Store
  Store
  Store
  Store
  Store
  Store

இப்போது இறந்து இனியும் பிறப்பதா?


சில நாட்களுக்கு முன்னர் ஒரு அன்பரிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது

அதில் மனிதருக்கு பிறவிகள் பல என்று சொல்லப்படுகிறதே

குறிப்பாக ஏழு பிறவிகள் என்று சொல்கிறார்களே அது உண்மையா அதை விளக்க முடியுமா என வினவியிருந்தார்

மழை வருகிறது.  வானத்திலிருந்து தாரை தாரையாக தண்ணீர் கொட்டுகிறது.  பூமியில் வந்து விழுகின்ற மழைத்துளி இதற்கு முன்பு மழைத்துளியாக வந்ததேயில்லை.  இப்பொழுது தான் புதியதாக விழுகிறது என்று சொல்ல முடியுமா?


  மழைத்துளியாக விழுந்து வெள்ளமாக பெருகி நதியில் கலந்து கடலில் சங்கமித்து ஆவியாகி மீண்டும் மழைத்துளியாக தான் பூமியில் விழுகிறது.

  ஆத்மாவின் பிறப்பும் அப்படித்தான்.  நன்றாக படிக்காத பிள்ளையை ஒரே வகுப்பில் படிப்பு வரும் வரை உட்கார வைப்பது ஏன்? 

படிப்பில் பரிபூரண நிலையை அடைய வேண்டும் என்பதற்காக தான்.

  ஆத்மாவும் எண்ணங்களால் பரிபூரண நிலையை அடையும் வரை மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது.

 நமது சாஸ்திரங்கள் ஆத்மா பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை.  எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கிறது என்று சொல்கிறது.


  நிலையாக இருந்து கொண்டேயிருக்கும் ஒரு வஸ்து ஒரே ஒரு பிறப்போடு அழிந்து போகும் என்பது நடைமுறைக்கு உதவாதது ஆகும்.

 ஒரு உயிர் பிறக்கிறது பல பாவ புண்ணியங்களை செய்கிறது.

 இறந்த பிறகு பாவங்களுக்காக நரகத்தையோ, புண்ணியங்களுக்காக சொர்க்கத்தையோ அடைந்து விடுகிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

  அதை ஏற்றுக் கொண்டால் ஆத்மா நிரந்தரமாக நரகத்திலோ சொர்க்கத்திலோ தங்கி விடும் என்பதை ஏற்பதாகும்.

அப்படி தங்கி விட்டால் நிரந்தர நரகவாசிகளுக்கு பாவ மன்னிப்பே கிடையாது என்ற நிலை வரும். 


 பிறகு கடவுள் மன்னிக்கும் தன்மையே இல்லாத கொடியவர் ஆகிவிடுவார்.

 அதன் பிறகு கடவுள் கருணையானவர் என்ற பெயரில் என்ன அர்த்தம் இருக்கிறது?

  நாம் நம்புகிறமோ இல்லையோ பிறப்பு, இறப்பு என்ற சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது.

 ஒரு ஜீவன் கடவுளிடம் ஐக்கியமாகும் வரை பிறந்து கொண்டேயிருக்கிறது.

  இந்த உண்மை சாத்தியமானது.  இதை நிரூபிக்க வேண்டிய சாட்சி ஆதாரங்கள் ஊர் அறிய விளக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

நமது வாழ்க்கை அனுபவத்தில் நன்றாகவே உணர்ந்து கொள்ளலாம்.

இனி ஏழு பிறவிகளைப் பற்றிய விளக்கத்தைக் காணலாம்


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்...



என்று சிவபுராணம் ஜீவனின் பிறவிகளைப்பற்றிய விளக்கங்களை கவிநயத்துடன் தருகிறது

இதிலுள்ள பிறவித்தன்மையை சாதாரணமாக எண்ணினாலே பத்துக்கு மேலே வருகிறது

அப்படி என்றால் ஏழ்பிறப்பு என்பதின் தத்துவம் என்ன?

மேலோட்டமாக சிந்தித்தாலே உண்மை நிலையை உணர்ந்துக் கொள்ளலாம்

ஏழு பிறப்பு என்பது ஜீவன் ஏழு முறை பிறப்பதை குறிப்பதல்ல

உயிரின் ஏழுவகையான படித்தரம் என்பதை அறியலாம்

அதாவது ஒருபிறவியில் கஞ்சனாக கருமியாக ஈகைக் குணமே இல்லாத லோபியாக இருப்பவன்

அடுத்துவரும் பிறவிகளில் அதற்கான கர்மப்பலனை அனுபவிக்க மீண்டும் மீண்டும் பிறவியெடுத்து கடைசியில்

தன்னிடமுள்ளதை யெல்லாம் வாரிக்கொடுக்கும் வள்ளல் என்ற நிலைக்கு வந்தப்பின்

கடவுளை அடையும் முயற்சியை எடுத்து முத்திப் பெற வேண்டும் என்பதாகும்

இவைதான் இந்துமத சாஸ்திரங்கள் சொல்லும் விளக்கமாகும்





Contact Form

Name

Email *

Message *