Store
  Store
  Store
  Store
  Store
  Store

வேறு வேலை இல்லையா...?


    பெரிதாக சாதிக்கனும்னா எதையாவது இழந்தாகனும் இழப்பதை பற்றி கவலை படுறவன் முன்னேற முடியாது. புறப்பட்ட இடத்திலேயே நின்னு போகவேண்டியது தான் வெற்றிலையின் முனையை கிள்ளி அதன் முதுகில் சுண்ணாம்பை தடவியவாறு மணிவாசகம் இப்படி சொன்னார். 

நீங்க சொல்றது ஒருவிதத்தில சரியாத்தான் படுத்து ஆனா பாழாய் போன மனிஷ மனசு கேட்க மாட்டேன் என்கிறதே? கண்ணுக்கு அகப்படுற அம்புட்டு பேர்லையும் ஆசையை வச்சிபுடுறோம் பின்ன அத மாத்தறதா இருந்தா ரொம்ப கஷ்டமா இருக்கு என்று பற்களுக்கு இடையில் அகப்பட்டு கொண்ட பாக்கு துணுக்கை குச்சியால் தொண்டியவாறு சிவநாதன் சொன்னார்.

ஆசைபடுவது தப்பு இல்ல ஒருவிதத்துல ஆசை இல்லன்னா மனுஷன் முன்னேறி இருக்க மாட்டான். வெயிலா இருக்கே பனியடிச்சாலும் மழைகொட்டினாலும் பிள்ளை குட்டிகள காப்பாத்திக்க ஒரு வழி தெரிஞ்சா நல்லா இருக்குமேன்னு ஆசபடலன்னா இன்னைக்கு வீடு ஏது கோட்டை கொத்தளங்களும் ஏது? ஆசை இருக்கணும் ஆனா அது நியாயமா நீதியா ஒழுங்குமுறைக்கு கட்டுப்பட்டு இருக்கணும். கட்டுபடாத ஆச ஊர எரிச்சிடும். என்று சொல்லிய மணிவாசகம் 

உங்க பேத்தி பொண்ணுக்கு மாப்பிளை பாத்திங்க பையன் அழகா வாட்ட சாட்டமா இருக்கான் அமெரிக்கவுல வேல செய்யுறான் மாசம் அஞ்சி லச்சரூபா சம்பாதிக்ரான் என்கிறது மட்டும் தான் உங்க கண்ணுல தெரிஞ்சது அவன் நல்லவனா கெட்டவனா குடும்பம் எப்படி பட்டது நம்ம பொண்ண வச்சி குடும்பம் நடத்துவானா? என்பது எதுவும் கண்ணுல படல அத பார்க்கவும் நீங்க விரும்பல காரணம் ஆசை அமெரிக்க மாப்பிள என்ற ஆசை.

கடேசில என்னாச்சி கல்யாணமான இரண்டாம் மாசமே பையன் மனநோயாளி பொண்ணை
இம்சை பண்றான் என்பது தெரிஞ்சி ஊட்டுக்கு கூட்டி வந்தாச்சி கள்ளம் கபடம் இல்லாம சிரிச்சி திரிஞ்ச பொண்ணு அழுத கண்ணும் சீந்திய மூக்குமா மூலையில உட்கார்ந்தாச்சி. கொஞ்ச நேரம் ஆசைய தூக்கி தூர வச்சிட்டு நிதானமா சிந்திச்சிருந்தால் ஒரு பொண்ணு வாழ்க்க கெட்டு போயிருக்குமா? என்று சொல்ல ஆரம்பித்தவுடன் சிவநாதனுக்கு சூடுபட்ட பூனையாக இருந்தது. 

என்ன செய்வது எல்லாம் தலவிதி நாம விரும்பியது எல்லாமே நடந்து போச்சின்னா கடவுளுக்கு என்ன வேல இருக்குது. அவன் ஆட்டுகிறான் நாம ஆடுகிறோம். என்று வேதாந்தம் பேசி சமாளிக்க ஆரம்பித்தார். இந்த மணிவாசகத்திற்கு இங்கிதமே கிடையாது எதையாவது ஒன்ன பேசுவாரு சம்மந்தமே இல்லாம நம்ம சமாச்சாரத்த போட்டு உடைப்பாரு. என்று மனசுக்குள் பொருமியும் கொண்டார். 

