Store
  Store
  Store
  Store
  Store
  Store

வாழ்கையை எதிர்கொள்வது எப்படி?


    ண ஆசையை விடுவது எவ்வாறு? முன்பு பணம் தேவை இல்லை என தோன்றியது. எதனுடனும் பந்தபடுத்தி கொள்ள கூடாது. இந்த உடம்பை பாதுகாக்க கவலை பட கூடாது என்றெல்லாம் நினைத்ததுண்டு. இவ்வாறெல்லாம் நிறைய பேரிடம் பேசியதும் உண்டு. ஆனால் இப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் என்னை பற்றி நான் அறிந்து கொண்டேன். என்னால் பணம் இல்லாமல், அந்தஸ்து இல்லாமல் வாழ முடியாது என தோன்றுகிறது. நானே என்னை பார்த்து திகைத்து விட்டேன். என்னுடைய இந்த மனதினால் நான் பெரும் தவறு செய்வது போல உணர்கிறேன். எல்லோரிடமும் அன்பு செய்வது எப்படி..அன்பு காட்டுபவர்கள் அன்பு செய்ய வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால் அது ஏன் எனக்கு தோன்றுவது இல்லை. அதுவும் இறைவனின் விருப்பமா? நான் விருபுகிறேன்..ஆனால் எனக்கு அன்பு காட்ட தெரியவில்லை. ஒரு சிலர் அன்பு காட்டுவதை பார்க்கும் பொது நான் எல்லாம் என்ன பிறவி என்று தோன்றுகிறது. எனக்கு எதை பார்த்தாலும் பயம். தன்னம்பிக்கையும் இல்லை. வாழ்கையை எதிர்கொள்வது எப்படி?

சிவசங்கரி துரைசாமி



     னது தகப்பனார் கடை நடத்திய போது முத்து பாண்டியன் என்ற ஒரு இளைஞர் எங்கள் கடையில் வேலை செய்தார் அவர் மிகவும் சுறுசுறுப்பானவர் நல்லவர் எந்த விஷயமாக இருந்தாலும் காரியங்களை சொல்லாமலேயே புரிந்து கொண்டு செயல்படுவார். சில காலத்திற்கு பிறகு வேலை செய்வதை விட்டு விட்டு தனியாக வியாபாரம் செய்ய துவங்கினார். அவருடைய அறிவிற்கும் உழைப்பிற்கும் ஏற்ற பலனை இறைவன் கொடுத்தார். சில வருடங்களிலேயே தொழிலில் முன்னேறி நல்ல நிலைக்கு வந்து விட்டார். எவ்வளவு விரைவில் அவர் முன்னேறினாரோ அவ்வளவு விரைவில் கடவுள் அவர் ஆயுளையும் முடித்து விட்டார். அவரது பங்காளிகளுக்குள் நடந்த ஒரு சண்டையில் இவர் அநியாயமாக கொலை செய்ய பட்டார்.

முத்து பாண்டியனிடம் பல திறமைகள் உண்டு அதில் குறிப்பிடும் படி சொல்ல வேண்டியது அவர் யாரோடும் சில நிமிடங்கள் பேசினாலே அவர்களுடைய இயல்புகளை நன்றாக புரிந்து கொள்வார். சில நேரங்களில் மிக ஆழமாக மற்றவர்களின் மனதை ஊடுருவி சென்று அவர்களுக்குள் மறைந்து கிடக்கும் ரகசியங்களை கூட இது இப்படி தான் இருக்குமென்று அனுமானித்து விடுவார். அவரோடு நான் பழகியதனாலும் அவரை போன்ற வேறு பலரின் சகவாசம் எனக்கு இருந்ததனாலும் ஓட்டுவார் ஒட்டியாக அந்த மாதிரி குணங்கள் என்னிடம் கூட சில இருக்கிறது. ஒருவர் பேசுவதை வைத்தே எழுதுவதை வைத்தே அவர்களுடைய உள்ளத்தை என்னால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.

அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த சகோதரியின் கடிதத்தை வைத்து எனக்குள் சில முடிவுகள் தோன்றுகின்றன. முதலில் இந்த அம்மையார் மிக சிறந்த குழப்பவாதியாக இருக்க வேண்டும் இவர் மனது சதா சர்வகாலமும் எதையாவது நினைத்து குழம்பிகொண்டும் விபரீத கற்பனைகள் பலவற்றை செய்து கொண்டும் கண்ணுக்கு தெரியாத எதையோ ஒன்றை தேடி கொண்டும் இருக்க வேண்டும். யாருடைய மனதில் அதிகமான குழப்பங்களும் எண்ணங்களும் உற்பத்தி ஆகிறதோ அவர்கள் செயல்படுவதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். மனோ ராஜிதம் செய்வதில் உள்ள சுகம் இவர்களுக்கு செயலில் கிடைக்காது. இதனால் இவர்களால் எடுக்கப்படும் முடிவுகள் பல நடைமுறைக்கு சாத்தியம் இல்லாததாகவும் தோல்விகளை நோக்கி செல்வதாகவும் இருக்கும். சில நேரங்களில் இவர்களின் விபரீதமான முடிவுகளால் வேண்டப்பட்டவர்கள் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய நிலையம் வரும்.

