Store
  Store
  Store
  Store
  Store
  Store

பெண் சுதந்திரம் விவாகரத்தா...?


  ரியானா மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையில் பணிபுரியும் பெண்கள் கண்டிப்பாக புடவை மற்றும் சுடிதார் மட்டுமே அணிய வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கபட்டதை பெண்ணியவாதிகள் எதிர்ப்பது எதை காட்டுகிறது?

ஆடைகள் என்பது உடலை மறைக்கும் ஒரு கருவி அதன் வடிவம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அது முக்கியமாக சீதோஷ்ன பாதிப்புகளில் இருந்து மனித உடலை காப்பாற்ற வேண்டும் காரணம் வெயில் மற்றும் பனி மழையில் இருந்து விலங்குகள் தப்பிக்க அவைகளின் உடம்பு முழுவதும் ரோமத்தை கொடுத்த இறைவன் மனிதனுக்கு அப்படி எதுவும் கொடுக்கவில்லை காரணம் விலங்குகளில் இருந்து மாறுபட்ட அறிவை மனிதனுக்கு இறைவன் கொடுத்திருக்கிறான் அந்த அறிவை வைத்து மனிதனால் இயற்கையின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்ள முடியும் இது தான் ஆடையை பற்றி பொதுவாக உலக முழுவதும் இருக்கும் அபிப்ராயமாகும்

ஆனாலும் இடத்திற்கு இடம் தேசத்திற்கு தேசம் ஆடையின் வடிவமைப்பு மாறுபடுகிறது பர்மாவில் லுங்கி கட்டி காலில் ஷு மாட்டிகொண்டு நடப்பது சரியாக இருக்கும் அதற்காக சென்னை பர்மா பஜாரில் அப்படி யாராவது நடந்தால் அவரை வேடிக்கை தான் பார்ப்போம் நம் இந்தியர்களுக்கென்று நம் பருவநிலைக்கு ஏற்ற உடை இருக்கிறது அந்த உடை காலகாலமாக நமது வேலைகள் அனைத்திற்கும் ஈடுகொடுக்கும் வண்ணமே அமைக்க பட்டுள்ளது. நாற்று நாடும் பெண்ணும் புடவை கட்டிக்கொண்டு நாற்று நடலாம் கணினி முன்னால் அமர்ந்து கணக்கு பார்க்கும் பெண்ணும் புடவை கட்டலாம் அது செளரிய குறைச்சலாக இருக்காது.

இன்று நவநாகரீக ஆடைகளுக்கு வெண் சாமரம் வீசுபவர்கள் புடவை கட்டி கொள்வது மிக கடினமான வேலை அதற்கு ஒதுக்கும் நேரத்தில் பத்து முறை பேன்ட் சர்ட் போட்டு கழற்றி விடலாம் என்கிறார்கள் இது அவர்கள் வலிய பேசும் நியாயம் என்பது அவர்களுக்கே தெரியும் ஆனாலும் நமது நாட்டை பொறுத்தவரை மிக வேகமாக வீசி புயல் போல கபளீகரம் செய்துகொண்டிருக்கும் ஐரோப்பிய கலாச்சாரம் நமது பாரம்பரியங்களை தகர்த்து கொண்டு வருகிறது. அதன் ஒரு சின்னம் தான் ஜீன்ஸ் பேன்ட்டும் டி-சர்ட்டும் இந்த ஆடை அணிவதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கிறது. பராமரிப்பதற்கு கஷ்டமில்லாமலும் உள்ளது என்ற கருத்து மிக வலுவாக பரப்ப பட்டு வருகிறது.

