Store
  Store
  Store
  Store
  Store
  Store

அவள் கட்டியத் தாலி.....


பார்வதிக்கு இடுப்பெல்லாம் ஒடித்து போட்டது போல வலித்தது இன்னும் ஒரு கூடை துணி துவைக்க வேண்டும் எனும் போது அலுப்பும் தொற்றிக் கொண்டது

கழுத்தில் கசகசத்த வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொண்டாள்  'ச்சை.. என்ன வாழ்கை ' என்று முனுமுனுத்தாள்

அவளும் ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்தவள்தான் அம்மாவின் அரவணைப்பும் அப்பாவின் செல்லமும் அவளின் இளமைப் பவருவத்தை தாலாட்டியதுதான்

பாழாய்ப்போன காதல் பிறந்தாலும் பிறந்தது இந்த சாரங்கனை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்தாள் இளமைக் கறைந்தது மாதிரி  சந்தோஷமும் கறைந்து போய்விட்டது.

இரண்டு பிள்ளைகள் பெற்ற பிறகு அழகும் போய் விடுகிறது உடம்பு சுகத்தில் உள்ள ஆசையும் போய் விடுகிறது

புருஷனின் கண்சிமிட்டல் பயத்தையும் எரிச்சலையும்தான் தருகிறது இந்த நிலையை ஆண் புரிந்துக் கொண்டால் எல்லாம் சகஜமாய் போய் விடுகிறது

இல்லா விட்டால் குடும்பம் கூத்து மேடையாகி விடுகிறது இந்த உண்மை தெரியாமல் போனதால்தான் பார்வதி இன்று ஓடாய் தேய்கிறாள்

சாரங்கன் கல்யாணம் ஆன புதுசில் நன்றாகத்தான் இருந்தான் தவறாமல் வேலைக்கு போவதும் வேளைக்கு வீட்டுக்கு வருவதும் தவறவே தவறாது

இரண்டாவதாய் பாப்பா பிறந்தாலும் பிறந்தது அவனுக்கு சனியன் பிடித்து விட்டது அப்படித்தான் அலமேலுக் கிழவி சொன்னாள் பார்வதியும் அதை நம்பினாள்

இரண்டறை வருடத்தில் எல்லாம் சரியாயிடும் என்றிருந்தாள் அப்புறம்தான் தெரிந்தது அவனுக்கு பிடித்த சனி அல்ல  பித்து என்று

யாரோ விமலாவாம் அவள் புருஷன் இவளைப் பார்த்து யாரோ கண்ணடித்தான் என்று அவனை வெட்டி விட்டு வேலூர் ஜெயிலில் இருக்கிறானாம்

புருஷன் இல்லாமல் அவள் படும் கஷ்டம் சாரங்கனுக்கு சகிக்கலையாம் அதலால் அவளிடம் ஆறுதலாக நாலு வார்த்தைகள் பேசினானாம் அந்த பேச்சி படுக்கை அறைவரையும் தொடர்ந்து விட்டதாம்

பேச்சி மயக்கத்தில் பார்வதியே மறந்து போய் விட்டாளாம்

விஷயம் தெரிந்த உடன் சாரங்கனை சட்டையை பிடித்து ஆக்ரோஷமாய் கூச்சல் போட்டாள்

அவன் அதற்கெல்லாம் அசர வில்லை தூசியை தட்டி விடுவது போல பார்வதி கையை தட்டி விட்டு வீட்டில் சோறு இல்லை என்றால் ஓட்டலில் சாப்பிடாமல் பட்டினியா கிடக்க முடியும் என்று போய் விட்டான்

அன்று முழுவதும் குலுங்கி குலுங்கி அழுதாள் இப்படி பட்டவனோடு வாழ்வதை விட சாவதே நல்லதென்று முடிவுடன் எழுந்தவளை இடுப்பைக் கட்டி தூங்கி கொண்டிருந்த குழுந்தையின் முகம் உனக்கு புருஷன் சரியில்லை என்றால் நான் அம்மா இல்லாமல் அவதி பட வேண்டுமா என கேட்பது போலிருக்கவே படுத்துக் கொண்டாள்

