Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆணாதிக்கம் ஒழியவே ஒழியாதா?


    நிர்மலாவுக்கு ஆண்களை கண்டாலே பிடிப்பதில்லை, என்ன ஜென்மம் இந்த ஆண் ஜென்மம் நான் தான் பெரியவன், எனக்கு நீ அடங்கி போக வேண்டும், அடங்க மறுத்தால் வன்முறை படுத்தியாவது அடங்க வைப்பேன் என்று ஆணவத்தில் நடைபோடுவது ஒரு மனித பிறப்பா? எப்ப பார் இவள் பொட்டச்சி தானே இவளால் என்ன ஆகப்போகிறது என்ற மிதப்பு. அவள் பார்த்த எல்லா ஆண்களுமே ஏறக்குறைய அப்படி தான் இருக்கிறார்கள்.

 அவளுக்கு அப்போது ஐந்தோ, ஆறோ வயது தான் இருக்கும். ஆனால் இன்றும் வேதனையாக அந்த நினைவு மனதில் பதிந்துவிட்டது. குடித்துவிட்டு சிவப்பேறிய கண்கள், வியற்வை பொங்கிவழியும் அருவருப்பான முகம் குழறும் வார்த்தையோடு அம்மாவை பார்த்து பொட்டைசிறுக்கிய பெத்து வச்சிருக்க நீ இத கொண்டு எங்கியாவது தல முழுகிட்டு வா, இல்லானா உன்னையும், இவளையும் சேர்த்தே சமாதி கட்டிபுடுவேன் என்று கோபமாக தகப்பன் என்ற குடிகாரன் இவளை கீழே தள்ளிவிட்டதும் விவரமே அறியாமல் மிரண்டு போய் கத்தியபோது தனது அழக்கு கால்களால் மிதித்ததையும் மறக்கவே முடியாது.


    இப்படி ஒரு முறையல்ல பல முறை அவள் மிதிப்பட்டு இருக்கிறாள். அதன் பிறகு அவளால் தகப்பனை ஒரு மிருகமாகத்தான் பார்க்க முடிந்ததே தவிர மனிதனாக சிந்திக்கவே முடியவில்லை. அப்போதே அவள் யோசிப்பாள், இங்கேயிருந்து ஓடிப்போய்விடலாமா எங்காவது கண்காணாத இடத்திற்கு போய்விட்டாலாவது இந்த சித்ரவதையிலிருந்து தப்பிக்கலாம். ஒரு நாளாவது அடிதடி சண்டையில்லாமல் அமைதியாக வாழ மாட்டோமா என ஆசைப்படுவதுண்டு. ஆனால் எங்கே போவது எப்படி போவது என்பது அவளுக்கு தெரியாது. அப்படியே போய்விட்டாலும் அம்மாவை போல் அரவணைத்து சோறு போடுவதற்கு யார் கிடைப்பார்கள். என்று எண்ணி பார்க்கும் போது ஓடி போவதற்கு பயமாக இருக்கும்.

   ஒரு நாள் ராத்திரி நன்றாக தூங்கி கொண்டிருந்தாள் நிர்மலா, அம்மாவின் அழுகை சத்தம் வெளிவாசலில் இருந்து வேகமாக கேட்கவும் திடுக்கிட்டு கண்விழித்தாள். முழுபோதையில் இருந்த அப்பா இனிமேல் உன்னோடு நான் வாழ முடியாது. பெத்ததையும் பொட்டையா பெத்துட்ட இனி பெற முடியாம கட்டுபாடும் பண்ணிட்ட, எனக்கு ஆம்புள புள்ள இல்லாமல் முடியாது. நீ போய்டு நான் வேறு எவளையாவது கட்டிகிட்டு வாழப்போறேன், என்று பல கெட்ட வார்த்தைகளை நடுநடுவே பேசி தள்ளாடி கொண்டு நின்றான்.