தலைவிதி என்று நீங்க சொல்லும் போது தான் சில விஷயம் ஞாபகம் வருது எவ்வளவு தான் ஆடுனாலும் அறுத்துகிட்டு ஒடுலாம்னு நெனச்சாலும் அதுவெல்லாம் நடக்குதா? ஐயோ நம்ம சிவநாதன் கவலை படுகிறாரே அவருக்கு ரத்த கொதிப்பு சக்கரை நோயும் இருக்கிறதே அதிகபடியா அவரு கஷ்டபட்ட ஏனோ தானோ என்று ஓடி கொண்டிருக்கும் இதயமும் நின்னு போயிடுமே என்று அந்த கஷ்டத்திற்கு யோசனை இருக்கா? நீ அழுதாலும் சரி வேண்டாம்னு ஒதுக்கினாலும் சரி நான் வந்து தான் தீர்வேன்னு ஒத்தகால்ல நிக்குது நாம என்ன பண்ண முடியும். அனுபவிச்சி தான் தீரனும். சுவற்றில் சாய்ந்தவாறு வெற்றிலையை மடித்து இரண்டு விரல்களில் அழகாக இடுக்கி ஒரு நாட்டிய பெண் போல எழிலார்ந்த பாவத்தில் வெற்றிலையை வாய்க்குள் வைத்த மணிவாசகம் சிவநாதனை பார்த்து சொன்னார்.

சிவநாதன் எதுவும் பேசவில்லை இருவருக்குமிடையில் சிறிது நேரம் மெளனம் நிலவியது. பிறகு தொண்டையை கனைத்தவாறு மணிவாசகமே பேச ஆரம்பித்தார். அது தான் முதலிலையே சொன்னேன் மனுஷன் தான் விரும்பிய எதையாவதை ஒன்றை இழக்க வேண்டிய நிலை வந்தால் தயங்காமல் இழந்துவிட வேண்டும். நான் வைத்திருப்பது எதுவுமே எனக்கானது அல்ல கடவுள் தந்தது அதை அவர் எப்போது வேணுமானாலும் எடுத்துப்பார் என்ற சிந்தனை நமக்கு இருந்தா எந்த பிரச்சனையும் இல்லை என்றார். 

கண்களை மூடி எதோ யோசனையில் ஆழ்ந்திருப்பவர் போல் உட்கார்ந்திருந்த சிவநாதன் தனது ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் கண் புருவங்களை வருடி விட்டவாறே. நீர் எதற்கெடுத்தாலும் என்னையா போட்டு வருத்தேடுக்கிரீர் இதோ பார் உம்மையே குழப்புகிறேன் என்று பேச ஆரம்பித்தார். இழந்தால் தான் பெற முடிம்னு நீங்க சொல்றது ரொம்ப சரி நம்ம ராமாயண ராமன் இருக்கானே அவன் அரண்மனையில இளவரசனா இருந்த போது அவனுக்கு மூனே மூணு தம்பிங்க மட்டும் தான். எப்போ அவன் நாடு வேண்டாம் காடு போதும் என்று வந்தானோ அப்போதே அவனுக்கு ஆறு தம்பிங்க ஆய்ட்டாங்க. சிவநாதனின் குரல் சுருதி சுத்தமான ஒரு வீணையின் லயம் போல இருந்தது. 

மணிவாசகம் அதை ஆமோதித்தார். ராமாயண கூனிய நாம திட்டுறோம். வஞ்சகமே வடிவானவள்ன்னு நம்ம கவிஞர்ங்க பாடுறாங்க ஆனா அந்த கூனி திட்டம் போட்டு ராமன காட்டுக்கு அனுப்பலன்னா என்ன ஆயிருக்கும் ராமன் ஜோரா அயோத்தியோட ராஜாவா இருந்து பத்து ராஜாக்கல்ல இவரும் ஒருத்தர். அப்படின்னு ஆயிருக்கும் அரக்கர்கள் தொல்ல போயிருக்குமா? ராவணனின் சேட்டை ஓய்ந்திருக்குமா? அதிகம் வேண்டாம் நாமெல்லாம் படிச்சு சந்தோசப்பட ராமாயணம் தான் கிடைச்சிருக்குமா? என்றார் 

நான் அப்படி சொல்ல வரவில்லை என்று சொல்லிய சிவநாதன் தனது எண்ணத்தை விளக்கலானார். ராமன் பதவி வேண்டாம்னு காட்டுக்கு போனப்புறம் அவன் நினைச்சதை எல்லாம் அடைந்தான். கங்கையை கடக்கணும்னு நினைச்சான் உடனே குகன் வந்து நின்றான் நாலாபுறமும் சீதையை தேடனம்னு ஆசை பட்டான் அனுமன் வந்து நின்றான் கடலை கடக்க விரும்பியது தான் பாக்கி சமுத்திர ராஜனே வழியை விட்டு பாலம் கட்ட வைத்தான். தனது வீரத்திற்கு இணையான எதிரியோடு மோதனம்னு விரும்பினான் தன்னை விட எதிலும் சளைக்காத ராவணனை எதிரியாக பெற்றான். 