புயலுக்கு பிறகு அமைதி வரும் என்பார்கள் அவளுக்கும் அழுகைக்கு பின்னர் ஞானம் வந்தது

கணவன் மனைவி உறவு என்பது வெறும் உடம்பு சம்மந்தப் பட்டது என்று நினைப்பவன் முழு முட்டாள் உடம்பிற்குள் மறைந்து கிடக்கும் மனதை நேசிக்க தெரிந்தவனே நிறைவான தாம்பத்தியத்தை வாழ தகுதிடையவன்

உடலாலும் மனதாலும் சோர்ந்து போனாள் மனைவி என்ற உடன் வேறொருத்தியை தேடுபவன் அதே தவறை மனைவி செய்தால் தாங்கிக் கொள்வானா

பொண்டாட்டி கெட்டு போய் விட்டால் புருஷன் மீது அனுதாபப் படுகிறது உலகம்

அதே புருஷன் நிலைகெட்டு போனால் இவள் ஒழுங்காக இருந்திருந்தால் வேலி தாண்டுவானா அவன் என்று பெண் மீது தான் பழி போடும்

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அப்படித்தான் பேசினர்கள் இவள் என்னவோ ஓழுங்கீனமானவள் என்பது போல பார்த்தார்கள் குசுகுசுவென பேசினார்கள்

சாரங்கனை  காதலிக்கும் பொழுது என்னவெல்லாம் பேசினான் காட்டு முயல் குட்டிகள் தாய் முயல் இறந்து விட்டால் பால் இல்லாமல் செத்து விடுவதைப் போல நீ இல்லை என்றால் நானும் செத்து விடுவேன்

   நீ அழகாய் இருக்கிறாய் என்பதற்காக காதல் வரவில்லை உன் குணம் எனக்கு பிடித்திருக்கிறது உனது ஆத்மாவை நேசிக்கிறேன் நீ நடப்பது பேசுவது உட்காருவது என்று உனது ஒவ்வொரு  செயலுமே என் மனதைக் கவர்ந்து விட்டன

நீ இல்லாத வாழ்கையை நினைத்து பார்க்கவே என்னால் முடியாது தயவு செய்து என்காதலை தூர தள்ளி விடாதே தண்ணீர் இல்லாமல் கருகும் ரோஜா செடியைப்போல் நான் வாடி விடுவேன்

இப்படி ஏதேதோ வசனம் பேசி அவள் மனதை கொஞ்ச கொஞ்சமாக கரைய செய்தான்

ஆரம்பத்தில் அவளும் கல்லாகத்தான் இருந்தாள் போகப் போக காற்றடிக்கும் திசையில் காற்றாடி சுற்றுவது போல் அவன் வசமாக முழுமையாக வீழ்ந்து விட்டாள்

ஆண் இனமே இப்படித்தான் பெண்ணை வெல்ல வேண்டும் என்றால் எந்த வலையை விரித்தாவது ஜெயித்து விடும்

பெண் மட்டும் யோக்கியம் இல்லை ஆணிடம் தோற்பதால் ஏற்படும் சுகத்திற்காக எதையும் இழக்க தயாராகி விடுவாள்

இது உலகை சிருஷ்டித்தவன் செய்யும் மாய விளையாட்டு இந்த விளையாட்டில் காலகாலமாக மானிடக் காய்கள் உருட்டப் படுகின்றன சில காய்கள்  தட்டிக் கொடுக்கப் படுகின்றது சில காய்கள் தட்டி கழிக்கப் படுகின்றன

பார்வதி கழிக்கப் பட்ட காய்களில் ஒன்று அவள் அப்படித்தான் தனது ஏமாற்றத்தை எடுத்துக் கொண்டாள்

