Store
  Store
  Store
  Store
  Store
  Store

தமிழன் மட்டும்தான் திராவிடனா...?

கேள்வி 4


    ந்தியாவின் வடக்கில் இருக்கும் மனிதர்கள் அனைவரும் ஆரியர்கள். தெற்கில் இருப்பவர்கள் அனைவரும் திராவிடர்கள் என்று ஆரம்பத்தில் சொன்னார்கள். இவர்களது இந்த வாதத்தை தமிழ்நாட்டில் சிலர் காதுகொடுத்து கேட்டார்களே தவிர ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ. கேரளத்திலோ யாருமே இதை பொருட்படுத்த வில்லை. நாங்கள் திராவிடர்கள் என்று தமிழர்களை தவிர யாரும் கூறவில்லை. ஒரு கேரளத்தான் தன்னை மலையாளி என்று கூறிக்கொள்வானே தவிர ஒருபோதும் திராவிடன் என்று கூறமாட்டான். எனவே தென்னிந்தியா திராவிடர்களின் இருப்பிடம் என்ற கட்டுக்கதை செல்லுபடி ஆகாது என்பதை உணர்ந்து தற்கால திராவிட பரிவாரங்கள் தங்களது பிரச்சார பயணத்தை வேறு வகையில் மாற்றினார்கள்.

வடக்கில் இருப்பவன் ஆரியன் என்றால், அவனே திராவிடர்களின் எதிரிகள் என்றால், அருகில் இல்லாத பகையாளி மீது தமிழனை கொம்பு சீவி விட முடியாது. எனவே பகையை பக்கத்தில் உருவாக்க வேண்டும் என்பதற்காக, பிராமணர்கள் என்பவர்கள் ஆரியர்கள் என்ற புதுக்கதையை ஜோடித்தார்கள். படித்தவர்கள், அரசு வேலைகளில் அதிகமாக இருப்பவர்கள் நம்மை ஆதிக்கம் செலுத்துபவர்கள் என்று பிராமணர்களின் மீது தமிழ்நாட்டில் ஒரு சாராருக்கு எப்போதுமே காழ்ப்புணர்ச்சி உண்டு. அந்த காழ்ப்புணர்ச்சியை வளர்த்துவிட்டு பிராமணர்கள் தவிர அனைவரும் திராவிடர்களே என்ற அரசியல் வேள்வியை வெற்றிகரமாக சில சக்திகள் வளர்க்க ஆரம்பித்தன. பிரிட்டீஷ்காரனின் ஆதிக்கத்திற்காக உருவாக்கப்பட்ட திராவிட மாயை, நாடககாரர்களின் பதவி சுகத்திற்காக பயன்படுத்தப்பட்டது. உணர்ச்சிவசப்படும் தமிழ் ஆர்வலர்கள் திராவிட மாயையில் இன்னும் மயங்கி கிடக்கிறார்கள். அந்த        மாயப்பிசாசை பாரதி சொல்வதை போல் பயமென்னும் பாம்பை பிடிப்போம் பொய்மை வாயை பிளந்து உயிர் குடிப்போம் என்றானே அதைப்போல செய்யவேண்டிய காலம் வந்துவிட்டது.

கேள்வி:-   திராவிடம் பற்றிய குறிப்புகள் சமஸ்கிருத இலக்கியங்களில் எந்த வகையில் கூறப்பட்டுள்ளது என்பதை எங்களுக்கு கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவே அதை விளக்கமாக எங்களுக்கு கூறவும்.

குருஜி:-  விந்திய மலைக்கு தெற்கே உள்ள பகுதியை திராவிட நாடு என்று பண்டையகால மக்களும், நூல்களும் கருதியதாக உரையாடலின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டேன். பல வேத இலக்கியங்களில் இதே கருத்து மிக தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் ஸ்ரீ மத் பாகவதம், சத்திய விரதன் திராவிட தேசத்தின் சீரிய மன்னன் என்ற ஒரு பதத்தை கூறுகிறது. வடக்கே இருப்பவர்கள் திராவிடர்களின் எதிரி என்றால் பகுத்தறிவு சங்கத்தார் கூறுவது போல இந்துமதம் என்பதே திராவிடர்களை இழிவுபடுத்தும் மதம் என்பது உண்மையானால் திராவிட தேசத்து மன்னன் ஒருவனை அந்த இலக்கியம் ஏன் பாராட்ட வேண்டும்?

