Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆப்பிரிக்க வறுமை நமக்கு வேண்டுமா?


    றைவனால் படைக்கப்பட்ட மனிதன் வாழவேண்டுமானால் அவனுக்கு உடம்பும் உயிரும் அவசியம் தேவை. உயிர் இருந்தால் தான் உடம்பு இயங்க முடியும். உயிர் இருந்தால் தான் அறிவும், மனதும் செயல்படும். உயிர் இருந்தால்தான் உலகத்தின் இயக்கமே தங்கு தடையில்லாமல் நடைபெறும் எனவே உயிர் என்பதே மிக உயர்ந்த பொருள் என்று சிலர் கருதுகிறார்கள். உயிர் அவசியம் தான் ஆனால் அந்த உயிர் மட்டும் இருந்தால் போதுமா? உடம்பு என்ற ஸ்தூல பொருள் இருந்தால் தானே உயிர் அதில் தங்கி செயலாற்ற முடியும். உடம்பு இல்லாத உயிர் இருந்தென்ன போனாலென்ன என்றும் சிலர் மறுத்து வாதிடுகிறார்கள். இதில் வாதம் செய்வதற்கு ஒன்றுமே இல்லை உலகில் வாழவேண்டுமானால் இரண்டுமே தேவை ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை. 

மனிதனை போலவே ஒவ்வொரு தேசத்திற்கும் உடம்பும், உயிரும் தேவை. உடம்பு என்பது சுதந்திரம். உயிர் என்பது ஜனநாயகம் இவை இரண்டும் இல்லாத நாடு எத்தனை செல்வவளம் பெற்றிருந்தாலும் கூட காலநீரோட்டத்தில் நிற்க முடியாமல் அழிந்து போகவேண்டிய நிலை வரும். எனவே மக்கள் ஒவ்வொருவரும் தேசத்தினுடைய சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் எந்தபாதிப்பும் இல்லாமல் காப்பாற்றுவதற்கு நேரம் காலம் பார்க்காமல் பசி தூக்கமில்லாமல் தயாராக இருக்க வேண்டும் இந்த இடத்தில் ஒரு கேள்வி வரும். உலகத்தின் ராஜகுருவாக கருதப்படும் பாரத தேசமென்ற நம் நாட்டில் உடம்பாகிய சுதந்திரமும் உயிராகிய ஜனநாயகமும் சேதமில்லாமல் இருக்கிறதா? என்பதே அந்த கேள்வியாக இருக்கும். 

அறுபதுகளின் ஆரம்பத்தில் நயவஞ்சகம் மிகுந்த சீனா நமது நாட்டை தாக்குவதற்கு வந்தபோது பிரதமர் நேரு மீது ஆயிரம் கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் கூட அவைகளை எல்லாம் பரண்மீது தூக்கி போட்டுவிட்டு நேருவின் பின்னால் ஒட்டுமொத்த தேசமே அணிவகுத்து நின்றது. அதன்பிறகு நடந்த இந்திய பாகிஸ்தான் சண்டைகளில் நான் ஆந்திரன், நான் மராட்டியன், நான் காஷ்மீரி, நான் தமிழன் என்ற பேதமில்லாமல் இந்தியா முழுவதுமே பாகிஸ்தானுக்கு எதிராக எழுந்து நின்றது. சமீபத்தில் நடந்து முடிந்த கார்கில் யுத்தத்தில் கூட இந்திய ஒற்றுமையை கண்ணெதிரே கண்டோம். இவைகளை வைத்து பார்க்கின்ற போது இந்தியாவின் சுதந்திரத்திற்கு பெரிய ஆபத்து எதுவும் இல்லை. ஆபத்து ஏற்படுத்தும் எண்ணமே எதிரிகளுக்கு வராது. வந்தாலும் எதிரி நாடுகள் தாங்காது என்பது தெரியவருகிறது. 

பாகிஸ்தான் ராணுவம் எல்லைமீறி வந்து நம்நாட்டு இராணுவ வீரர்களின் கழுத்தை அறுத்துவிட்டு போகிறது. நமது எல்லைக்குள் புகுந்து சீனா ரோடு போடுகிறது பங்களாதேஷின் ஊடுருவல்கள் ஒருபுறம் நடக்கிறது. நமது நாட்டு மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்படுகிறார்கள் இவ்வளவும் நடக்கும் போது இந்தியாவிற்கு பாதகமில்லை. இந்திய சுதந்திரம் பாதுகாப்போடு இருக்கிறது என்று எப்படி நம்ப முடியும்? என்று சிலருக்கு தோன்றும் இவைகள் கவலைப்படக்கூடிய சம்பவங்களே தவிர அச்சப்படக்கூடிய விவகாரங்கள் கிடையாது. உறுதியாக உட்கார்ந்து பேசினால் சரிசெய்து விடலாம் அதனால் தான் உறுதியாக கூறுகிறேன் இந்திய சுதந்திரம் பாதுகாப்போடு இருக்கிறது என்று ஆனால் நமது ஜனநாயகம் பாதுகாப்போடு இருக்கிறதா? என்பதை மிகுந்த கவலையோடு ஆராயவேண்டிய நிலையில் இன்று நாம் இருக்கிறோம். 

