Store
  Store
  Store
  Store
  Store
  Store

புதிய கடவுள் பதவியேற்றார்...!


    வனுக்கு கடவுள் மீது கோபம் வந்தது வரவர மாமியார் கழுதை போல் ஆனாளாம் என்பது போல கடவுளும் வரவர சரியில்லை எதை எப்போது செய்யவேண்டும் எதை செய்யலாம் செய்யகூடாது என்பது அவருக்கு புரியவேயில்லை என்று தோன்றியது பெட்டி நிறைய பணத்தை கொடுக்கிறான் மாடி மனை என்று ஏராளமான சொத்து பத்துகளை கொடுக்கிறான் அவற்றை எல்லாம் பிறருக்கும் கொடுத்து உதவ வேண்டும் என்ற மனதை மனிதனுக்கு கொடுக்காமலே விட்டு விடுகிறானே? இது சரியா?

பிள்ளை இல்லை செத்து போனால் கொள்ளிபோட யாருமில்லை உடம்பு முடியாமல் கட்டிலில் படுத்து விட்டால் கவனிக்க நாதியில்லை என்று வாடி வதங்க ஒரு கூட்டத்தை வைத்து விட்டு ஐயோ எட்டு பிள்ளைகளை பெற்று விட்டேனே! வயிறு நிறைய சோறு போட கூட வழியில்லையே! படிக்க வைக்க வசதி இல்லையே! இத்தனை பிள்ளைகளை எப்படி பாதுகாப்பேன் என்று பரிதவிக்கும் ஒரு கூட்டத்தையும் வைத்திருக்கிறானே! இது சரியா?

வறுமை என்றால் வறுமை தாங்க முடியாத வறுமை ஊர் பிள்ளைகள் மிட்டாய் வாங்கி சாப்பிடும் போது நாவில் எச்சி ஊற பார்த்து கொண்டே இருப்பேன் எனக்கும் ஒரு மிட்டாய் வாங்கி தா என்று அம்மாவிடம் கேட்டால் பாவம் அவளிடம் காசு இருக்காது அது எனக்கு தெரியுமா? அழுவேன் விடாமல் அழுவேன் தரையில் விழுந்து உருண்டு புரண்டு அழுவேன் அம்மாவுக்கு கோபம் வரும் தன இயலாமையை தாங்க முடியாமல் கோபப்படுவாள் கையில் கிடைத்ததை எடுத்து என்னை அடித்து உதைப்பாள்.

அம்மாவின் உதை தாங்காமல் ஊரை விட்டே ஓடி போனேன். வெங்காய கூடை சுமந்தேன் அரிசி மூட்டை சுமந்தேன் சின்னதாக கடை வைத்தேன் அது பெரியதாக வளர்ந்தது கார் பங்களா என்று என் வசதிகள் பெருகின நான் நினைத்தால் இன்று மிட்டாய் கம்பெனியே நடத்தலாம் ஆனால் என்ன செய்வது விதி என்னை இன்னும் மிட்டாய் தின்பவர்களை ஏக்கத்தோடு பார்க்கத்தான் வைத்திருக்கிறது உடம்பு முழுவதும் சக்கரை நோய் ஒரு துளி இனிப்பு வாயில் பட்டாலே மயங்கி விழவேண்டியது தான் இது ஒருவரின் அங்கலாயிப்பு.

இன்னொருவரோ ஆயிரம் பணமிருந்து என்ன? வசதி வாய்ப்புகள் இருந்தும் தான் என்ன? பெற்ற பிள்ளைகள் எதுவும் சரியில்லை ஒருவன் குடிகாரன் ஒருவன் பெண்பொறுக்கி ஒரே மகளோ மூன்று கணவர்களை விவாகரத்து செய்து விட்டு நான்காவது துணையை தேடுகிறாள் மனதில் நிம்மதி இல்லை ஏன்தான் பிறந்தேன் என்று தெரியவில்லை என்று புலம்புகிறான் இப்படி ஒன்றுக்கொன்று சம்மந்தமே இல்லாமல் சம்பவங்களை உருவாக்கும் கடவுளுக்கு அறிவு இருக்கிறதா? இல்லையா? என்பதே அவனுக்கு புரியவில்லை.

இதுமட்டுமல்ல அவன் வேறு சில விஷயங்களையும் நினைத்து பார்த்து குழம்பினான் ஒரு பக்கத்தில் மழையில்லை குடிக்க தண்ணீர் இல்லை பயிர் பச்சைகள் எல்லாம் வாடி வதங்குகின்றன பறவைகளுக்கு கூட ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்கவில்லை தண்ணீரை தேடி பூமியை தோண்டினால் பாதாளம் வரையும் தெரிகிறதே தவிர தண்ணீர் மட்டும் தெரியவே மாட்டேன் என்கிறது இன்னொருபுறம் குளம் உடைகிறது ஆறு கரையை கடந்து ஊருக்குள் புகுந்து தாண்டவம் ஆடுகிறது வாய்க்கால் வரப்பு எல்லாம் இருந்த இடம் தெரியவில்லை பயிர்களோ தண்ணீரில் மூழ்கிவிட்டது அடித்த காற்றில் ஆலமரம் கூட வேரோடு சாய்ந்து விட்டது ஏன் இந்த வித்தியாசம் ஏன் இந்த பாகுபாடு ஒரு பகுதியில் கொடுக்காமல் கெடுப்பதும் மறுபகுதியில் கொடுத்து கெடுப்பதும் அறிவுடையவன் செய்யும் வேலையா?

