Store
  Store
  Store
  Store
  Store
  Store

அழகில்லாமல் வாழ முடியாதா...?




    குருஜி அவர்களுக்கு வணக்கம். உங்களை குருவாக ஏற்றுக்கொண்டவர்கள் இருப்பார்கள். வழிகாட்டியாக, ஆலோசகராக ஏற்றுகொண்டவர்களும் இருக்கலாம். ஆறுதலாக நீங்கள் அன்பு செலுத்துவதனால், உங்களை தகப்பனாக ஏற்றுக்கொண்டவர்கள் கூட உண்டு என்பதை நான் அறிவேன். ஆனால் நான் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நண்பராக உங்களை ஏற்றுக்கொள்ள விரும்பி அப்படியே இன்றுவரை பாவித்து வருகிறேன். காரணம் குரு, ஆலோசகர், வழிகாட்டி இவர்கள் கூறுவதை மட்டும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர சந்தேகத்திற்கு விளக்கம் கேட்க இயலாது. அது மரியாதை இல்லை. தகப்பனாரிடம் விளக்கம் கேட்கலாம் என்றாலும், மாற்றுக்கருத்தை கூறக்கூடாது. நண்பர் அப்படி அல்ல, மனதில் உள்ளதை எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் பேசலாம் விவாதிக்கலாம் சண்டை கூட போடலாம். அதனால் தான் நீங்கள் எனது நண்பர் என்கிறேன். நான் அப்படி ஏற்றுக்கொண்டது தவறுதலாக இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும் இப்போது என் கேள்விக்கு வருகிறேன்.

நான் பார்ப்பதற்கு அழகாக இருக்க மாட்டேன். மிகவும் ஒல்லியானவன். கறுப்பானவன். முகத்தில் அம்மை தழும்பு கூட உண்டு. ஒரு கண் மாறுகண் போல் தெரியும். மனதில் தோன்றுவதை எழுத முடியுமே தவிர சரளமாக மற்றவர்களிடம் உரையாட என்னால் முடியாது. கூச்சமும்,தயக்கமும் என்னுடன் பிறந்த சகோதரர்கள். இதனால் முதுகலை பட்டத்தை கூட தபால் வழியில் தான் படித்து முடித்தேன். வேலைக்குப்போகவில்லை. இரண்டு முறை வெளிநாடு செல்ல வாய்ப்பு வந்தும் அதையும் பயன்படுத்தவில்லை. உள்ளூரிலேயே கடை நடத்துகிறேன். சொந்த நிலத்தில் விவசாயம் செய்கிறேன். வருவாய்க்கு ஒன்றும் பெரிய குறைகள் இல்லை. என் மனக்குறை என்னவென்றால் எல்லோரும் என்னை குரங்கு மூஞ்சி என்று அழைக்கிறார்கள். நான் அப்படித்தான் இருக்கிறேன் என்பது வேறு விஷயம். இருந்தாலும் மற்றவர்கள் அப்படி அழைப்பது கஷ்டமாக இருக்கிறது. இந்த நிலையில் கல்யாணம் செய்து கொள்ள வீட்டில் சொல்கிறார்கள். யார் என்னை கட்டிக்கொள்ள முன்வருவார். அப்படியே வந்தாலும் என்னால் அவளோடு சகஜமாக வாழ முடியுமா? தாழ்வு மனப்பான்மை என்னை வாட்டி வதைக்காதா? அது அவளையும் கெடுத்து, என்னையும் கெடுத்தது போலாகி விடாதா? பெரிய குழப்பமாக இருக்கிறது. நண்பரான நீங்கள் தான் ஏதாவது வழி சொல்லவேண்டும்.

இப்படிக்கு,
பெயரும் ஊரும் வெளியிட விரும்பாத,
உஜிலாதேவி வாசகர்.





    ராமாயணத்தில் சுந்தரகாண்டம் என்ற ஒரு பகுதி இருக்கிறது. திருமணம் ஆகவில்லையா? ஏதாவது நல்ல காரியம் தடைபட்டுக்கொண்டே வருகிறதா? சுந்தர காண்டத்தை தொடர்ந்து படித்துவா என்று சொல்வார்கள். அவ்வளவு முக்கியம் வாய்ந்தது இந்த பகுதி. இந்த பகுதியில் தான் ஆஞ்சநேயர் அறிமுகம் ஆகிறார். இராமனை சந்தித்து கணையாழி பெற்று சீதையிடம் சேர்க்கும் முக்கிய நிகழ்வு இதில் தான் நடக்கிறது. ஆஞ்சநேயரை கதாநாயகனாக கொண்ட இந்த பகுதிக்கு நியாயப்படி அவர் பெயர் தான் வைத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சுந்தரகாண்டம் என்று சம்மந்தமே இல்லாமல் பெயர் வைக்க என்ன காரணம் என்று யோசிக்கலாம்.

இது ஆஞ்சநேயர் பெயர் தான் சுந்தரம் என்பது தான் அவரது திருநாமம். சுந்தரம் என்றால் பேரழகன் என்பது பொருளாகும். சர்வ நிச்சயமாக அவர் பேரழகர் என்பதில் மாற்றம் இல்லை. ஆனால் அவர் முகம் குரங்கு முகம் இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அழகு என்பது முகத்தில், உருவத்தில் இல்லை. அகத்தில் இருக்கிறது நமது புத்தியில் இருக்கிறது. நமது செயலில் இருக்கிறது என்பதாகும். நீங்கள் உங்களை குறைத்து மதிப்பிடுவது சட்டப்படியும், தர்மப்படியும் முட்டாள்தனமாகும். என்னை நீங்கள் நண்பர் என்று ஏற்றுக்கொண்டதனால் உரிமையோடு உங்களை முட்டாள் என்கிறேன். காரணம் நண்பர்களிடம் பேசும் போது இலக்கண வரம்பு, இலக்கிய நயம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. மனதில் பட்டதை பட்டென்று போட்டுடைக்கலாம்.

அழகு இல்லாத என்னை கட்டிக்கொள்ள யார் வருவார்? என்று நீங்கள் நினைத்தால் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு முகூர்த்த நாளில் பல்லாயிரம் திருமணங்கள் நடக்கிறது. அதில் அழகான ஜோடிகளை தேடிப்பார்த்தால் ஒருவர் கூட தேறமாட்டார்கள். ஏதாவது குறையில்லாத மனித உயிரினமே கிடையாது எனலாம். சர்வ லட்சணங்களும் பொருந்தியவன் கடவுள் மட்டும் தான். இதனால் அழகு இல்லாத காரணத்தால் திருமணம் வேண்டாம் என்பது புத்திசாலித்தனம் அல்ல. இந்த எண்ணத்தோடு திருமணத்தை நீங்கள் தவிர்த்தால் தேவை இல்லாத மனவக்கிரம் உங்களுக்கு வருங்காலத்தில் ஏற்பட வழி உண்டு. எனவே போலி முகமூடியை தூக்கி எறிந்து விட்டு நிஜ உலகத்திற்கு வந்து எல்லோரிடமும் பழகுங்கள். இதுவரை உங்களை சுற்றியிருந்த இருட்டு நீங்கலாக ஏற்படுத்திக்கொண்டது என்பதை உணர்வீர்கள்.


Contact Form

Name

Email *

Message *