விமலாவோடு உறவு ஏற்பட்ட ஆரம்ப நாட்களில் சாரங்கன் வீட்டுக்கு வந்து போய்தான் இருந்தான் அவள் புருஷனுக்கு ஆயுள் தண்டனை உறுதியான பின்பு அவனது வருகை முற்றிலும் குறைந்து போனது

வீட்டுச் செலவுக்கு பணமே தருவது இல்லை பச்சைக் குழந்தைகள் இரண்டை வைத்துக் கொண்டு பாவம் பார்வதி என்ன செய்வாள்

திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை என்பது போல புருஷன் கைவிட்ட பிறகு பிறந்த வீடுதானே கதி

அம்மா அரவணைத்துக் கொண்டாள் தனது மகளை தவிக்க விட்டவனை படுபாவி என்று வைதாள் சாபமிட்டாள் எங்கும் போக வேண்டாம் கஞ்சோ கூழோ இருப்பதை குடித்து விட்டு எங்களோடு இரு என்றாள்

அப்பா மௌனமாக அழுதார் இவளே தேடிக் கொண்ட வினைக்கு அவர் அழத்தான் முடியும் வேறென்ன அவரிடம் எதிர் பார்ப்பது பிள்ளைகளால் ஏற்படும் கஷ்டங்களை பெற்றவர்களின் கண்ணிர் கழுவியா துடைத்து விடும்

இரண்டு மாதங்கள் ஓடியது அப்பாவும் அம்மாவும் தனிமையில் இவள் மட்டும்தான் பிள்ளை என்றால் பரவாயில்லை இன்னும் இரண்டு பெண்களை வைத்திருக்கின்றோமே

வேறு ஜாதிக்காரனோடு ஓடிப்போன மூத்தவளை வீட்டில் வைத்துக் கொண்டு இளையவர்களுக்கு எப்படி வரன் தேடுவது என்று சன்னமாக பேசிக் கொண்டது பார்வதிக் காதில் சத்தமாக வெடித்து எதிர்காலத்தை கோர சித்திரமாக காட்டியது

காதலித்த கண்களுக்கு மனிதத் தரம் மட்டுமா தெரிவதில்லை சமூக மதிப்பீடுகளும்தான் தெரிவதில்லை அவள் சாரங்கனை ஜாதியாக பார்க்க வில்லை என்பதற்காக ஊருமா பார்க்காது

உள்ளுக்குள் ஆயிரம் அழுக்குகள் ஊறிக்கிடந்தாலும் வெளியில் பரிசுத்தத்தை பேசுவதல்லவா ஊரின் லட்சணம்! பணக்காரத் தவறுகளை சந்தனம் பூசி மறைத்து விட்டு ஏழையின் இயலாமையை காரித்துப்பி கைகொட்டி சிரிப்பதுதானே ஊரின் பொழுது போக்கு

பார்வதி நன்றாக யோசித்தாள் தனது துயரம் தங்கைகளுக்கு சாபமாக மாறிவிடக் கூடாது என முடிவு செய்தாள்

சாரங்கனோடு வாழ்ந்த வீட்டுக்கே வந்தாள் பிள்ளைகளின் பசித்த வயிறுகள் சமுத்திர இறைச்சலாக அவள் காதை அடைத்தது செய்ய போவது என்ன வென்று அவளுக்கு தெரிய வில்லை

ஆனாலும் மனதின் மூலையில் நம்பிக்கை விளக்கு மின்னிக் கொண்டே இருந்தது தேவைகள் தான் கண்டுபிடிப்புக்களாக மாறுகின்றன என்பதை அவள் அறிந்தே இருந்தாள்

அலமேலுக் கிழவி ரைஸ் மில்காரர் வீட்டில் வேலைக்கு ஆள் வேண்டுமாம் நீ வேண்டுமானால் போரியா எனக்கேட்டாள்

ஆற்று வெள்ளத்தில் புரண்டு புரண்டு ஓடியவளுக்கு பிடித்துக் கொள்ள சரியான கட்டை கிடைத்தது போல பார்வதி சந்தோஷப் பட்டாள்

