Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடலுக்கு பலம் தந்த மந்திரம் !


    தெளிவில்லாத மனது தெளிவடைய எதையும் புரிந்து கொள்ளாத அறிவு புரிந்து கொள்ள துணிச்சலற்று சோர்ந்து கிடக்கும் மனிதன் சோர்வை அகற்ற அடைய முடியாத அனைத்தையும் அடைய ராம நாம ஜபம் செய்யுங்கள் என்று பெரியவர்கள் அனைவரும் ஒரே குரலில் சொல்கிறார்களே அப்படி என்ன ராம நாமத்தில் இருக்கிறது 

ராம என்பது ஒரு வார்த்தை உலக மொழிகளில் இப்படி எத்தனையோ வார்த்தைகள் பல்லாயிரக்கணக்கில் விரிந்து கிடக்கிறது அவற்றில் எல்லாம் இல்லாத மகத்துவம் இந்த ராம என்ற வார்த்தையில் எப்படி வரும் ஒரு வார்த்தை அதை மீண்டும் மீண்டும் சொல்ல சொல்ல மனிதனுக்கு சக்தியை எப்படி தரும் ஒரு வார்த்தையால் மனிதனுக்கு ஆற்றலை கொடுத்துவிட முடியுமா? என்று நமது சிந்தனை ஒரு கேள்வியை எழுப்பும் 

சாதரணமாக உச்சரிக்கப்படும் வார்த்தைகள் சரித்திரத்தின் போக்கையே மாற்றி இருக்கிறது தனநந்தன் வெளியே போ என்று சாணக்கியனை பார்த்து சொன்ன ஒரே ஒரு வார்த்தை தான் நந்த சாம்ராஜ்யத்தை அழித்து மெளரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியது சரித்திர காலத்திற்கு ஏன் போவானேன் நமது அன்றாட வாழ்க்கையில் நம்மை நோக்கி வருகின்ற எத்தனையோ வார்த்தைகள் நம் வாழ்க்கை பாதையையே மாற்றி இருக்கிறது 



நீ எதற்கும் லாயக்கற்றவன் வெறும் தெண்ட சோறு என்று என் அண்ணன் பேசிய வார்த்தை என் இதயத்தை சம்மட்டி கொண்டு அடித்தது அன்று முடிவு செய்தேன் எவ்வளவு சிரமத்தை அனுபவித்தாலும் ஆயிரம் துன்பங்கள் நேரிட்டாலும் முன்னேறியே தீர்வது என்று முடிவு செய்தேன் உழைத்தேன் கடினமாக உழைத்தேன் இன்று வெற்றி கொடியை நாட்டி கேலி செய்த அண்ணனையும் பாதுகாத்து சந்தோசமாக இருக்கிறேன் என்று சொல்லும் ஆயிரம் மனிதர்களை நாம் அறிவோம் 

நான் எவ்வளவு உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவன் மற்றவர்கள் நம்மை பார்த்து ஒரு சுடுவார்த்தை சொல்லிவிட கூடாது என்றே நெருப்பு போல வாழ்ந்து வருகிறேன் என்னை பார்த்து ஒருவன் மட்டமாக பேசி விட்டான் அந்த வார்த்தையை கேட்ட பிறகும் நான் உயிரோடு வாழ்ந்து என்ன பிரோயோசனம் மடிந்து விடுவதே சாலசிறந்தது என்று மரண தேவனின் கோட்டை வாசலை தட்டி திறக்கும் நூற்றுக்கணக்கான மனிதர்களையும் நாம் அறிவோம் 

ஆசிரியர் சொன்ன ஒரு பாராட்டு மொழி படிக்காத அசடனையும் படிக்க தூண்டும் மனைவி கொடுத்த ஒரு ஆறுதல் வார்த்தை பித்தேறிய குடிகாரனையும் திருந்த சொல்லும் எதேச்சையாக வழிபோக்கன் ஒருவன் சொல்லுகின்ற வார்த்தை தற்கொலை செய்து கொள்ள போன எத்தனையோ நபர்களை திரும்ப வைத்திருக்கிறது ஆக வார்த்தை என்பது வெறும் எழுத்துக்களை கொண்ட பதமல்ல வார்த்தை என்பது சக்தங்களின் கூட்டு வடுவமும் அல்ல வார்த்தையில் உயிர் இருக்கிறது உணர்வு இருக்கிறது ஆத்மாவே இருக்கிறது ஏன் அதில் கடவுளே கூட இருக்கிறார் அதனால் தான் வார்த்தைகளால் ஆக்கமும் முடிகிறது அழிக்கவும் முடிகிறது 



ஆயிரமாயிரம் வார்த்தைகளில் உன்னதமானது உயர்வானது சிரேஷ்டமானது ராம என்ற வார்த்தை காரணம் ராம என்ற இரண்டு எழுத்தில் அகாரம் உகாரம் மகாரம் என்ற பிரணவ மந்திரம் சுற்றி சுற்றி பலநூறு முறை அடங்கி கிடக்கிறது அதனால் தான் உலகத்தில் பேசப்படுகின்ற அனைத்து வார்த்தைகளிலும் ராமா என்ற வார்த்தை சிறந்ததாக இருக்கிறது அதனால் தான் மந்திரங்களில் மிக உயர்ந்த மந்திரமாக ராம மந்திரம் இருக்கிறது இப்படி நான் சொல்வது ராமன் மீதும் ராமாயணத்தின் மீதும் நான் கொண்ட அதீத காதலால் அல்ல வாழ்க்கையில் அனுபவித்து பார்த்து அனுபவத்தில் பார்த்து ஒரு முறைக்கு ஆயிர முறை பரிசோதித்து பார்த்து சொல்லும் அநுபூதி மொழியாகும் 