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் திருவிழா வெகு விமர்சையாக நடந்துகொண்டிருக்கிறது இன்னும் பத்து நாட்களில் நமது நாட்டின் அடுத்த தலைவர் யார் என்பது தெளிவாக தெரிந்து விடும். அப்படி தெரிவதற்கு முன்னால் இப்போது நம் கண்ணெதிரே நடந்துகொண்டிருக்கும் ஜனநாயக யுத்தமான தேர்தலை பற்றி இதன் குளறுபடிகளை பற்றி மிக தீவிரமாக சிந்திக்க வேண்டும். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது பாரதம் ஜனநாயக பரிசோதனையை எந்தவகையில் மேற்கொள்கிறது என்பதை பார்த்தால் நமக்கு அதிர்ச்சியும் அழுகையும் ஒருசேர வருகிறது 

பெரியளவில் நமது மக்களிடத்தில் பொறுப்புணர்ச்சி கிடையாது. விழிப்புணர்வை பற்றி கேட்கவே வேண்டாம் கிலோ எத்தனை ரூபாய் என்று நம்மிடமே விசாரிக்கும் அளவிற்கு தான் நாட்டை பற்றிய விழிப்புணர்ச்சி மக்கள் மத்தியில் நிலவுகிறது இத்தகைய பாமர ஜனங்களை, அரசியல்வாதிகள் மிக சுலபமாக வசீகரித்து விடுகிறார்கள். இலவசங்கள் கவர்ச்சிகரமான நாட்டுநலனை சிந்திக்காத வாக்குறுதிகள் என்று சகட்டுமேனிக்கு மக்கள் மத்தியில் தெளிக்கப்பட்டு அவர்கள் நம்பவைக்க ப்படுகிறார்கள். உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் தமிழ்நாட்டில் நிரந்தர தலைவலியாக இருந்து வருகிற காவேரி பிரச்சனை, பெரியாறு அணைப்பிரச்சனை, மின்சாரம் மற்றும் சுகாதார பிரச்சனைகளை பற்றி யாரும் சிந்திக்க கூடாது கேள்விகள் கேட்க கூடாது என்று இலவச தொலைக்காட்சி, இலவச கிரைண்டர், மிக்ஸி ஆடுமாடு என்று அறிவிப்புகள் செய்து மக்களை திசைதிருப்ப அரசியல்வாதிகள் போராடினார்கள். 

தற்போதைய தேர்தல் அலுவலர்கள் ஒட்டு வாங்குவதற்காக நோட்டு நீட்டக்கூடாது என்கிறார்கள். தேர்தலில் பணம் மட்டும் நடமாடினால் ஜனநாயகத்திற்கு மதிப்பில்லாமல் போய்விடும் என்கிறார்கள் அவர்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சரி பணம் கொடுத்து ஒட்டு கேட்பதற்கும் நான் வெற்றிபெற்றால் இந்த பொருட்களை இலவசமாக தருகிறேன் என்பதற்கும் பெரியதாக என்ன வித்தியாசம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இலவச திட்டங்கள் அறிவிப்பதும், ஓட்டுக்காக பணம் கொடுப்பதும் சட்டப்படியும் தர்மப்படியும் குற்றமாகும். இது ஜனநாயகத்திற்கு ஏற்றமுறையல்ல பணம் கொடுத்து வெற்றியை வாங்கி விடலாம் என்று நினைப்பது போலவே, இலவச அறிவிப்புகள் என்பதும் ஒரே மாதிரியான ஊழலை வளர்க்க கூடிய அரசியலே. 

