Store
  Store
  Store
  Store
  Store
  Store

தமிழனுக்கு மதம் இல்லையா...?


இந்துமத வரலாறு கேள்வி பதில் 4

   சுவாமிஜி அவர்களுக்கு வணக்கம் நான் துளசிராஜா துரைசிங்கம் கனடா நாட்டிலிருந்து எழுதுகிறேன் நீங்கள் தொடர்ந்து எழுதிவரும் இந்துமத வரலாற்று பதிவை நான் படித்துவருகிறேன் இந்துமதத்தின் மேல் நீங்கள் வைத்திருக்கும் பக்திபூர்வமான அபிமானம் உங்கள் எழுத்திலிருந்து தெரிகிறது அதை குறை கூறுவதற்கு நான் விரும்பவில்லை ஆனாலும் அடிப்படையான சில சந்தேகங்களும் கேள்விகளும் என்னிடத்தில் உள்ளன அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் இந்துமதம் என்று இன்று அழைப்பது ஒரு மதமே அல்ல பல மதங்களின் சாரம்சத்தை ஒருங்கிணைத்து செயற்கையாக உருவாக்கப்பட்ட பிராமண தந்திரமே இந்துமதமாகும் மிக குறிப்பாக சொல்வது என்றால் சைவசமயத்திற்கும் இந்து மதத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது வடமொழியில் உள்ள வேதங்களில் சிவபெருமானை பற்றிய குறிப்புகள் மிகவும் பிற்காலத்திலேயே வலிந்து சேர்க்கப்பட்டவைகளாகும். சிவ வழிபாட்டில் மிக முக்கிய பங்குவகிக்கும் லிங்க வழிபாடு இந்து வேதங்களால் புறக்கணிக்கப்படுகிறது.

தமிழனுக்கும் இந்துமதத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது வெளியிலிருந்து வந்த அந்நியர்களான ஆரியர்கள் தங்களது சூழ்ச்சி வலையில் தமிழர்களை சிக்கவைத்து தமிழர்களின் சுயமுகத்தை சிறிது சிறிதாக சிதைத்துவிட்டார்கள் தமிழனின் பழம்பெருமைகளான சங்க இலக்கியங்கள் எதுவும் பிற்போக்குத் தனமான ஆரியக்கருத்துக்களை பிரதிபலிக்கவே இல்லை நிலைமை இப்படி இருக்கும் போது தமிழனுக்கே சொந்தமில்லாத வடக்கிலிருந்து ஆக்கிரமிப்பாக வந்த ஒரு மத கருத்துக்களை உங்களை போன்ற தமிழறிஞர்கள் போற்றி புகழ்வதும் அதன்வழியில் நிற்பதும் மிகவும் வருத்தமாக இருக்கிறது

தமிழனின் தனி அடையாளங்களை முன்னெடுத்து செல்லவேண்டிய அவசியமுள்ள காலகட்டம் இது இந்த நேரத்தில் தமிழனுக்கு சம்மந்தமே இல்லாத இந்து மதத்தில் உள்ள கருத்துக்கள் தமிழனுக்கு சொந்தமானது என்று கூறுவது எந்த வகையிலும் சரியாக இருக்காது. எனவே நீங்கள் இதே போன்ற காரியங்களை விட்டுவிட்டு தமிழ் அடையாளங்களை தெளிவுபடுத்துகின்ற செயல்களை செய்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.

இப்படிக்கு,
துளசிராஜா துரைசிங்கம்,
கனடா.



       ந்த கடிதத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு படித்திருப்பேன் என்றால் எனக்கு கோபம் வந்திருக்கும் இந்து மதத்திற்கும் தமிழனுக்கும் சம்மந்தமே இல்லை என்று பேசுகிறார்களே என ஆத்திரம் வந்திருக்கும் ஆனால் இன்று எனக்கு கோபம் வரவில்லை வருத்தம் வருகிறது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு நம்மை அடிமைப்படுத்தி ஆளவேண்டும் என்பதற்காக சரித்திரத்தில் எங்கேயும் இல்லாத ஆரிய திராவிட இனங்களை உருவாக்கி உண்மை போல உலவவிட்ட காலணியவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை இன்னும் உண்மை என்று நம்பிக்கொண்டும், அதை பிரச்சாரம் படுத்திக்கொண்டும் ஒருகூட்டம் இருக்கிறதே என்று வேதனையே மேலோங்கி நிற்கிறது.