பெத்த ஒரு புள்ளைக்கே சோறு போட வக்கில்ல உனக்கு இன்னொரு புள்ள ஒரு கேடா? என்று அம்மா அழுகையிணுடே சொல்லவும் செய்தாள். குடிகாரனுக்கு நியாயம் தெரியுமா? அநியாயம் புரியுமா? அம்மாவின் உச்சி முடியை பிடித்து மாரி மாரி கன்னத்தில் அறைந்தான். வலி பொறுக்க முடியாமல் அம்மா துடிப்பது நன்றாக தெரிந்தது. ஆனால் அவன் விடுவதாக தெரியவில்லை. வார்த்தைகளில் அசிங்கமும் அடிப்பதில் ஆக்ரோஷமும் அதிகரிக்கதான் செய்தது. பொறுக்க முடியாத அம்மா திமிறி கொண்டு அவனை பிடித்து கீழே தள்ளினாள். இதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் அலைகடலென ஆர்பரிக்க அவன் இடுப்பின் மீதே மாரி மாரி உதைத்தாள். அப்பா அதை எதிர்பார்க்கவில்லை, அடி கொடுத்து பழக்கப்பட்டவன் அடிவாங்கியவுடன் அரண்டு போய்விட்டான். அய்யோ என்னை விட்டுவிடு, கொண்று விடாதே என கத்தவும் செய்தான்.

                 இது என் வீடு நீ கட்டுகின்ற வேஷ்டி, குடிக்கின்ற சாராயம், திண்ணும் சோறு என் சம்பாத்தியம், புருஷன் என்ற மரியாதை உனக்கு இனியில்லை. போ எங்கியாவது போ, எவளோடு வேண்டும் என்றாலும் குடித்தனம் நடத்து. இனி இந்த வாசலை மிதித்தால் நான் கொலைகாரியாவேன். என சேலையை வரிந்து கட்டிக்கொண்டு நிமிர்ந்து நின்ற மனைவியை பார்த்தவுடன் அவன் உடம்பு நடுங்கியது. வாய்க்கு வந்த வார்த்தைகளால் திட்டியபடி வெளியே போனான்.


   அதன் பிறகு அவனை வீட்டில் நிர்மலா பார்க்கவே இல்லை. இவள் பள்ளி கூடம் போயிருக்கும் போது ஒன்றிரண்டு முறை வீட்டிற்கு வந்திருக்கிறான். அம்மாவின் முரட்டுதனம் அதிகரிக்கவே தெருவில் உள்ளவர்களிடம் பஞ்சாயத்தும் வைத்திருக்கிறான். யாரும் அவனுக்கு சாதகமாக இல்லையென்பது தெரிந்தவுடன் அப்படி வருவதையும் நிறுத்திகொண்டான். அதன் பிறகு வெளியூர் போனவன் இன்று வரை வரவே இல்லை, இருக்கானா, செத்தானா என்பதும் யாருக்கும் தெரியாது. அம்மாவும் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

 அப்பா ஓடிப்போன பிறகு அம்மாவின் ஆற்றல் முழுமையாக வெளிப்பட்டது எனலாம். கரடு முரடான கரிசல் பூமியை பண்படுத்தி கடினமாக உழைத்தாள். இதில் அதிசயம் ஊரே வாய்பிளந்து ஆச்சரியத்தில் முழ்கி போனது எதனால் என்றால் தன்னந்தனி மனுஷியாக தான் மட்டுமே ஒரு முழு கிணற்றையும்  தோண்டி முடித்தது தான். அம்மா பட்ட பாட்டிற்கு பலன் நிறையவே இருந்தது. இந்த கரிசல் பூமியில் தண்ணீர் எட்டி பார்க்குமா? என்று எல்லோரும் சந்தேகபட்டதற்கு நடுவில் ஒரு ஊற்று கண்ணே திறந்து விட்டது. கம்மலையும் மூக்குத்தியையும் விற்று ஒரு மாடு வாங்கி ஏற்றங்கட்டி இரைக்க ஆரம்பித்துவிட்டாள்.