குழந்தைகளின் பசியை தீர்ப்பதற்கு வழிகிடைத்ததே என்ற ஆறுதல் எந்த மலையையும் தன்னால் புரட்ட முடியும் என்று நம்பிக்க தீயை அவளுக்குள் மூட்டியது

சில காலம் செல்ல செல்ல வேறுபல வீடுகளிலும் வேலைக் கிடைத்தது அவளின் வருமானமும் போதுமானதாகியது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினாள்

மாதச் சீட்டு அதுஇதுவெனக் கட்டி பணத்தை சேர்த்து இருந்த வாடகை குடிசையை சொந்தமாக்கி கொண்டாள்

இந்த காலத்தில்தான் சாரங்கனை ஒடிந்து போன இடுப்போடு நாலுபேர் வீட்டிற்கு தூக்கி வந்தனர்

விமலாவின் வீட்டுக்காரன் பெயிலில் வந்தனாம் இரண்டு பேரயும் ஒன்றாக பார்த்தானாம் பொங்கிய கோபம் சாரங்கனின் இடுப்பை ஒடித்ததாம்

அவனை மனதால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை இருந்தாலும் பலவீனனை பழிவாங்குவது நாகரீகம் அல்ல என முடிவு செய்து மருத்துவ மனைக்கு கூட்டிச் சென்றாள்

தன்னால் முடிந்த வரை முயன்றாள் எல்லா மருத்துவரும் இனி அவன் எழுந்து நடப்பது இயலாத காரியம் என்றனர் அதற்கு மேல் அவளால் முடிந்தது ஒன்றுமே இல்லை

தான் பெற்றது இரண்டு கட்டியது ஓன்று ஆக தனக்கு மூன்று குழந்தைகள் என்று முடிவு கட்டினாள்

தெருவில் உள்ளவர்கள் எல்லோரும் பார்வதியை பாராட்டினர் எவ்வளவுத்தான் ஆனாலும் கட்டியவள் கட்டியவள்தான் ஒட்டியவள் ஒட்டியவள்தான் என்றனர்


இந்த பாராட்டு மொழிகள் எதையும் அவள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை அவர்கள் ஏசும் போது எப்படி மௌனமாக இருந்தாளோ அப்படியே இப்போதும் சலனமற்று இருந்தாள்

ஊரெல்லாம் சொல்லலாம் அவள் சாரங்கனை மன்னித்து விட்டாள் என்று ஆனால் அவள் அவனை மனதளவில் புருஷனாக ஏற்கவே இல்லை

அந்த தகுதியை அவன் அவளைப் பொறுத்தவரை எப்போதோ இழந்து விட்டான் இப்போது அவன் பராமரிக்க பட வேண்டிய ஒரு உயிர் அவ்வளவுதான்

முன்பை விட வேகமாக வேலை செய்தாள் பம்பரமராக அவள் சுழலுவதை மற்றவர்கள் வியப்போடு பார்த்தனர் அதையெல்லாம் சட்டை செய்ய அவளுக்கு நேரமில்லை

நாள் பட நாள் பட தான் ஒரு பெண் என்பதே மறந்து போனாள் அவள்  விமலாவோடு சாரங்கன் போன போது ஆத்திரத்தில் கழற்றி  அவன் போட்டோவில் மாட்டிய தாலியை அடிக்கடி பார்த்து தனக்குள் முனுமுனுத்துக் கொள்ளுவாள்

இப்போது நான்தான் உனக்கு தாலி கட்டி இருக்கேன் உன்னைக் காப்பது நானெனும் போது நீ அல்ல புருஷன்

இந்த முனுமுனுப்பு நிச்சயம் சாரங்கன் காதுகளில் விழாமல் இராது விழவேண்டும் என்றுதான் சத்தமாக முணுமுணுப்பாள்


Contact Form

Name

Email *

Message *