Store
  Store
  Store
  Store
  Store
  Store

சின்ன வீட்டுப் பொங்கல் !




   னசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சூரியன் வருகின்ற நாளை மகரசங்கராந்தி என்று நாடு முழுவதும் கொண்டாடுகிறார்கள். அந்த நாளை நமது தமிழ்நாட்டில் சூரியனை வழிபடும் நாளாக பொங்கல் திருநாளாக கொண்டாடி மகிழ்கிறோம். பொதுவாக பொங்கல் அன்று அதிகாலையில் குளித்து முடித்து புத்தாடை அணிந்து பச்சரிசி, வெல்லம், நெய் கலந்து உதயசூரியனுக்கு பொங்கலிட்டு வணங்குவது நமது மரபு. கேள்வி என்னவென்றால் பொங்கல் நாளில் காலை நேரம் மட்டும் தான் வழிபாடு நடத்த வேண்டுமா? இரவு நேரமும் நடத்தலாமா


     பொங்கல் என்பது சூரியனை வழிபடுகின்ற தினமல்ல அது தமிழர்களின் வருடபிறப்பு திருநாள் என்று ஒருசாரார் கடந்த காலங்களில் ஒரு புது வழக்கத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி இருந்தார்கள். ஆயிரம் திட்டங்கள் தீட்டி பழைய மரபுகளை ஒழித்து கட்டிவிட வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்தாலும் கடேசியில் வெல்வது சத்தியம் மட்டுமே என்பதை இன்று மீண்டும் பொங்கல் பொங்கலாக மட்டுமே கொண்டாட படுவதிலிருந்து தெரிகிறது. 

தமிழ் வருட கணக்குப்படி ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசி வீட்டிற்கும் செல்வது வழக்கம் இன்னும் சொல்ல போனால் பனிரெண்டு ராசிகளும் பனிரெண்டு மாதங்களே ஆகும். இப்படி வழக்கமாக நடக்கும் சூரிய பெயர்ச்சியை தைமாதம் மட்டும் சிறப்பாக கொண்டாட வேண்டுவதின் காரணம் என்ன? என்ற கேள்வி இளையவர்கள் பலருக்கு தோன்றும். 

உழவன் நிலத்தில் நடத்தி செல்கின்ற எர் முனையில் தான் உலகம் சுழல்கிறது என்று வள்ளுவர் சொல்கிறார். உழவனின் ஏரோட்டம் நின்றுபோனால் தேரோட்டமும் நின்றுவிடும். அதாவது உலக மாந்தரின் வாழ்க்கை முழுவதுமே அஸ்தமனத்தை நோக்கி நகர துவங்கி விடும். அப்படி பட்ட உழவன் உழுது பயிரிட்டு அறுவடை செய்து அதை தனது இல்லத்திற்கு கொண்டு செல்கின்ற மாதம் இந்த தை மாதம். 

உழவன் உழுது பாடுபட்டிருக்கலாம் வியர்வையை நிலத்தில் சிந்தி மணிகணக்காக உழைத்திருக்கலாம். எத்தனை உழைப்பு இருந்தாலும் இயற்கையின் ஒத்துழைப்பு இல்லை என்றால் அத்தனையும் அர்த்தமற்றதாகி விடும். சூரியனிலிருந்து கிடைக்கின்ற சக்தியே பயிராக உணவாக பரிணாம் எடுக்கிறது. எனவே ஒன்றை நூறாக்கி ஒவ்வொன்றையும் தானிய மணியாக்கி நம் கையில் தருவது சூரியன். அதனால் தான் தை மாத சூரிய வரவை உழவன் நன்றியோடு பொங்கலிட்டு சூரிய தேவனை வணங்குகிறான். 

தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று பொங்கலில் மூன்று நாட்கள் வருகிறது. முதல் பொங்கலான தை பொங்கலில் உழவன் சூரியனுக்கு நன்றி செலுத்தி தனது உழைப்பின் பயனை பார்த்து பூரிக்கிறான். அடுத்து வரும் மாட்டு பொங்கலில் தான் மட்டும் உழைக்க வில்லை தன்னோடு சேர்ந்து சில வாயில்லா ஜீவன்களும் உழைத்தது அவைகளுக்கும் இளைப்பாறுதல் கொடுக்க வேண்டும் நன்றி செலுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் பொங்கல் வைத்து மகிழ்கிறான். தனக்கும் தனது தோழனான மாட்டிற்கும் நன்றி செலுத்தியவுடன் தன்னோடு கூட உழைத்த சக மனிதர்களை பற்றிய நினைவு அவனுக்கு வருகிறது. அதனால் தனது அன்பர்களை நண்பர்களை காண்பதற்காக ஒரு பொங்கல் விருந்து வைக்கிறான் அதன் பெயரே காணும் பொங்கல். தன்னையும் மெச்சி தனது துணையையும் பாராட்டி சொந்தபந்தங்களையும் அழைத்து மகிழும் உழவனின் உயர்ந்த பண்பை காட்டுவதே இந்த பொங்கல்.

இந்த மூன்று பொங்கல்களையும் அதிகாலை நேரம் மட்டுமே செய்ய வேண்டும். சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபட்ட அன்று இரவு நடு வீட்டிற்குள் அனைத்து விதமான காய்கறிகளை கொண்டு சமைத்து முன்னோர்களுக்கு படைத்து வழிபட வேண்டும். இதை பிதுர் பொங்கல் என்று சொல்லா விட்டாலும் ஏறக்குறைய அந்த பொருளை தான் இதற்கு கூற வேண்டும். இரவு நேரத்தில் வைக்கப்படும் பொங்கல் முன்னோர்களுக்கானது என்று பழம் தமிழர்கள் நம்பினார்கள். அதன் படியே வழிபட்டார்கள். நாமும் அப்படி வழிபடுவதில் தவறு இல்லை.

   ந்த மூன்று பொங்கல் அல்லாது சிறுவீட்டு பொங்கல் என்று நான்காவதாக ஒரு பொங்கல் சொல்லபடுகிறதே அப்படி என்றால் என்ன? அந்த பொங்கலை எப்போது கொண்டாட வேண்டும்? 

   காலங்கள் தோறும் வார்த்தைகள் மாறுபட்ட பொருளை கொடுத்து கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் சிறிய வீடு என்றால் அது அளவில் சிறியதாக இருக்கும் வீட்டையை குறிக்கும். ஆனால் இப்பொழுது சின்ன வீடு என்று யாரவது சொன்னால் விகல்ப்பமான அர்த்தமே செய்ய படுகிறது. அதே போலவே சிறுவீட்டு பொங்கல் என்பது இளையதாரத்தின் வீட்டில் செய்கின்ற பொங்கல் என்று சிலர் தவறாக எடுத்து கொள்கிறார்கள். இது முற்றிலும் தவறு.

சிரிய குழந்தைகள் ஆற்றோரத்தில் அல்லது கடல்கரையில் கட்டி விளையாடும் வீட்டை மணல் வீடு என்று சொல்வோம். ஒவ்வொரு மணல்வீடும் குழந்தைகளின் கலையார்வத்தை பிரதிபலிப்பதாக இருப்பதை காணாலாம். இப்படி மண்வீடு கட்டி விளையாடுகின்ற குழந்தைகளுக்காக கொண்டாடபடுகிற பொங்கலே சிறு வீட்டு பொங்கல் என்று அழைக்கப்படும்.

உழவு தொழிலை செய்கின்றவனின் மனம் எவ்வளவு விசாலமானது என்பதை பாருங்கள். தன் உழைப்பை பாராட்டினான் தன்னோடு துணை நின்ற வீட்டு விலங்குகளின் உழைப்பையும் பாராட்டினான் உறவினர்களை அழைத்து அவர்களுக்கு விருந்து படைத்து அவர்களையும் மனம் குளிரும்படியும் செய்துவிட்டால் போதுமா? தனது எண்ணத்தை தனது நோக்கத்தை தனது குடும்ப பாரம்பரியத்தை வருங்கலத்திற்கு எடுத்து செல்வது குழந்தைகள் அல்லவா? அவர்களின் மனதையும் குளிரும்படி செய்ய வேண்டியது அவனது கடமை தானே எனவே தான் சிறு குழந்தைகளுக்காக சிறுவீட்டு பொங்கலை செய்து மகிழ்கிறான்.

