Store
  Store
  Store
  Store
  Store
  Store

என் அப்பா பெண்ணோடு ஓடிவிட்டார்

    ந்தச் சம்பவம் நடந்து பத்து வருடங்கள் இருக்கும்.  அப்பொழுதெல்லாம் இரயில் நிலைய வேப்பமரத்தடியில் மாலைக்காற்று வாங்குவது என் வழக்கம்.  அன்றும் தூரத்தில் தெரிகின்ற மரம், செடி, கொடிகளையும் நிழலாகத் தெரியும் திருவண்ணாமலையின் அருணகிரியையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஆறரை மணி இரயில் வந்து நின்றது.  பயணிகள் இறங்குவதும், ஏறுவதும் நடந்து கொண்டிருந்த போது அந்தப் பையனைப் பிடி அந்த பையனைப் பிடி என்று யாரோ கூவ நான்கைந்து பேர் திபுதிபுவென ஒரு சிறுவனைத் துரத்திப் பிடித்தனர்.  இரயில் புறப்பட்டுச் சென்றது.  பிடிப்பட்ட பையன் மட்டும் இரயில் நிலைய சிப்பந்திகளிடம் கைகால்களை உயர்த்தி ஏதோ ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தான்.  அவன் என்ன பேசுகிறான் என்று சரிவர எனது காதில் விழவில்லை.


   அவன் என்ன பேசுகிறான் என்று தெரிந்து கொள்ளவும் அவனை ஏன் பிடித்தார்கள் என அறிந்து கொள்ளவும் அவா என் உள்ளத்தில் எழுந்த போது இரயில் சிப்பந்திகளே அவனை என்னிடம் அழைத்து வந்தார்கள்.  இவன் இந்தியில் பேசுவது எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்றார்கள்.  முதலில் இவனை ஏன் பிடித்தீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன். பயணி ஒருவன் கைப்பையைத் திருட முற்பட்டதாகவும் அப்போது அவர் கத்தியதாகவும் கூறினார்கள்.

  அருகிலிருந்த எனது செயலாளர் இந்தியில் அவனிடம் உரையாட ஆரம்பித்தார்.  தான்  கொச்சியை சேர்ந்தவன் என்றும் தனக்கு அம்மா இல்லையென்றும் தனது தகப்பனார் வேறொரு பெண்ணோடு ஓடிவிட்டதாகவும் தனது பாட்டியிடம் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி வந்து விட்டதாகவும் கூறினான்.  அவன் பெயரில் எனக்கு இரக்கம் தோன்றியது.  அவனை நமது ஆசிரமத்தில் வைத்து பராமரிக்கலாம் என்று எண்ணம் உற்பத்தியானதால் தமபி நீ என்னோடு வருகிறாயா உனக்கு சாப்பாடு, படிப்பு எல்லாம் நான் தருகிறேன் என்று தமிழில் கேட்டேன்.

 இந்த கேள்விக்கு அவனிடமிருந்து வந்த பதிலும் அவன் செயலும் என் உட்பட அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.  இல்லை நான் படிக்க முடியாது என்று தமிழில் உரக்க கூறியவன் தன் தவறை உணர்ந்து மீண்டும் இந்தியில் படபடவென பேச ஆரம்பித்தான்.


 அதன் பின் இரயில்வே ஊழியர்கள் தங்களுக்கே உரியபாணியில் அவனை விசாரித்து அவன் கொச்சி இல்லை விழுப்புரம் என்றும் பயிற்றுவிக்கப்பட்ட இளம் திருடன் என்றும் எக்கு தப்பாக அகப்பட்டு கொண்டவன் என்ற விவரத்தை வெளிக்கொண்டு வந்தார்கள். 

