Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுள் ஒரு பக்கம் அவன் படை மறு பக்கம்

  மகாபாரத ஆய்வு தொடர் 3 

கேள்வி:    மகாபாரதக்கதையை வீட்டில் வைத்துயாரும் படிக்கக்கூடாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் உள்ளது இந்த சமயத்தில் இந்தக்கேள்வி பொருத்தமில்லாத சடங்குகளைப் பற்றிக் கேட்பதாக நீங்கள் கருதாமல் இதற்கு உள்ளீடாக வேறு சிந்தனைகள் இருக்கின்றனவா என்பதைப்தெளிவுபடுத்த வேண்டும்?

குருஜி:
    இரண்டு காரணங்களை வைத்து மகாபாரதம் பெரும் போராட்டக்கதை என்று கூறப்படுகிறது.  குருஷேத்திரபோரில் எண்ணிக்கையில் அடங்காத மனித உயிர்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. போரின் முடிவில் பாண்டவர் பக்கம் ஏழுபேரும் கௌரவர்கள் பக்கம் மூன்று பேரும் ஆக பத்து நபர்கள் மட்டுமே உயிரோடு எஞ்சி இருந்தனர்.  ஏணைய லட்சக்கணக்கான வீரர்கள் மடிந்தே போய்விட்டார்கள்.  இப்படிப்பல லட்ச உயிர்களைக் காவுகொண்ட சம்பவங்கள் பாரதத்தில் இருப்பதாலும் இரண்டாவதாக கிருஷ்ணபரமாத்மா, பீஷ்மாச்சாரியார் போன்ற நுண்ணறிவாளர்கள், ஒழுக்க சீலர்கள், தவத்தால் சிறந்தவர்கள் இருந்தும் இம்மாபெரும் அழிவைத் தடுத்து நிறுத்த முடியவில்லை ஏன் இவர்களே சமாதானத்திற்கான முயற்சிகளில் மேம்போக்காக கவனம் செலுத்தினார்களே தவிர போர் கவர்ச்சி இல்லாதவர்களாக இல்லை.  ஆகவே சம்பவங்களாலும் மனிதர்களின் மனப்போக்காலும் போராட்டங்கள் மிகுந்த இவ்வரலாற்றை குடும்பத்தில் படித்தால் குருவம்சம் யுத்தத்தில் தள்ளப்பட்டது போல தங்களது குடும்பமும் குழப்பங்களில் தள்ளப்பட்டுவிடுமோ என்ற அச்சமே பாரதத்தை வீட்டில் படிக்கக்கூடாது என்ற சடங்கு முறையை ஏற்படுத்தி உள்ளது.  இதற்கு எந்தவிதமான சாஸ்திர ஆதாரமும் இல்லை.


இந்த ஆதாரமற்ற கருத்துக்களை உடையவர்கள் ஒரு விஷயத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். எல்லா மனிதனும் பிறக்கும்போது நல்லவனாகவே பிறக்கிறான். சுற்றுப்புற சூழலாலும் இன்பம் தேடும் வேட்கையாலும் அவன் காமம், அளப்பறிய பொருளாசை ஆகிய தீய குணங்களுக்கு ஆட்பட்டு விடுகிறான். வரம்பு கடந்த பொருளாசையாலே மகாபாரதப்போர் உருவாகிறது. தனிப்பட்ட ரீதியில் நல்லவனாக இருப்பவன் சொத்துக்களைப் பங்கிட்டு கொடுக்கும் மனம் இல்லாதபோது பொல்லாதவனாக மாறி தான் அறிந்த அனைத்து தர்மங்களையும், தூக்கியெறித்து மூர்க்கனாகி விடுகிறான். அதர்மத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளகூடிய தவிர்க்க முடியாத நிலை தர்மத்திற்கு ஏற்படுகிறது. இந்த சூழலில்தான் பாரதப்போர் நடக்கிறது. அறத்திற்கும், மறத்திற்கும் நடுவில் நடக்கும் தர்மயுத்தத்தின் முடிவில் அறமே வெல்கிறது. வெற்றியின் பக்கமல்ல தர்மத்தின் பக்கமே இறைவன் என்ற உண்மையும் தெளிவு படுத்தப்படுகிறது.

