Store
  Store
  Store
  Store
  Store
  Store

பெரியவர்களின் தவறு பெருமாளின் தவறா?




     சிறியவர்கள் தவறு செய்தால் புத்தி சொல்லி திருத்தலாம் அதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை என்றால் தண்டனையும் கொடுத்து பார்க்கலாம் அல்லது வேறு பல வழிகளில் அவர்களை திருத்துவதற்கு முயற்சி செய்யலாம். ஆனால் நம்மைவிட பெரியவர்கள், அறிவில் சிறந்தவர்கள், சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், நம்மால் மதிக்கபடுபவர்கள், தவறு செய்யும்போது அதை அவர்களிடம் எப்படி சுட்டிகாட்டுவது எப்படி அவர்களை திருத்துவது என்று பல நேரங்களில் நமக்கு புரிவதில்லை சரி அவர்களாகத்தான் திருந்தவேண்டும் அதுவரை காத்திருப்போம் என்று சும்மா இருந்தால் நடக்கக்கூடாதவைகள் எல்லாம் நடந்துவிடும் அதன் பிறகு ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கு பலகாலம் சிரமப்பட வேண்டிய சூழல் வரலாம்.

வீட்டில் பெரியவர் அண்ணன், தந்தையில்லாத குடும்பத்தை ஒரு தகப்பன் போல பாடுபட்டு காப்பாற்றியவர், வீட்டுக்கான ஒவ்வொரு செயலையும் பார்த்துப்பார்த்து செய்தவர், ஒருவருக்கு இன்னது தேவையென்று கேட்காமலே அறிந்து அதை முன்கூட்டியே செய்தவர் அப்படிப்பட்ட அண்ணன் ஏதோ ஒரு தவறு செய்கிறார் அது தவறு என்று அவருக்கும் தெரியும் நமக்கும் புரியும். ஆனால் என்னவென்று சொல்ல முடியாத பலஹீனத்தில் அந்த தவறை அவர் திரும்ப திரும்ப செய்து கொண்டிருக்கிறார் இந்த நிலையில் அவரிடம் சென்று நீ செய்வது தவறு அதை நிறுத்திக்கொள் என்று நம்மால் கூற இயலும். ஆனால் அவரால் நாம் பெற்ற சுகங்கள் நமது குடும்பம் பெற்ற உயர்வுகள் அனைத்தும் கண்முன்னால் நின்று அவருக்கு புத்தி சொல்கிற அளவிற்கு நாம் உயர்ந்து விட்டோமா? நமது புத்தி மதியை கேட்கும் அளவிற்கு தாழ்ந்து போய்விட்டோமே? என்று அவர் வருத்தப்பட மாட்டாரா என்றெல்லாம் பலநேரங்களில் பலருடைய வாழ்வில் தர்மசங்கடங்கள் ஏற்படுவதுண்டு.

காலம் சிறந்த ஆசான் அது கனிந்து வரும்போது ஒவ்வொரு மனிதனும் தான் செய்த செயலை சீர்தூக்கி பார்ப்பான் அதுவரை பொறுத்திருப்போம் என்பது நல்ல சித்தாந்தமே ஆனால் ஒரு தவறை மனிதன் தொடர்ந்து செய்யும் போது காலப்போக்கில் அதுவே அவனது பழக்கமாகி விடுகிறது பிறகு அவனை அதிலிருந்து மீட்டெடுப்பது இயலாத காரியம் எனவே காலநேரத்தில் சுட்டிக்காட்டி திருத்தவேண்டியது அக்கறை உள்ளவர்களின் வேலை மட்டுமல்ல கடமையும் கூட ஆனால் அந்த கடமையை நம்மைவிட பெரியவர்கள் மீதும் மரியாதைக்குரியவர் மீதும் செய்யும் போது தயக்கமும் சங்கடமும் தானே வந்துவிடுகிறது பல நேரங்களில் அது தவறாகவும் சென்று மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தியும் விடுகிறது.