அடுத்தவன் சொத்தை நமது என்று உரிமை கொண்டாட வேண்டாம் ஆனால் நம் சொத்தை கூட நமக்குரியது அல்ல பிறருக்குறியது என்று பேசித்திரியும் ஒரு இனம் உண்டு என்றால் அது தமிழனை தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்பது என் எண்ணம். தமிழன் பழமையான ஒரு இனத்தை சேர்ந்தவன் தான் வரலாற்று ஆய்வாளர்களின் காலக்கணிப்புகள் எட்டிப்பார்க்க முடியாத காலகட்டத்திலேயே கடல்கடந்து பல தேசங்களுக்கு சென்று தனது முத்திரைகளை பதித்தவன் தான் ஆனால் அவன் எப்போதுமே பாரதம் என்ற நீரோட்டத்திலிருந்து தனி நதியாக பெருக்கெடுத்து ஓடியவன் அல்ல அப்படி ஓட நினைத்தவனும் அல்ல.

ஆனால் இன்று சில காலணியாதிக்க அடிவருடிகளின் வாரிசுகள் தமிழனுக்கும் இந்து மதத்திற்கும் தமிழனுக்கும் இந்தியாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை சம்மந்தமும் இல்லை என்று பேசிவருகிறார்கள் இதற்கு காரணம் எப்படியாவது இந்த நாட்டை கூறுபோட்டுவிட வேண்டும் அதன்மூலம் தங்களது பண்பாட்டை திணித்துவிட வேண்டும் என்று விடாப்பிடியாக சதிவேலையில் ஈடுபட்டுவரும் அந்நிய சக்திகளின் விலைபேசுதல் நடவடிக்கையே ஆகும்.

நாகலாந்த், மணிப்பூர், மிசோராம், அருணாச்சலபிரதேசம் போன்ற பகுதிகளில் உங்களுக்கும் உங்களது வனவாசிகளின் வழிபாட்டு முறைக்கும் இந்துமதத்தோடு எந்த சம்மந்தமும் இல்லை நீங்கள் தனியினத்தவர் தனி மதத்தவர் என்று பிரச்சாரப்படுத்தி அவர்களை கிருஸ்தவத்திற்குள் செரிமானம் செய்து இன்று பிரிவினைவாதிகளாக உருவாக்கிவிட்ட சதிகும்பலே தமிழர்கள் மத்தியில் தங்களது மதமாற்ற வேலைகள் திறம்பட நடக்கவேண்டும் என்பதற்காக இல்லாத வரலாற்று புனைவுகளை இருப்பதாக சித்திரம் தீட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.


உதாரணமாக திருக்குறள் என்பது எவ்வளவு சிறப்புவாய்ந்த ஒரு     சிந்தனைக்களஞ்சியம் என்று நமக்கு தெரியும் அந்த திருக்குறளை தங்களது கிறிஸ்தவ சாயத்தில் மாற்ற நினைத்து அதுமுடியாமல் போனபோது திருக்குறளை இந்து மதத்திற்கு சொந்தமான நூல் அல்ல ஜைன மதத்திற்கு சொந்தமான நூல் என்று ஒரு போலியான கருத்தை உருவாக்கி விட்டார்கள் அதையும் உண்மை என்று அப்பாவித்தனமாக பல தமிழறிஞர்கள் அன்றும் இன்றும் நம்பி கொண்டு வருகிறார்கள் திருக்குறளுக்கோ ஜைன மதத்திற்கோ எந்த சம்மந்தமும் கிடையாது என்பதை மிகவும் எளிமையான ஒரு உதாரணத்தின் மூலம் நம்மால் நிரூபித்து காட்ட முடியும். 

ஜைனமதம் கூறும் கொல்லாமை என்ற அகிம்சை நோன்பு மிகவும் தீவிரமானது கண்ணுக்கு தெரிகின்ற உயிர்களை மட்டுமல்ல கண்ணுக்கு தெரியாத உயிர்களை கூட கொல்லக்கூடாது என்பது அதன் கருத்தாகும். மனித உடம்பில் வியர்வையின் மூலம் உருவாகும் அழுக்கில் பலவிதமான நுண்ணுயிர்கள் வளருகின்றன குளிப்பதனால் அந்த நுண்ணுயிர்கள் மறித்து போகின்றன எனவே வாழும் நாள்வரையில் குளிக்கவே கூடாது என்ற அதி தீவிரமான நம்பிக்கையாளர்கள் கூட ஜைனமதத்தில் அமணம் என்ற பிரிவில் வாழ்ந்தார்கள் அதுமட்டும் அல்ல விவசாயம் செய்வதனால் பூமியில் உள்ள பல புழு பூச்சிகள் மடிந்து போகின்றன எனவே அதைக்கூட செய்யலாகாது என்பது தான் ஆதி ஜைனத்தின் தீவிர கொள்கையாகும்.

