Store
  Store
  Store
  Store
  Store
  Store

அகண்ட பாரதத்தை வைகோ ஏற்கிறாரா...?

  •   அடுத்த பிரதமராக ஜெயலலிதா வரலாம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூறுகிறார்களே அது நடக்குமா? 
     இந்தியாவை பொறுத்தவரை பொதுவுடைமை தோழர்கள் ஊழலுக்கு எதிராக பல போராட்டங்களை வியக்கத்தக்க அளவிற்கு நடத்தி பலவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தோழர்கள் எப்படி இந்த முடிவை மக்கள் மத்தியில் கூறுகிறார்கள் என்பது புரியவில்லை ஜெயலலிதாவின் கடந்த கால ஊழலுக்கு எதிராக இவர்கள் போராடியதை இவர்கள் மறந்திருக்கலாம் மக்களால் அதை மறக்க முடியாது. இப்போதும் ஊழலை எதிர்க்கும் இவர்கள் ஜெயலலிதாவிற்கு பதாதை பிடிப்பது கேலிக கூத்து இவர்கள் கூறும் மதவாத பூச்சாண்டி என்பது காகித புலி.

கொள்கைகள் சித்தாந்தங்கள் என்று வருகிற போது அவைகள் தான் முக்கியமே தவிர தற்காலிக வெற்றிகள் முக்கியமில்லை என்று பொதுவுடைமைவாதிகள் கூறுவார்கள் என மக்கள் அப்பாவித்தனமாக இன்னும் நம்பினார்கள் 

ஆனால் சில ராஜ்யசபா இடங்களுக்காகவும் எம்.எல்.ஏ, எம்.பி சீட்டுகளுக்காகவும் கொள்கைகளை விட்டு கொடுப்பது இந்த கால தோழர்களுக்கு வழக்கமாகி விட்டது. தோழர் ஜீவா, தோழர் நல்லகண்ணு போன்ற நல்ல தலைவர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த இயக்கம் மலிவான பதவிகளுக்காக வழி தடுமாறுகிறதே என்பதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. 

  • ஏன் ஜெயலலிதா பிரதமராக வரக்கூடாதா? அவருக்கு அந்த தகுதி இல்லையா? 
   மன்மோகன்சிங்கை பிரதமராக பார்த்த பிறகு இந்தியாவை யார் வேண்டுமானாலும் ஆளலாமோ என்று தோன்றுகிறது. முதல்வராக இருந்து ஒரு மாநிலத்தின் தனிப்பட்ட பிரச்சனைகளை கூட முழுமையாக தீர்க்க முடியாதவர்கள் கடவுளை சந்திப்பதை விட தன்னை சந்திப்பது கடினம் என்று மக்களிடம் இருந்து ஏன் தன் சொந்த கட்சிகாரர்களிடமிருந்தே விலகி இருப்பவர்கள் பிரதமரானால் நாடு என்னவாகும். 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட பிரதமர் பதவிக்கு ஆசைப் படுகிறார் அதை பார்க்கும் போது ஜெயலலிதா ஆசைப்படுவது ஒன்றும் தவறில்லை. ஆனால் இவர்களின் ஆசைகளுக்காக தேசத்தை பலிகொடுக்க முடியுமா? பத்து ஆண்டுகளாக கெடுத்தது போதாதா? இன்னும் ஐந்தாண்டு என்றால் நாடு தாங்காது சாமி...
  • தமிழ்நாட்டு கட்சிகள் அனைத்தும் விஜயகாந்தை வலைவீசி பிடிக்க பார்க்கிறார்களே அவரது சக்தி பழையபடி கூடியிருக்கிறதா? 
     அவர் அரசியலுக்கு வரும் ஆரம்ப காலத்தை மக்கள் நிச்சயமாக இவரால் ஒரு மாற்றம் வரும் என்று நினைத்தார்கள். அதன் பிறகு அவர் நடந்து கொண்ட விதம் எதுவுமே மதிக்கப்படுகின்ற அளவிற்கு இல்லை. இப்போது அவர் நடத்தி இருக்கும் மாநாட்டை பார்க்கும் போது அந்த கட்சியில் சிந்தித்து செயல்படுவதற்கு தலைவர் உட்பட யாருமே இல்லையோ இவர்களில் ஒருவருக்கேனும் அரசியலில் ஒரு துளி கூட ஞானம் கிடையாதோ என்று தோன்றுகிறது. பேரம் பேசுவதும், போராட்டம் நடத்துவதும் அரசியல் என்று விஜயகாந்த் நினைக்கிறார் போலும். அறிவுப்பூர்வமான அணுகுமுறை அவரிடம் இருப்பதாக தெரியவில்லை நாட்டிலுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகள் என்ன? என்று சொல்வதற்கான அரிச்சுவடி கூட அவரிடம் இல்லை இவரை நோக்கி அரசியல் கட்சிகள் படையெடுப்பது கலி முத்திவிட்டது என்று சொல்லலாம்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டு வைப்பது எப்படி அறிவுக்கு புறம்பான செயலோ அதே செயல் தான் பா.ஜ.க விஜயகாந்தோடு கூட்டு வைக்க விரும்புவது. புத்திசாலியோடு, நல்லவனோடு உறவு வைத்து தோற்பது கூட ஒருவித வெற்றி தான். தமிழருவிமணியன் போன்ற  தமிழறிஞர்கள் விஜயகாந்தின் தரத்தை அறிந்தும் அவரோடு சேர்ந்தாவது வெற்றி பெற நினைப்பதும் காலத்தின் கொடுமை.

