Store
  Store
  Store
  Store
  Store
  Store

மாய உருவத்தை பார்த்த உஜிலாதேவி வாசகர் !


    ஜிலாதேவி இணையதளத்தின் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் குஜராத் மாநிலம் சூரத் நகரிலிருந்து துளசிநாயர் எழுதும் அன்பான கடிதம். நான் பிறப்பால் மலையாளி ஆனாலும், எனது கல்வி வாழ்க்கை எல்லாமே தமிழ்நாட்டில் தான் நடந்தது. அதனால், எனக்கு மலையாள மொழியை விட தமிழ்மொழியின் மேல் தான் அதிக ஈடுபாடும், பக்தியும் உண்டு. சிறுவயது முதற்கொண்டே வாசிப்பதில் அதிக ஆர்வம் உடைய நான், வயிற்று பிழைப்பிற்கு வேறு இடம் தேடி வந்தாலும், தமிழ் வாசிக்க வசதி இல்லாமல், ஆர்வம் மேலிட, அரை குறை கணினி அறிவோடு இணையதள பக்கங்களில் படிக்க வந்த ஆரம்பகால ஆர்வலர்களில் ஒருவன் நான்.

இலக்கியம், தத்துவம் மற்றும் ஆன்மிகம் என்ற துறையில் எனக்கு நாட்டம் இருந்தாலும், என்னுடைய முழு ஆர்வமும், ஈடுபாடும் அமானுஷ்ய துறை என்றே சொல்லலாம். அதற்கு காரணம், என் பரம்பரை, என் முப்பாட்டனார் வாசுதேவன் நாயர் மிகச் சிறந்த மந்திர சாஸ்திரி. அதர்வண வேத மந்திரங்களை கரைத்துக் குடித்தவர் என்று என் தகப்பனார் சொல்லுவார். என் பாட்டனாரும், என் தகப்பனாரும் ஜோதிடம், மாந்திரீகம் போன்றவற்றில் நல்ல தேர்ச்சி படைத்தவர்கள். என் தகப்பனார், பிரசன்ன ஜோசியத்தில் கெட்டிக்காரர். அந்த வகையில் எனக்கு அந்த துறையில் ஆர்வம் இருந்ததில் வியப்பில்லை.

அதனால் இணையதளங்களிலும் அது சம்மந்தமான பக்கங்களை அதிகமாக தேடித் தேடி படித்தேன். அந்த வகையில், என் ஆர்வத்திற்கு மிக அதிகமாக தீனி போட்டவர் யோகி ஸ்ரீ இராமானந்த குரு. அவரது எழுத்தில் இருந்த ஆழமும், மிக அபரிதமான ஞானமும், கையாளும் விதத்தில் உள்ள அனுபவ சாத்தியமும், என்னைக் கவர்ந்து என்றால் மிகை இல்லை. மந்திரங்களை பற்றி அமானுஷ்ய சக்திகளை பற்றி அவர் கொடுத்திருக்கும் விளக்கங்களை பார்த்து நான் சிலிர்த்து போன நேரம் நிறைய உண்டு. நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட இவர் கொடுக்கும் விளக்கங்களை கேட்டு நம்பியதை நேரில் பார்த்திருக்கிறேன். உண்மையில் சொந்தமாக அனுபவம் இல்லாத எவரும் இதே போன்ற கருத்துக்களை வெளியிட இயலாது என்பது உலகறிந்த இரகசியம்.

யோகி ஸ்ரீ இராமானந்த குருவின் எழுத்தையும், புத்தகங்களையும் மட்டுமே படித்திருந்த நான் இப்போது சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில், தேவதைகளோடு பேசுவதற்கு குருஜி பயிற்சி கொடுக்கிறார் என்ற சிறப்பு நிகழ்ச்சியை கண்டபோது, ஆனந்தத்தில் அதிர்ச்சியே அடைந்து விட்டேன். காரணம், கற்றதை கற்றதோடு நிறுத்தாமல், கற்பிக்கவும் தெரிந்த தேர்ச்சி பெற்ற இவரை அறிந்து கொண்டதில், சிறந்த பாக்கியம் கொண்டவன் நானென்று உணர்ந்தேன்.

என் முப்பாட்டனாரை போல, பாட்டனாரை போல, நானும் அமானுஷ்ய கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வெகுகாலமாக ஆசைப்பட்டது உண்டு. அதை சொல்லித்தர என் மூதாதையர்கள் உயிரோடு இல்லை. என் தகப்பனாருக்கு அவை முழுமையாக தெரியாது. அந்த நிலையில் குருஜியை போன்ற அறிய மனிதர்கள் கிடைப்பது அதிர்ஷ்டம் அல்லவா. உடனடியாக தொலைபேசியில் நான் தேவதை வசியத்தை கற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டேன்.

