Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆடும் வரை ஆடுங்கள் !


     ன்னை சாதரணமானவன் என்று நினைத்து விட்டாயா? என் பலம் உனக்கு தெரியாது நான் நினைத்தால் இரண்டே மணிநேரத்தில் நீ பூமியில் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் செய்துவிடுவேன் நான் சந்திக்காத மோதலா? பார்க்காத போலீசா? ஏறாத நீதிமன்றமா? இந்த மாநிலத்துக்கே இரண்டு முறை அமைச்சராக இருந்தவன் என்னை மிரட்டி பார்க்கிறாயா? என்னை பயப்படுத்த ஒருவன் பிறந்து வரவேண்டும் நீ ஒரு சுண்டக்காய்!

சட்டசபையில் நடக்கும் சண்டையை பார்த்திருக்கிறாயா நீ நாற்காலியை தூக்கி வீசுவதற்கு மைக்கை பிடுங்கி அடிப்பதற்கு கராத்தை கற்றவன் கூட அச்சப்படுவான் மல்யுத்தம் நடத்தியவன் கூட ஓடிவிடுவான் கட்டிய வேட்டி அவிழ்ந்து விழுந்தாலும் அதைப்பற்றி அக்கறை இல்லாமல் எதிர்க்கட்சி காரனை ஓட ஓட விரட்டி வீரவாகை சூடுவதில் சூராதி சூரன் நான் என்னிடமா வந்து வீர வசனம் பேசுகிறாய் கட்டிய பெண்டாட்டி போடும் சோறை தின்பதற்கு வாய் இருக்காது பிள்ளையை தூக்கி கொஞ்ச கை இருக்காது அம்மா இது தங்கச்சி இது என்று வித்தியாசம் பார்க்க மூளை மண்டையில் இருக்காது உயிரோடு வாழவேண்டும் என்றால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு பிழைத்து போ இல்லை என்றால் நடக்கும் கதையே வேறு இது அரசியல் வாதியின் ஆணவ வசனம்


தெருவில் குப்பை பொறுக்கும் மனிதனாக நான் நடித்தால் கூட அழுக்கு ஒட்டாத ஆடையை தான் நான் போடுவேன் எல்லோரும் குடிக்கும் சாதாரண தண்ணீரை நான் குடிக்க முடியுமா? நயகரா தண்ணீர் என்றாலே தனிச்சுவை தான் அதை குடித்து குடித்து வேறு எதுவும் வாயில் வைக்க கூட முடியவில்லை இரண்டு கோடி ரசிகர்களின் கனவு நாயகன் நான் என்னால் சாதாரண மனிதன் போல் வெறும் தரையில் நடக்க முடியுமா? ரத்தினங்கள் பதித்த பட்டு கம்பளம் விரியுங்கள் என்றா சொல்கிறேன் சாதாரண வெல்வட் கம்பளம் விரிக்க கூடாத?

பார்க்கும் பல்லாயிரகணக்கான ரசிகர்களை சுண்டி இழுக்கும் என் நடை என் விரல் அசைவு எல்லாமே விலைமதிக்க முடியாத வைரங்கள் என் தலைரோமத்தை ஏலம் விட்டால் கூட பல லட்ச ரூபாய் கொடுத்து வாங்கி பாதுகாக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் தொலைபேசியில் என் குரலை கேட்க காத்து கிடக்கும் உள்ளங்கள் பல கோடி நான் கையெழுத்து போட்ட சிறு காகிதம் கூட கடவுளை விட அதிகமாக மதிக்கப்படுகிறது நான் பிறந்தது அம்மாவின் கருவறையில் இருக்கலாம் எல்லோரையும் போல தாய்பால் அருந்தி வளர்ந்திருக்கலாம் ஆனால் இன்று நான் சாமான்யமானவன் அல்ல சரித்திரத்தையே மாற்றி எழுதும் தகுதி எனக்கு இருக்கிறது கடவுள் கூட என்னை பார்க்க வேண்டுமென்றால் காத்திருக்க வேண்டும் அல்ல அல்ல முன்னனுமதி பெற்றிருக்க வேண்டும் இது திரைப்பட நடிகரின் மமதை மத்தாப்பு