திருவள்ளுவர் ஜைனராக இருந்திருந்தால் திருக்குறளை ஜைன நூலாக எழுத வேண்டும் என்று விரும்பி இருந்தால் அவர் உழவுத்தொழிலின் மேன்மையை பற்றி எழுதி இருப்பாரா? ஏர்முனையில் உலகம் சுற்றுவதாக கற்பனை செய்து பார்த்திருப்பாரா? திருமாலை பற்றி திருமகளை பற்றி நேரடியாக குறிப்பிடும் வள்ளுவர் ஜைன தேவதைகளை பற்றி தீர்த்தங்கரர்களை பற்றி ஒரு இடத்தில் கூட நேரடியாக சொல்லவில்லையே ஒரு மதத்தின் கருத்தை சொல்லவேண்டும் என்றால் அதைப்பற்றி நேரடியாக பேசவேண்டும் என்ற நியதி அவருக்கு தெரியாதா என்ன? அஹிம்சை மட்டுமே அவரது தத்துவம் என்றால் தவறு செய்தவனுக்கு தண்டனை வழங்குவது ராஜ நீதி என்று இலக்கணம் வகுத்து கொடுத்திருப்பாரா? அந்த அடிப்படையை கூட யாரும் சிந்திக்காமல் யாரோ ஒருவர் கொல்லாமை கள்ளுண்ணாமை போன்றவைகளை வள்ளுவர் பேசுகிறார் எனவே திருக்குறள் ஜைன நூல் என்று கூறினால் அதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்று கொள்கிறோமே இதைவிட அறியாமை வேறு என்ன இருக்க முடியும்?

இப்போது தங்களை தாங்களே தமிழறிஞர்கள் என்று அழைத்துக்கொள்ளும் ஒரு துதிபாடிகளின் கூட்டம் தமிழகத்தை ஆளுகின்ற திராவிட பரிவாரங்களின் ஆசிர்வாதம் தங்களுக்கு கிடைக்கவேண்டும் என்பதற்காக பழம் தமிழர்கள் சமய வாழ்வே வாழவில்லை கடவுளின் மீதே நம்பிக்கை வைக்கவில்லை சனாதன வைதீக தர்மமான இந்து மதக்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று பேசிவருகிறார்கள் இவர்களை பார்க்கும் போது ஒருவகையில் பரிதாபமாக இருக்கிறது உடம்பில் தெம்பு இருக்கிறவரை உண்மைக்கு மாறாக பேசிவிட்டு தெம்பு தீர்ந்தவுடன் தனிமையில் உட்கார்ந்து தன்னால் நிகழ்ந்த தவறுகளை எண்ணி எண்ணி புலம்பியவண்ணம் பலர் இருப்பதை நாமறிவோம்.

எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்று பிரிக்கப்பட்டுள்ள சங்க இலக்கியங்கள் பலவற்றில் தமிழர்களின் ஆன்மீகத்தன்மை மட்டுமல்ல வேத நெறியோடு அவர்களுக்கு இருந்த ஈடுபாட்டையும் மதிப்பையும் பக்தியையும் நம்மால் மிக தெளிவாக உணர முடிகிறது அவற்றை படிக்கும் போது ஆதி தமிழர்கள் எப்போதுமே வேதங்களை அந்நியமானது என்று கருதவில்லை என்பதை மிக சுலபமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஏனோ இந்த உண்மையை சிலர் ஏற்றுகொள்ளவே மாட்டேனென்று பிடிவாதம் செய்கிறார்கள் உதாரணமாக

நன்று ஆய்ந்த நீள் நிமிரிசடை
முதுமுதல்வன் வாய் போகாது
ஒன்றுபுரிந்த ஈர் இரண்டின்
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்


 என்ற புறநானூறு வரிகளை எடுத்துகொள்வோம் இது வேதங்கள் நான்கெனவும் அவை ஆறு அங்கங்கள்  கொண்டன எனவும் அவை முதுபெரும் சடைகொண்ட சிவபெருமானின் திருநாவை விட்டு எப்போது நீங்குவதில்லை என்று கூறுவதை தெளிவாக கவனிக்கலாம் இதுமட்டுமல்ல புறநானூற்றில் பல இடங்களில் நால்வேதங்கள் பற்றிய குறிப்புகள் இருப்பதை காணலாம் அவைகளுக்கு அருமறை முதுமொழி என்ற சிறப்பு பட்டங்களை கொடுத்திருப்பதையும் அறியலாம் இதுமட்டும் அல்ல நாஅல் வேதநெறி, நல்பனுவல், நால்வேதத்து என்றுவரும் புறநானூற்று சொற்கள் நேரடியாகவே வேதங்களை குறிப்பிடுகிறது என்று பார்க்க முடிகிறது. பரிபாடல் திருமுருகாற்றுப்படை அகநானூறு போன்ற இலக்கியங்களிலும் இன்னும் பல தமிழ் நூல்களிலும் வேத நெறியை அந்நிய நெறியாக காணமல் அன்னை நெறியாக சொந்த தர்மமாக பார்க்க பட்டிருப்பதை மிக தெளிவாகவே காணலாம்.