 வெண்டைகாய், மிளகாய் என காய்கறி பயிர் வாராவாரம் சந்தைக்கு போனது. முன்பெல்லாம் ஒரு பென்சில் வாங்கி தருவதற்கே வார கணக்காகும். ஏங்கி ஏங்கி அழுதால் தான் ஏதாவது கிடைக்கும். இப்போது நிலைமை அப்படியல்ல நிர்மலா கேட்காமலே எல்லாம் கிடைத்தது. அவள் ஏக்கத்தோடு பார்த்து மூச்சு விட்ட பொம்மைகள் கூட அம்மா வாங்கி கொடுத்தாள்.


    நாளுக்கு நாள் அம்மாவின் உழைப்பும் நிர்மலாவின் வயசும் ஏறி கொண்டே போனது. பத்தாம் வகுப்பிற்கு டியூஷன் சொல்லிகொடுக்க உள்ளூரில் யாருமில்லை, பக்கத்து ஊருக்கு சென்று தான் படிக்க வேண்டும். காலையும், மாலையும் நடந்தே போய்வர நிர்மலாவுக்கு கஷ்டமாக இருந்தது. இரவு உறக்கத்தில் கால்வலியால் முணங்கி இருக்கிறாள். பெற்ற மகளுக்காக கட்டியவனையே தூக்கி வீசிய அம்மாவிற்கு மகளின் வேதனை தெரியாதா என்ன? கோயில் தர்ம கர்த்தா வீட்டில் துருபிடித்து கிடந்த பழைய சைக்கிளை வாங்கி சரி செய்து மகள் கொடுத்து கம்பிரமாக சைக்கிள் மிதிப்பதை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டாள்.

    அப்படி சைக்கிளில் போகும் போது தான் நடராஜனின் அறிமுகம் கிடைத்தது. அவனுக்கும் நிர்மலாவின் ஊரே தான் இது வரை அவன் பாட்டி வீட்டில் தங்கி படித்தானாம். பாட்டி செத்து போய்விட்டதினால் இங்கே வந்து விட்டான். நிர்மலாவை விட இரண்டு வயது பெரியவன் என்றாலும் அவனும் பத்தாம் வகுப்புதான் சுமாராகதான் படிப்பான். ஆனால் பார்பதற்கு கவர்ச்சியாக இருப்பான். ஒரு வேளை நிர்மலாவுக்கு மட்டும் தான் அப்படி தெரிந்தானோ என்னவோ, அவன் சிரிக்கும் போது வெள்ளை வெளேர் என்று தெரியும் பற்களும், ரோஜா நிற ஈறுகளும் அவளை கவர்ந்தன. சிரிக்க சிரிக்க பேசுவான், நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கலாம். அவனை பார்த்த நாளில் இருந்தே நிர்மலாவின் மனதிற்குள் இதுவரை தோன்றாத அவள் முன்பின் அனுபவ படாத விதவிதமான மத்தாப்புக்கள் வண்ண கோலமாக வெடித்து சிதறின.


   நடராஜனும் முதலில் சகஜமாகத் தான் பேசினான். நாள் செல்ல செல்ல ஏக்கத்தோடும் கண்களில் ஒரு வித மயக்கத்தோடும் அவளை பார்த்தான். முதலில் நேருக்கு நேராக பார்த்து பேசியவன் பிறகு அவள் பார்வை இவன் மீது படும் போதெல்லாம் தரையை பார்த்தான். இது தான் இளம்வயதில் காதல் அறும்புகின்ற விதம் என்று அவர்கள் இருவருக்குமே அப்போது தெரியாது. விஷயம் இருவருக்கும் புரிந்த பிறகு காதல் தேர் சிறகு முளைத்து பறக்கலாயிற்று. பள்ளியை முடித்து கல்லுரி படிப்பை நிறைவு செய்து வெளியில் வரும் வரை இருவரும் ஒன்றாகவே படித்தனர். அத்தனை வருட பழக்கம் நிர்மலாவுக்கு அவன் இல்லாத நாளை நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருக்கும், இருவரும் வரம்பு மீறவில்லையே  தவிர அவள் மனதிற்குள் அவன்தான் கணவன் என முடிவே செய்து விட்டாள்.

