Store
  Store
  Store
  Store
  Store
  Store

அவதாரம் எடுக்கவேண்டிய அவசியம் என்ன?

கேள்வி:  ண்ணபெருமானின் திவ்விய சரித்திரத்தை தத்துவ நோக்கில் சொல்ல முடியுமா?

குருஜி : எல்லாப் புராணங்களும் இறை சக்தியை பலவாறு மேன்மைப்படுத்தி மனிதனுக்கு அப்பாற்பட்டதாக மனிதனால் நெருங்க முடியாததாகக் காட்டுகிறது.

ஆனால் பாகவதமோ இறைவன் மனித சக்திக்கு அப்பாற்பட்டவன் என்றாலும் மனிதனால் நெருங்கமுடியாதவன் அல்ல. நீ ஒரு அடி இறைவனை நோக்கி எடுத்து வைத்தால் அவன் 10 அடி உன்னை நோக்கி இறங்கி வருவான். தோன்றாத் துணையாக உனக்கு தோளோடு தோள்நிற்பான்

 நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய் நம் அருகில் வந்து நம்மோடு கூடிக்களிப்பான் குதூகலிப்பான் என்றெல்லாம் கூறி கடவுளை நமக்குச் சொந்தக்காரனாக்குகிறது.


மேலும் பாகவதம் எல்லாவித உபநிஷதங்களுக்கும் சமமானது என்று கருதப்படுகிறது. அதாவது மகாபாரதத்தை எழுதிய வியாசரே பாகவதத்தையும் எழுதியுள்ளார் என்பதனால் மகாபாரதம் வேதங்களில் உள்ள கருத்துக்களை பேசுகிறது என்றும் வேதத்தின் அந்தமான உபநிஷத கருத்துக்களை பாகவதம் பேசுகிறது என்றும் சிலர் கருதுகிறார்கள்.

 இருப்பினும் இதை முழுமையாக ஒத்துக்கொள்ளாத சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் மகாபாரதத்தில் வியாசரால் தர்மத்தை பேச முடிந்த அளவிற்கு இறைவனின்  கல்யாண குணங்களை லீலாவினோதங்களை பேச முடியவில்லை ஆகவேதான் இறைவனான கிருஷ்ண பரமாத்மாவின் திருவிளையாடல்களை விரிவாக கூறுவதற்காகவே பாகவதத்தை வியாசர் எழுதியதாகச் சொல்கிறார்கள்.

எது எப்படியோ ஆழமாகச் சிந்திப்பதற்கு பாரதமும் ஆனந்த சாகரத்தில் மூழ்குவதற்கு பாகவதமும் நமக்கு கிடைத்திருப்பதை எண்ணி சந்தோஷப்பட வேண்டும்.


கேள்வி:    இறைவனின் திருவிளையாடல்களை கூறுவதற்காக பாகவதம் எழுதப்பட்டது என்றால் அதில் சிந்தனையைத் தூண்டும் தத்துவங்கள் எந்த வகையில் இருக்கிறது?

குருஜி:    இந்திய தத்துவ ஞானத்தின் சிறப்பான அம்சமே அதனுடைய மாறுபட்ட தன்மையில்தான் இருக்கிறது. பாரசீகர்கள் தொடங்கி அரிஸ்டாட்டில் வரையிலான அறிஞர்களை நீ புரிந்து கொண்டிருப்பாய் அவர்கள் அனைவருமே மனிதனைப் பற்றியும் அவனின் புறச்சூழல்கள் பற்றியும் அந்த புறச்சூழலை துணையாகக் கொண்டு மனித சமுதாயத்தை எந்த வகையில் முன்னேற்றலாம் என்பதைப் பற்றியும் தான் கூறியிருப்பதைப் பார்க்கலாம்.