இந்து மதத்திற்கும் தமிழனுக்கும் சம்மந்தம் இல்லை என்று எப்படி வலுவான பிரச்சாரம் நடத்தப்படுகிறதோ அதே போலவே இந்தியாவிற்கும் தமிழனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை தமிழகம் என்பது தனி தேசிய நிலம் தமிழன் என்பவன் தனி தேசிய இனம் என்ற ஒரு போலியான வரலாற்றுக்கு ஒவ்வாத ஒரு கருத்தும் திட்டமிட்டு பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்கூறு நல்லுலகு எப்போதுமே பரந்துவிரிந்த பாரதத்தோடு சங்கமித்து இருந்ததே தவிர தனிமைப்பட்டு இருக்கவில்லை என்று பல பழந்தமிழ் நூல்களை ஆதாரமாக வைத்து நம்மால் வாதிடமுடியும்.

தெற்கே குமரி எல்லையும் வடக்கே இமயமும் நமது தேசம் என்பது இன்று நேற்று உருவானது அல்ல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் மத்தியில் இருந்துவரும் அசைக்க முடியாத உண்மையாகும். தமிழ் அரசர்களை பாராட்ட விரும்புகிற சங்ககால புலவர்கள் இமயம் முதல் குமரிவரை உள்ள மன்னவர்களில் நீனே சிறந்தவன் என்று பாராட்டுவதை படிக்கும் போதே மிக சாதாரணமாக தேச ஒற்றுமையை உணர்ந்து கொள்ளலாம். இதுவும் அல்லாது

தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஒன்றுபட்டு வழிமொழிய
இனிதுருண்டு சுடர்நேமி
முழுதாண்டோர் வழிகாவல


என்று சேரன் இரும்பொறையை குறுங்கோழியூர் கிழார் என்ற புலவர் போற்றி பாடுகிற பாடல் புறநானூற்றில் இருக்கிறது இதில் வருகிற தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலா எல்லை என்ற வரிகள் தமிழகத்தையும் இந்தியாவோடு இணைந்த ஒரு நிலப்பகுதியாக காட்டுகிறதே தவிர தமிழகத்தை மட்டும் தனிநாடாக காட்டவில்லை என்பதையும் நம்மால் அறியமுடிகிறது.

எனவே தமிழகம் என்பது தனிநாடு அல்ல தமிழன் என்பவனும் தனியான இனமல்ல ஒன்றான ஒரே பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியே என்பதை உணரவேண்டும் அதை போலவே சைவம் மட்டுமே தமிழனின் மதம் மற்றவைகள் எதுவும் தமிழனுக்கு சம்மந்தம் இல்லை என்று வாதிடுவது கண்களை திறந்து கொண்டு கிணற்றில் விழுவதற்கு சமமானது ஆகும். ஆதி தமிழகத்தில் சிவபெருமானுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருந்ததோ அதே அளவுக்கு திருமாலுக்கும் முக்கியத்துவம் இருந்தது எனவே வைஷ்ணவ நெறியும் மாறான நெறி என்று யாரும் கூறஇயலாது அதே போலவே வேத கடவுளான இந்திரன், வருணன், அக்னி, வாயு போன்ற தெய்வங்களும் தமிழகத்தில் வழிபடும் தெய்வமாகவே இருந்திருக்கிறார்கள் முருகனுக்கும் கொற்றவை என்ற காளிதேவிக்கும் உள்ள மரியாதையை நாம் அறியாதது அல்ல

நமக்குள்ள வரலாற்று அஞ்ஞானத்தை பயன்படுத்தி சிலர் நச்சுவிதைகளை நமக்குள் தூவி விட்டிருக்கிறார்கள் நாமும் சாரத்தை விட்டு சக்கையை பிடிப்பது போல உண்மையை விட்டு விட்டு போலியை பிடித்துக்கொண்டு இது தான் நிஜம் என்று வாதாடி கொண்டிருக்கிறோம் நம்மை கொல்ல வருகிற கொடும் புலிக்கு பட்டுக்கம்பளத்தை விரித்து வரவேற்கிறோம் எனவே முதலில் நமக்குள் இருக்கும் துவேசத்தை விட்டுவிட்டு நிஜமான உண்மை எது என்பதை ஆராய முற்பட்டோம் என்றால் இந்து மதம் என்பது தமிழர்களின் சொந்தமதம் மற்ற எந்த இனத்திற்கும் இல்லாத உரிமையும் சொந்தமும் தமிழனுக்கே இந்து மதத்தின் மீது உண்டு என்பது தெளிவாக தெரிந்துவிடும்.




Contact Form

Name

Email *

Message *