வாழவேண்டிய இளம்பையன் இப்போது தான் வேலை கிடைத்தது இனி அவன் குடும்பத்தை தூக்கி நிருந்திவிடுவான் என்று வயாதான தந்தை நிம்மதி பெருமூச்சி விடுகிறார் ரப்பர் வளையல் கூட பார்க்க முடியாத தனது கைகள் இனி தங்க வளையல் போடும் என்று தங்கை கனவு காண்கிறாள். சின்ன தம்பியோ நான் கம்யூட்டர் படிக்க போகிறேன் என்று ஆகாயத்தில் மிதக்கிறான் ஆனால் இருமல் என்று மருத்துவமனைக்கு போன அண்ணனுக்கு புற்று நோயாம் இன்னும் மூன்றே மாதத்தில் செத்து விடுவானாம்.

அதோ தெருவோரத்தில் கிழிந்த சாக்கை ஆடையாக போர்த்தி கொண்டு பசி எடுப்பது கூட தெரியாமல் காகத்தையும் மாட்டு வண்டியையும் பார்த்து கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்து கொண்டு கைகொட்டி சிரித்து பைத்தியமாக தனக்கும் உதவி இல்லாமல் பிறருக்கும் பயனில்லாமல் வெறும் உயிர் உள்ள பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாளே பைத்தியகாரி! அவளுக்கு வரவேண்டிய மரணம் குடும்ப சுமையை தூக்குபவனுக்கு வந்திருக்கிறதே இப்படி செய்பவன் எப்படி ஐயா அறிவுடையவனாக இருக்க முடியும் என்றும் அவன் குழம்பி போய் அழுகிறான்.

அதானால் அவன் ஒரு முடிவு செய்தான் இந்த கடவுள் சரியில்லை இவரை இனியும் கடவுளாக வைத்தால் நாடு தாங்காது உலகம் பொறுக்காது மனிதர்கள் வாழமுடியாது எனவே அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தானே கடவுளாக ஆகிவிடுவது என்று அவன் முடிவு செய்தான் அவனுக்கென்ன கடவுளாகும் தகுதி இல்லையா என்ன? அவன் படிக்காத விஷயங்கள் எதுவுமே இல்லை வரலாறு பூகோளம் அறிவியல் மொழியியல் பொருளியல் தத்துவயியல் மருத்துவயியல் வானியல் எல்லாம் அறிந்தவன் அவன் ஒரு கடவுளுக்கு இதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்? இப்போது இருக்கின்ற கடவுளுக்கு மனிதனை பற்றி தெரியாது மனித மனதின் வேதனைகளை பற்றி புரியாது மனிதனின் கஷ்ட நஷ்டங்களை அவர் அறியமாட்டார் ஆனால் இவனுக்கு எல்லாம் தெரியுமே பிறகென்ன கடவுளாகி விடவேண்டியது தான்.

அவன் அப்படி நினைத்தானோ இல்லையோ எங்கிருந்தோ ஒரு சத்தம் வந்தது ஆமாம் நீ நினைப்பது தான் சரி இந்த கடவுளுக்கு வயதாகிவிட்டது அதனால் புத்தி தடுமாற்றம் அடிக்கடி ஏற்படுகிறது அதனால் இன்றுமுதல் நீயே கடவுள்! நீயே கடவுள்! என்று அந்த அசரீரி அறிக்கை செய்தது சந்தேகமே வேண்டாம் அந்த நிமிடமே அவன் கடவுளாகி விட்டான் தன்னை தானே பெருமையாக ஒரு முறைக்கு இருமுறை பார்த்து கொண்டான் இனி உலக பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்தது நான் தான் கடவுளாகி விட்டேனே? எல்லாவற்றையும் தீர்த்து வைக்கும் தகுதியும் தராதரமும் எனக்கிருக்கிறது என்று பெருமையும் பட்டுகொண்டான் நாற்காலியின் மீது கால்மேல் கால்போட்டு நடுவீதியில் உட்கார்ந்தான் ஐயா வழி போக்கர்களே மனிதர்களே உங்களுக்கு எதாவது குறையுண்டா? என்னிடம் சொல்லுங்கள் நான் தீர்த்து வைக்கிறேன் என்னென்றால் நான் கடவுள் நானே கடவுள் என்று ஓங்கி சொன்னான்.