  • விஜயகாந்தை விட்டு விட்டு பாட்டாளி மக்கள் கட்சியோடு கூட்டு வைக்க முயற்சிப்பது சரியான நடவடிக்கையா? 
     ராமதாஸ் அவர்கள் ஜாதியை வைத்து அரசியல் நடத்துகிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை தாழ்த்தி மதிப்பிட முடியாது. வேளாண்மை, சுகாதாரம், கல்வி மற்றும் தொழில்வளம் போன்றவற்றில் அவருக்கென்று ஒரு பார்வை இருக்கிறது. அதில் அவரது கட்சியின் சிந்தனை நாளுக்கு நாள் வளர்கிறது என்று சொல்லலாம் ஆனால் விஜயகாந்திடம் அப்படி ஒரு சங்கதி இருப்பதாகவே தெரியாது.

மேலும் ராமதாஸ் சினிமாவை மூலதனமாக வைத்து அரசியலுக்கு வந்தவர் அல்ல. அவரது ஆரம்ப கால அரசியல் சர்ச்சைக்குரியதாக உள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இன்று சில நல்ல மாற்றங்கள், முதிர்ச்சிகள் அவரிடம் ஏற்பட்டுள்ளது எனவே அவரிடம் கூட்டு வைப்பதில் தவறு இல்லை. 

ராமதாஸ் மட்டும் தான் ஜாதியை வைத்து அரசியல் நடத்துகிறாரா? மற்ற அரசியல் கட்சிகள் எதுவுமே ஜாதியை பார்ப்பதில்லையா? இந்துத்துவம் பேசுகின்ற பா.ஜ.க வில் கூட ஜாதி வாசனை இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா? அந்த வகையில் பொதுவுடைமை கட்சிகளை தவிர வேறு எவருக்கும் சட்டையை தூக்கி விட்டு கொள்ளும் தைரியம் கிடையாது. 