ராஜீவ் காந்தி காலம் துவங்கி மிக குறிப்பாக சொல்லவேண்டுமானால் சபானு வழக்கு வெளிவந்த காலம் முதல் ஓட்டுவங்கி அரசியல் இந்தியாவில் துவங்கிவிட்டது எனலாம். அந்த அரசியல் இன்று முற்றிப்போன நிலைக்கு வந்திருக்கிறது கட்சிபாகுபாடு இல்லாமல் சிறுபான்மை மக்களையும், பெரும்பான்மை மக்களையும் பிரித்தாளும் சூழ்ச்சி கச்சிதமாக செய்கிறார்கள் தங்களது அரசியல் லாபத்திற்காக தேச நலனையே குழிதோண்டி புதைக்கும் வண்ணம் இரண்டுதரப்பு மக்களுக்கும் கொம்பு சீவி விட்டு ரத்தம் குடிக்கும் ஓநாய்களை போல அரசியல் தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள். 

அரசியல்வாதிகள் சட்டவிரோதமான வியாபாரிகள் அரசு அலுவலர்கள் இவர்கள் மத்தியில் ரகசியமான கூட்டுறவு நிலவுகிறது. இவர்கள் மூவரும் இணைந்து நடத்துவதே தற்போதைய அரசியல் என்பது தெளிவாக தெரிகிறது. கள்ள வியாபாரத்தின் மூலம் வருகின்ற பணம் அரசியல்வாதிகளின் கைகளில் சென்று சரணடைகிறது. பணத்தை பதுக்குவதற்கான வழிகளையும் பெருக்குவதற்கான யுத்திகளையும் அதிகாரிகள் செய்து கொடுக்கிறார்கள். இதுதான் இப்போதைய அரசு நிர்வாகம் என்ற நிலை இருக்கிறது. 

ஏமாற்றும் அரசியல்வாதியும், ஏமாறும் பொதுஜனமும் இருக்கும் நாட்டில் ஜனநாயகம் என்பது ஆரோக்கியத்தோடு இருக்கும் என்று யாரும் கூறிவிட முடியாது. எனவே துணிந்து சொல்லலாம் நமது நாட்டு ஜனநாயகம் மரணபடுக்கையில் கிடக்கிறது. இதற்கு புத்துயிர் கொடுக்கும் பொறுப்பு பாரத மக்களாகிய நமது ஓவ்வொருவர் கையிலும் இருக்கிறது. ஆனால் நாம் எப்படி இருக்கிறோம் தாயார் நோயில் படுக்கையில் கிடக்கும் போது சுற்றி உட்கார்ந்து சினிமா கதையை பேசும் பிள்ளைகளை போல நமது நாட்டின் உயிரான ஜனநாயகத்தின் கதியை மறந்து பொழுதுபோக்கிலும், சுயநலத்திலும், பொறுப்பில்லாமலும் வாழ்ந்து வருகிறோம். 

அநீதியை கண்டால் தடுக்கும் எண்ணம் நமக்கில்லை யார் எக்கேடு கெட்டாலும் கவலை இல்லை. நமது வேலை சரியாக நடக்கிறதா அது போதுமென்ற மனோபாவம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அரசியல்வாதியும், முதலாளிகளும் அபாயமானவர்கள் அவர்களை தட்டிக்கேட்டால் நம்மை கட்டிபோட்டு விடுவார்கள் வெட்டி வீழ்த்தி விடுவார்கள் என்று அஞ்சுகிறோம். இந்த அச்சமும், பயமும் நமது பாட்டனுக்கும் அப்பனுக்கும் இருந்திருந்தால் வெள்ளைக்காரனின் துப்பாக்கிக்கு எதிராக மார்பை திறந்து காட்டியபடி நடந்திருப்பார்களா? வருங்கால சந்ததி அடிமையாக கிடந்தால் என்ன?  நாம் சுகமாக வாழ்வோம் என்று வாழ அவர்களுக்கு தெரியாதா? 

காலம் இப்படியே உருண்டு போனால் நமது குழந்தைகள் துப்பாக்கி முனையில் காலம் தள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள். எதிராளியை கொலை செய்தால் தான் அடுத்தவேளை சோறு என்ற நிலை அவர்களுக்கு வரும். ஆப்பிரிக்க கிராமங்களில் தாண்டவமாடும் வறுமையும், வன்முறையும் நமது தாம்பரத்திலும் தர்மபுரியிலும் நடக்கும். எனவே இப்போதே விழித்து கொள்ள வேண்டும் நல்ல தலைவரை அவர் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் அவரை முன்னுக்கு கொண்டுவரும் வேலையை நாம் செய்யவேண்டும். தேசத்தை நேசிப்பவர் கையில் நாடிருந்தால் தான் நாட்டை நல்வழிப்படுத்தமுடியும். பதவிக்கும் பணத்திற்கும் அலைபவர் கையில் நாடு சென்றால் பாதிப்பு தலைவர்களுக்கல்ல நமக்கு...









Contact Form

Name

Email *

Message *