Store
  Store
  Store
  Store
  Store
  Store

கண்ணன் கருப்பானது ஏன் ?


கண்ணா
நீ கருப்பாக ஆனதேன்?
உன் கண்பட்ட
நாங்கள்
மட்டும் ஜொலிப்பதேன்?

காளிங்க நதியில்
குளித்ததனால்
கருத்துப் போனாயா?
காளிங்கன்
மீது
நடனம்  ஆடியதால்
கருமை ஆனாயா?


 கண்ணா
நீ கருப்பாக ஆனதேன்?
உன் கண்பட்ட
நாங்கள்
மட்டும் ஜொலிப்பதேன்?

மாடு மேய்த்த
புழுதி உன்னைத் தொட்டதா?
மலர்களெல்லாம்
உன்னழகில்
கண்கள் வைத்ததா?

ஆயர்பாடி
மண்ணெல்லாம்
உன்னை கட்டியணைத்ததா?
ஆய்ச்சியர்
இதழ் முத்தம்
உன்னை சுட்டுவிட்டதா?


கண்ணா
நீ கருப்பாக ஆனதேன்?
உன் கண்பட்ட
நாங்கள்
மட்டும் ஜொலிப்பதேன்?

வெண்ணெய்
பானை கரி
உன்மேல் பட்டுவிட்டதா?
வெண்ணெயெல்லாம்
உன்மேல்
கொட்டி
காய்ந்து விட்டதா?

யசோதை
பூசிய கருமையோ?
எங்கள்
மனதிலுள்ள சிறுமையோ?


கண்ணா
நீ கருப்பாக ஆனதேன்?
உன் கண்பட்ட
நாங்கள்
மட்டும் ஜொலிப்பதேன்?

ஆண்டாளின்
பாசுர நிழலோ?
யமுனை
நதியிலுள்ள சுழலோ?

தூதாக
நடந்தபோது
பட்ட வெயிலோ?
பீலியை சூடி
பெருமை  தந்ததால்
ஆட்கொண்டது மயிலோ?



கண்ணா
நீ கருப்பாக ஆனதேன்?
உன் கண்பட்ட
நாங்கள்
மட்டும் ஜொலிப்பதேன்?


மனிதர்களின்
பாவ மூச்சோ?
இல்லை
அவர்களின் பொய்மைப் பேச்சோ?

முடிவென்பது
உனக்கில்லை என்ற
தத்துவ இருளோ?
முடியாத கருமுகில் அருளோ?



கண்ணா
நீ கருப்பாக ஆனதேன்?
உன் கண்பட்ட
நாங்கள்
மட்டும் ஜொலிப்பதேன்?


  • மேலும் குருஜியின் கவிதைகள் படிக்க இங்கு செல்லவும்



  • Contact Form

    Name

    Email *

    Message *