Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுளும் யானை மாதிரி தான்


   போற்றுதலுக்குறிய ஆழ்வார்களும் நாயன்மார்களும் கருணையே வடிவான எம்பெருமானை எண்குணத்தான் என்று அழைக்கிறார்கள் எல்லையில்லாத கடவுளை எட்டுக்குணத்துடன் வர்ணனை செய்வது அழகாக இருக்கலாம் ஆனால் தத்துவத்திற்கு பொருந்தி வருமா? வரம்பற்ற கடவுளை வரம்புக்குள் அடக்குவது எந்த வகையில் சரி? என்று நமக்குத் தோன்றும் ஆனால் அவர்கள் அப்படி அழைப்பதற்கு காரணம் உண்டு அதை இப்போது சிந்திப்போம்

  •       மனிதனை கடவுளிடம் இருந்து பிரிப்பது பாசம் என்ற பற்று ஆகும்.  அதனால் தான் ஸ்ரீ கிருஷ்ணரும், புத்தரும் ஆசைகளை அறுக்க சொன்னார்கள்.  மனிதனுக்குத் தான் இந்த பற்று பாசம் என்ற அழுக்குகள் உண்டே தவிர கடவுளுக்கு அழுக்குகளே கிடையாது.  அதாவது இயற்கையாகவே கடவுள் பாசங்களை நீக்கி இருப்பது அவன் முதலாவது இயல்பு.


  •       தொலைக்காட்சியில் படங்களை பார்க்க வேண்டும் என்றால் நல்ல ஆண்டனா தேவை.  கைப்பேசியில் தடையில்லாமல் பேச வேண்டும் என்றால் சிக்கல் இல்லாத சிக்னல் தேவை.  அதைபோல கடவுளை மனிதன் நெருங்க வேண்டும் என்றால் நல்ல உணர்வு தேவை.  தெய்வீகமான உணர்வே கடவுளை நமக்கு காட்டவல்லது.  காரணம் கடவுளும் உணர்வு மயமானவர்.  இது அவன் இரண்டாவது இயல்பு.

  •       சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் தன்வயமாக கொள்வதற்கு மிகச்சிறந்த ஆற்றல் தேவை.  அந்த ஆற்றல் நிரம்பி வழிந்தவனாக நிற்பது தான் இறைவனின் மூன்றாவது இயல்பு.

  •       எல்லா உயிர்களின் உடம்பும் நீராடவில்லை என்றால் நாற்றம் அடிக்கும்.  தூய பச்சை காய்கறிகளை மட்டுமே ஒரு மனிதன் ஆறுமாத காலம் தொடர்ந்து உண்டு வந்தால் அவனது வியர்வை நாறாது.  அவனை கொசுவும் கடிக்காது.  இது நடைமுறை அறிவியல், சாத்விகமான உணவே சரீரத்தை தூய்மை படுத்தும் என்றால் சாத்வீகமான எண்ணம் மனித வாழ்வை எவ்வளவு தூய்மையாக்கும்.  சாத்வீகமான எண்ணங்களில் வடிவமாக இருப்பவன் தான் கடவுள்.  அதனால் தூய உடம்பினனாக இருப்பது கடவுளின் நான்காவது இயல்பு.
  •       கொலைக்காரணனையும் மன்னிக்கும் இயல்பு சிறந்த மனிதனுக்கு உண்டு.  கொலைச் செய்யப்பட வேண்டியவனையே மன்னிப்பது என்பது தெய்வ இயல்பாகும்.  கடவுள் நாம் அன்றாடம் செய்யும் சிறுபிள்ளைத்தனமான தப்பு தவறுகளை, மஹா கேடு விளைவிக்கும் மாபெரும் குற்றங்களையும் நற்காரியங்களையும் தியாகங்களையும் கண்காணித்து தட்டி கொடுத்தும் சில நேரத்தில் பலமாக தலையில் கொட்டியும் கண்டித்து ஒழுங்குப்படுத்தி பேரருள் புரிகிறார்.  இந்த பேரருள் தன்மையே அவரின் ஐந்தாவது இயல்பாகும்.
  •        சிங்கத்தால் தனக்கு வரும் அபாயத்தை யானைக் குட்டி உணர்வது கிடையாது.  தனது அளவேயிருக்கும் சகத்தோழன் என்றே சிங்கத்தை கருதி அதன் அருகில் சென்று விளையாட எத்தனிக்கும்.  தாய் யானை தனது பிள்ளையின் இந்த செயலை எச்சரிக்கும், தூர தள்ளிவிடும்.  சட்டை செய்யாத குட்டி யானை சேட்டையை தொடருமானால் தனது வலிமையான தும்பிக்கையால் குட்டியை பிடித்து இழுத்து தனது வயிற்றுக்கடியில் கொண்டு வந்து விடும்.  கடவுளும் தாய் யானை மாதிரி தான்.  நமது ஆட்டம், பாட்டத்தையெல்லாம் பொறுமையாக பார்த்து கொண்டிருப்பார்.  நாம் எல்லை மீறி நடக்கும் போது தனது முழு ஆற்றலை பயன்படுத்தி நம்மை பூஜ்ஜியமாக்கி விடுவார்.  முடிவில் தனது ஆற்றலை வெளிக்காட்டுவது தான் அவரின் ஆறாவது இயல்பு.