   தாயின் கருவயிற்றிலிருந்து மயானத்தின் தலைவாசல் வரை நடக்கும் நமது வாழ்க்கை என்ற கதையிலும் போராட்டம் என்பதே இறுதிவரை நடக்கிறது. நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சுமே சரீரமும் உயிரும் இயற்கையோடு நடத்தும் போராட்டத்தைக் குறிக்கிறது. போராட்டம் இல்லாத வாழ்க்கையை எப்போது நாம் பெறுகிறோம் என்றால் சிதையின் மீது படுக்கும் போதுதான். ஒவ்வொரு நாளும் வாழ்க்கைப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவே போராடுகிறோம். அதுதான் வாழ்க்கை. போராட்டத்தைத் தவிர்த்து யோகியாக இருந்தாலும் சரி போகி, ரோகி யாராகயிருந்தாலும் சரி வாழவே முடியாது. எனவே போராடிக் கொண்டிருக்கும் நாம் போராட்டக் கதையைப்படித்தால் குழப்பங்கள் வரும் என நம்புவது மிகப்பெரும் அறியாமையாகும்.

   இன்னொரு விஷயத்தையும் கவனித்தே ஆக வேண்டும். நாம் பூமியில் வாழ்ந்திருக்கும் காலம் வரை அதாவது ஒரு வகையில் நாம் விரும்பியோ, விரும்பாமலோ தற்செயலாகவோ சில பகைவர்களைச் சம்பாதித்து விடுகிறோம். இந்தப்பகைமையின் கூறுகளை சற்று நிதானமாக அலசி ஆராய்ந்து பார்த்தால் அதில் இனம்புரியாத பல சிக்கல்கள் இருப்பதும் எதிரிகள் என்று கருதப்படுபவர்கள் நமக்கு அந்நியமாகவும் அருகிலும் இருப்பது நன்குபுலனாகும்.

  ராமாயணத்தில் ஸ்ரீ ராமனுக்கு பகைவனாக அமைந்தவன் ராவணன். இவன் அரக்கன் ராமனோ முழுமையான மனிதன் இருவருக்கும் எந்த வகையிலும் சம்பந்தம் என்பதே கிடையாது. பாரதத்திலோ பாண்டவர்களும், கௌரவர்களும் ஒரே வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். ராம ராவண யுத்தம் அந்நியர்களுக்கிடையில் நடந்தயுத்தம். அதில் அழிவுகள் அதிகமில்லை. குரு ஷேத்திர யுத்தமோ பங்காளிகளுக்குள் நடந்த யுத்தமாகும். உறவினர்களுக்குள் சண்டை வருவதினால் அதில் ஒவ்வொருவரின் பலமும் பலஹீனமும் வெளிச்சமாகத் தெரிவதனால் அழிவு என்பது அதிகமாக இருக்கிறது. எனவே உள்பகையை வளரவிடாமல் தடுக்க வேண்டும் அதற்கு ஒவ்வொரு மனிதனும் விட்டுக் கொடுக்கும் மனோபாவத்துடனும் பொறுத்துக் கொள்ளும் இயல்புடனும் இருக்கவேண்டும். இந்த பாடத்தை நமக்கு கற்றுத்தருவதே மகாபாரதம் ஆகும். பாடத்தை எங்கு வேண்டுமென்றாலும் படிக்கலாம். அதற்கு தடைபோடுவது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவதாகும்.


கேள்வி: மகாபாரதத்தில் குந்தியும், மாந்திரியும் தன் கணவன் அல்லாத பிற ஆடவர்களோடு கூடி குழந்தை பெறுவதாகவும் பாஞ்சாலி ஐந்து கணவனை மணந்து வாழ்வதாகவும் கூறப்பட்டிருப்பது மக்களின் ஒழுக்கம் பற்றிய விஷயத்தில் முரணான முன்னுதாரனம் ஆகாதா?