   சென்னையில் இருவருக்கும் வேலை கிடைத்தவுடன் நடராஜனிடம் திருமண பேச்சை ஆரம்பித்தாள் நிர்மலா, அப்போது தான் அவனது உண்மை இயல்பு வெளிபட ஆரம்பித்தது. அப்பா அம்மாவிடம் பேசுவதற்கு பயமாக இருக்கிறது என்றான். காலம் நேரம் பார்த்து மெதுவாக பேசுகிறேன் பொறுத்திரு என்றான். அவளும் நம்பிக்கையோடு காத்திருந்தாள். அம்மா ஒரு மாப்பிள்ளை பார்த்த போது தான் தைரியமாக தெரிவித்தாள். ஆனால் அம்மா ஏனோ இது சரிபட்டு வரும் என்று தெரியவில்லை எதற்கும் ஜாக்கிரதையாக இரு என மகளை எச்சரித்தார். அதையும் தாண்டி நிர்மலா நடராஜனை முழுவதுமாக நம்பினாள்.


ஆனால் ஒரு நாள் நடராஜனின் சுயரூபம் வெளிப்பட்டது. அவளை தனியாக சந்தித்து தயங்கி தயங்கி அந்த வெடிகுண்டை பற்ற வைத்தான். நிர்மலா என்னை தவறாக எடுக்காதே, என் அத்தை மகளை கட்டிகொள்ள சொல்லி அப்பா வற்புறுத்துகிறார். வீட்டோடு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. அப்பாவிடம் மறுத்து பேச எனக்கு தைரியம் வரவில்லை. என்னை மன்னித்துவிடு என்றான்.

 சுயநலமே வடிவெடுத்த ஒரு கோழையை இத்தைனை வருடம் காதலித்து ஏமாந்து போனது அவளுக்கு இப்போது புரிந்தது. காலையில் காதல், மாலையில் சந்திப்பு என உருவாகும் உறவுகள் தான் பாதியிலே முடிந்துவிடும். இது அப்படியல்ல நின்று நிதானித்து அவசரபடாமல் செய்த காதல், ஒரே வினாடியில் கண்ணாடி பாத்திரம் போல் சிதறிவிட்டது. சில நாள் பழக்கமென்றால் உடனே உதறி தள்ளிவிடலாம் இது பல வருட நேசம். அவ்வளவு சீக்கிரம் மனதை விட்டு எப்படி போகும்? வேதனையை தாங்கி கொள்ள நிர்மலா என்ன கற்சிலையா?

   குளத்து நீரில் அலை ஓய்ந்த பிறகு உருவத்தை தெளிவாக பார்க்கலாம். அதன் அடி ஆழத்தில் மேய்கின்ற சின்னசிறு மீன்களை கூட தெளிவாக காணலாம். அதே போல தான் சோகம் என்ற அலை ஓய்ந்த பிறகு சில நிதர்சனங்கள் அவளுக்கு விளங்க ஆரம்பித்தது. நான் தான் இவன் மீது பைத்தியகாரத்தனமாக காதல் கொண்டு இருக்கிறேன். அவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே அது இல்லை. அவன் என் மீது கொண்டதெல்லாம் வெறும் பருவ கவர்ச்சியே ஆகும்.


  உண்மையான அன்பு மட்டும் இருந்திருந்தால் எவ்வளவு பெரிய தடை வந்தாலும் அதை தகர்தெரியும் துணிச்சல் பிறந்திருக்கும். இவன் போலி அதனால் தான் நிஜத்தோடு மோதுகின்ற துணிச்சல் வரவில்லை. இவன் மட்டுமல்ல ஆண் இனமே பெண்ணை வஞ்சிப்பதற்கும் அடிமைபடுத்துவதற்கு மட்டும் தான் விரும்புகிறது. விம்பி நிற்கும் பெண்ணின் மார்பு அழகை ரசிக்க தெரிந்த ஆண்களின் கண்களுக்கு அதனுள் நிற்கும் இதயத்தை மட்டும் எப்போதுமே தெரியாது. அவனை பொறுத்த வரை பெண் என்பவள் காம பசியாற கிடைக்கும் மாமிச பண்டம் தான். ச்சே என்னவொரு குரூரம்