கடவுள் நாராயணன் பத்து அவதாரங்கள் எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன. இதில் முக்கியமான மச்ச அவதாரம் வைகை நதியில் இருந்து அதாவது ஒரு காலத்தில் மதுரையில் செழுமையாக ஓடி இன்று அரசியல்வாதிகளால் ஆக்கிரமிக்கப் பட்டு குறுகி இளைத்து மெலிந்து கிடக்கிறதே அதே வைகையில் தான் பகவானின் மச்ச அவதாரம் உருவானதாக சொல்லப்படுகிறது. பகவான் விஷ்ணு, கஜேந்திரன் என்ற யானையை காப்பாற்றியதாக கூறப்படுகிறதே அந்த கஜேந்திரன் பூர்வ ஜென்மத்தில் பாண்டியநாட்டை சேர்ந்த வைஷ்ணவனாக இருந்தவன். அவன் அரசனும் கூட. அவனது நாடு திராவிட நாடு என்று பாகவத புராணம் அழகாக சொல்கிறது. பகவான் கிருஷ்ணனின் அண்ணனும் அவதாரங்களில் ஒருவரான பகவான் பலராமர் தீர்த்தயாத்திரை சென்ற போது திராவிட நாட்டில் உள்ள வேங்கடமலை, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், தென்மதுரை, ராமர் அமைத்த சேதுபந்தம் ஆகிய இடங்களை பார்த்து விட்டு காவேரி நதியில் புனித நீராடியதாக பாகவதம் கூறுகிறது. அதே பாகவதம் தாமிரபரணி, கிருதமாலா என்ற வைகை நதி, பயஷ்வினி என்ற பாலாறு, காவேரி, மகாநதி போன்ற நதிகளின் தீர்த்தங்களை அருந்தியவர்கள் சிறந்த பக்தர்களாக வருவார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. இதைவிட முக்கியமானது பகவான் கிருஷ்ணனின் மகன் ஒருவனுக்கு திராவிடன் என்ற பெயர் உண்டு என்பதாகும்.

கேள்வி:-   இதுவரையில் திராவிடன், திராவிடர் என்றாலே வடக்கில் உள்ளவர்கள் மதிக்க மாட்டார்கள். பிராமண இலக்கியங்கள் எதுவும் திராவிடத்தை போற்றுவது இல்லை. இரண்டாம் தரமாகவே தமிழர்களை அவர்கள் பார்க்கிறார்கள் என்று இரண்டுகழகங்களும் மாறி மாறி சொல்லி வந்தததை கேட்டிருக்கிறோம். அவர்கள் கூறுவது பொய். அதில் எள்ளளவு கூட உண்மை இல்லை என்று ஆரம்ப காலத்திலேயே யாராவது விளக்கம் கூறி இருந்தால் ஓரளவு விபரீதங்கள் தடுக்கப் பட்டிருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை திராவிட பரிவாரங்களின் கைகளில் இருந்த சினிமா என்ற ஊடகமும், வெகுஜன பத்திரிக்கை என்ற ஊடகமும் மாற்றுக்கருத்தை வெளியில் தெரியாத வண்ணம் இருட்டடிப்பு செய்திருக்கலாம். இப்போதாவது உங்களை போன்றவர்கள் விழித்துக்கொண்டு செயல்பட்டால் எங்களை போன்றவர்களுக்கு தெளிவு கிடைக்கும்.

எங்களுக்கு அடிப்படையாக இன்னொரு சந்தேகமும் இருக்கிறது. தமிழர்களின் பண்பாடும், வாழ்வும் இந்து தர்மத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது எனவே அதுவே திராவிடர்கள் என்பவர் தமிழர்கள் என்பதற்கு சரியான உதாரணம் என்றும், தமிழ் இலக்கியங்களில் அதிகமாக இந்து சமய கருத்துக்கள் எதுவும் கிடையாது. மிக குறிப்பாக சங்க இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவைகள் எல்லாம் கடவுள் மறுப்பு, வேத மறுப்பு சிந்தனைகளே என்று பலர் கூறுகிறார்கள். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை உங்களால் விளக்க முடியுமா?

குருஜி:-   தமிழ் இலக்கியங்கள் வேதங்களை ஒதுக்குகின்றன என்பதே திட்டமிட்ட விஷமத்தனமானவாதமாகும். சங்ககாலம் துவங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் உள்ள தமிழ் இலக்கியங்கள் எதிலும் இனரீதியிலான, சனாதன தர்மத்திற்கு விரோதமான வாதங்கள் எதுவுமே கிடையாது என்று கூறலாம். திருமூலர் தமது திருமந்திரத்தில் ஆரியன் தோற்றமுன் அற்றமலங்களே என்கிறார். மாணிக்க வாசகரும் சிவபெருமானை பற்றறுத்தால் பாரிக்கும் ஆரியன் என்று அழைக்கிறார். வேதாந்த தேசிகர் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கப்படும் ஜாதியில் பிறந்த திருப்பாணாழ்வாரை வேதாந்த ஆரியன் என்று பட்டம் கொடுத்து வழிபடுகிறார். அத்தோடு அந்த ஆழ்வார் இயற்றிய பத்து பாடல்களில் வேதத்தின் சாரமே அடங்கி இருப்பதாகவும் மெய்சிலிர்த்து கூறுகிறார்.