ஆனால் இந்திய ஞானிகள் மனிதனை வேறுவிதமாக பார்த்தார்கள். ஒவ்வொரு மனிதனின் நிஜமான நோக்கம் இன்பத்தை அடைய முயற்சிப்பதுதான் என்பதை ஆழமாக உணர்ந்து கொண்டு அவன் எதைப்பற்றி அறிந்து கொண்டால் நிலையான இன்பம் எது நிலையற்ற இன்பம் எது என்பதை புரிந்து கொண்டு நிலையான இன்பத்திலேயே தங்கிவிட முயற்சிப்பான் 


அந்த முயற்சியால் சமூகம், அரசியல், அறிவுத்துறை அனைத்திலேயுமே ஆக்கப்பூர்வமான செயல்கள் மட்டும்தான் நடக்குமென்று நம்பினார்கள் அதற்காகத்தான் பிரம்மத்தைப் பற்றியும், ஆத்மாவைப் பற்றியும் இடையறாது பேசினார்கள் பேசியதை வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டினார்கள் எனவேதான் இறைவனைப் பற்றி அவர்கள் பேசும் போதெல்லாம் நமக்காக தத்துவ சிந்தனைகள் அவர்களிடமிருந்து தானாக வெளிப்பட்டது.
  
 தத்துவங்களை தருகின்ற எந்த இலக்கியத்திற்கும் பாகவதம் குறைந்தது அல்ல. எல்லாம் கடந்த நிலையில் குணங்களற்ற தன்மையில் இருக்கும்பொழுது கடவுள் பிரம்மம் என்று கருதப்படுகிறார். அவரே யாவற்றையும் தோற்றுவித்து ஆட்டுவித்து அழிக்கும் பொழுது பரமாத்மா என்று  அழைக்கப்படுகிறார்

 எல்லையற்ற புகழோடும் ஆற்றலோடும் மனித உருவெடுத்து அவதாரம் செய்யும்போது பகவான் என்று கருதப்படுகிறார். இப்படிக் கடவுளின் நிலையை பரப்பிரம்மம், பரமாத்மா, பகவான் என்று மூன்று விதத்தில் பிரித்துக் காட்டும் பாகவதம் அத்வைதம் ஆகிய ஒருமைக் கொள்கையையும் பன்மை எனப்படும் விஸிஷ்டாத்வைத கொள்கையையும் துவைதமான இருமைக்கொள்கைகளையும் முறைப்படுத்தி அனைத்து வழிகளும் சமமானவைகளே என்று நமக்குக்காட்டுகிறது.

   பகவானின் தோற்றத்தில் தாமே வரையறை செய்து கொள்ளத்தக்க தாமே உணர வல்ல எல்லா மனிதர்களும் சமமுடையவர்களே. இம்மனிதர்களின் கனிவான அன்பிற்கும் மனம் ஒருமைபெற்ற வழிபாட்டிற்கும் காதல் முற்றி பக்தியாக ததும்பும் உயர் உணர்வுக்கும் போற்றுதல்களுக்கும் பகவான் என்ற முறையில் கடவுள் மட்டுமே சொந்தமாகிறார்.

 அவரின் பல்வேறு முறைகளில் வெளிப்படக்கூடிய சக்திகளைப் பெருமைப்படுத்திப் பாடுவதில் பாகவதர்கள் என்ற பக்தி திருக்கூட்டத்திற்கு எப்போதுமே அலாதியான ஆனந்தம் உண்டு. பிரபஞ்சத் தொகுதியின் இசைவிலிருந்தும் கணிக்க முடியாத சிக்கல்களின் கலப்பிலிருந்தும் மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாத அவரின் அறிவின் பெருமை ஆற்றலாக வெளிப்படுகிறது.

கடவுளின் அன்பு, அருள், அழகு, இனிமை முதலிய மேன்மையுடைய ஆன்மீக குணங்கள் அவருடைய உயர்ந்த அளவிடமுடியாத அழகிய தோற்றத்திலிருந்து வெளிப்படுகின்றது.