ஜீன்ஸ் பேன்ட் டி-சர்ட் ஐரோப்பிய நாடுகளில் கூட பண்பாடு மிக்க ஆடைகளாக கருதப்படவில்லை இன்றும் அந்நாட்டு அலுவலங்களில் பணிபுரிபவர்கள் இத்தகைய ஆடைகளை போடகூடாது என்ற சட்டம் இல்லை என்றாலும் யாரும் வேலை நேரத்தில் அணிவது கிடையாது காரணம் வேலைக்கான மரியாதையை இந்த ஆடைகள் கெடுத்து விடுவதாக அவர்கள் நினைக்கிறார்கள் இது உண்மை தான் நீதி மன்றத்தில் தீர்ப்பு சொல்லும் நீதிபதி கண்ணியமிக்க ஆடையை அணிந்திருந்தால் தான் அவருக்கு மரியாதை அதை விட்டு விட்டு என் விருப்படி எந்த ஆடை வேண்டுமென்றாலும் அணிவேன் என்றால் அது அவருக்கும் அழகல்ல அவர் இருக்கும் பதவிக்கும் அழகல்ல.

அதே போலதான் பெண்கள் குழந்தைகள் நலத்துறை என்பது இதில் பணிபுரிபவர்கள் கண்ணியமிக்க ஆடையைதான் அணிய வேண்டும். இதில் மாற்று கருத்து எதுவுமில்லை இதை ஹரியானா அரசு சரியாகவே செய்துள்ளது. இதை குறைகூறும் பெண்ணியவாதிகளுக்கு நிச்சயம் கருத்து கோளாறுகள் இருக்கவேண்டும் என்பது என் கருத்து காரணம் தற்கால பெண்ணியவாதிகள் இந்திய தன்மை என்பதே நாகரீகம் அற்றது மனிதாபிமானம் இல்லாதது என்று பல கருத்துக்களை பரப்பி வருகிறார்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வாழ்க்கை முறையே சரியானது என்று பேசி வருகிறார்கள் இவர்களது கருத்தை இன்று சிலர் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து இருப்பது தான் அற்ப விஷயங்களுக்கு விவாகரத்து என்றும் தற்கொலை என்றும் மன அழுத்தம் என்றும் பலரை பாதாளத்தில் தள்ளிகொண்டிருக்கிறது. இதை மாற்ற தேச நலம் கருதி பழைய மரபுகளை மீட்டெடுக்க பாடுபட்டால் தான் இந்த நாடு நாடாக இருக்கும் இல்லை என்றால் இந்திய குடும்பங்கள் பல நீதிமன்ற வாசல்களில் தான் வாழவேண்டிய சூழல் வரும்.


   மும்பை நீதிமன்ற நீதிபதிகள் பெண்கள் சீதையை போல் இருக்க வேண்டும் என்று கூறியிருப்பதற்கும் வலுவான மாற்றுகருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறதே அது சரியா?

நீதியரசர்கள் பெண்கள் சீதையை போன்று இருக்க வேண்டும் என்ற சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. சீதை இந்த நாட்டின் உதாரண பெண்மணி அவளை போல நமது தாயும் சகோதரிகளும் வாழவேண்டும் என்று ஆசைபடுவது தான் ஒவ்வொரு இந்தியரின் எண்ணமாகும். ஆனால் சீதையை போல் இருங்கள் என்று சொன்னவுடன் கண்டன குரல்கள் ஓங்கி ஒலிப்பது ஏன்? என்பதையும் நாம் சற்று சிந்திக்க வேண்டும்.

சீதை தனக்கு வந்த எந்த துயரத்தையும் மறுப்பு சொல்லாமல் ஏற்றுக்கொண்டாள் சீதைக்கு ராமனால் பல வித சோதனைகள் ஏற்படுத்தப்பட்டது. அவைகள் அனைத்தையும் அவள் முகம் சுளிக்காமல் தாங்கி கொண்டாள் ஆகவே சீதையாக இரு என்று சொன்னவுடன் பெண் என்பவள் கஷ்டப்படுவதற்காகவே பிறந்தவள் அவளுக்கு ஆண்கள் கஷ்டம் கொடுத்தால் அதை அவள் தாங்கி கொள்ளவேண்டுமே தவிர அதை எதிர்த்து ஒரு சின்ன அசைவு கூட நிகழ்த்த கூடாது என்பது அர்த்தமென்று பலர் கருதுகிறார்கள் அதன் விளைவே இந்த கண்டன குரல்கள்.