   குடித்துவிட்டு பெண்டாட்டியை அடித்த அப்பனுக்கும், குடிக்காமலே மனதை காயபடுத்திய இவனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, இவன் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆண் இனமே இப்படிதான் என்ற சிந்தனைகள் அவளுக்குள் உதயமானவுடன் உலகத்திலுள்ள ஆண்கள் அனைவரையுமே அழிக்க வேண்டுமென்ற வெறி பிறந்தது. சாலையில் நடக்கும் போது நழுவும் புடவையை வெறிக்கும் கண்களை, பேருந்தில் உரசும் சரிரத்தை, சற்று கலகலப்பாக பழகிவிட்டால் உடனே தனியாக கூப்பிடும் நாக்கை, தெரியாமல் கை பட்டுவிட்டால் கூட தடவி பார்க்கும் விரல்களை நெருப்பில் வைத்து பொசுக்க வேண்டுமென்று அவளுக்கு தோன்றியது.

           பெண்மையை கொத்தி திண்பதில் ஆண் கழுகுகளுக்கு அடங்காத ஆசை என்பது பாவம் எந்த பெண்களுக்கும் தெரியவில்லை. தான் நசுக்கப்பட்டாலும், மூச்சு திணற திணற அடிக்கப்பட்டாலும் ஆண்வர்க்கத்தை நாடி போவதை பெண்கள் விட போவதில்லை. நிர்மலாவுக்கு இந்த உண்மை தெளிவாக தெரிந்தது.


 அம்மா இவளுக்கு வரன் தேட ஆரம்பித்தாள் ஆண்பிள்ளை துணையில்லாமல் நான் ஒத்த மனுஷி வாழ்கையோடு தினம் தினம் செத்து பிழைத்தது போதாதா? வாயை கட்டி, வயித்த கட்டி போராடினது போதாதா? நீயுமா என் மாதிரி பாடாய்படனும், பேசாமல் பார்க்கின்ற பையனை கட்டிகிட்டு வாழப்பார் என்றாள் அம்மா.

 நிர்மலா மறுத்தாள் ஆண்கள் எல்லோருமே அயோக்கியர்கள் என பிடிவாதம் பிடித்து பார்த்தாள். ஆனால் அம்மா விடுவதாக இல்லை ஆரம்பத்தில் கெஞ்சினாள். பிறகு அழுதாள், கடைசியில் நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னா தூக்கில் தொங்குவேன் என மிரட்டினாள்.

 பிறந்தநாள் முதல் கொண்டு தனக்காகவே துக்கங்களை சுமந்து கொண்டு வாழ்ந்த தாயின் பிடிவாதமும், நெஞ்சுறுதியும் நிர்மலா அறியாதது அல்ல. கசாப்பு கடைக்கு போகும் வெள்ளாட்டு குட்டியை போல் வேறு வழியே இல்லாமல் திருமணத்திற்கு சம்மதித்தாள். சுபயோகம் கூடிய சுபதினத்தில் நிர்மலாவுக்கும், சந்தோஷ் குமாருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

     திருமணம் நடந்த புதிதில் எல்லோரையும் போல நிர்மலாவும் இயற்கையான உணர்வுகளுக்கு ஆட்பட்டு அமைதியாக இருந்தாள். சில காலத்தில் சந்தோஷ் இடம் சில குறைகள் இருப்பது அவள் கண்ணில் பட்டது. எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு முன்பு அவன் அம்மா அப்பாவிடம் கலந்து பேசினான். இவளிடமும் உன் கருத்து என்ன என்று கேட்டு அதன் பிறகே எதையும் செய்தான்.