விஷ்ணு புராணத்தைப்போல பாகவத புராணமும் பிரகிருதியிலிருந்து பிரபஞ்சம் தோன்றி பின்பு பிரகிருதியிலேயே ஒடுங்குவதாகவும் பகவானே எல்லா வேறுபாடுகளுக்கும் முதல் காரணமாகவும் நிமித்த காரணமாகவும் இருப்பதாகக்கூறுகிறது. இது சாங்கிய கொள்கை என்ற தத்துவ பிரிவோடு ஒத்துப்போகிறது.

அதே நேரம் சாங்கியத்தைவிட ஒரு படி அதிகமாக உயர்ந்து சாங்கிய தத்துவத்தை உருவாக்கிய கபிலர் என்ற மகாபுருஷரே பகவானின் பல அவதாரங்களில் ஒன்று எனக் கருதுகிறது. இது மட்டுமல்ல மாயை என்பது பரமாத்மாவினுடைய தன்மையாக இருப்பதனால் சைவர்கள் குறிப்பிடும் சக்தி கொள்கைகளையும் பாகவதம்  தனதாக்கிக் கொள்கிறது.

 காணமுடியாத விவரிக்க முடியாத ஒப்பற்ற மாயையை ஆற்றலுக்கு கீழ்பட்டதும் அந்த ஆற்றலால் செயலாற்றும் வடிவங்களும் ஒன்றுதான் என்ற கர்மயோகத்தையும் பாகவதம் நமக்குக்காட்டுகிறது.
  
பாகவதத்தில் இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளும் தனிச்சிறப்பை நினைவு படுத்திக் கொள்ளவேண்டும். வேதாந்தத்தின் மாயைக் கொள்கைகளையும், சாங்கியத்தின் பிரகிருதி கருத்துக்களையும், சைவத்தின் சக்தி தத்துவத்தையும் மீமாம்சர்களுடைய தர்ம சித்தாந்தத்தையும் மற்றும் பல உயரிய சிந்தனை முறைகளையும் பகவானின் தெய்வ லீலைகள் என்னும் புராணக் கொள்கைகளாக மாற்றி தன்னுடைய சிறப்பு அம்சங்களாக பாகவதம் வெளிப்படுத்துகிறது.


பகவானின் லீலை என்ற கருத்து பாகவதம் முழுவதும் விரிவாகப் பேசப்படுகிறது. பலவிதமான மேற்கொள்களுடன் விளக்கப்படுகிறது. மேலும் லீலைக் கொள்கையானது உலக அமைப்பில் நாம் காணுகின்ற ஒழுங்கு என்ற அமைப்பில் இணைத்து மனித கருத்துகளில் முக்கியமான ஒரு மாற்றத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

 உலகத்தின் சமச்சீரான ஒழுங்கு முறைப்பட்ட இயக்கம் என்பது உணர்வற்ற மூல ஆற்றலின் வளர்ச்சியால் ஏற்பட்டது அல்ல மாயையால் உருவான பொய்த்தோற்றமும் அல்ல. தனிப்பட்ட ஒருவனது தனி நோக்கால் அல்லது இச்சையால் அல்லது இச்சையற்ற நிலையால் ஏற்பட்டதும் அல்ல. தனி ஆத்மாக்களின் செயல் விளைவுகளான தர்மாக்களும் அல்ல பகவானுக்கும் இந்த உலகிற்கும் ஏற்பட்டு இருக்கின்ற காரணகாரியம் லீலைகளாலேயே உருவானது ஆகும்.
  
 லீலை என்பது மறைவான காரணத்தாலோ கட்டாயத்தாலோ அதன் தூய்மை கெடாமல் நிகழ்கின்றபொழுது அதுவே உள்ளுக்குள் எழும் இன்பம், அழகு, நிறை ஆகிய அனைத்தின் வெளித்தோற்றமாகவும் தெரிகிறது. லீலை என்றும் திருவிளையாடல் என்றும் அழைக்கப்படும் பரமாத்மாவின் செயலானது நம்மை அவன் தன்னருகே அழைத்துக் கொள்ளும் வழியாகவும் அமைகிறது. அதே நேரம் கால எல்லைகளை கடந்து நிலைத்து நிற்கும் பரமாத்மாவின் இன்ப நுகர்வின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.