என் சுண்டு விரல் அழகுக்கு முன்னால் சாம்ராஜ்யங்கள் அனைத்துமே சரிந்து விழுந்து விடும் நான் கொவ்வை இதழை குவித்து புன்னகைத்தால் போதும் அகில உலகமே எனது முன்னால் அணிவகுத்து நிற்கும் என் நடை என் உடை என் இடை எல்லாமே அழகு பொக்கிஷம் இளம் நெஞ்சங்களை சுண்டி இழுக்கும் மன்மத ராஜ்யம் மாதுளை முத்துக்களை போன்ற என் பற்களை கண்டு வானத்து நட்சத்திரங்கள் கண்களை மூடி கொள்ளும் கடலில் நீரெடுத்து சரமழையாய் கொட்டுகின்ற வான் முகில் கூட்டம் என் செம்பஞ்சி பாதத்தில் வந்து தவம் கிடக்கும்

ராஜாதி ராஜன் என்ன உலகத்தையே தனது தோள்களால் ஒரே உலுக்கில் தள்ளி எரியும் மாவீரனாக இருந்தால் கூட என் கண்ணசைவுக்கு பணி செய்யும் வேலைக்காரனாக வந்து கிடப்பான் நான் நடந்து சென்றால் பூஞ்சோலை எல்லாம் கண்திருஷ்டி போடும் நான் பாடினால் குயில்கள் ஊமையாகும் உலகத்தில் உள்ள வைர வைடூர்யங்களை எல்லாம் கொட்டி கொடுத்தாலும் என் அழகின் விலை அதைவிட பலகோடி உயர்வானது இது உலக அழகியின் கந்தர்வ கர்வம்


நார்கட்டிலில் படுப்பதும் மின்விசிறியில் காற்று வாங்குவதும் என்ன ஒரு கேவலமான பிழைப்பு? எப்படி அவர்களால் வாழமுடிகிறது? ஒரு நிமிடம் ஏசி நின்று போனாலே உயிர் போனது போல் ஆகி விடுகிறது வியர்த்து கொட்டுவதில் மூச்சி திணறலே வந்து விடுகிறது பருப்பு சாம்பார் சாதமென்று சாப்பிட்டு கொண்டு ஒரு மனிதனால் உயிர்வாழ முடியுமா? தினசரி அதையே தின்றால் போரடிக்காதா?

சாயங்கால நேரம் வந்துவிட்டால் ஒரு க்ளப் டின்னர் என்று போகாமல் வீட்டில் உட்கார்ந்து டிவி பார்க்கும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா சூரியன் மறைந்த பிறகு கதகதப்பான் திரவம் தொண்டையில் இறங்கினால் தான் சுகம் அது இல்லாமல் இந்த மக்கள் எப்படி வாழ்கிறார்கள் ஒரு கோட் சூட் கிடையாது குறைந்த பட்சம் கார் கூட இல்லாமல் வாழ்க்கை நடத்துவதை விட சாகலாம் என்று தோன்றுகிறது ஒரு காப்பி குடிக்க நானுறு ரூபாய் செலவு செய்கிறேன் ஆனால் இவர்களால் அந்த பணத்திற்கு புதிய சட்டையே வாங்கி கொள்கிறார்கள் அவ்வளவு குறைந்த விலையில் சட்டை போட முடியுமா? நம்மால் முடியாதப்பா இது பணக்கார ஆணவத்தின் செல்ல சினுங்கள்


ஐம்பது வயசுக்கு மேலே ஆன பிறகு வீட்டிலே கிடக்க வேண்டியது தானே? வெளியே வந்து நடமாடி இருப்பவனுக்கு எல்லாம் தொல்லை கொடுக்க வேண்டுமா? இந்த கிழட்டு பசங்க முகத்தை பார்க்கவே சகிக்கல சுருக்கம் விழுந்து தொங்கி போய் ச்சீ ச்சீ  உத்து பார்த்தால் வாந்தியே வந்துவிடும் போலிருக்கிறது கண் தெரியவில்லை காது கேட்கவில்லை நடக்க முடியவில்லை பிறகு எதற்கு வாழ வேண்டும்

