்ஜீன்களை அரசியல்வாதிகள் ஒட்டி கொண்டு போய்விடுவார்கள் என்று நமக்கு தெரிந்தாலும் அதை பெரிதாக எடுத்து கொள்வதில்லை. நமக்கு நாலு காசு கிடைக்கிறதா? அதுவே போதுமென்ற மனோபாவம் நம்மிடம் இருக்கிறது. குஜராத் மக்கள் தற்காலிக நிவாரணம் தருகிற ஏற்பாடுகளை ஒத்துகொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்ட மக்கள் வாழுகின்ற பகுதியிலே வளர்ச்சி பணிகளை இன்னும் முழு வேகத்தில் செய்ய முடியவில்லை எனும் போது ஒட்டு மொத்த இந்தியாவை எண்ணி பார்ப்பதற்கே கஷ்டமாக இருக்கும். 

தேசிய அளவில் மோடியின் செயல் திறமை எப்படி இருக்குமென்று நமக்கு தெரியாது இந்த நாட்டின் பிரதமர்களாக இருந்த நேரு குடும்பம் அல்லாத மற்றவர்களின் செயல்பாடுகளை கூட நாட்டு மக்கள் அவர்கள் பிரதமர்களாக வருவதற்கு முன்பே நன்கு அறிவார்கள். உதாரணமாக மொரார்ஜி தேசாய், விஸ்வநாத் பிரதாப் சிங், நரசிம்மராவ் போன்றவர்களை சொல்லலாம். இவர்களின் பணிகள் எப்படி இருக்கும் என்று அவர்கள் பதவிக்கு வருவதற்கு முன்பே ஓரளவாவது மக்கள் கணித்திருக்கிறார்கள். ஆனால் மோடியின் நிலையில் அப்படி ஒரு வாய்ப்பை நம்மால் உணர முடியவில்லை. காரணம் அவர் இதுவரை குஜராத்தை விட்டு வெளியே வந்து அரசியல் நடத்தவில்லை 

மோடி இஸ்லாமிய மக்களுக்கு விரோதமானவர் என்ற ஒரு கருத்தை தவிர வேறு எந்த களங்கத்தையும் தனது வாழ்க்கை பக்கங்களில் அவர் வைக்கவில்லை. சிறந்த நிர்வாகி அப்பழுக்கற்ற தலைவர் என்பதில் மாற்று கருத்து இருப்பதாக சொல்ல முடியாது. ஆனால் இவைகள் மட்டுமே இந்தியாவை போன்ற பறந்து விரிந்த ஒரு நாட்டை ஆளுகின்ற தகுதி என்றும் கருத இயலாது காரணம் மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார மேதை உலக நாடுகளின் அன்பை பெற்றவர். நல்ல நிர்வாகி எனவே அவர் சோனியாகாந்தியால் ஆயிரம் தடைகள் வந்தாலும் புத்திசாலி தனத்தோடு செயல்பட்டு நாட்டை வழிநடத்துவார் என்று நாம் நினைத்தோம். ஆனால் மக்கள் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக அவர் நடந்து கொள்வதை பார்க்கிறோம். நேரு குடுப்பம் அல்லாத பிரதமர் பதிவிக்கு வருவதற்கு முன்பே நிதி அமைச்சர் போன்ற முக்கிய பதவியில் இருந்தாலும் தன்னை இன்னும் குமாஷ்தாகவே நினைத்து கொண்டிருப்பார் என்று யாருக்கும் தெரியாது அதனால் இவரை மற்றவர்களை போல் கணக்கு போடுவது தவறு இருந்தாலும் மோடியுனுடைய தேசிய அரசியல் பிரவேசமும் அப்படி அமைந்து விட கூடாது என்பதே பலரின் எண்ணம். 

மோடிக்கு ஒன்றும் அவ்வளவாக வயதாகி விடவில்லை. குஜராத் மாநிலத்தை தவிர்த்து நாடு முழுவதும் தனது மக்கள் சேவையை செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தனது எண்ணத்தை எந்த தயக்கமும் இன்றி செயல்படுத்தலாம். ஆனால் அந்த செயல்பாடு பிரதம மந்திரி பதவியில் இருந்து கொண்டுதான் செய்ய வேண்டும் என்றில்லை. தனது கட்சியில் உள்ள மிக மூத்த தலைவர்களை தலைமை பொறுப்பிற்கு வரவைத்து அவர்களை முன்னிறுத்தி செய்தால் வருங்காலத்தில் மிக சிறந்த இந்தியாவை உருவாக்குவதில் மோடி சரியான சிற்பியாக இருப்பார் என்று துணிந்து சொல்லலாம். 

அதாவது மிக தெளிவாக சொல்வது என்றால் அரசியலில் மிக நீண்ட அனுபவமும் பொதுமக்கள் மத்தியில் நல்ல மரியாதையும் கொண்ட லால் கிஷன் அத்வானி போன்றவர்களை முன்னுக்கு வைத்து செயல்பட்டு அதன் பிறகு மோடி முன்னுக்கு வந்தால் நன்றாக இருக்கும். அந்த காலகட்டத்தில் தன்மீது உள்ள சிறுபான்மை விரோதி என்ற அவபெயரை நீக்கி கொள்ளவும் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவு பெற்றவர் என்ற சிறப்பை பெற்று கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும். இது நமது எண்ணம் ஆனால் இன்றைய நடைமுறையை பார்க்கும் போது தற்போதைய அரசின் செயல்பாடுகளை காணும் போது மோடி போன்ற துடிப்புமிக்க தலைவர்கள் தேசிய அரசியலுக்கு வந்தால் மட்டுமே நாடு விடிவடையும் என்றும் தோன்றுகிறது. எது எப்படியோ நம் நாட்டில் அமைதியும் வளர்ச்சியும் விரைவில் வரவேண்டும் அது நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதே பல தேசாபிமானிகளின் ஆசை.


+ comments + 3 comments

நல்ல ஒரு ஆய்வு . நன்றி அய்யாமோடி இஸ்லாமிய மக்களுக்கு விரோதமானவர் என்ற ஒரு கருத்தை தவிர வேறு எந்த களங்கத்தையும் தனது வாழ்க்கை பக்கங்களில் அவர் வைக்கவில்லை.
This is the propaganda of His enemies. At first 60 Hindus were burnt alive my muslim hoologans, and a state wide violence was triggered off targeting all muslims. 42 Hindus were killed in Police action.The Govt.of Gujarat acted promptly. It is my despair everybody vie with eachother in speaking about violence against Muslims in Gujarat,But no reference to 60 Hindus who were burnt alive. Are Hindus worthless ? Why were they burnt alive ? Who did it ? Why they did it ? What was the philosophy which incited them to do such a cruel deed ? .....etc....For all a national debate should be conducted.

ஆனால் மோடியா? ராகுலா? என்று வரும்போது ..............................!


Next Post Next Post Home
 
Back to Top