இப்படிப்பட்ட தர்மசங்கடமான நிலையிலிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி? என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று விட்டு விட்டு போவதற்கு மனதும் வருவதில்லை இதை இங்கு நான் ஏன் சொல்கிறேன் என்றால் சில நாட்களுக்கு முன்பு ஒரு மனிதர் என்னை சந்தித்தார் அவர் தனது தந்தையார் அலுவலகத்தில் தன்னோடு பணிபுரிகிற ஒரு பெண்மணியோடு சாதாரணமாக பழகியதாகவும் பிறகு அந்த பழக்கமே தவறான உறவாக பரிணாமம் அடைந்துவிட்டது அந்த தவறை சுட்டிக்காட்டி அவரை திருத்துவதற்கு வழிவகை தெரியவில்லை என்று வருத்தபட்டார். அதன்பிறகு தான் இதே போன்ற பிரச்சனைகள் பலருக்கும் பலவிதங்களில் இருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது 

ஆனால் எந்த நேரத்திலும் மற்றவர்களின் மனது புண்படாமல் அதே நேரம் அவர்களின் தவறை சரியான கோணத்தில் சுட்டிக்காட்டுவதற்கும் நமது முன்னோர்கள் மிக அருமையான பல வழிகளை கண்டிருந்தார்கள் அவைகளை இலக்கியங்கள் வாயிலாகவும் வாய்மொழி கதைகள் வாயிலாகவும் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள் ஆனால் இன்று அவைகளை நாம் தொலைத்து விட்டோம் அல்லது அவைகளிலிருந்து வெகுதூரத்தில் விலகி இருக்கிறோம் என்பது தான் உண்மையாகும். நமது முன்னோர்கள் சொல்லிச்சென்ற அந்த தீர்வுகள் நமக்கு சுலபமாக கிடைத்து கொண்டே இருந்தால் இத்தகைய சங்கடங்களை மிக சுலபமாக சமாளித்து விடலாம்.

அந்த காலத்தில் எதோ ஒரு தேசத்தில் ஒரு மன்னன் இருந்தானாம் அவன் மிகவும் நல்லவன் என்றாலும் அவன் பெற்ற வெற்றிகள் பாராட்டுகள் செல்வங்கள் அனைத்தும் சேர்ந்து அவனுக்கு அகங்காரத்தை அதிகப்படுத்தி விட்டதாம் இதனால் அவனது கர்வம் எல்லை மீறிச்சென்று ஒரு கட்டத்தில் தான் கடவுளைவிட மிகவும் மேலானவன் என்று எண்ணவும் துவங்கி விட்டானாம் எண்ணத்தை எண்ணமாக மட்டும் வைத்திருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை அதை அதிகார பீடத்தில் இருப்பவர்கள் செயல்படுத்த துவங்கும் போது தான் மற்றவர்களுக்கு சோதனை வருகிறது.

தானே கடவுளை விட உயர்ந்தவன் சிறந்தவன் என்று எண்ணிய அந்த மன்னன் தனது மந்திரி பிரதானிகளிடம் நாளை முதல் நீங்கள் கடவுளுக்காக பூஜை புனஸ்காரங்கள் எதுவும் செய்ய வேண்டாம். காலையில் எழுந்தவுடன் அரண்மனைக்கு வந்து என்னை வணங்கி கொள்ளுங்கள் ஏனென்றால் நான் கடவுளை விட உயர்ந்தவன் என்றான் அதற்கு அவன் காரணத்தையும் சொன்னான் நீங்கள் கடவுளிடம் உங்கள் தேவைகளுக்காக பிரார்த்தனை செய்தால் அதை அவர் சில நேரம் நிறைவேற்றுவார் சிலநேரம் நிறைவேற்ற மாட்டார் நான் அப்படி அல்ல கண்டிப்பாக கேட்டதை தருவேன் நீங்கள் நினைத்ததை நடத்தி வைப்பேன் என்றும் சமாதானம் கூறினான். 

அமைச்சர்களில் பலர் மன்னனின் பேச்சை கேட்டு வாய்மூடி மெளனியாக இருந்துவிட்டார்கள் ஆனால் ஒரே ஒரு அமைச்சர் மட்டும் தன்னையும் அறியாமல் சிறிது சிரித்துவிட்டார் அவர் சிரித்த சிரிப்பு பொல்லாத மன்னனின் கண்களில் பட்டுவிட்டது இந்த அமைச்சர் தன்னை கேலியாக நினைத்து சிரிக்கிறாரோ என்று நினைத்த மன்னன் அவரிடம் அமைச்சரே கடவுளைவிட நானே சிறந்தவன் என்று நான் கூறுவதில் தவறுகள் ஏதேனும் உண்டா? கடவுளை விட நிச்சயமாக நான் சிறந்தவன் தானே என்று கேட்டான் அமைச்சருக்கு எலிப்பொறியில் மாட்டிக்கொண்டது போல் ஆகிவிட்டது.