 எனக்கு அந்த சிறுவனை பார்த்தபோது பெரும் வியப்பும், அதே நேரம் அவனை திருடனாக உருவாக்கியவர்கள் மீது அளவிடமுடியாத கோபமும் இருந்தாலும் பத்து, பன்னிரெண்டு வயதிலேயே தான் மாட்டிக் கொண்டாலும் சடாரென்று நிலைமையை மாற்றி சகஜமாக உரையாடிய அறிவுத்திறனும் பாராட்டுதலுக்கு உரியதாகவே தோன்றியது.  அவனது இந்த திறமை ஒழுக்கத்தின் அடிப்படையிலேயும், கூர்மையான அறிவு வளர்ச்சி அடைப்படையிலும் அமைந்திருந்தால் அவனும் அவனால் இந்த சமூகமும் நல்ல பயன் அடையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

 இப்படி எத்தனையோ சின்னஞ் சிறுவர்கள் இந்த நாடு முழுவதும் பரந்து விரிந்துகிடக்கிறார்கள் என்பதை எண்ணும் போது நமது இதயம் வலிக்கத்தான் செய்கிறது.  இப்படி இளம் பிள்ளைகள் குற்றவாளிகளாக உருவாவது எதனால்?  என்ன காரணத்தினால்?  அவர்கள் இதற்கென்றே படைக்கப்படுகிறார்களா அல்லது குடும்ப பாரம்பரியமா அல்லது வளரும் சூழலா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.


   விதி, படைப்பு, இவையெல்லாம் பெரிய விஷயங்கள் அவைகளைப் பற்றி இங்கு நாம் சிந்திக்க வேண்டியது இல்லை.  குடும்பத்தின் மரபு.  சூழ்நிலைகளின் தாக்கம் இவைகளை பற்றி மட்டுமே இந்த விஷயத்திற்கு சிந்தித்தால் போதுமானது என்று நான் கருதுகிறேன்.

 ஒரு தனி மனித சிந்தனையை அவனது வாழ்க்கையின் பரிமாணத்தை மரபும் குடும்ப இயல்பும் எவ்வாறு தாக்குகிறது எவ்வாறு அவனை உருவாக்குகிறது என்பதை விஞ்ஞான ரீதியில் அலசி ஆராயவேண்டும்.  காரணம் என்னவென்றால் மனிதனது வளர்ச்சிக்கும் அவற்றிலிருந்து எழும் நடத்தைக்கும் காரணமாக இருப்பது மரபுதான் என்று ஒரு சாராரும் இல்லையில்லை குசூழ்நிலைதான் என்று வேறொரு சாராரும் சற்றேறக்குறைய 200 வருடங்களாக வாதப்பிரதிவாதங்கள் செய்து சண்டையிட்டு முட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.  இவர்களின் சண்டை இன்றுவரை ஒரு முடிவுக்கு வந்த பாடு இல்லை…  ரோஜா செடியிலிருந்து தாமரை பூவை பெறமுடியுமா தவளை முட்டையிலிருந்து இராஜ நாக குஞ்சு வருமா தாயை போல தான் பிள்ளை.  நூலைப்போலத்தான் சேலை என்று மரபுநிலைவாதிகள் வாதிடுகிறார்கள்.

 தாயைப்போலத்தான் பிள்ளை என்றால் மேதைகளின் பிள்ளை ஏன் மேதைகளாக இல்லாமல் பேதைகளாக இருக்கிறார்கள்.  தற்குறிகளின் பிள்ளைகள் கூட சரித்திரத்தையே மாற்றி அமைக்கும் சாதனையாளர்களாக உருவாகி இருக்கிறார்களே அது  எப்படி?  ஒரு சாதாரண தச்சு தொழிலாளிக்கு பிறந்த ஏசு கிறிஸ்து எப்படி மகா ஞானியாக அவதார புருஷனாக மாறமுடிந்தது?  லவுகீக வாழ்க்கையில் மூழ்கி கிடந்த விசுவநாத தத்தரின் மகன் நரேந்திரன் விவேகானந்தராக மாறியது எப்படி?  சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆதிசங்கரர் இவர்களின் பெற்றோர்கள் என்ன மகா மேதைகளா?  மகா ஞானிகளா?  இல்லையே மிக சாதாரணமானவர்கள் தானே?  ஒருவனை:  மேதையாக்குவதும் பேதையாக்குவதும் பிறப்பின் அடிப்படையோ மரபின் அடிப்படையிலோ அல்ல அவனை சுற்றி இருக்கும் சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களுமே ஆகும் என்கிறார்கள் சூழ்நிலை வாதிகள்.  இவர்கள் இருவர் கூற்றிலும் எது  உண்மை? எது பொய்?  எதை எடுத்துக் கொள்வது?  எதை விட்டு வடுவது?  என்று குழப்பம் வருவது இயற்கை.  இத்தகைய குழப்பத்தில் தான் பல சிக்கல்கள் உருவாகிறது சமூகத்தில் இந்த குழப்பத்தை போக்க நாம் சற்று ஆழமாக சிந்தித்தாலே போதும் விடிவு ஏற்பட்டுவிடும்.