குருஜி: இந்த இரண்டு சம்பவங்கள் மட்டுமல்ல இதே போன்ற சர்ச்சையில் ஏற்படுத்தும் மூன்றாவது சம்பவமும் மகாபாரதத்தில் இருக்கிறது. குரு வம்சத்தின் தலைவனான சந்துனு மன்னனுக்கு பீஷ்மர் தவிர விசித்திர வீரியன் என்ற ஒரு மகனும் இருந்தான். பிஷ்மர் தனது சபதத்தால் அரசாளும் பொறுப்பை மறுத்ததினால் விசித்திர வீரியனே சந்தனுவுக்கு பிறகு அரசனாக முடிசூட்டப்பட்டான். முடிசூட்டபட்ட சில வருடங்களிலேயே நோய் வாய்பட்டு இறந்துவிட்டான். அம்பிகா, அம்பாலிகா என்ற இரண்டு மனைவிகள் விசித்திர வீரியனுக்கு இருந்தும் குழந்தைகள் இல்லை. நாட்டை ஆள வாரிசுகள் அவசியம் தேவை என்ற இக்காட்டான சூழலில் அம்பிகா, அம்பாலிகா ஆகிய விதவைகள் இருவரும் வியாசருடன் கூடி திருதராஷ்டிரனையும், பாண்டுவையும் மகன்களாகப் பெற்றெடுக்கிறார்கள்.

 கணவனை இழந்த இளம் விதவைகள் வேறு ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெறுவது ஒன்றும் ஒழுக்கம் தவறிய செயல் அல்ல, மகாபாரத காலத்தில் விதவா விவாகம் என்பது இல்லாமல் இல்லை. கணவனை இவர்கள் இருவரும் இழந்தபொழுது சந்தனுவின் மனைவி சத்யவதி பீஷ்மரை இவ்விரு பெண்களையும் மறுவிவாகம் செய்து கொள்ள வேண்டியதிலிருந்தே இந்த உண்மை புரியும். நிலைமை இப்படி இருக்க திருமணம் செய்யாமல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது தவறான முன்னுதாரனம் தானே. ஆக மகாபாரதத்தில் இத்தகைய மூன்று சிக்கல்கள் இருக்கிறது.


    பாரதம் கற்பனையான நாவல் என்றால் இந்த மூன்று சிக்கல்களையும் ஏற்படுத்தாமலே கதாசிரியன் கதையை அமைத்திருக்கலாம். அப்படி அமைப்பதினால் மூலக்கதையில் எந்த குழப்பமும் ஏற்பட்டு விடப் போவதில்லை ஆனால் பாரதம் என்பது உண்மையாக நடந்த சம்பவங்களின் தொகுப்பு என்பதினால் உண்மையை மறைக்க வியாசன் விரும்பவில்லை என்பது நன்கு புலனாகும். மேலும் இத்தகைய சம்பவங்கள் அக்கால அரச தர்மமாகவே கருதப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் சுய ஒழுக்கத்தைப் பணயம் வைத்து கூட நாட்டின் நிர்வாகத்தை நிலை நிறுத்தியே ஆக வேண்டும் என்ற தர்மநிலை அன்று உறுதியாகக் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய சமூக அமைப்போடு அக்கால நிலையை பொறுத்திப் பார்த்தால் தவறுதலாகத் தான்படும். அன்றைய நிலையை நம்மால் நேரடியாக உணர முடியாத போது இதற்கு என்ன சமாதானம் சொன்னாலும் அது முழு திருப்தியைத்தராது.

   மக்கள் தங்களது வாழ்க்கை முறையில் கடைபிடிக்கும் தனிமனித ஒழுக்கம் என்பது ஒவ்வொரு காலத்திலேயும் மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. அதோடு மட்டுமல்ல இடத்திற்கு இடமும் மாறுபடுகிறது. நாம் ஆணும், பெண்ணும் ஒரே ஒரு முறை மட்டும் திருமணம் செய்து கொள்வதுதான் ஒழுக்கம் என்கிறோம். மேலை நாடுகளிலோ ஆணும் சரி, பெண்ணும் சரி பல திருமணங்கள் செய்து கொண்டாலும் அது ஒழுக்க கேடானதாகக் கருதப்படுவது இல்லை.

