Store
  Store
  Store
  Store
  Store
  Store

எது ஆண்மைக் குறைவு ?



      குருஜி அவர்களுக்கு வணக்கம். உங்களது படைப்புகளை இரண்டு வருடமாக படித்து வருகிறேன். நீங்கள் கூறுகிற விஷயங்களால் எனக்குள் பிரமிப்பும், வியப்பும் பல நேரங்களில் அதிகரிக்கும். அது எப்படி உங்களால் மட்டும் உள்ளதை உள்ளபடியும் அதையும் மனது நோகாமல் சொல்ல முடிகிறது என்ற கேள்விக்கு இதுவரை எனக்கு பதிலே கிடைத்ததில்லை. மிகவும் அழகாக எழுதுகிறீர்கள் அதற்காக உங்களை பாராட்டுகிற தகுதி எனக்கு இல்லை என்றாலும் வணங்கும் தகுதி நிச்சயம் இருக்கிறது.

இப்படி ஒரு கடிதம் உங்களுக்கு எழுதுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. காரணம் வாழ்க்கையில் எந்த நிகழ்வுகள் நடந்தாலும், அது இறைவனின் சித்தம் என்று கருதி ஆறுதலோடு இருந்து விடுவேன். அதனால் என் சொந்த வாழ்க்கையின் சிக்கல்களின் சுமைகள் எனக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. ஆனால் இப்போது எனக்கு ஏற்பட்டிருக்கின்ற மனபாரம் தாங்க முடியாமல் இருப்பதனால் இதை உங்களுக்கு எழுதுகிறேன். சுயநல நோக்கோடு உங்களிடம் உரையாடுவது தவறு என்றாலும் வேறு வழியில்லை நீங்கள் தான் எனக்கு வழிகாட்ட வேண்டும். 

எனக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் முடியப்போகிறது. இதுவரை குழந்தை இல்லை அதற்காக நான் வருத்தபடவில்லை ஒரு குழந்தை நமக்கு எப்போது கொடுக்கலாம் என்று கடவுள் நினைக்கிறாரோ அப்போது கொடுப்பார் அதுவரை பொறுத்திருப்போம். அவர் கொடுக்கவில்லை என்றாலும் அது அவர் சித்தம், அவர் விருப்பம் என்று நினைத்து அமைதியாக வாழ்ந்து வந்தேன். எனக்கிருக்கும் எண்ணம் என் மனைவிக்கு இருக்க வேண்டும் அல்லவா? 
குழந்தையின் மீது ஆவல் கொண்ட அவள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டாள். என்னையும் பரிசோதிக்கும்படி கூறினாள். நானும் பரிசோதனை செய்து கொண்டேன். மருத்துவ பரிசோதனை ஒரு குழந்தையை உருவாக்கும் சக்தி என் இந்திரியத்திற்கு இல்லை என்று சொல்லி விட்டது அதிலிருந்து என் மனம் மிகவும் சோதனைக்குள்ளாகிறது. 

மாற்று வழியில் கர்ப்பம்  தரிக்க என் மனைவிக்கு அனுமதி கொடுத்து விட்டேன் என்றாலும் என் பலவீனம் என்னை மிகவும் காயப்படுத்துகிறது நான் ஆண்மை இல்லாதவன் என்பதை நினைத்து பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. இப்படி வாழ்வதை விட இறப்பது மேலானது என்று நினைக்கிறேன். எனினும் இறைவன் கொடுத்த உயிரை அவன் எடுக்காமல் விடுவது பாவம் என்பதனால் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு விட்டேன் இருந்தாலும் இருட்டுக்குள் வாழ்வது போல் நினைக்கிறேன் இந்த சோதனையிலிருந்து விடுபடுவதற்கு வழி தெரியாமல் தவிக்கிறேன். தயவு செய்து இந்த ஏழைக்கு வழிகாட்டுங்கள் என்றென்றும் நன்றியுடையவனாக இருப்பேன்.

இப்படிக்கு, 
பெயரை வெளியிட  விரும்பாத உஜிலாதேவி வாசகன், 
பிரான்ஸ். 


     மனித உடம்பில் இந்திரிய குறைவு ஏற்படுவதையும், இந்திரியம் இல்லாமல் இருப்பதையும் ஆண்மை குறைவு என்ற வார்த்தையில் அழைப்பதே தவறு என்று நினைப்பவன் நான். காரணம் விஞ்ஞானப்படியும், தத்துவப்படியும், ஆண்மை என்பதற்கும் விந்து என்பதற்கும் சம்மந்தமே கிடையாது. ஆண்மை என்பது ஒரு "குணம்" ஒரு "சுபாவம்" அதை மனதோடு சேர்த்து பார்க்க வேண்டுமே தவிர உடலோடு சேர்த்து பார்க்க கூடாது. இதை உங்கள் ஆறுதலுக்காக சொல்லவில்லை உண்மை என்பதனால் அழுத்தம் திருத்தமாகவே சொல்கிறேன். 

பெண் ஒருத்தி குழந்தை பெறுகிற தகுதி உடையவள் என்பது அவள் உடம்பில் உருவாகும் கருமுட்டையை வைத்து தீர்மானிக்கிறோம். கருமுட்டை வளர்வதற்கான சக்தி அவள் உடம்பில் இல்லை என்றால் அவளை பெண்மை இல்லாதவள் என்றா அழைக்கிறோம்? பெண்மை என்பது உடம்பல்ல! அது உணர்ச்சி, குணம், பண்பாடு. பெண்ணுடைய உடம்பில் இருப்பவர்கள் எப்படி சிலநேரம் பெண்ணாக இருப்பது இல்லையோ அதே போல ஆணுடம்பு இருந்தாலும் சிலர் ஆண்களாக இருப்பது இல்லை. 

எனவே ஆண்மை என்பது மனம் சம்மந்தப்பட்ட விஷயமே தவிர உடம்பு சம்மந்தபட்டது அல்ல. பல விதத்தில் தெளிவாக இருக்கும் நீங்கள் இந்த விஷயத்தில் குழந்தைத்தனமாக இருப்பது யானைக்கும் அடிசறுக்கும் என்பது போல் தான் இருக்கிறது. உடம்பில் விந்தணு உற்பத்தி இல்லை என்றால் அதை உருவாக்குவதற்கு நமது சித்தர்கள் எவ்வளவோ வழிகளை சொல்லி வைத்திருக்கிறார்கள் அவைகளை பயன்படுத்தி கண்டிப்பாக உடல் குறைபாட்டை போக்கி கொள்ளலாம் ஆனால் மன குறைபாட்டை உங்கள் அறிவு வளர்ச்சி தான் போக்க வேண்டும். எனவே வளர்க்க வேண்டியது அறிவே தவிர வேறொன்றும் இல்லை.


Contact Form

Name

Email *

Message *