  இத்தகைய சிறுவர்கள் சிலரிடம் நெருக்கமாக பேசி அவர்களின் குண இயல்புகளை ஆராய்நது பார்க்க நான் முற்பட்டு இருக்கிறேன்.  அவர்களிடமிருந்து எனக்கு கிடைத்த பல விஷயங்கள் என்னை அதிர்ச்சி அடைய செய்து இருக்கின்றன.  அவர்கள் தாங்கள் செய்கின்ற அனைத்து  செயல்களுமே நியாயமானது என்றும் கவுரவம் மிக்கது என்றும் கருதுகிறார்கள்.  மேலும் தங்களை தவிர அனைவருமே கீழ்த்தர மானவர்கள் என்றும் வாழத்தகுதி அற்றவர்கள் என்றும் கருதுகிறார்கள்.

 இந்த எண்ணம் போராட்டம் மிகுந்த அவர்களின் ஆரம்ப வாழ்க்கையும் சமூகம் அவர்களை புறக்கணித்ததால் ஏற்பட்ட ஒருவித வஞ்சனையாலும் உருவாகி அவர்கள் ஆழ்மனதில் நிரந்தரமாகவே பதிந்து உள்ளது.  இந்த பதிவுகளை அகற்றுவது மிக கடினமான காரியமென்றால் சாத்யமில்லாத விஷயம் இல்லை.  இவர்கள் நல்ல கல்வித் தகுதியும், திட்டமிட்ட பயிற்சி அளிக்கப்பட்ட சாதாரண குழந்தைகளை விட பல மடங்கு அறிவு முதிர்ச்சியும் அனுபவ தேர்ச்சியும் பெற்றவர்களாகவே இருக்கிறார்கள்.  தங்களது தேவைக்கு எதையெதையெலாம் கற்றுக்கொள்ள வேண்டுமோ அத்தனையையும் சுலபமாகவும் விரைவாகவும் கற்கும் திறன் இயற்கையிலேயே இவர்களிடம் அதிகமாக உள்ளது.

 மேற்போக்காக இவர்களது நடவடிக்கையை பார்த்தால் முன்யோசனை இல்லாதவர்களாகவும் நன்மை தீமைகளை பகுத்தாயத் தெரியாதவர்கள் போலவும் தோன்றும்.  ஆனால் உண்மை நிலை அதுவல்ல.  தங்களது செயல்களால் எத்தகைய கஷ்டங்களும் அவமானங்களும் ஏற்பட்டாலோ அதை எல்லாம் இவர்கள் ஒரு பொருட்டென கருதுவதே இல்லை.



  சமூக தீங்குகளை ஒழிப்பதற்கே தாங்கள் பிறந்துள்ளதாக கருதி சமூகத்திற்கு எதிரான குற்றங்கள் புரிவது தங்களது பிறப்புமை என்பது போல நடந்து கொள்வார்கள்.

  வாலிப வயதை அடைந்த பிறகும் வாழ்க்கையை நிரந்தரப் படுத்திக்கொள்ள ஆயத்தமாக மாட்டார்கள்.  குறிக்கோள் அற்ற வாழ்க்கையே இவர்களது இயல்பாக இருந்தாலும் தங்களது சுய சந்தோஷத்தையே பிரதானபடுத்தி அனைத்து காரியங்களையும் செய்வார்கள்.

 ஊர் ஊராக நாடு நாடாக சுற்றித்திவதில் பெருத்த ஈடுபாடு உடைவர்களாக இருப்பார்கள்.  தவறான காம இச்சையும் பால் உணர்வு சார்ந்த வாழ்க்கையில் முறையற்ற நெறி முறையும் இவர்களிடம் இருப்பதனால் திருமணம், குழந்தைப் பேறு, குடும்பம் என்பவைகளை ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே கருதி நடப்பார்கள்.  இத்தகையவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எத்தகையவர்களாக இருப்பார்கள் என்பதை சொல்ல வேண்டியது இல்லை.