குருஜியின் சீடர்கள் தான் பதில் சொன்னார்கள். அப்படியொரு வித்தையை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நேரில்வந்து குருஜியை பாருங்கள் என்றார்கள். நான் குஜராத்தில் இருக்கிறேன். அவ்வளவு தூரம் எப்படி வருவது என்று கேட்டேன். குவைத்தில் இருந்தாலும், இந்த விஷயத்திற்கு நேரில்தான் வரவேண்டும் என்று முடிவாக கூறிவிட்டார்கள். ஆர்வம் என்னை உந்தி தள்ளியது. உடனடியாக புறப்பட்டு, குருஜியை கண்டு அவர் பாதங்களை தழுவி கொண்டேன். ஆதரவோடு என்னை பார்த்த அவர், கவலைப்படாதே உன் முப்பாட்டனார் உன் அருகிலேயே இருக்கிறார். அதனால், இந்த வித்தை உனக்கு உடனடியாக சித்திக்கும். அதற்கு அட்சரமாக பிள்ளையார் சுழி போடுவது போல, அமிர்ததாரா மஹா மந்திர தீட்சை எடுத்துக்கொள் அந்த மந்திர தீட்சை உனக்குள் இருக்கும் அசடுகளையும், கசடுகளையும் மறைய செய்யும். தெய்வீக சக்திகள் வருவதற்கு பாதையை சீர்படுத்தும். எனவே முதலில் அந்த பயிற்சியை எடு என்றார்.

கோடி ரூபாய் கிடைத்திருந்தால் கூட, இவ்வளவு சந்தோஷம் வந்திருக்காது. குருஜியின் வாய்மொழி எனக்கு வானளாவிய சந்தோஷத்தை தந்தது. அவர் கூறியபடி கற்று பயிற்சி எடுத்துவந்தேன். முதற்கட்டமாக இரண்டு மண்டலங்கள் செய்யவேண்டிய பயிற்சியில் ஒரு மண்டல காலத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள ஆர்வத்தோடு மட்டுமே இந்த கடிதம் எழுதுகிறேன். தயவு செய்து உஜிலாதேவி இணையதளத்தில் பிரசுரம் செய்யுமாறு வேண்டுகிறேன்.

சித்ரா பெளர்ணமி அன்று, நள்ளிரவு மந்திர உபாசனை செய்துகொண்டிருந்தேன். அந்த நேரத்தில் கண்களை விழித்து பார்க்க வேண்டுமென்ற உந்துதல் எனக்குள் பலமுறை ஏற்பட்டது. கண்களை திறக்கவே கூடாது என்று பிடிவாதமாக இருந்தேன். ஆனால், என் பிடிவாதம் அதிகநேரம் நீடிக்கவில்லை. யாரோ கதவை திறந்து வைப்பது போல என் இமைகள் திறந்து கொண்டன. அப்போது நான் நேரில் கண்ட காட்சி எனது இதய துடிப்பை சிறிதுநேரம் நிறுத்து விட்டது எனலாம். எனக்கு ஏற்பட்டது பயமா? ஆனந்த மயிர் சிலிர்ப்பா? என்று சொல்லத் தெரியவில்லை. உடம்பு துடித்தது. குளிர் ஜுரம் வந்தவனை போல பற்கள் கிட்டி அடித்தன.

என் எதிரே சிவந்த மேனியும், வெண்மையான ரோமமும் கொண்ட ஒளிபொருந்திய மனிதன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவன் உடம்பில் ஆடை எதுவும் இல்லை. ஆனால், அவனது நிர்வாணம் அவலட்சணமாக இல்லை. ஒரு குழந்தையை போல, தெய்வீகமாக இருந்தது. அவனது கண்கள் ஆழமானதாகவும், பெரியதாகவும் இருந்தது. ஆடாத, அசையாத விழிகளால் என்னை அவன் பார்த்தான். அவன் பார்வை என் உடலை துளைத்து ஆத்மாவில் ஊசி ஏறுவது போல ஏறியது. காற்றில் மிதந்து, என் அருகில் வந்தான். என் தலையை, குளிர்ச்சியான அவன் கரங்களால் தொட்டான். நான் அவன் பாதங்களை பற்றிக் கொண்டேன். என் கைகளுக்குள், அவன் பாதங்கள் அகப்படவில்லை. புகையை பிடிப்பது போல இருந்தது. எனக்குள் மின்னல் கீற்று வேகமாக பாய்வதை உணர்ந்தேன். மயங்கி விட்டேன். அதன்பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.