இதை மன்னனாக இருந்து ராமன் சாதிச்சிருக்கலாம் ஆனா அதுல பெருமை இருந்திருக்காது. இவன் கட்டளைக்கு கீழ்படிஞ்சி நடக்க ஆயிரம் பேர் இருந்தாலும் உண்மையான பக்தியோடு பாசத்தோடு செய்றதுக்கு இணையாக வருமா? ராமன் பதவி என்ற ஒன்றே ஒன்றுக்காக ஆசைப்பட்டு இருதால் அத்தனையும் இழந்து போயிருப்பான். வேறு எதையும் அவனால் பெற்றிருக்க முடியாது. என்று தனது அறிவும் மணிவாசகத்தின் அறிவுக்கு குறைந்தது அல்ல என்று நிருபிக்கலானார்.

அப்படின்னா ராமன் பதவியை இழந்து புகழை பெற்ற மாதிரி நாமும் எதையாவது ஒன்ன இழந்து பலத பெரலாம்னு சொல்றிங்களா? என்று அப்பாவியாக கேட்பது போல் மணிவாசகம் கேட்டார். ஆமாம் என்று அதற்கு பதில் சொன்னார் சிவநாதன் அற்பமான பதவியை இழந்ததற்கே ராமனுக்கு இத்தனை கிடைச்சதுன்னா பதவியை விட ரொம்ப பெரிசான உயிரை இழந்தால் இன்னும் அதிகமா நாம பெறலாமே என்று ஒரு குதர்க்க கேள்வியையும் இடையில் தூக்கி போட்டார் மணிவாசகம். இதனால் சிவநாதன் சற்று அயர்ந்து விட்டாலும் சமாளித்து கொண்டார். 

பசியா கிடக்றவன் உண்ணாவிரதம் இருந்தால் பெருமை இல்ல ஆண்மை இல்லாதவன் சன்யாசம் போனா சிறப்பு இல்ல எல்லா இருந்தும் வேண்டாம்னு போனாத்தான் சிறப்பு பெருமை வரும் காட்டுக்கு போன்னு கைகேயி சொன்னவுடன் ராமன் மறுத்திருக்கலாம். தசரதனே கட்டளை போட்டால் கூட மக்கள் செல்வாக்கு தனக்கிருக்குன்னு போராடி இருக்கலாம் ஆனால் ராமன் அப்படி செய்யல அப்பா சொல்லுக்கு மறு சொல்லு இல்லன்னு அமைதியா போனான் அதே போல வாழுறதுக்கு எல்லாம் இருந்தும் வாழ்க்கையே வேண்டாம்னு போனாதான் பெரும நாளைக்கே செத்து போற நோய வச்சிக்கிட்டு நாட்டுக்காக உசுர கொடுப்பேன்னா நாலு பேரு சிரிப்பான். 


நீங்களும் நானும் வயசாகி போன கிழடுகள் இனி நான் திருந்தியோ நீங்க திருந்தியோ ஆகபோறது ஒண்ணுமில்ல நம்மளோட வாரிசுகள திருத்தணும் அதுக்காக பாடுபடணும் அப்படி திருத்ரதுல நாம எதையாவது இழந்தோம்னா அது பெரும அப்படி நாம ஒரு முடிவு செய்வோம் அதுல எதாவது நல்லது நடக்கான்னு பாப்போம் என்று சிவநாதன் சொன்னார். மணிவாசகம் அமைதியாக வெற்றிலை மென்றார் வாயில் ஊறிய எச்சிலை உதட்டில் இரண்டு விரல்களை அழுத்தி நீட்டமாக எட்டி துப்பினார். அவர் துப்பிய வேகத்தில் சிதறிய எச்சி பக்கத்தில் படுத்திருந்த நாயின் மேல் பட்டது. அமைதியாக படுத்திருந்த நாய் இருவரையும் உங்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்பதை போல் பார்த்து விட்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தது.

Contact Form

Name

Email *

Message *