Store
  Store
  Store
  Store
  Store
  Store

விலகவேண்டியது உயிரா? உடலா?


    குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் சென்ற மாதம் வடநாட்டில் உள்ள புனிதஸ்தலங்களுக்கு யாத்திரை சென்று வந்தேன் அங்குள்ள பல கோவில்களில் இறைவனின் திருவுருவத்தை நாமே தொட்டு வணங்கி வழிபாடு நடத்தும்படி இருக்கிறது. ஆனால் நமது தமிழ்நாட்டில் சுவாமியை தொட்டு பூஜை செய்வது என்பது சாதாரண மனிதர்களுக்கு எட்டாத கனியாக இருந்து வருகிறது. கடவுள் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் தானே அவரை குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் மட்டுமே தொடலாம் மற்றவர்கள் தொடக்கூடாது என்று கூறுவது சரியான கருத்தாக இருக்குமா? அனைத்து விஷயத்திலும் முன்னோடியாக இருக்கும் நமது தமிழகம் இந்த விஷயத்தில் மட்டும் கட்டுப்பெட்டி தனமாக நடப்பது ஏன்? சற்று விபரமாக கூற இயலுமா?

இப்படிக்கு 
சங்கரலிங்கம் 
திசையன்விளை





    திசங்கரர் ஒருமுறை கடுமையான பாலைவனத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். உடலெங்கும் வியார்த்து கொட்டி உடம்பில் உள்ள நீர் சத்து அனைத்தும் குறைந்து விட்டது. வாயும் நாக்கும் வறண்டு போய் வார்த்தைகளை பேசமுடியாத அளவிற்கு காய்ந்து விட்டது. ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் கூட உயிர் போய்விடும் நிலைமை வந்துவிட்டது. கண்களுக்கு முன்னால் கானல் நீர் தான் வரி வரியாக தெரிகிறதே தவிர மருந்துக்கு கூட தண்ணீர் கிடைப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. நிழலுக்கு ஒதுங்க கூட ஒரு மரம் இல்லை. தாகமும் சோர்வும் ஆதிசங்கரரை தள்ளாட வைத்துவிட்டது. 

அந்த நேரத்தில் நாய்களை பிடித்து கொண்டு புதிதாக அறுத்தெடுத்த பசுமாமிசத்தை தோளில் போட்டுகொண்டு ஒருவன் வருகிறான். அவனது இன்னொரு தோளில் தண்ணீர் பை ஒன்று தொங்குகிறது. ஆதிசங்கரருக்கு தற்போது தாகம் தணிக்க நீர் அவசியம். அந்த நீர் இருப்பதோ அசுத்தம் மிகுந்த ஒரு மனிதனிடம். வருவது யாராக இருந்தாலும் பரவாயில்லை ஒரு வாய் தண்ணீரை கூச்சபடாமல் கேட்டு பெற்று கொள் என்று உடம்பு அவரை முந்தி தள்ளுகிறது. மனதிற்குள் உறுதியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் அவரது பிராமண தன்மை அவன் தாழ்ந்த ஜாதி அசுத்தமானவன் சரிசமமாக புழங்குவதற்கு தகுதி இல்லாதவன் அவனிடம் கேட்டு தாக சாந்தி பெறுவதை விட சாவதே மேல் என்று அகங்காரம் அதட்டுகிறது. 

ஆதிசங்கரர் ஞானி அல்லவா உடம்பின் உணர்வுகளை அடக்கி மன உணர்வை செயல்படுத்த பார்க்கிறார். எதிரே நடந்துவரும் அந்த மனிதனை ஒதுங்கி போ என்று சைகை காட்டுகிறார். அவன் அருகில் வருகிறான் சுவாமி நீ ஒதுங்க சொல்வது என்னையா? அல்லது என் உடம்பையா? என்று கேட்கிறான். ஆயிரம் சம்மட்டிகளை எடுத்து ஆணவ மனதில் அடித்தது போல் ஆகி விட்டது. சங்கரருக்கு இந்த உலகில் காணுகின்ற ஒவ்வொரு வஸ்துவுமே ஈஸ்வரனின் மறுவடிவம் என்கின்ற போது இவனும் ஈஸ்வர வடிவம் தானே? இவனுக்குள் இருப்பதும் எனக்குள் இருப்பதும் ஒரே பகவான் தானே? பிறகு எப்படி இவனை என்னை விட தாழ்ந்தவன் என்று கருதினேன்? இன்னும் என் அறியாமை இருள் விலகி முழுமையான ஞானத்தை நான் அடைய முடியவில்லையே? என்று வருந்தினாராம். தனக்குள் இருக்கும் அஞ்ஞான இருளை போக்குவதற்காக இரவு பகலாக உழைத்தாராம் அதன் பிறகே ஆதிசங்கரர் பகவான் ஆதிசங்கரராக மாறி உலகமே வணங்கும் அவதார புருஷராக திகழ்கிறார். 