  இது இவளுக்கு விசித்திரமாகபட்டது. எதையும் சுயமாக யோசித்து செய்ய மாட்டானா? அல்லது தெரியாதா? எதை எடுத்தாலும் மற்றவர்களிடம் கேட்டுதான் செய்ய வேண்டும் என்பது கோழைதனமல்லவா என்று தோன்றியது. இதை அவனிடமே நேரில் கேட்டும்விட்டாள், பலகீனமானவர்களும், குற்றவாளிகளும் அவர்கள் தவறை அவர்களிடமே சுட்டிகாட்டும் போது பதைத்து போய்விடுவார்கள். கோபப்படுவார்கள் என்று தான் அவள் இதுவரை நம்பி வந்தாள். ஆனால் சந்தோஷின் நிலை வேறுவிதமாக இருந்தது.

           சந்தோஷ் நிதானமாக பேசினான் நிர்மலா நான் நடத்துவது குடும்பம். இதில் எல்லோரும் இருக்கிறார்கள். அவரவர்களுக்கு உணர்வும், அறிவும், அனுபவமும் கூட இருக்கிறது. அதற்கு மதிப்பளித்து நடந்தால் தான் குடும்பத்தில் அமைதி நிலவும், தான்தோன்றி தனமான செயல்பட்டால் சந்தை கடைக்கும், வீட்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என்றான்

. அதற்கு மேல் அவனிடம் வாதம் செய்ய அவளால் முடியாமல் போயிற்று. அவனுடைய பதில் தன்னிலை விளக்கமாக அவளுக்குப் படவில்லை. தன் பலகீனத்தையே அவன் சுட்டி காட்டுவதாக தோன்றியது. இது ஆணாதிக்கத்தின் மென்மை வேஷம் என அவளுக்குப்பட்டது.


  இன்னொரு முறை எனக்கு வேலைக்கு போக பிடிக்கவில்லை. ராஜினாமா செய்ய போகிறேன் என்று அவனிடம் சொன்னாள்,நீ வேலைக்கு போவதும், போகாமல் இருப்பதும் உன் விருப்பம். என்னொருவன் வருமானத்தில் மட்டும் குடும்பம் நடத்திவிடலாம் என நீ நினைத்தால் தாராளமாக வீட்டில் இரு, நான் சற்று சிரமப்பட்டு கூட அந்த இழப்பை ஈடுகட்ட பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டான்.

 அவளால் பதில் பேச முடியவில்லை. இப்போது மட்டுமல்ல எப்போதுமே அவனிடம் பெரிய குறைகளை இவளால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. அதிர்ந்து பேசுவது, கோபப்படுவது, அதிகாரம் செய்வது என்று எல்லாவற்றிலுமே நிதானமாக இருந்தான்.

 அவன் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சொல்கேட்டு நடக்கிற நல்லபிள்ளை . தங்கைக்கு கூட எல்லா கடமைகளையும் செய்யும் பொறுப்புள்ள அண்ணன். நிர்மலாவை பொறுத்த வரையில் கூட ஆதிக்கம் செய்யாத கணவன், அவன் மீது குற்றம் சொல்ல வேண்டுமென்றால் கற்பனையாக ஏதாவது சொல்லாமே தவிர உண்மையாக சொல்ல ஒரு துரும்பு கூட கிடையாது.


நிர்மலா இதுவரை மனதில் வைத்திருந்த ஆண்களை பற்றிய சித்திரத்திலிருந்து இவன் முற்றிலும் மாறுபட்டவனாக இருந்தான். அவனை சீண்டுவதற்கென்று தனது பழைய காதல் சமாசாரத்தை அவனிடம் விவரிக்கவும் செய்தாள். அவன் அதை ஒரு விஷயாமாகவே எடுத்து கொள்ளவில்லை. என்னை கணவாக தீர்மானித்த பிறகு நீ அவனை காதலித்திருந்தால் அதன் பெயர் ஒழக்ககேடு, அதற்கு முன்பு அப்படியிருந்தால் அது இயற்கையின் விதி. அது உன் குற்றம் அல்ல என்று பதில் பேசிவிட்டான். அவளுக்கு என்னவோ போலாகிவிட்டது. நாம் தான் இதுவரை ஆண்களை தவறாக கணித்து வைத்திருந்தோமோ, என்று தோன்ற கூட செய்து விட்டது.