துளசி தாசர் எழுதிய ராமாயணத்தில் ஒரு காட்சி வரும் அன்னை சீதா பிராட்டியை இராவணன் இலங்கைக்கு தூக்கி போய்விடுகிறான் அன்னையின் சிறை இடத்தை கண்டறிந்த அனுமன் ராமனிடம் தகவல் சொல்ல சக்ரவர்த்தி திருமகன் வானரபடைகளோடு இலங்கைக்கு புறப்படுகிறான் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு போக கடல் குறுக்கே மிக நீண்ட உடம்போடு படுத்து கிடக்கிறது தடுத்து கிடக்கிறது கடலை ஒதுங்க சொல்லி கருணை கடலான ராமன் கேட்கிறான் செவிடன் காதில் சங்கை ஊதியத்தை போல் கடல் அசைந்து கொண்டே கிடக்கிறது ஒரு முறை கேட்டான் மறுமுறை கேட்டான் மீண்டும் மீண்டும் கேட்டான் ராமன் குரலுக்கு கடல் மசியவில்லை 

காட்டுக்கு போ என்று கைகேயி சொன்னபோது வராத கோபம் அப்பாவி கடல் மீது ராமனுக்கு வந்ததாம் சமூத்திர ராஜனே எழுந்து வா என்று கர்ஜித்தானாம் உலகம் படைத்தவனின் உறுமல் மொழி கேட்டு அஞ்சாத பொருள் அவனியில் உண்டா ஓடி வந்த கடல் ராஜன் கைகட்டி நின்றான் ராமன் முன்பு ஐயா உத்தரவு இடுங்கள் பணி செய்கிறேன் என்று பணிந்து நின்றானாம் வைதேகியை மீட்டு வர படை நடத்தி போகிறேன் இலங்கைக்கு வழியை விடு உனது நீர் பரப்பை பிரித்து விடு என்று ராமன் கட்டளை இட்டானாம் 



இட்டபணி செய்யும் ஏவலாள் நான் தாங்கள் என்னை படைக்கும் போது இட்ட கட்டளை சாதாரண கட்டளை அல்ல அதன்பேர் விதி விதியை மீறி செயல்பட நான் யார்? மனிதர்கள் என்னை கடக்கலாமே ஒழிய அடக்க முடியாது ஆண்டவனாகிய நீங்கள் இப்போது சாதரண மனித பிறப்பு உங்களுக்காக பணிந்து வழிவிட என்னால் ஆகாது உங்கள் ஆணையை நீங்களே மீற முடியாத போது என்னால் எப்படி இயலும் என்று பணிவுடன் கெஞ்சி நின்றனாம் கடலரசன்  ராமன் ஆகா கேட்பது கடவுள் என்று அறிந்தும் விதியை மீற முடியாது என்று உறுதிபட பேசுகிறாயே உன் உறுதி பாராட்டுதலுக்குரியது ஆமாம் இந்த உறுதி உனக்கு எப்படி வந்தது என்று கேட்டானாம் 

ராமா நீங்கள் வனவாசம் வந்தபோது உங்களை திருப்பி அழைத்து முடி சூட வைக்க பரதன் உங்களை நாடி வந்தானே அவன் வரும் வழியில் எல்லாம் ராமா ராமா என்று கதறி அழுதவண்ணமே வந்தான் அவன் வடித்த கண்ணீர் ராம நாமத்தை சுமந்து கொண்டு கல்லின் மேல் விழுந்தது அங்கே மரம் முளைத்தது மண்ணின் மேல் விழுந்தது அங்கே பயிர் விளைந்தது நதியின் மேல் விழுந்தது அந்த நதி ராம நாம மந்திரத்தை சுமந்து கொண்டு கடலில் வந்து கலந்தது அன்று தான் ஆதித்தன் நெருப்பில் ஆவியாகி போகும் சாதாரண நீரான நான் சமுத்திரம் என்ற மகா வலிவை பெற்றேன் எனக்கு பலத்தை தந்தது உங்கள் திருநாமமே என்று ராமன் பாதத்தில் வணங்கி வீழ்ந்தானாம் 

ராம நாமத்தை நினைத்து வடிக்கின்ற சாதாரண கண்ணீர் துளியே கடல் நீருக்கு அசுர பலத்தை கொடுத்தது என்றால் அதை உச்சரிக்கும் நமது நாவும் மனதும் எவ்வளவு வலிமை பெரும் என்பதை எண்ணி பாருங்கள் துன்பம் வந்து உங்கள் கழுத்தை நெரிக்கும் போது அந்தகார இருள் வந்து உங்கள் கண்களை மறைக்கும் போது உடம்பை உருக்கும் நோய்கள் வந்து உங்களை அசைய முடியாமல் கட்டி வீழ்த்தும் போது ராமா என்று சொல்லி பாருங்கள் அந்த வார்த்தை உங்கள் உணர்வில் இருந்து வெளிபட்டால் ஆத்மாவில் இருந்து பீறிட்டால் ஒரு நொடி ஒரே நொடியில் அத்தனை இருட்டும் பொடிபொடியாக உதிர்ந்து போவதை உங்கள் ஊன கண்களாலேயே பார்க்கலாம். 



Contact Form

Name

Email *

Message *