 கவர்ச்சிகரமான அறிவும் பேச்சாற்றலும் நிரம்பிய இவர்கள் மற்றவர்களை ஏமாற்றுவதில் நிபுணத்துவம் பெற்று இருப்பதை நாம் நன்கு அறியலாம் தவறான வழியில் பொருளை சேர்த்து சமூக கேடுகள் புரியும் பல தாதாக்கள் ஆரம்ப காலகட்டத்தில் இளங்குற்றவாளிகளாகவே இருந்து இருக்கிறார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.


  இன்று சர்வதேச ரீதியில் பெரும் கேடிகளாவும், மாஃபியா கும்பல்களின் சூத்ரதாரிகளாக இருப்பவர்களில் பலரின் ஆரம்ப கால வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தோமென்றால் இவர்கள் இளம் வயதில் பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்களாகவோ அல்லது குற்றவாளி பெற்றோர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்களாகவோ தான் இருப்பார்கள்.

  உலகம் முழுவதிலும் நடக்கும் பொய், களவு, கொலை, விபச்சாரம் முதலிய குற்றங்களுக்கு இத்தகைய இளம் சிறுவர்கள் ஆணி வேராக இருந்து நடத்தி வருகிறார்கள் இவர்களை இளமையிலேயே சரியான ரீதியில் கண்டறிந்து நல்ல ஒழுக்கங்களையும் கல்வியையும் கொடுத்தோம் என்றால் குற்றமற்ற சமுதாயம் உருவாகுவதில் எந்த சிக்கலும் இருக்காது.

 அரசும், காவல் துறையும் இத்தகைய இளம் குற்றவாளிகளை உலகம் முழுவதும் கவனித்தே வருகிறார்கள் ஆனாலும் இவர்களது எண்ணிக்கையை கட்டுபடுத்த எந்த அரசாங்கத்தாலும் காவல் துறையாலும் இன்று வரை முடியவில்லை.

 இதற்கு என்ன காரணம்?  தண்டனை கொடுத்தால் மட்டுமே போதும் குற்றவாளிகள் திருந்தி விடுவார்கள் என்ற பத்தாம் பசிளித்தனமே காரணம் என்று சொல்லலாம்.  தண்டனை ஒரு மனிதனை திருத்திவிடுமென்றால் இன்று பல சிறைச்சாலைகள் காலியாகவே இருக்கும்.  நிலைமை அப்படி இல்லை.  இதை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை அரசாங்கமும் பல்துறை அறிஞர்களும் முறைப்படி சிந்தித்து சரியான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்.


 முரட்டுத்தனமான குழந்தைகளை வன்முறையின் மூலம் திருத்த எத்தனிப்பதை முதலில் கைவிட வேண்டும்.  தொடர்ச்சியான அன்பாலும் அணுசரனையாலும் அவர்களை மென்மையானவர்களாக மாற்ற வேண்டும்.  இது ஒன்றும் கடினமான விஷயம் இல்லை.  பெற்றோர்கள் முதலில் தங்களுக்குள் இருக்கின்ற கருத்து வேற்றுமைகளை மூட்டைகட்டி பரண்மீது போட்டுவிட்டு முரட்டுக் குழந்தைகள் மீது முழுகவனம் செலுத்த வேண்டும்.  அப்படி செலுத்தினால் எத்தகைய குழந்தையும் பஞ்சுபோன்று மென்மை ஆகிவிடுவார்கள்.  படிப்பதில் அவர்களுக்கு ஆர்வமில்லை என்றால் படிக்க சொல்லி வற்புறுத்துவதை விட்டு விட்டு குழந்தைகள் விரும்பும் தொழிலை அல்லது கலையை கற்பிக்க முற்படலாம்.  இது நல்ல விளைவை ஏற்படுத்தும்.

 எத்தகைய வன்கொடுமை மிகுந்த மனிதனையும் யோகாசனம், தியானம் முதலிய பயிற்சிகள் சாதுவான பசுவாக்கி விடுவதை நான்பார்த்திருக்கிறேன்.  குழந்தைகளுக்கு யோகா பயிற்சிகளையும் தொடர்ந்து கொடுத்து வருவோம் என்றால் இளம் குற்றவாளிகள் என்ற ஒரு வர்க்கமே இருக்காது.


Contact Form

Name

Email *

Message *