  ஒரு காலத்தில் கூட்டுக்குடும்பமாக இருப்பதே சிறந்த பண்பாடு எனக்கருதப்பட்டது. ஆனால் இன்று உள்ள தனித்தனி குடும்பங்கள் பண்பாட்டு சீரழிவு என்று நாம் கருதுவது இல்லை. மேலும் இன்றைய காலகட்டத்திலும் நமது தமிழ்நாட்டில் சில சமூகத்தினரிடையே அறுத்துக்கட்டும் பழக்கம் இருக்கிறது. சில மலைஜாதி மக்களிடம் பல கணவன் முறை இன்றும் பழக்கத்தில் இருக்கிறது. எனவே பண்பாட்டு அம்சங்களை நுணுக்கமான முறையில் பரிசீலனை செய்தோம் என்றால் அது பொருளாதாரம் மற்றும் அரசியல் காரணங்களால் மாறிக்கொண்டே இருப்பதை காணலாம். 


  இன்று நாம் சரியெனக் கொள்வது நாளைய சமுதாயத்தில் தவறுதலாகவும் பாவமாகவும் கூட கருதப்படலாம் எனவே இக்கால நடைமுறையைக் கொண்டு அக்கால நடைமுறையை அளவிட்டுப் பார்ப்பது முறையானது அல்ல. எந்தக் காலத்திலேயும் ஒரு சமுதாயத்தின் பண்பாடானது எந்த வகையில் அமைந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது. அது அந்த சமுதாயத்தில் பெண்களின் நிலை எப்படி அமைந்துள்ளது என்பதை ஆராய்ச்சி செய்வதே ஆகும்.

 இதே அடிப்படையில் மகாபாரதக்கால சமூகப்பண்புகளை ஆராய்ச்சி செய்து பார்க்கலாம். பெண்களை தெய்வமாக அதைவிட சிறந்த தாயாகப் பார்பதே நமது இந்தியப்பண்பாடாகும். மேலைநாட்டு கலாச்சார முறையில் பெண்கள் மனைவி என்ற நிலையிலேயே வைக்கப்படுகிறார். நாம் மனைவியும் தாய்க்கு கட்டுப்பட்டவளாக கருதுகிறோம். எனவேதான் பெண்ணினத்திற்கு இழைக்கப்படும் அநீதிகள் பெரும்பாவமாக நாம் கருதுகிறோம். மஹாபாரத நிகழ்வுகளும் பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் எதிரொலியாகவே அமைந்திருக்கிறது.

  ஹஸ்தினாபுரத்தில் சபையின் நடுவில் பாஞ்சாலி இழுத்துவரப்பட்டு அவமானப்படுத்த படுகிறாள். இதன் காரணமாகவே பங்காளிகளின் மத்தியில் உள்ள பாகப்பிரிவினையானது மானப்போராட்டமாக உருமாறுகிறது. இதன் விளைவே யுத்த களத்தில் லட்சக்கணக்கான உயிர்கள் மரணத்தின் வாசலில் விழுந்ததாகும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது அக்காலத்தில் பெண்கள் குடும்பகவுரவத்தின் சின்னங்களாகக் கருதப்பட்டார்கள் என்பதும் அவர்களை இழிவுபடுத்தினால் ஒட்டுமொத்த குடும்ப அமைப்பையே சிதைத்ததற்கு ஒப்பாகும் என்பதும் அதை நிகழவிடாமல் தடுப்பதும் நிகழ்ந்தால் நிகழ்த்தியவர்களை பழிவாங்குவதும் ஆண்களின் தலையாய கடமை என்பதும் அக்கால நடைமுறையில் இருந்து இருக்கிறது.