சிறுவீட்டு பொங்கல் தைமாதத்தில் வரும் எதாவது ஞாயிற்று கிழமை கொண்டாட படவேண்டும். எந்த ஞாயிறு கொண்டாடுகிறோமோ அன்று அதிகாலையில் வீட்டு வாசலை பெருக்கி சுத்தம் செய்து சாணம் தெளித்து கோலம் போட்டு கோலத்தின் நடுவில் சாண பிள்ளையாரை பிடித்து உட்கார வைக்க வேண்டும். பிறகு பூவரசம் பூ, பூசணி பூ, செம்பருத்தி பூ போன்ற மலர்களால் அலங்காரம் செய்து வீட்டு சமயலறையில் மண்பானையில் வைத்த பொங்கலை முற்றத்தில் கோலம் நடுவில் இருக்கும் சாண பிள்ளையாருக்கு படைத்து வணங்க வேண்டும். 

மிக முக்கியமாக இந்த பொங்கலில் நம் வீட்டு குழந்தைகள் பக்கத்து வீட்டு குழந்தைகள் என்று நமக்கு தெரிந்த அனைத்து குழந்தைகளையும் கலந்து கொள்ள செய்து அவர்களுக்கு சக்கரை பொங்கலும் வேறு நம்மால் முடிந்த பரிசு பொருள்களும் கொடுத்து மகிழ்விக்க வேண்டும். குழந்தையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள் அப்படிப்பட்ட குழந்தைகளை மகிழ்ச்சி அடைய செய்தால் நம் வாழ்நாள் முழுவதும் இன்பம் மட்டுமே கூட வரும். 

   சிறுவீட்டு பொங்கல் சமயலறையில் செய்ய வேண்டுமென்று சொல்லிவிட்டீர்கள் ஆனால் பொதுவாக பொங்கலிடுவது எப்படி என்று விளக்கமா தரவில்லையே? 

    இன்று எல்லாம் நாகரீகமயமாகி விட்டது பழைய பழக்க வழக்கங்கள் நடைமுறைகள் அனைத்துமே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு விடும் அபாயமும் வந்துவிட்டது. புதுமைகள் என்பது தேவையற்ற பொருளல்ல அதற்காக பழமைகளை முற்றிலுமாக ஒழித்து விட்டு புதுமைகளை மட்டுமே கொண்டுவருவது நல்லதல்ல அபாயமமும் ஆகும். 

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பல தமிழர்களின் வீடுகளில் விறகடுப்பே இருந்தது. மண் பானைகளே அதிகமாக புழங்கபட்டது. இன்று நிலைமை தலைகீழாக மாறி எரிவாயுவில் சமைக்கும் நிலை வந்துவிட்டது. இன்றைய மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போய் பலவித வியாதிகள் வருவதற்கு இதுவும் ஒரு காரணம். உண்ணும் உணவு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை அனைத்தும் நாராயணனே என்று சொல்வார்கள். ஆனால் இன்று இவைகள் அனைத்தும் ரசாயனமாகி விட்டது. பொங்கல் திருநாளில் மட்டுமாவது அத்தகைய ரசாயனத்தை குறைக்க பழக வேண்டும். 

தைமாதம் ஒன்றாம் தேதி சூரிய உதய நேரத்தில் பொங்கல் வைக்க வேண்டும். வீட்டு வாசலில் தலைவாழை இலை போட்டு அதன் இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும் நாழியின் உச்சி வரை கோபுரம் போல நெல் இருக்க வேண்டும். இலை முழுவதும் பச்சரிசி பரப்பி அதன் மேல் கத்தரிக்காய், கருணை கிழங்கு சிறு கிழங்கு, வள்ளி கிழங்கு, அவரைக்காய், சீனி அவரைக்காய், பூசணி தண்டு, வெற்றிலை, பாக்கு, வாழை பழம், முழு கரும்பு, மஞ்சள் கிழங்கு போன்றவை வைத்து குத்துவிளக்கு ஏற்றி சூரிய தேவனை கற்பூரம் தீபம் காட்டி வணக்க வேண்டும். அந்த நேரம் அவரவர் குல தேவதையும் முன்னோர்களையும் மனதில் நினைத்து வழிபட வேண்டும். ஆக பொங்கல் என்பதே நமக்கு உதவி செய்யும் மகிழ்ச்சியை தரும் அனைவருக்கும் அனைத்துக்கும் நன்றி பாராட்டுகிற விழா என்றால் அதில் மிகை இல்லை.


Contact Form

Name

Email *

Message *