Store
  Store
  Store
  Store
  Store
  Store

நிரந்தர கடன்காரர் ஜாதகம் !



     குருஜி அவர்களுக்கு வணக்கம். நான் வியாபார குடும்பத்தை சேர்ந்தவன். பரம்பரையாக மளிகைக்கடை நடத்திவருகிறோம் எனது தகப்பனார் காலத்தைவிட என் காலத்தில் சற்று பெரியதாக தூத்துக்குடியில் கடை வைத்திருக்கிறேன். கடையில் நல்ல வியாபாரம் நடக்கிறது. வருவாய்க்கும் குறைவில்லை. எனது முன்னோர்களின் அருளாலும், கடவுளின் கிருபையாலும் மிக நன்றாகவே இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும். ஆனாலும் எனக்கொரு தீராத குறை இருக்கிறது பி.காம் முடித்துவிட்டு கடையில் வந்து உட்கார்ந்தேன் அன்றுமுதல் இன்றுவரை ஏதாவது ஒருவகையில் கடன் என்பது எனக்கு வளர்ந்துகொண்டே வருகிறது. ஐம்பதாயிரம் ரூபாயில் ஆரம்பித்த கடன் இன்று பல லட்சங்களை தாண்டிவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறேன் கடனை அடைக்கவே முடியவில்லை. கையில் பணம் இருந்தால் கூட கடனை திருப்பி கொடுக்க வேறொரு செலவு வந்துவிடுகிறது. இந்த குறை எனக்கு தீருமா? அல்லது வாழ்நாள் முழுவதும் கடன்காரனாகவே வாழ்ந்துவிட்டு சாவேனா? என்பதை ஐயா அவர்கள் தயவு செய்து கூறுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
ஜோசப்பெரியசாமி நாடார்,
தூத்துக்குடி.



    விசித்திரமான மனிதர்கள் உண்டு. காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து அதன்பிறகே உணவு எடுத்துக்கொள்ளும் பழக்கும் சிலருக்கும், முகம் கூட அலம்பாமல் டீ,காபி என்று அருந்தும் பழக்கம் சிலருக்கும், இன்னும் வேடிக்கையான மனிதர்களும் இருக்கிறார்கள். ஆயிரம்தான் கஷ்டம் வந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் சிரிக்க சிரிக்க பேசுவார்கள் இப்படி எத்தனையோ வினோத மனிதர்களும் உண்டு

மனிதர்களில் வினோதங்கள் உண்டு என்பது போல அவர்களது ஜாதகத்திலும் வினோதங்கள் உண்டு. இரண்டு மனைவி கட்டி சண்டை சச்சரவுகள் இல்லாமல் இரண்டு பெண்டாட்டிகளுமே வேலைக்கு போய் அவர்களது பாதுகாப்பில் வாழுகிற கணவர் ஜாதகங்களும், ஒரு மனைவி கட்டியே தேசாந்திரியாக சுற்றுகிற ஜாதகமும் உண்டு. அதே போன்று தான் இந்த கேள்வி கேட்டவரின் ஜாதகம் முழுக்க முழுக்க நூறு சதவீதம் கடன்காரனாக வாழும் ஜாதகமாகும்.

கடன்கார ஜாதகம் என்றவுடன் கடன்பட்டு திருப்பி கட்டமுடியாமல் ஓடி ஒளிந்து அவமானப்பட்டு வாழுகிற ஜாதகமாகத்தான் இருக்கும் என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்தியா கடன்வாங்கினால் அதன் பெயர் வறுமை. அமெரிக்கா கடன்வாங்கினால் அதன்பெயர் பெருமை. இவர் கடன்படுவதும் அமெரிக்கா கடன்பெறுவதும் ஒன்றே தான். ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதியும் ஆறாமதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் சாகும் வரையிலும் கடன் போகாது என்பது விதி. ஆனால் பத்தாமிடம் வலுப்பெற்று இருந்தால் கடனே மூலதனமாக இருக்கும். மூலதனத்தை விட கையிருப்பு பலமடங்கு இருக்கும் தன் பணத்தை முதலீடு செய்யாமல் மற்றவர் பணத்திலேயே உழைத்து லாபம் சம்பாதிக்கலாம் என்பதும் விதியாகும்.

எனவே கடனைப்பற்றி கலங்க வேண்டிய அவசியமில்லை. ஒன்று நூறாகி, நூறு ஆயிரமானாலும் உங்களது கையிருப்பு அதிகரித்து கொண்டே வந்தால் கடன் என்பது கூட பக்கத்துனைதான். கடனோடு வாழ்வது என்பது தவறல்ல. கடன் வாங்குவதற்காகவே வாழ்வது தவறாகும். நீச்சல் தெரியாமல் ஆற்றில் குதிப்பவனும், திருப்பி அடைக்கும் மார்க்கம் தெரியாமல், கடன் வாங்குபவனும் ஒன்றே என்பதை மனதில் வைத்தால் கடனை பற்றிய கவலை வீண் கவலை.

Contact Form

Name

Email *

Message *