   லீலை என்ற நோக்கத்தின் அனைத்து இயல்புகளையும் கிரஹித்துக்கொள்ளும் தன்மை நமக்கு இருக்குமானால் காணுதற்குரிய பிரபஞ்சத்தை அதன் வெவ்வெறு வேற்றுமைகளோடு உணர்ந்து கொள்ள முயற்சித்தோமானால் அது அழகிய சிறந்த கலையாக நமக்குத்தெரிகிறது.

 மேலும் தெய்வ இயற்கையின் இன்பம், பெருமை, குறைவில்லாத அழகு ஆகியவற்றைப் புரிந்து கொண்டதாகவும் அமைகிறது. அறிவு, நன்மை, அழகு, பேரின்பம், அனைத்தும் உண்மையாக இருப்பது போலவே பிரம்மமும் உண்மையாக இருக்கிறது என்பது உபநிஷத வாக்கியமாகும்.

ஆதலினால் இந்த உலகத்திலுள்ள ஒவ்வொன்றும் உண்மையானது இனிமையானது. கட்டுப்பாடில்லாத ஆற்றலுக்கு எல்லையில்லாத ஒரு காரணத்தின் காரியமாக இது அமைகிறது. எல்லையற்றதாகவும் எங்கும் உள்ளதாகவும் உடைய அந்த ஆதிகாரணம் எல்லைக்குட்பட்டதாகவும் நிலையற்றதாகவும் வரம்புக்குக்கட்டுப்பட்ட ஆற்றலாகவும் விளையாடுகிறது.


நம்முடைய பக்குவமில்லாத மனதாலும் முழுமை இல்லாத அறிவாலும் பரம்பொருளின் விளையாட்டாக அமையும் கலைத் தன்மைகளை சரிவர புரிந்து கொள்ளாமல் பற்றுக்கு இடம் கொடுத்து தீய இயல்புகள் போட்டி பொறாமைகள் பகைத்தல் ஆகிய சிக்கலுக்குள் மாட்டித் தவிக்கிறோம்.

 அதே நேரம் நன்மையானது எப்படி இறைத்தன்மையின் வெளிப்பாடாக அமைகிறதோ அதே போன்றே தீமைகளும் இறைவனால் நமக்கு வைக்கப்பட்ட பரிட்சைகள் என உணர்ந்து நடந்து கொள்ளும் பொழுது திருவிளையாடலின் சத்தியத்தை உணர்ந்தவர்களாகிறோம்.

அறிவாற்றல் பெற்ற ஒருவன் யாவற்றையும் தெய்வ லீலை என்ற நிலையிலிருந்து உணர்ந்தால்   உலக நிகழ்வுகள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. அதே நேரம் அவைகளை விட்டுவிட்டு ஓடவேண்டிய அவசியமும் இல்லை.
 
 இவ்வாறு மாறுதல் கொண்ட எல்லைக்குட்பட்ட ஒன்றொடொன்று தொடர்புடைய தன்மையுள் தலைசிறந்த பரமாத்மா இறங்கி வருகிறது என்ற கருத்து அந்த பரமாத்மாவே பிரபஞ்ச அமைப்பிற்கு காரணம் பிரபஞ்சமே அந்த ஆத்மா இந்த பிரபஞ்சத்தில் காணும் எல்லா வேற்றுமைகளுக்கும் காரணமாக இருப்பது அந்த ஆத்மாவே என்னும் கொள்கை வலுவடைய பாகவதம் துணை செய்தது.