   நிச்சயம் இருக்காது, இருக்கவும் கூடாது, ஆண்களை பற்றிய என் கருத்து தப்பவே தப்பாது போதையில்லாத மது  இருக்கலாம். பால் வடியாத கள்ளி இருக்கலாம். ஆதிக்க வெறியில்லாத ஆண்மகன் இருக்கவே முடியாது. எப்படியாவது ஒரு நாள் சந்தோஷ்குமாரின் நிஜவடிவத்தை வெளியில் கொண்டு வரவேண்டும் என்று துடியாய் துடித்தாள்.

அதற்கு ஒருநாளும் வந்தது. தான் இரண்டு மாதம் குளிக்காததையும், தனது அடி வயிறு இனம் புரியாத புதிய அனுபவத்தை தருவதையும் அவள் உணர்ந்தாள். இதுவாகத்தான் இருக்குமென அவள் தீர்மானத்திற்கு வந்தாலும் கூட மருத்துவரை ஆலோசித்து உறுதிசெய்து கொண்டாள். அவள் தாய்மை அடைய போகும் உணர்வு அவளுக்குள் இனம் புரியாத இன்ப லகரியை ஊற்றெடுக்க செய்தது.


   தனக்குள் வந்த ஆனந்தத்தை கட்டுபடுத்தி கொண்டாள். வெளிகாட்டவில்லை சந்தோஷிடம் வேறு மாதிரியாக தகவலை சொன்னாள். நான் கர்ப்பமாக இருக்கிறேன், எனக்கு இப்போது பிள்ளை வேண்டாம் கலைக்கபோகிறேன் என்றாள், முதல் முறையாக அவன் முகம் இருள்வதை கவனித்தாள். ஆனால் அவன் சில நொடிகளில் தன்னை மாற்றிக்கொண்டான். இது நீயும் நானும் மட்டும் முடிவு செய்ய கூடிய விஷயமில்லை, நமக்கு பெரியவர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் கலந்த பிறகுதான் முடிவு செய்ய வேண்டும் என்றான்.

  அவளுக்கு கோபம் வந்தது இது என் பிள்ளை கலைப்பதா, வளர்ப்பதா என்று நான் தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு கட்டளையிட யாருக்கும் அதிகாரமும் இல்லை. நான் அடிமையும் இல்லை, என்று அடித் தொன்டையில் கத்தினாள்.

 சுமப்பது நீயாக இருக்கலாம், ஆனால் அந்த குழந்தைக்கு நானும் பொறுப்பு, என் கருத்து மிகவும் முக்கியம் என்றான். அவன் நிதானம் அவளுக்கு ஆத்திரத்தை மூட்டியது. அவனை மீண்டும் சீண்டி பார்க்க வேறொறு பொய்யையும் சொன்னாள். நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்று எனக்கு முன்பே தெரியும். அதனால் தான் உங்களிடம் சொல்லாமல் கருகலைப்பு மாத்திரை சாப்பிட்டு விட்டு தான் தகவலே சொல்கிறேன் என்றாள்.

 அந்த விநாடியே அவன் உடல் விரைப்பானது. கண்கள் சிவந்தன. எதையும் யோசிக்காமல் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். ஒரு பந்து போல் சுருண்டு விழுந்த அவளுக்கு அடித்தது வலித்தது என்றாலும் அவன் செய்கை ஆனந்தத்தை கிளறிவிட்டது.

 நிச்சயம் இவன் தான் நல்ல ஆண்பிள்ளை, தவறு செய்யும் போது மட்டும் திருத்துவதும், மற்ற நேரம் அரவனைப்பதும் தான் மனித நேயம், இது அவனிடம் ஏராளமாக இருக்கிறது. இதனால் தான் நிர்மலாவுக்கு ஆண்களை கண்டாலே எரிச்சலாக வருகிறது. எதையாவது செய்து பெண்களை அடிமைப் படுத்திவிடுகிறார்கள். அந்த ஆணாதிக்கம் ஒழியவே ஒழியாதா?  

Contact Form

Name

Email *

Message *