இறைவனது படைப்பில் ஏற்ற தாழ்வு கிடையாது. அவன் சிறியது பெரியது என்று எதையும் வித்தியாசப் படுத்துவதும் இல்லை. நாற்ற மலத்தில் ஊர்ந்து செல்லுகின்ற புழுவும் மலர் நெஞ்சத்தில் உறங்கி எழுகின்ற அரசனும் இறைவன் சந்நிதானத்தின் முன்னால் சமமானவர்களே புழுவும் மனிதனும் ஒன்று எனும் போது மனிதனுக்கு மனிதன் நிறைவு குறைவு என்ற பேதங்களை பார்க்க முடியுமா? ஐந்து குழந்தகைளை பெற்ற தாய் இதில் எதாவது ஒரு குழந்தையை தன்னை தொடாதே நெருங்காதே என்று தடுப்பாளா? நிச்சயம் மாட்டாள் தாயினும் சாலபரிவுடையவன் இறைவன் அவனால் மட்டும் அவன் குழந்தைகளான நம்மை ஒதுக்கி வைக்கவா முடியும்? எனவே இறைவனின் திருமேனியை அனைவரும் தொட கூடாது என்ற விதியை வகுத்திருப்பது மனிதர்களான நாம் தானே தவிர இறைவன் அல்ல. 

இறைவனின் திருமேனியை ஏன் அனைவரும் தொடக்கூடாது? அப்படி ஏன் நமது மூதாதையர்கள் ஒரு விதிமுறையை வகுத்தார்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் வரும். இதில் நான் பெரியவன் நீ சிறியவன் என்ற எண்ணங்களை விலக்கி சமவுரிமை சமதர்மம் என்ற தத்துவங்களை அப்பால் வைத்து உண்மை நிலையை சிந்திக்க வேண்டும். மனிதன் என்பவன் மனத்தால் ஆனவன் அதனால் தான் அவனுக்கு மனிதன் என்ற பெயரே வந்தது. மனம் என்பது எண்ணங்களை உற்பத்தி செய்யும் கருவி எண்ணங்கள் என்பது நல்லதாகவும் இருக்கும் கெட்டதாகவும் இருக்கும். நல்ல எண்ணங்களுக்கு நல்ல அதிர்வுகளும் கெட்ட எண்ணங்களுக்கு எதிர்மறையான அதிர்வுகளும் உண்டு என்பது அனைவரும் அறிந்த ரகசியம். 

எண்ணங்களால் வருகின்ற எதிர்மறை அதிர்வுகள் சரியான அதிர்வுகளை சிதைத்து விடும். இறைவனின் திருமேனிகள் நல்ல எண்ண அதிர்வுகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். அந்த அதிர்வுகள் சிதைந்து போகாமல் இருப்பதற்கு அதற்க்கான பயிற்சி பெற்ற சிலரே அவைகளை தொட்டு புழங்க வேண்டும் அனைவராலும் அந்த பயிற்சிகளை எடுக்க இயலாது. யாரவது ஒருவர் மட்டுமே அந்த பணியை செய்யவேண்டும். அப்படி செய்தால் தான் இறைவனின் சானிதத்துவம் கெடாது. அதற்காகத்தான் அர்ச்சகர்கள் மட்டுமே விக்கிரகங்களை தொடவேண்டும் என்ற நியதி வகுக்கப்பட்டது. நாம் அனைவரும் நினைப்பது போல ஒரு குறிப்பிட்ட சாதியார் மட்டுமே இறைவனை தொடலாம் என்று யாரும் சொல்லவில்லை. அந்த ஜாதியை கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களும் அதற்க்கான பயிற்சியை பெறவில்லை என்றால் கருவறைக்கு வெளியில் தான் இருக்க வேண்டும். 

வடமாநிலங்களில் கூட கருவறைக்குள் இருக்கும் சுவாமியை எல்லோரும் தொட்டுவிட முடியாது வெளியில் இருக்கும் சுவாமியை தான் தொடமுடியும். நம் ஊரில் கூட ஆற்றங்கரை பிள்ளையார், அரசமரத்து சுவாமி ஆகியோரை யார் வேண்டுமானாலும் தொட்டு அபிசேக ஆராதனைகள் செய்யலாமே அதற்கு தடை இல்லையே சமத்துவம் பேசுவது சமூக வாழ்விற்கு சரிவரலாமே தவிர ஆன்மீகத்திற்கு சரிவராது. காரணம் உடலால் அனைவரும் சமம் என்றாலும் ஆத்மாவால் நாம் சமம் இல்லாதவர்களாகவே இருக்கிறோம்.



Contact Form

Name

Email *

Message *