உபநிஷத ஞானிகளின் ஆத்ம நுகர்வாலும் மற்ற எல்லாக்காலத்திலும் வாழ்ந்த துறவிப் பெருமக்கள் அனைவரின் ஆத்ம அனுபவத்தாலும் பாகவதம் இதை விளக்கி நமக்குக்காட்டுகிறது. கடவுளின் முதல் அவதாரம் புருஷன் என்ற முடிவாகும். பிரபஞ்சத்தின் உயிராகவும், உலகம் முழுவதுமுள்ள ஜீவன்களின் உள்சக்தியாகவும் பரமாத்மா தோற்றமளிக்கிறது.

 அதாவது புருஷ அவதாரம் என்பது நாராயணன் என்பதாகும் என்று பாகவதம் கூறுகிறது. நாராயணன் என்பது நரர்களின் அதாவது மனிதர்களின் உயிருக்கு ஆதாரம் என்றும் எல்லைக்குட்பட்ட பொருட்கள் அனைத்திற்கும் உள் உயிர் என்றும் பிரபஞ்சத்தினுடைய ஜீவன் என்றும் படைப்பில் முழுமுதற் தொகுதிகள் அனைத்திற்கும் இயங்கு சக்தி என்றும் கருதப்படுகிறது.

அதே நேரம் நாராயணன் என்பதே ஒரு பொழுதும் குறைவடையாத விதை என்றும் பல வடிவம் கொண்ட அவதாரங்களின் புகலிடம் என்றும் கருதப்படுகிறது. இதை ஒட்டுமொத்தமாக  பார்ப்பது என்றால் பல்வகை ஒழுங்கு பெற்ற உயிர் வகைகளெல்லாம் தலைசிறந்த பரமாத்மாவின் அவதாரங்களே என்ற கருத்தை உறுதியாகக் கொள்ளலாம்.


முழுமுதற் பொருளான பரமாத்மாவின் வசமிருந்து வெளிப்படும் மாயை அதன் தொடர்புடைய பல்வேறு ஒழுங்கு முறைகளில் தானாகவேத்தோன்றி பல தோற்றங்களாக வெளிப்படுகிறது. ஒவ்வொரு உலக பொருட்களிலும் ஆத்மாவின் ஆன்மீக குணம் மறைந்துள்ளது.

 அது உயிருள்ள பொருட்களின் தன்மைக்கேற்றவாறு சிறிதளவிலோ, பெரியளவிலோ தன்னை ஒரளவு வெளிப்படுத்திக் கொண்டேயும் இருக்கிறது. பரமாத்மாவின் இத்தகைய குணவெளிப்பாடு உயிர்களின் சிறந்த உயிரான மனிதனிடமிருந்து மிக அதிகமாக வெளிப்படுகிறது.

 மனிதர்களிடத்தில் அடிப்படையாகவுள்ள எண்ணங்கள் உணர்ச்சிகள் மூலமாக இதை அறிந்து கொள்ளலாம். இதனால்தான் பாகவதம் தெய்வ உலகத்தில் வாழும் தெய்வத்தன்மை பெற்றவர்களின் வாழ்வைவிட தேவதைகளின் சிறப்புகளை விட மனித வாழ்வு மிகச் சிறந்தது எனக்கருதுகிறது.


சிறந்த இறையடியார்கள், அறிவாளிகள், புகழ்பெற்றவர்கள், மனிதனது சமூக பணியை மேற்கொண்டோர்கள் முதலியோர்களின் தனிச்சிறப்புடைய வாழ்க்கை மனித இனத்தின் மற்ற இடங்களில் காண்பதைவிட தெய்வத் தன்மைகள் அதிகமாக தெளிவாக மிளிர்கிறது என்று கூறும் பாகவதம் அதுதான் பரமாத்மாவின் விபூதிகள் அல்லது தனிப்பட்ட பெருமைகள் என்று சுட்டிக்காட்டுகிறது.