தலையில் கட்டிய முண்டாசை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு கும்பிட்ட கரத்தோடு ஒருவன் வந்து நின்றான் ஐயா புதிய கடவுளே! என் கிணறு தண்ணீர் இல்லாமல் வற்றி போய்விட்டது பயிர்கள் வாடுகிறது மரங்கள் பட்டுபோகும் நிலைக்கு வந்துவிட்டது பூமி காய்ந்து பாளம்பாளமாக வெடித்து விட்டது மழை வரவைக்க வேண்டும் என்று வேண்டினான் வரும் போ என்று வரம் கொடுத்தான் புதுக்கடவுள் வானம் இருண்டது மின்னல் வெட்டியது இடி இடித்தது வானத்தின் வயிறு கிழிந்து விட்டது போல் மழை வந்து கொட்டியது பூமி நனைந்தது ஆறு குளமெல்லாம் நிறைந்து விட்டது

அடுத்ததாக ஒரு கூக்குரல் கடவுளின் காதுகளில் வந்து விழுந்தது ஐயோ பெண்டாட்டி நகையெல்லாம் அடகு வைத்து செங்கல் சூளை வைத்தனே கொட்டிய மழையில் அனைத்து செங்கலும் வேகாமல் மண் குவியலாகி விட்டதே என்ன செய்வேன் இனி எனக்கு கதி மோட்சம் என்ன? பாழும் கடவுளே உனக்கு கண் இல்லையா? இந்த மழை இப்போது எதற்கு என்று அந்த குரல் அழுது தீர்த்து.

கோட்சூட் போட்டு படித்த ஆசாமி ஒருவன் புதுகடவுள் முன்னால் வந்து மண்டியிட்டான் ஐயா நான் மருத்துவன் நவீன மருத்துவத்தை நயம்பட கற்றவன் எல்லா நோய்க்கும் மருந்துண்டு என்னிடம் பெரிய மருத்துவமனை கட்டி காலியாகவே வைத்திருக்கிறேன் ஒரு நோயாளி கூட சிகிச்சைக்கு வரவில்லை திக்கற்றவனுக்கு தெய்வம் தானே துணை உன்னிடம் முறையிட்டு விட்டேன் என்னை காப்பாற்று என்று கெஞ்சினான் மருத்துவமனை போ வருவார்கள் நோயாளிகள் என்று வரத்தை பெற்று படித்த ஆசாமி மகிழ்வோடு போனான்.

நேற்றுவரை சிரித்து கொண்டிருந்த குழந்தை இன்று காச்சலில் படுத்துவிட்டதே நன்றாக நடமாடிய என் அப்பனுக்கு கால்நோவு வந்துவிட்டதே பச்சை மிளகாய் கடித்து பழம் சோறு சாப்பிட்டு ஆரோக்கியமாய் திரிந்தவன் வயிற்று வலி வந்து படுக்கையில் விழுந்து விட்டானே? என்று எத்தனையோ வித விதமான அழுகை குரல்கள் ஆகாசத்தை நிறைத்தது கடவுளுக்கு புத்தியில்லை இறக்கமில்லை கண்ணுமில்லை என்று ஏச்சு பேச்சுகளும் கூடவே கேட்டன

தொழிற்சாலை கேட்டவனுக்கு கடவுள் தொழிற்சாலை கொடுத்தான் கூடவே சுற்று சூழலை கெடுத்து விட்டான் என்று கடவுள் வசவுகளை வாங்கினான் விடுதலையை விரும்பியவனுக்கு அது கிடைத்தது சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விட்டது என்று புகாரும் வந்தது சீர்திருத்த வாதிகள் பதவிகளை கேட்டார்கள் பதவிகளை பெற்றவர்களோ ஆட்சிக்கு வந்தார்கள் சர்வதிகாரம் நடக்கிறது சுதந்திரம் போய்விட்டது என்று புலம்பலும் கூடவே வந்தது இயற்க்கை பேரிடர்கள் எதுவும் வேண்டாம் என்று எல்லோரும் விண்ணப்பித்தார்கள் பூமி முழுவதும் மனித தலைகளே நிறைந்து பறவைகளும் மிருகங்களும் மரம் செடி கொடிவகைகளும் காணமல் போயின

புதிதாக பதவி ஏற்ற கடவுளுக்கு என்ன செய்வது என்று எதுவும் புரியவில்லை பைத்தியம் பிடித்துவிடும் போல் மண்டை குழம்பியது பழைய கடவுளை நோக்கி தலைதெறிக்க ஓடினான் ஐயோ கடவுளே என்னை காப்பாற்று எனக்கு இந்த கடவுள் பதவி வேண்டாம் பழையபடி நீயே வைத்துகொள் என்று கெஞ்சினான் கடவுள் சிரித்தார் எல்லோரையும் எப்போதும் திருப்தி படுத்த நினைப்பவன் இப்படி தான் ஓடவேண்டுமேன்று கடவுள் தத்துவம் சொன்னார் புரிந்தது பதவி போன புதிய கடவுளுக்கு.


Contact Form

Name

Email *

Message *