  இத்தகைய பண்பாட்டு அமைப்பு ராமாயண காலத்திலேயும் இருந்து இருப்பதை நாம் அறிவோம். இத்தகைய சில தர்மநெறிகள் ராமாயணத்தோடு ஒத்துப்போனாலும் ராமாயணத்தில் உள்ள பல நெறிகளுக்கு எதிரிடையான சில கூறுபாடுகள் மஹாபாரத காலத்தில் வளர்ச்சியடைந்து இருக்கிறது. தன்னுடைய வாழ்க்கை முழுவதையுமே தர்மத்தின் பாதையில் அமைத்தவன் ஸ்ரீராமன் சில தர்மசங்கடமான சூழலில்கூட தர்மத்தை விடாப்பிடியாக அவன் கடைப்பிடித்தான் மஹா பாரதத்திலோ இந்த நிலை சற்று மாறுகிறது.

 தர்மம் என்பதை நிலைநாட்டுவதற்கு நியாய வழியே சிறந்தது என்றாலும் பல நேரங்களில் அந்த வழி கடைப்பிடிப்பவர்களை தோல்வியின் பக்கம் தள்ளி விடுகிறது. இதனால் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக முரண்பாடான வகைகளையும் கையாளலாம் என்ற கருத்து மஹாபாரதத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. பாரதப்போரில் அதர்மத்திற்குத் துணையாக நின்றவர்கள் பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன் போன்ற அசாதாரண புருஷர்களே ஆகும். இவர்களை நேரான வழியில் வெல்வது என்பது மலடியின் மகன் கொம்பு உள்ள முயலை படிப்பதற்கு சமானமாகும். எனவே அத்தகைய வல்லமையாளர்களை ஒழித்துக்கட்ட சூழ்ச்சி முறைகளை கையாளுவது தவறல்ல என்பதும் அறநெறியிலிருந்து பிசகுவதால் ஏற்படும் பாவம் இக்காரணத்தை முன்னிட்டு நம்மைத் தாக்கினாலும் தவறல்ல என்பதே ஸ்ரீகிருஷ்ணனின் கோட்பாடாகும். இத்தகைய நடைமுறைக்கு சாத்தியமான ஏராளமான கருத்துக்கள் பாரதக்கதையில் சொல்லப்பட்டு இருக்கிறது. 


  இக்கதைக்கு இன்னும் ஓர் சிறப்பும் உண்டு ராமாயணத்தை பொருத்தவரையில் அதன் யுத்தகாலத்திலே நல்லவர்களையும் கெட்டவர்களையும் மிக சில பாகமாகப்பார்த்து தெரிந்துகொள்ளலாம். ராவணனின் மிக நெருங்கிய நண்பனாக இருந்த வாலி மரணநேரத்தில் மனம் திருத்தி ராமனின் நல்லியல்பை அறிந்து தனது மகனையும் தம்பியையும் ராமசேவையில் துணைநிற்கச் செய்கிறான் ராவணனின் உடன்பிறந்த சகோதரனான விபீஷணன் தமயனின் அதர்மமான செயலை ஏற்றுக்கொள்ள முடியாமல் ராமன்பக்கம் வந்துவிடுகிறான்

 மஹாபாரதத்திலோ நிலமை தலைகீழாக இருக்கிறது அதர்மவாதிகளான கௌரவர்களுக்குத் துணையாகக் கருதப்படும் கதாபாத்திரங்களின் மன இயல்பு விதவிதமான வகையில் அமைந்து உள்ளதைக் காணலாம். துரியோதனன் செய்வது முற்றிலும் தவறு என்று பீஷ்மருக்கும் துரோனர் மற்றும் கிருபருக்கும் நன்றாகத்தெரிந்து இருந்தும் பாண்டவர்களின் பக்கம் அவர்கள் வரவில்லை. பாண்டவர்களின் தாய்மாமனான சல்லியன் கூட சுயதர்ம சங்கடத்தில் துரியோதனன் பக்கமே நின்றான் இதையெல்லாம் விட வியப்பு பாண்டவர்களின் முழுமையான காப்பாளனாக இருந்த ஸ்ரீபரமாத்மா கிருஷ்ணன் கூட தனது படை உதவியை துரியோதனனுக்கே கொடுத்தான்.