 பல நேரங்களில் மனித சமூகத்திற்கு ஏற்படும் இடர்களைக் களைந்திட பரமாத்மாவானது தனது சக்திகளின் பிரதிபலிப்பாக அவதாரங்களை நிகழ்த்தி அரும்பெரும் காரியங்களைச்செய்து முடிப்பதாகவும் பாகவதம் கூறுகிறது.

கேள்வி:    நினைத்ததை நினைத்த நேரத்தில் முடிக்கவல்ல பரமாத்மா இடர்ப்பாடுகளை களைவதற்கு நினைத்தாலே போதுமே அவதாரம் எடுக்கவேண்டிய அவசியம் என்ன? எல்லாமே பரமாத்மாவின் திருவிளையாடல்கள் எனும்போது உலகத்திற்கு வரும் இடர்ப்பாடுகளும் அவனால் உருவாக்கப்பட்டதுதானே. தானே உருவாக்கித் தானே அழிக்கவேண்டிய நிலையை பரமாத்மா ஏன் மேற்கொள்கிறது?


குருஜி:    இதற்கு பாகவதம் ஒரு விதமான பதிலைத் தருகிறது. பகவானின் விளையாட்டு இவையெல்லாம் எப்பொழும் இன்ப நிலையிலேயே இருக்கும் பரமாத்மா தன்னுடைய தனிப்பட்ட தடையற்ற வெளிப்பாடாக இடையூறுகளையும் அவைகளை நீக்குவதையும் லீலையாகச் செய்கிறார். அவருடைய விளையாட்டில் காணும் தோற்றங்களை வழிபாட்டு உணர்வோடும் அன்போடும் சிந்தித்து ஆராய்ச்சி செய்தால் அதன் உள்ளர்த்தம் புரியும் என்கிறார்.

   பாகவதத்தின் முக்கியப் பகுதியாக ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் வாழ்க்கை கூறப்படுகிறது. இந்த பகுதிக்கு இணையான அழகுடைய பகுதிகளைக் கொண்ட இலக்கியம் உலகத்தில் வேறு எங்கேயும் இல்லையென்று அடித்துச் சொல்லலாம்.

பாலைவனத்தில் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்ற மனிதன் ஒரு குடம் நிறைய நீர் கிடைத்தால் எப்படிச் சந்தோஷப்படுவானோ ஆகாயக்கப்பலில் பயணம் செய்து அயல்கிரகத்தில் மாட்டிக் கொண்ட விண்வெளி வீரன் தன்னை மீட்க பூமியிலிருந்து வேறு கலம் வந்தால் எப்படி போன உயிர் திரும்ப வந்ததுபோல் இன்பம் அடைவானோ அதே போன்றே வாழ்க்கையில் ஏற்படும் சோதனைச் சூறாவளியில் சிக்கித் தவித்து சின்னாபின்னப்பட்டு கிடக்கும் மனித மனங்கள் கிருஷ்ணனின் திவ்யமான சரித்திரத்தைப் படித்தால் ஆனந்தம் அடையும் ஆறுதல் பெறும்.


    பாகவதம் கிருஷ்ணனைப் பற்றிக் கூறும்பொழுது அவனை அளவில்லாத ஆளுமைக் கொண்ட தெய்வமாகக் கூறவில்லை. அவனது விளையாட்டுடன் கூடிய உலக வாழ்வை குறிப்பிட்டு தெய்வத் தன்மை என்பது மனிதத் தன்மையில் எவ்வாறு அழகுடன் தனிப்பட்ட ரீதியில் பரிமளித்து தன்னை அடையாளம் காட்டுமென்று மிக நேர்த்தியோடு கூறப்பட்டுள்ளது.