சங்க இலக்கியங்களில் ஒன்றான மதுரை காஞ்சி நகரங்களில் அந்தணர்கள் வாழ்ந்து வேதத்தை இசையோடு பாடினார்கள் என்ற தகவலும் வேதங்களை பரப்புவதால் அந்தணர்கள் புகழப்பட்டார்கள் என்ற தகவல்களும் இருக்கிறது. திராவிட தேசத்தில் உள்ள அந்தணர்களின் கிளிகள் கூட வேத மந்திரங்களை உச்சரித்ததாக பெரும்பாணாற்றுப்படை என்ற தமிழ் நூல் ரசனையோடு சொல்கிறது. சங்க இலக்கியங்கள் பலவற்றில் விஷ்ணுவின் அவதாரங்கள் பல குறிப்பிடப்படுகின்றன. வராக அவதாரம் எடுத்து உலகை விஷ்ணு காப்பாற்றினார் என்று கூறும் பரிபாடலில் உலகை மூன்றடியால் அளந்த கதை, நரசிம்ம அவதார சிறப்பு, அசூரர்களை பரசுராமர் வென்ற விதம் போன்றவைகள் மிக விரிவாக பேசப்படுகிறது. புறநானூறு, அகநானூறு, தொல்காப்பியம் போன்ற இலக்கியங்களில் மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றின் உதாரண கதைகள் பல காட்டபட்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. உதியன் சேரலாதன் என்ற சேர மன்னன் மகாபாரத யுத்தத்தில் உணவு படைத்ததாக மகாபாரதமும் சொல்கிறது, தமிழ் இலக்கியங்களும் சொல்கிறது.

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் நிறையப்பேர் தங்களை விஷ்ணுவின் வழியில் வந்தவர்கள் என்று அழைத்துக்கொள்வதை சரித்திர ஏடுகள் நமக்கு காட்டுகிறது. சைவ சமய சின்னமான நந்தி பல்லவர்களின் ராஜ முத்திரை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே தமிழ் மன்னர்களை போல மிக பிரம்மாண்டமான ஆலயங்கள் அமைத்தது வேறு யாரும் கிடையாது என்று துணிந்து சொல்லலாம். தமிழ் மன்னர்கள் அமைத்த ஆலயங்கள் அனைத்தும் இந்து கடவுள்களுக்கே அல்லாது வேறு யாருக்கும் கிடையாது என்பதை மறுக்க முடியாது. இந்து தர்மத்தை தமிழர்கள் வெறுத்திருந்தால், மன்னர்கள் ஆலயங்களை எழுப்புவார்களா? அதற்கான மானியங்களை எழுதுவார்களா? நிச்சயம் நடந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே கால்டுவெல் போன்ற போலி சரித்திர ஆய்வாளர்களின் கருத்துக்களை நம்பி இன்றைய திராவிட பரிவாரங்கள் செய்துவரும் பிரச்சாரங்களை நம்பி அவர்கள் பின்னால் இளைஞர்கள் போகக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். ஒன்றுபட்ட இந்தியா தான் உலகத்தின் முன்னால் கம்பீரமாக நிற்க முடியுமே தவிர பாத்தி கட்டுவது போல் சின்னசின்ன தேசங்களாக நாட்டை பிரிக்க முயன்றால் அது விபரீதமாக மட்டுமல்ல, அவமானமாகவும் போக கூடும். தனி தமிழ்தேசியம் திராவிட வாதம் என்பவைகள் பாலைவனத்தில் விழும் விதைகளுக்கு சமமானது. அது முளைத்து மரமாக வருமென்று யாராவது கனவு கண்டால் அது பகல் கனவே.

 முற்றும்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCAwzxeRuGcMhVu5ZS5871oEWWb56mzihiKmW0q9kzYye_GRgiKYx-KXOBIXGb2N1A3VSUnJ3-_LElDG1n_-sG8w3cCR4s_zT60ZuvEZSZ6aQZac-LgAT-lBuGTaD0dE-K1HjfeeKSBXQ/s1600/sri+ramananda+guruj+3.JPG

Contact Form

Name

Email *

Message *