   இத்தனை உயரிய பெரிய துணை இருந்தும் யுத்தத்தின் முடிவில் கௌரவர்கள் யாரும் உயிருடன் தப்பமுடியவில்லை. இந்த சம்பவங்கள் எல்லாம் மிக நுணுக்கமான தர்மங்களை நமக்கு கற்றுத்தருகிறது. பாரதம் என்பது பழைய பத்தாம் பசலிக்கதை அதை வேகமான கம்பியூட்டர் யுகத்தில் வாழ்க்கைக்குத் துணையாகக்கொள்ள முடியாது என்பவர்கள் ஒரே ஒருமுறையேனும் பாரதத்தை படிக்க வேண்டும். அப்படிப்படித்தால் அதன் கருத்தடியிலே மயங்கி உப்பு பொம்மையானது சமுத்திர உப்புகளோடு கரைந்து போவதுபோல் பாரதக் கருத்துகளில் கலந்து போவார்கள்.

கேள்வி: மஹாபாரத காலத்தில் குடி மக்களுடைய வாழ்க்கை முறையும் சமயம் மற்றும் பண்பாட்டு முறையும் எப்படி இருந்தது?

குருஜி:
   வியாச பாரதத்தை முழுமையாகப் படிக்கின்ற போது அக்கால மக்கள் பொருளாதார வசதியில் குறைந்தவர்களாக இல்லை என்பது நன்கு தெரிகிறது உள்நாட்டிற்குள் வேளான்மை சிறு தொழில்கள் என்று பல வகையில் ஈடுபட்டாலும் வெளிநாட்டு வாணிபமும் அவர்கள் செய்து நிறைவான பொருள் வளத்தைப் பெற்று இருந்தார்கள் அரசர்கள் தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் அக ஒழுக்கத்தை தவறவிட்டாலும் கூட பொதுமக்கள் அகத்திலும் புறத்திலும் ஒழுக்கமுடையவர்களாகவே இருந்தார்கள் என்பதை அறியமுடிகிறது. 


  வேதகால கடவுள்களே வழிபடும் மூர்த்திகளாக இருந்தாலும் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருந்ததாகத் தெரிகிறது அது மட்டுமல்ல. பிரம்மனின் மிக உயர்ந்த நிலை தாழ்த்தப்பட்டு ருத்திரனுக்கும், விஷ்ணுவிற்கும் அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இவர்களின் உருவங்கள் வழிபாட்டிற்கு வடிக்கப்பட்டன என்ற ஆதாரம் பாரதத்தில் கிடைத்தாலும் கூட அவர்களின் விக்ரகங்கள் ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. விக்ரக ஆராதனை வளர்ந்து இருந்தாலும் கூட வேதகால யாகச்சடங்குகள் செல்வாக்கு மிக்கதாகவே இருந்தது.

   இந்த இதிகாசத்தில் மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் பின்விளைவுகள் உண்டு என்ற உறுதியான நம்பிக்கை காட்டப்படுகிறது. இருப்பினும் ஊழ்வினை விதி என்பதை மக்கள் அதிகமாக நம்பினார்கள் தங்களது வாழ்க்கையின் போக்குகள் ஆயிரம்தான் முயற்சிகளை மேற்கொண்டாலும் இறைவன் வகுத்த விதியிலிருந்து ஜீவன்கள் தப்பமுடியாது என்பதும் கடவுளே மனித வடிவாக வந்தாலும் அவன் கூட தான் வகுத்த விதியை மீற முடியாது என்பதும் அக்கால சிந்தனையாக இருந்தது. ஆனால் மிகக்கடினமான விதியின் கோரப்பிடியிலிருந்து மனிதன் தப்பித்துக் கொள்வதற்கு முற்றிலுமான சரணாகதி சரியான மார்க்கம் என்று கருதப்பட்டது. ராமாயணத்தில் சரணாகதிதத்துவம் பேசப்பட்டாலும் வாழ்க்கை முறையோடு அதை நடைமுறைப்படுத்தும் உபாயங்கள் பாரதத்தில்தான் கூறப்பட்டு இருக்கிறது.