வெகுநேரம் கழித்து கண்விழித்தேன். மொட்டைமாடியில் தனியாக படுத்து கிடப்பதை உணர்ந்தேன். நடந்தது அனைத்தும் சொப்பனம் போல இருந்தது. எழுந்து உட்கார்ந்தேன். நிற்கவும் முயற்சித்தேன். போதையில் தள்ளாடுபவனை போல தடுமாறினேன். விழுந்தேன். சமாளித்துக் கொண்டு எழுந்து வீட்டிற்குள் வந்துவிட்டேன். இரவு முழுவதும் உறக்கம் இல்லை. அன்று அந்த நிமிடத்தில் பெற்ற சந்தோஷம், இதோ இந்த நிமிடம் வரை என்னை விட்டு அகலவில்லை. வானத்தில் பறப்பது போல இருக்கிறது. பெற முடியாததை பெற்றுவிட்டது போல, கம்பீரம் வருகிறது. சாதிக்கப் பிறந்தவன் நான் என்ற உறுதி வருகிறது. இவை அனைத்திற்கும் காரணம் குருஜி என்று நினைக்கும் போது, நன்றி பெருக்கால் அழுகை வருகிறது.

என் இலக்கை நான் தொட்டுவிடுவேன் என்று உறுதியாக நம்புகிறேன். நான் பரம்பரையாக பெற்றிருந்த ஞான செல்வத்தை, வித்தை என்ற புதையலை குரு மகாராஜ் எனக்கு தந்துவிட்டார். நான் இதில் பெற்றிருப்பது ஒரு சிறு புள்ளி தான். பெறவேண்டியது இன்னும் மலையளவு இருக்கிறது என எனக்கு தெரியும். ஆனாலும், ஒரு பூனைக் குட்டி போல, என்னை முழுமையாக குருஜியிடம் சரணாகதி அடைய வைத்து விட்டேன். அவர் மிகச் சிறந்த தாய். பூனை தனது குட்டிகளை எப்படி காப்பாற்ற வேண்டுமென்று அவருக்கு தெரியும். அவர் என்னை வழிநடத்துவார். அவரால், பெற்ற இந்த அனுபவத்தை, இன்னும் பெறப்போகும் இன்னும் எத்தனையோ வெற்றிகளை வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பது மட்டுமே என் வேலை என்று நினைக்கிறேன்.

மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை நோக்கி, நான் உங்களை, மனிதர்களை படிக்க வைக்கிறேன் என்னோடு வாருங்கள்! என்று ஏசுநாதர் அழைத்ததை போல, குருஜி பழையகால கலைகளை, அவைகள் பொய்கள் அல்ல. கற்பனை சித்திரங்கள் அல்ல. இரத்தமும், சதையும் கலந்த உண்மைகள் கற்றுக்கொள்ள வாருங்கள். கற்றுத்தர நான் இருக்கிறேன் என்று அழைப்பதை உணர்ந்து கொண்ட ஒரு மாணவன் நான். எனது சொல்லும், செயலும் இனி நிச்சயம் கடந்த கால கசப்புகளை நாடிச் செல்லாது. என்னை கயவனாக மாற்றாது. புது மனிதனாக உருவாக்கிவிடும் என்ற நம்பிக்கை துளிர்விட துவங்கி இருக்கிறது. நிச்சயம் என்னை குருஜி ஆன்மீக அமுதத்தை அருந்துவதற்கு தயார் செய்வார் என்று ஆத்ம பூர்வமாக நம்புகிறேன்.

இப்படிக்கு 
  துளசிநாயர்
குஜராத் 


(பயன்பெற்றவர்களின் அனுபவ கடிதங்கள் இன்னும் தொடரும்...)



  அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை பெற்று அதனால் பலன் அடைந்த பலர் இதே போன்ற கடிதங்களை அனுப்பி இருக்கிறார்கள். அவர்களில் பலர் தங்களது ஊர் பெயரையும், தன் பெயரையும் சரிவர குறிப்பிடாததனால் அவர்கள் கடிதங்களை இங்கு பிரசுரிக்க இயலவில்லை. எனவே அமிர்த தாரா தீட்சையில் பயன் அடைந்தவர்கள் மற்றும் மந்திர தீட்சையின் மூலம் அனுபவங்களை பெற்றவர்கள் அனைவரும்  தங்களை பற்றிய தெளிவான விபரத்தோடு கடிதங்களை அனுப்புமாறு வேண்டுகிறோம். கடிதம் அனுப்ப -  sriramanandaguruji@gmail.com






Contact Form

Name

Email *

Message *