குடும்பத்தினருக்கு முன்னுரிமை தருவது, மகனுக்காக பதவி கேட்டு மன்றாடுவது, சொந்த ஜாதியினரை தனது கேடயமாக காட்டி அந்த அப்பாவி மக்களை பலி கொடுத்து அவர்களுக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாமல் இன்றும் ராமதாஸ் இருக்கிறார் என்பதை நான் ஒத்து கொள்கிறேன். ஆனாலும் அடைந்த தோல்வி அவரை சிந்திக்க வைத்திருக்கலாம். எந்த வகையில் சொன்னாலும் விஜயகாந்தை விட ராமதாஸ் பரவாயில்லை. 
  • கட்சியின் பிரதமர் வேட்பாளாராக ராகுல் நிறுத்தப்படாததுகாங்கிரஸ் கட்சியின் ஜனநாயகத்தன்மையை காட்டுகிறது அல்லவா? 
     காந்திக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருந்தது என்று அரசியல் தெரிந்த சிறு குழந்தை கூட சொல்லாது. முதலாவது பொதுத் தேர்தலே நேருவை முன்னிறுத்தி தான் நடந்தது. அதன் பிறகு இந்திரா, ராஜீவ், என்று நீண்டு வந்ததையும் அது சோனியா வரை தொடர்ந்ததையும் யாரும் மறக்கவில்லை.

ராகுலை இன்று அறிவிக்காமல் இருப்பதற்கு பெரிய காரணங்கள் எதுவும் இல்லை. காங்கிரஸ் கட்சியிடம் இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு ராகுல் காந்தி மட்டுமே. அவரையும் இந்த தேர்தலில் களம் இறக்கி தோற்று விட்டால் காங்கிரஸ் கடையை இத்தோடு மூடிவிட வேண்டியது தான். இப்போது அவரை அறிவிக்காமல் தோற்றால் கூட ராகுலை பிரதம வேட்பாளர் என்று சொல்லியிருந்தால் வெற்றி பெற்றிருப்போம் என்று கூறி தப்பிக்கலாம் இது அரசியல் கணக்கு. 
  •  வைகோ அவர்கள் பாஜக கூட்டணியில் வந்திருப்பது நல்ல அறிகுறியா?
     வைகோ கூட்டணிக்கு வந்திருப்பது பாஜகவுக்கு நல்லதா? மதிமுகவுக்கு நல்லதா? என்பது இருக்கட்டும் தற்போது இருக்கும் இந்தியாவின் பரப்பளவே காங்கிரஸ் தலைவர்களால் குறைந்து விட்டது. காஷ்மீரை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பங்கு கொடுத்து விட்டார்கள். அருணாச்சல பிரதேசமும் நாகலாந்தும் சீனாவின் காலடியில் வீழ்ந்து விட்டன எனவே அகண்ட பாரதம் வேண்டுமென்று பாஜக கோஷம் போடுகிறது.

ஆனால் கோபால்சாமி அவர்கள் தனிஈழம் அமைவதற்கு இந்தியா உதவவில்லை என்றால் இரண்டாயிரத்தி நாற்பதில் தமிழ்நாடே இந்தியாவில் இருக்காது என்று முழங்குகிறார் இவர்கள் இருவரும் கூட்டு வைப்பது எவ்வளவு பெரிய முரண்பாடு?

ஒன்று அகண்டபாரதத்தை வைகோ ஏற்கிறாரா? அல்லது தனி தமிழ்நாட்டை பிஜேபி ஒத்துக்கொள்கிறதா? இவர்கள் வைத்திருப்பது பதவிக்காக பதவி சுகத்திற்காக எற்பட்ட கூட்டணியே தவிர கொள்கை கோட்பாடு, நாட்டு நலன் என்பதெல்லாம் சிறிது கூட கிடையாது. என்ன செய்வது நமது தலையெழுத்து இவர்களுக்கெல்லாம் ஒட்டு போட வேண்டிய நிலை இருக்கிறது.
  • அப்படியென்றால் உங்களது கருத்துப்படி அடுத்த பிரதமர் யார்? 
     நிச்சயம் நானில்லை....










Contact Form

Name

Email *

Message *