 மஹாபாரதத்தில் மிகமுக்கியமாக நிவிருத்தி, பிறவிருத்தி என்று இரண்டு கொள்கைகள், பிரதானமாகப் பேசப்படுகிறது. நிவிருத்தி என்றால் செயலின்மை என்பதும், பிறவிருத்தி என்றால் செயல் உடமை என்றும் அர்த்தமாகும் ஒரு மனிதன் தனது குடும்பத்தின் அனைத்து அங்கங்களுக்கும் சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் தான் செய்ய வேண்டிய கடமையிலிருந்து எப்போதுமே விலகக்கூடாது அப்படி விலகினால் அது தர்மத்தைக் கொல்லுவதற்கு சமமாகிவிடும் என்றும் கருதப்பட்டது. தனது கடமைகளை நிறைவேற்றாமல் சமாதி நிலைக்கு அதாவது இறைவனோடு கலக்கும் இறுதி நிலைக்கு செல்ல முயற்சிப்பது கூட தவறாகும் கடமையைத் தள்ளவிட்டு எதைச் செய்தாலும் அது அதர்மம் ஆகும் என்ற கருத்தும் மக்களிடம் இருந்தது.


  அதாவது துறவு பூண்டு ஆத்ம விடுதலைக்கு மனிதர்கள் முயற்சி செய்வது தவறல்ல அதே நேரம் தன்னை நம்பி இருப்பவர்களை முற்றிலுமாக கைவிட்டு விட்டு துறவு பூணுதல் என்பது முரணான செயலாகும் அப்படியே துறவு பூண்டாலும் காட்டிற்குள் மறைந்து கொண்டு தனது தவசக்தியை மக்களுக்கு பயன்படுத்தாமல் பதுக்கி வைத்துக்கொள்ளுவது பெரும் பாவமாகும் என்று பாரதம் கருதுகிறது. ராமாயணகாலத்தில் இருந்த துறவுநிலை பாரதகாலத்தில் கர்மயோகத்தோடு சம்பந்தப்படுத்தப்பட்டு மாறுபாடு அடைந்திருந்தது ஆயினும் பிறவியிலிருந்தும் கர்மத்திலிருந்தும் விடுதலைபெறுவதை பாரதம் தடுக்கவில்லை விடுதலைக்கான மார்க்கம் என்று பல வழிகள் பாரதத்தில் கூறப்பட்டு இருந்தாலும் இயமம், நியமம் என்னும் அஷ்டாங்கயோக பயிற்சியால் அத்வைத நிலையை அடைவதே சிறப்பு என்று கருதப்பட்டது. இதனால் அளவுக்கு அதிகமான சடங்கு முறைகள் மக்களிடத்தில் இல்லை அப்படியே அது நடந்தாலும் சமூக விழாவாக அரசியல் நோக்கமாக நடத்தப்பட்டது.

  மரணத்தின் பின்னனி பற்றி பல்வேறு கொள்கைகள் அக்காலத்தில் இருந்தாலும் ஒருவன் விரும்பினால் இனிவரும் பிறவிகளில் மட்டுமல்ல இந்தப்பிறவிலேயே முக்தி பெறலாம் என்ற பொதுக் கொள்கையும் நடைமுறையில் இருந்தது இப்படி முக்தி பெற்றதாகக் கருதப்படுபவர்கள் ஜீவன் முக்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் அழியக்கூடியவர்களாக அல்லாமல் என்றும் நிலைத்து இருப்பவர்களாக விளங்குவார்கள் என்றும் கருதப்பட்டது.