கடவுளை விட நீனே சிறந்தவன் என்று சொன்னாலும் மனசாட்சியை கொன்று பொய் சொன்னதாகிவிடும்.  நீ சிறந்தவன் அல்ல என்று கூறினாலும் அரசனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் இக்கட்டான இந்த நேரத்தை எப்படி சமாளிப்பது என்று சற்று தயங்கிய அமைச்சர் சட்டென்று ஒரு வழியை கண்டுபிடித்தார் அவர் இக்கால அமைச்சராக இருந்திருந்தால் யோசிப்பதற்கு யாரையாவது அதிகாரிகளை தேடிப் போகவேண்டும் நல்லவேளை அவர் அக்கால அமைச்சராக இருந்தார் அதனால் சுயபுத்தி இருந்தது அவர் மன்னனை பார்த்து சந்தேகமே இல்லை மன்னா நீங்கள் கடவுளை விட சிறந்தவர் என்று பதில் சொன்னார்.

அரசனுக்கு முழுமையாக நம்பிக்கை வரவில்லை இவர் மனதிற்குள் ஒன்றை நினைத்துக்கொண்டு வெளியில் ஒன்று பேசுகிறார் என்று முடிவு செய்த அவன் எப்படி நான் கடவுளை விட சிறந்தவன் என்று கூறுகிறீர்கள் அதற்கு சரியான காரணத்தை சொல்லுங்கள் பார்க்கலாம் என்று அவரை கிடுக்கிப்பிடிபோட்டு மடக்க பார்த்தான் அதற்கு அவர் கொஞ்சம் கூட தயங்கவோ மயங்கவோ செய்யவில்லை அடுத்த பதிலை அவனே வியக்கும் வண்ணம் வெளிப்படுத்தினார்.

மன்னா நமது மக்களில் யாரவது ஒருவர் தவறு செய்து விட்டால் அவரை உங்கள் அதிகாரத்தால் நாடு கடத்திவிட முடியும் ஆனால் கடவுளால் யாரையும் நாடு கடத்த முடியாது என்று பதில் சொன்னார் மன்னனுக்கு விளங்கவில்லை எப்படி என்று கேட்டான் அரசே உங்கள் நாட்டிற்கு எல்லை உண்டு அதனால் ஒருவனை இங்கே இருந்து அங்கே போ என்று சொல்லிவிடலாம் கடவுளின் நாட்டிற்கு எல்லை ஏது? அவர் யாரை எங்கே இருந்து எங்கே போக சொல்லமுடியும். என்று பதில் கூறினார் அரசனுக்கு ஆணவத்தால் தான் செய்த தவறு புரிந்தது கடவுளின் மேன்மையும் தெரிந்தது 

இதேபோல சமய சந்தர்பங்களை உணர்ந்து நமது அறிவை மட்டும் சற்று நிதானப்படுத்தி சிந்தித்து பார்த்தால் பெரியவர்களை திருத்துவதற்கு எத்தனையோ நல்ல வழிகள் கிடைக்கும் ஆனால் நாம் அவசர காலத்தில் ஓடி கொண்டே இருக்கிறோம் ஓடுகிற வேகத்தில் நமக்கு நிதானம் இல்லை புத்தி வேலை செய்வதும் இல்லை இதனால் எதைப்பேசுகிறோம் இதனால் என்ன விளைவு ஏற்படும் என்பவைகளை ஆராய்வது கிடையாது சிந்திக்காமல் வார்த்தைகளை சிதறவிட்டு விட்டு பிறகு வருத்தப்படுகிறோம் அல்லது பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருந்துவிட்டு வாழ்க்கை முழுவதும் சங்கடப்படுகிறோம் மற்றவர்களையும் துயரத்தில் ஆழ்த்துகிறோம் எனவே சிந்தித்தால் சிறப்பு உண்டு.



Contact Form

Name

Email *

Message *