  •       அழகான ஒரு பெண்ணை ஒரு பையன் காதலிக்கிறான்.  அவள் வீட்டு வாசலில் கோலம் போடும் போதும், தண்ணீர் தூக்கும் போதும், அவளையே வட்டமிடுகிறான்.  தினசரி மாலை கோயிலுக்கு வருபவள் ஐந்து நாட்களாக வரவில்லை.  அவளை எங்கும் காண முடியவில்லை.  பையன் நிலை என்னவாகும்.  உணவு செல்லாது, உறக்கம் கொள்ளாது, தவியாய் தவிப்பான்.  தனது சோகத்தை இன்னது என வெளிக்காட்ட முடியாமல் தனக்குள்ளயே துடிப்பான்.

        இது வாலிப பருவத்தின் அறியாத நிலை.  பெரியவர்களுக்கு இந்த தவிப்பும், துடிப்பும் என்னவென்று தெரியும்.  இது அறிந்த நிலை.  காதல் நோயின் வேதனை இது என முற்றிலும் நாம் உணர்வோம்.  இப்படி நம் வாழ்க்கையின் எல்லா ரகசியங்களையும் நாம் உணர்ந்து விட்டால் நம்மிடம் வேகம் இருக்காது.  விவேகம் இருக்கும்.

         முற்றும் உணர்ந்த ஞானிகள் சதா ஆனத்தில் திளைப்பதன் ரகசியம் இதுதான் உலகையும், நம்மையும் படைத்தவன் இறைவன்.  எல்லா ஜீவன்களின் வாழ்க்கை இது தான் என தீர்மானிக்கும் கதாசிரியன் அவன்.  கதாசிரியன் உணராத கதாப்பாத்திரம் எது?  இப்படி முற்றும் உணர்ந்த நிலையே இறைவனின் ஏழாவது இயல்பு ஆகும்.

  •       ஒரு நதியின் தொடக்கமும் முடிவும் நமக்குத் தெரியும்.  நாட்டு எல்லையும் இது தான் என்று  நமக்கு தெரியும்.  வானத்துக்கு கூட எல்லை உண்டு.  வரம்பு உண்டு.  இறைவன் கருணைக்கும் ஆற்றலுக்கும் எல்லை என்பதே இல்லை.  ஒரு குழந்தையின் சிரிப்பும் முதுமையின் சிரிப்பும் எப்படி எல்லையில்லாத அழகோ அதே போன்ற வரம்பற்ற சக்தி என்பது தான் இறைவனின் எட்டாவது இயல்பாகும்.  

    இந்த இயல்புகள் எல்லாம் இறைவனிடம் இருப்பதை நேருக்கு நேராக உணர்ந்தவர்கள் நமது ஞானிகளும் அருளாளர்களும்.  அதனால் தான் அவனை எண் குணத்தான் என அழைத்தார்கள்.  நமக்கும் அடையாளம் வைத்து சொன்னார்கள்.


     மேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


Contact Form

Name

Email *

Message *