   உண்மையைக் கூறுவது என்றால் வேதநெறியை முதன்மைப்படுத்தும் வைதீகம் என்பது மகாபாரதக்காலத்தில் தன்னை மாற்றி அமைத்துக்கொள்ள முயற்சிகள் தொடங்கியது என்றே சொல்லாம். புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் அவ்வப்போது எழுந்த வழக்கங்களுக்கு தகுந்தவாறும் கொள்கைகளையும், சடங்குகளையும் உடன்படுத்திக் கொண்டாலும் ருத்திரனான சிவன், விஷ்ணுவாகிய நாராயணன், கிருஷ்ண வாசுதேவன் ஆகியவர்களை சூழ்ந்து உறுதிமிக்க உணர்ச்சிப்பூர்வமான அன்பு நிலை என்ற சிந்தனை துளிர்விட ஆரம்பித்தது. 


  பழைய வழக்கத்திலிருந்த சடங்கு முறைகளை தெய்வ உணர்வோடு வேறுபடுத்தி நடைமுறைக்கு கொண்டு வந்தனர் இது சில சமயம் உபநிஷதங்களை சார்ந்தது போலவும் வேறுசமயங்களில் சாராதது போலவும் நமக்குத் தெரிகிறது. ஆயினும் சடங்குகளில் மூழ்கிக் கிடந்த வைதீகம் தன்னை மெய்ப்பொருளியலோடு முழுமையாக சம்பந்தப்படுத்திக் கொண்டது என்றும் கூறலாம்.

  மஹாபாரதத்தில் மிகமுக்கியமான வேறு ஒரு கொள்கை நமக்கு காட்டப்படுகிறது தனது மாயாசக்தியால் உலகம் போன்று தோன்றிக்கொண்டு இருக்கும் பிரம்மமானது உயிர்களிடத்தில் காட்டுகின்ற பெருங்கருணையால் தனது உயர்ந்த நிலையிலிருந்து பெரிய செயல்களுக்காக முக்கியமான காலத்தில் தோற்றமும் மறைவும் இல்லாத கடவுள் மனித சரீரம் எடுத்து பூமியில் அவதாரம் செய்கிறான் என்று கூறுகிறது.

 இந்த அவதார நிலையில் தன்னை பரம்பொருளானது பலநேரங்களில் முழுமைப் பெற்ற பரமாத்மாவாக கருதாமலும் அதே நேரம் அந்நிலையிலிருந்து மாறாமலும் செயல்படுகிறது. தான் எடுத்த சரீரத்திற்கான அவஸ்தைகளை கர்மாக்களை அனுபவிப்பது போல் காட்டிக்கொண்டாலும் உண்மையில் அது பந்தப்பட்டு மயக்க நிலையில் இருப்பது இல்லை என்றும் சொல்கிறது.

  இந்தக் கருத்தை அத்வைதத்தோடும், விசிஷ்டாத்வைதத்தோடும், துவைதத்தோடும் இணைத்துப் பார்க்கும்போது அந்தந்த கொள்கையின் உண்மை இயல்புகளை நாம் எளிதாகப்புரிந்து கொள்ளமுடிகிறது. மேலும் மஹாபாரதத்தில் ஏராளமான தத்துவ சிந்தனைகள் ஆன்மீக நெறிகள் அரசியல் கோட்பாடுகள் ஆகிய அனைத்தும் மிகத்தெளிவாக எல்லோரும் அறிந்துகொள்ளும் வண்ணம் உண்மை ஒளிவு மறைவின்றி எளிமையாகச்சொல்லப்பட்டு உள்ளது அதை மிகச்சாதாரண அறிவுடையவர்கூட புரிந்துகொள்வான் என்பதாலும் அவ்விஷயங்கள் நேரடியாக அறியும்போதே அறிவுத் தெளிவு என்பது ஏற்படும் என்பதாலும் நாம் இவ்வரிய இதிகாச சிந்தனைகளை இத்துடன் நிறுத்திவிட்டு புராணங்களில் உள்ள தத்துவக் கோட்பாடுகளை சிந்திப்போம் அதற்காக பிறகு சந்திப்போம்.

     மேலும் மஹாபாரத ஆய்வை படிக்க



Contact Form

Name

Email *

Message *