ராமன் சீதையை தீக்குளிக்க செய்தான் மீண்டும் வனவாசத்திற்கு அனுப்பினான் என்று ராமன் மீது பலமான குற்ற சாட்டுகள் சுமத்த படுகிறது. இது முற்றிலும் தவறுதலானது ராமன் ஒருசராசரி கணவனாக இருந்து இத்தகைய தண்டனையை மனைவிக்கு கொடுத்திருப்பான் என்றால் அவன் குற்றவாளியே அதில் சந்தேகமில்லை ஆனால் ராமன் சராசரி கணவன் அல்ல அவன் நாட்டுக்கு அரசன் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் பிரதிநிதி ஆட்சியில் இருப்பவன் எந்த நேரமும் அரசனாக மட்டுமே இருக்க வேண்டும்.மாறாக சொந்த பந்தங்களுக்கு உறவுக்காரனாக நண்பனாக கூட இருக்க கூடாது என்பது தான் பழைய ராஜ தர்மம் அதை ராமன் சற்றும் வழுவாமல் கடைபிடித்தான் ஆட்சியில் இருப்பவர்கள் மாசுமருவற்றவர்கள் என்று மக்களுக்கு தெரிந்தால் தான் மக்களும் தேச நலனில் அக்கறை உள்ளவர்களாக இருப்பார்கள்

ஆளுபவனுக்கு ஒரு நீதி ஆளப்படுபவனுக்கு ஒரு நீதி என்பது சரியான அரசு அல்ல ராமனுக்கு சீத்தா களங்கம் இல்லாதவள் என்று நன்றாக தெரியும் தான் அறிந்து கொள்வதற்காக அவளை அக்னி பிரவேசம் செய்ய வைக்கவில்லை அவன் ஊர் உலகம் சீத்தாவின் கற்பு தன்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே செய்வித்தான் அரசன் நோக்கில் ராமன் செய்தது நியாயமான செயலே ஆகும் அதை அரசி என்ற நோக்கில் சீத்தா மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டதும் அடிமைத்தனம் அல்ல ஆண்மைத்தனம் மிக்கதே ஆகும். மீண்டும் அவளை வனவாசத்திற்கு அனுப்பியதும் அரச செயலே தவிர ஒரு கணவனின் செயல் அல்ல எனவே சீத்தாவின் சோதனைகளை துயரமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை பெண்மைக்கே உரிய கம்பீரமாக பார்க்க வேண்டியது தான் நியாயமான பார்வையாகும்.

இன்றைய சூழலில் துயரங்களை எதிர்கொள்ளும் மன துணிச்சல் பெண்களுக்கு அவசியம் தேவை சோதனைகளை எதிர்த்து போரிட முடியாமல் புறமுதுகு காட்டி ஓடுவது கோழையின் செயல் இந்த கோழைத்தனம் அதிகரித்து போனதற்கு சரியான அடையாளம் தான் நீதி மன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து இருப்பது விவாகரத்துகள் அதிகமாக நடக்கும் நாட்டில் பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று யாரும் நினைக்க மாட்டார்கள் விவாகரத்து மட்டும் தான் பெண்ணுக்கு சுதந்திரம் கொடுக்கிறது என்றால் அந்த சுதந்திரம் நமது தாய்மாருகளுக்கு தேவைதானா? என்பதை சிந்திக்க வேண்டும் இந்த எண்ணத்தை மனதில் வைத்து தான் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சீதையை போல் வாழுங்கள் என்று சொன்னது இதில் ஆணாதிக்கமோ அடிமை தனமோ இல்லை அப்படி இருப்பதாக நினைப்பவர்கள் நிச்சயம் ஆரோக்கியமான சமூக சிந்தனை உடையவர்கள் என்று சொல்ல முடியாது.

Contact Form

Name

Email *

Message *