முதலில் இவர்கள் தங்களது மன நிலையை மாற்ற வேண்டும். தன்னை சூழ்ந்து இருப்பவர்களின் வளர்ச்சி திருடபட்டோ முறை தவறிய வழிகளில் செயல்பட்டோ வந்தது அல்ல அறிவாலும் உழைப்பாலும் சமய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளும் திறமையாலும் வந்தது என்ற உண்மையை ஒப்புகொள்ள பழக வேண்டும் அப்படி பழகினால் மட்டுமே மற்றவர்களால் செய்ய முடிந்ததை ஏன் என்னால் செய்ய முடியாது என்று தன்னம்பிக்கை வளர துவங்கும். ஒரு காரியத்தை ஒரு சம்பவத்தை துவங்கும் வரையிலும் சந்திக்கும் வரையில் தான் அதை பற்றிய பயம் இருக்கும் துணிச்சலாக சமுத்திரத்தில் இறங்கி விட்டால் பனைமரத்து உயரத்திற்கு அலைகள் கிளம்பினாலும் சமாளிக்கலாம் சாதிக்க்காம் என்ற துணிச்சல் தானாக பிறந்து விடும்.

பணம் வேண்டாம் என்று இவர் நினைத்தது எதுவரையிலும் இருக்குமென்றால் இவரை கவனித்து கொள்ள யாரவது ஒருவர் இருக்கும் வரையிலும் இருந்திருக்கும். குளத்தில் நீதான் குதிக்க வேண்டும் நீதான் நீந்த வேண்டும் நீயேதான் கரையேற வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்ட உடன் மிக அதிகமாக சம்பாதித்து சேமித்து விட்டு மற்றவர்களின் மரியாதைகளையும் பெற்று விட்டு உடனடியாக ஓய்வெடுக்க வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையிலே பணத்தாசை என்பது இவருக்கு வந்துள்ளது. இந்த உலகில் மனிதன் வாழ்வதற்கு செல்வம் என்பது மிகவும் அவசியம் அதனால் தான் வள்ளுவர் கூட பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்று சொன்னார். ஆனால் அந்த பொருளை சம்பாதிக்க கடின உழைப்பு வேண்டும் கூறிய அறிவு வேண்டும் தனக்கு தெரிந்த தொழில் மிக தீவிரமான ஈடுபாடு வேண்டும். இவைகளை விட மிகவும் தேவையானது பொறுமை.

விடிந்தவுடன் எல்லாம் கிடைத்து விடும் விதைத்தவுடன் அனைத்தும் முளைத்து விடும். என்று நினைப்பது எதிர்பார்ப்பது மிகவும் தவறுதலான வழிமுறையாகும். ஒன்று ஒன்றாகத்தான் பத்து வருமே தவிர ஒரேடியாக பத்து வந்துவிடாது. எனவே ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரையும் காத்திருக்குமாம் கொக்கு என்று சொல்வார்களே அதே போல நமது உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும். அர்ப்பணிப்போடு நேர்மையாக செய்யப்படும் எந்த உழைப்பிற்கும் பலன் இல்லாமல் போகவே போகாது. காலம் சற்று முன்னே பின்னே ஆகலாம் அவ்வளவு தான்.

மேலும் இவர் யார்மீதும் அன்பு செலுத்த முடியவில்லை என்று சொல்வதை பார்க்கும் போது இவர்மீது எனக்கு அளவிட முடியாத இரக்கமும் அனுதாபமும் ஏற்படுகிறது. காரணம் அன்பு செலுத்த முடியாத மனிதன் என்ற ஒரு படைப்பு உலகில் எந்த மூலையிலும் கிடையாது.; குண்டு வைத்து கொத்து கொத்தாக மனித உயிர்களை பறிக்கும் கொடியவன் கூட தனது வாழ்நாளில் யாரவது ஒருவர் மீது அன்பு வைத்தே இருப்பான். ஆனால் இவர் தன்னால் அன்பு காட்ட முடியவில்லை என்று சொல்வது இவருக்குள் இருக்கும் அன்பை இவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதையே நமக்கு காட்டுகிறது.'

இன்னொரு விஷயமும் இருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் தன்னை பற்றி மட்டுமே தன் நலத்தை பற்றி மட்டுமே நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு மற்றவர்களின் உணர்சிகள் தெரியாது. தன் வாழ்க்கையின் மீது அளவற்ற பயம் கொண்டவனுக்கே சதா நேரமும் தன்னை பற்றிய சிந்தனை இருக்கும். அதாவது தான் மட்டும் கஷ்டபடுவதாக நினைப்பவன் முன்னேறுவது மிக கடினம் முதலில் இந்த சகோதரி தனக்குள் இருக்கும் திறமை இன்னெதென்று அடையாளம் படுத்தி கொண்டால் தன் மீது நம்பிக்கை வரும் பிறர் மீது அன்பு வரும் அதன் பிறகு இவர் எதிர்பார்க்கும் எல்லாமே வரும். கடவுளை நம்புங்கள் நீங்கள் எப்போதுமே உயர்ந்த மனிதராக வாழ்வீர்கள்.

இந்த பதிலை படிப்பவர்களுக்கு ஒன்று சொல்ல கடமைபட்டுள்ளேன் இங்கு இந்த அம்மையார் கேட்ட கேள்விக்கு இந்த பதில் சரியான பதில் அல்ல காரணம் இது கேள்விக்கான பதில் அல்ல அந்த அம்மையாருக்கான பதில் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டால் போதும்.





Contact Form

Name

Email *

Message *