எதை செய்ய போனாலும் ஒரு முட்டுக்கட்டை எதை எடுத்தாலும் ஒரு தடங்கல் அதை செய்யாதே இதை செய்யாதே உனக்கு தெரியாது அனுபவம் போதாது என்று ஆயிரம் புலம்பல் எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் வயது ஆனவுடனே எல்லோரையும் சிறையில் அடைத்து தூக்கில் தொங்க விட்டுவிடுவேன் இளமை முறுக்கோடு எவன் இருக்கிறானோ அவன்தான் வாழவேண்டும் மற்றவர்களுக்கு பூமியில் இடமில்லை இது இளவயது ஆணவத்தின் கொக்கரிப்பு


நீ அமைச்சராக இருந்தால் என்ன? அரசராக இருந்தால் கூட என்ன? உன்னை மயானத்திற்கு தூக்கி வந்து சுடும் போது உன் உடம்பு விறைத்து கொண்டு சிதையில் இருந்து எழும்புமே அப்போது என் தடியடியை நீ வாங்கி தான் ஆகவேண்டும் அங்கே உன் அதிகாரம் பலிக்காது ஆணவம் வேலை செய்யாது ரசிகர்கள் வணங்கும் நடிகனாக இருந்தால் உன்னை சுட்ட சாம்பல் ஜோலிக்கவா போகிறது? உன் அழகும் இளமையும் பணமும் என் முன்னால் வெறும் பிணம் தான் நெற்றில் வைக்கும் ஒரு ரூபாய் காசை கூட விட்டு விடவா போகிறேன்.

சந்தனத்தில் குளித்து ஜவ்வாது பூசி நெய்யை மட்டுமே கொடுத்து வளர்த்த உன் உடம்பு நான் வெட்டிய குழிக்குள் மக்கி மண்ணாக போகிறது உன்னை சுற்றி வருகின்ற உறவுக்காரர்களும் பிள்ளைகளும் தொண்டர்களும் உன் கூடவா குழிக்குள் படுக்க போகிறார்கள்? நீ மட்டும் தான் மூச்சி இல்லாமல் கிடக்க வேண்டும். உன் முகத்தில் நான் வாரிபோடும் மண் மட்டும் தான் நிலையாக இருக்க போகிறது. சவக்குழிக்குள் மகனே உனக்கு ஏசி எங்கிருந்து வரும் மின்விசிறி போட்டு கொடுப்பது யார்? கறையானும் புழுக்களும் தான் உனக்கு பக்க துணை அங்கு சாமரம் வீசுவதும் அவைகள் தான் உன்னை சுரண்டி தின்பதும் அவைகள் தான்.

பெட்டி நிறைய பணத்தை சேர்த்து வைத்தால் எமன் வரும் போது கொடுத்து தப்பிக்க முடியுமா உன்னால்? அதிகார பதவி இருந்து ஆயிரம் பாதுகாப்பு செய்தாலும் எமன் உன் அருகில் வருவதை தடுக்க முடியுமா? கட்டிளம் மங்கையரோடு ஆடினாலும் கனிரசமாய் மதுவருந்தி களித்தாலும் தங்கத்தால் உன்னை அபிசேகம் செய்து பார்த்தாலும் கடேசியில் நீ வரும் இடம் என் இடம் தான். வெட்டியானே ஒதுங்கி போ என்று என்னையா தள்ளுகிறாய்? தள்ளுடா தள்ளு எதற்கும் ஒரு காலம் வரும் அதுவரை காத்திருக்கிறேன் வா இது மயான ஊழியனின் ஆணவத்தின் வைராக்கியம்.


Contact Form

Name

Email *

Message *