 பச்சிளம் சிசுவாக, தளிர் நடைபோடும் குழந்தையாக, சிறுவனாக, இளைஞனாக, மகனாக, விளையாட்டுத் தோழனாக, உணர்ச்சியைத் தூண்டும் காதலனாக, போர்வீரனாக, தீமையை அடக்கும் கதாநாயகனாக, தெய்வங்களுக்கு கீழ்ப்படிபவனாக, சமுதாயத்தையும், சமயத்தையும் சீர்திருத்துபவனாக மற்றும் பல நிலைகளில் நடு நாயகமாக அரசியல் நிபுணனாக கிருஷ்ணனை  பாகவதம் பன்முகப்படுத்தி பல்வேறு கோணத்தில்  நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அவைகளை ஒருங்கிணைந்துப் பார்க்கின்ற பொழுது இறைவன் என்பவன் பிரபஞ்ச இயல்பிலும் அதைக்கடந்த இயல்பிலும் எப்படி இருப்பான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.


    பூதகியின் முலைக்காம்பில் வாய் வைத்து அவளின் உயிரை உறிஞ்சுவதும், பவள வாய்க்குள் பார் முழுவதையும் காட்டுவதையும், காளிங்கனின் தலையின் மீது நர்த்தனம் புரிவதையும், கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்து நின்றதையும், ஆயர் குழந்தைகளை சாம்பலாக்க வந்த காட்டுத் தீயை விழுங்கியதையும் இன்னும் பல ஸ்ரீ கிருஷ்ணனின் அதீத ஆற்றல்களையும் பட்டியலிட்டு காட்டுகின்ற பாகவதம் இந்த தோற்றங்களெல்லாம் மனித இயல்பு கடந்த இறைவனின் இனிய திருவிளையாடல்கன் என கூறுகிறது.
 
  அதே நேரம் பிருந்தாவனத்திலுள்ள ஆயர்கள் அனைவரிடத்திலும் மாயக் கண்ணன்  காட்டிய அன்பும் குறும்புகளும் அவர் எல்லாம் கடந்த கடவுள் என்றாலும் எல்லைகளுக்கு உட்பட்ட மனிதனானவும் இருப்பதை நமக்கு காட்டுகிறது. மாயங்கள் நிறைந்த மாதவன் அருகில் இருந்தும் ஆயர்கள் அவனின் மாயத்தை அறியவில்லை.

 அன்பின் சிகரத்தில் ஏற்றிவைத்து ஸ்ரீ கிருஷ்ணனை தங்கள் வீட்டு செல்லக்குழந்தையாகப் பார்த்தார்களே தவிர இறைவனின் அவதாரமாக பார்க்கவில்லை. ஒரு வேளை அவர்கள் பாவங்களை தீர்க்கும் கோவிந்தனை பரம்பொருளாக பார்த்திருந்தால் சுயநல கலப்பில்லாத தூய பக்தியானது அவர்களிடம் இல்லாது போயிருக்கும். அதனால்தான் பாகவதத்தின் நாயகனான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் நிஷ்காமிய கர்மமே தன்னை அடையும் வழியென்று ஆணித்தரமாகக்கூறுகிறார்.



 பரம்பொருளாகவும், பரமாத்மாவாகவும், பகவானாகவும் இருக்கின்ற ஸ்ரீமன் நாராயணன் எப்படியெல்லாம் குறியீடுகளை காட்டி தம்மை உணர்ந்துகொள்ள நமக்கு வழிவகை செய்கிறார் என்பதை விஷ்ணு புராணத்தில் பராசரரும், பாகவதத்தில் பராசரரின் மகனான வியாசரும் மிக அற்புதமாக நமக்கு கூறியிருக்கிறார்கள்.

இந்த புராணங்களைப் படித்தால் சொர்க்கம் கிடைக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக மன அமைதி கிடைக்கும். எனவே புராணங்கள் என்பது அறிவு வளத்தையும் ஆன்ம பலத்தையும் தரும் என்பதில் ஐயமில்லை. நாம் அதை எப்படிப் பார்க்கிறோம் என்பதுதான் முக்கியமாகும்.


                                             
 பேட்டி Dr.VV.சந்தானம்



 

Contact Form

Name

Email *

Message *