Store
  Store
  Store
  Store
  Store
  Store

காமத்தை கடக்கும் குண்டலினி !

சித்தர் ரகசியம் - 14   குண்டலினி சக்தி என்பது ராஜா. அந்த ராஜா வாழுகிற அரண்மனை மூலாதாரம். அவரது வெற்றிக்கொடி பறக்கவேண்டிய சிகரம் சகஸ்ரம். மூலாதாரம் துவங்கி, சகஸ்ரம் வரையில் குண்டலினி ராஜா வீர நடைபோடுகின்ற ராஜ பாட்டைகள் உடம்பில் உள்ள சக்கரங்கள். அந்த சக்கரத்தின் வழியே குண்டலினி சக்தி ஒன்றிலிருந்து வேறொன்றுக்கும், வேறோன்றிலிருந்து மற்றொன்றுற்கும் கடந்து செல்வதை ஞானிகள் மரம் ஒன்றின் அடிக்கிளையில் இருந்து மேல் கிளை நோக்கி ராஜாளி பறவை பறந்து சென்று உட்கார்வதை உதாரணமாக காட்டுகிறார்கள். அதன் பயணத்தை இப்போது சிறிது சிந்திப்போம்.

குண்டலினி சக்தி மூலாதாரத்தில் சுவாதிஸ்தானம் என்ற நாபிக்கமலத்திலும், இயங்கும் போது தமோகுணம் பிரதானம் கொண்டதாக இருக்கிறது. இந்த நிலையில் குண்டலினியின் அதிர்வுகள் மனிதனின் உடலையும், மனதையும் உடம்பும், உடம்பும் இணைகிற சிற்றின்பத்தின் மீது நாட்டம் கொள்ள வைக்கிறது. இந்த நாட்டத்தின் அடிப்படையிலேயே பிரஜாவிருத்தி என்ற மனித சமூக வளர்ச்சி ஏற்படுகிறது. குண்டலினி அபானவாயுவை தூண்டி காம வாயுவாக செயல்பட வைக்கும் போது மனித உடம்பில் பிருத்வி தத்துவமும், அப்பு தத்துவமும் அதாவது நீரும், நிலமும் கலந்த சக்தி அக்னி மண்டலமாக செயல்படுகிறது.

மூலாதாரத்தின் அதிதேவதையாக பிரம்மதேவன் இருக்கிறார். இவர் கலைகளின் தலைவியான சரஸ்வதி தேவியின் நாயகர் சுவாதிஸ்டானத்தின் அதிதேவதை மகாவிஷ்ணு. இவர் அலைமகள் என்று அழைக்கப்படும் செல்வத்தின் தலைவி மகாலஷ்மியின் நாயகர். குண்டலினி சக்தியானது இந்த இரண்டு இடங்களிலும் சம்மந்தப்படும் போது மனிதனுக்கு அறிவையும், செல்வத்தையும் பெறுகின்ற வழியை ஏற்படுத்துகிறது. அறிவும், செல்வமும் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அது மனிதனை கீழ்நிலைப்படுத்துகிற தமோகுணத்தின் வடிவாகவே அறியப்படுகிறது. அவைகளால் பிறப்பற்ற நிலையை தருகின்ற நிகரற்ற பரம்பொருளை அடையச்செய்ய முடியாது.

செல்வம் என்பது உடம்பை வளர்ப்பது. அறிவு என்பது எண்ணங்களை வளர்ப்பது. எண்ணங்களை அடக்கி தேகத்தை கடந்து செல்லுகிற சுத்த மாயா தத்துவத்தின் மூலமே, பரம்பொருளை காணமுடியும். அதனால் தான் குண்டலினி சக்தி மூலாதாரத்தில் இருந்தும், தொப்புள் மத்தியில் இருந்தும் மேல்நோக்கி கிளம்பவேண்டும். அப்படி கிளம்பினால் மட்டுமே யோக வாழ்க்கையின் முதற்படியை தாண்டமுடியும் என்று சித்தர்கள் கருதுகிறார்கள்.

குண்டலினி சக்தி மணிப்பூரகம், அநாகதம் ஆகிய சக்ரங்களை அடைந்து அங்கே இயக்க நிலையை துவக்குகிற போது ரஜோ குணமாக மாறுகிறது. இந்த நேரத்தில் காமத்தின் பாதையில் சென்றுகொண்டிருந்த மனமும், உடம்பும் சற்று நின்று நிதானிக்கிறது. அழியப்போகும் உடல்மீது வைக்கின்ற ஆசை நமக்கு நிரந்தர சந்தோஷத்தை தருமா? நாடி தளர்ந்து வயது முதிர்ந்து தள்ளாட்டம் காணுகிற நேரத்தில் சிற்றின்ப நாட்டம் எந்த வகையிலாவது உதவி செய்யுமா? இத்தகைய காமக்களியாட்டம் தேவைதானா? என்று யோசிக்க வைக்கும். உடலில் சுரக்கும் இன்ப ஊற்றின் வேகம் குறைந்து இறை சிந்தனையானது உதயமாகிறது.

புலன்களால் அனுபவிக்கப்படும் ஆனந்தம் நிலையற்றது. ஒரு நீர்க்குமிழி எப்படி ஒரு நிமிடத்தில் சிதைந்து போகுமோ அதைப்போன்று உடல் இன்பமானது உடம்பில் பலம் தீர்ந்தவுடன் வியாதியாக மாறிவிடும். கடிவாளம் இல்லாத குதிரை பல இடங்களுக்கு ஓடி ஓடி கடைசியில் மூச்சு திணற அங்கு நிற்பது போல, புலன்வழிப்பட்ட ஆசையும், கடவுள் சிந்தனை என்ற எல்லையில் வந்து முடிவடைகிறது. மனம் அடங்கி செய்யப்படும் இக்காலத்திய தியானப்பயிற்சியில் தெய்வீக ஒலிகளும், உருவங்களும் காட்சிகளாக அணிவகுக்கின்றன. இப்போது ரஜோ குணத்தால் தூண்டப்பட்ட மூலவாயு வாசியாக உருவம் பெற்று மேல் நோக்கி துருவ நிலையில் செயல்படத்துடிக்கிறது.

பிரளய காலத்து அதிதேவதையாகிய ருத்ரன் மணிபூரகத்தையும், உலக இயக்கத்தை கட்டுபடுத்தும் தேவதையாகிய மகேசன் அநாதகத்தையும் ஆட்சி செய்கிறார்கள். இந்த இரண்டு சக்கரங்களில் வாயுவும், தேயுவும் அதாவது காற்றும், நெருப்பும் தத்துவங்களாக இருக்கின்றன. மூலாதாரத்தில் இருந்து சுவாதிஸ்டானம் வழியாக மேலே இந்த சக்கரங்களில் வந்து உட்காரும் குண்டலினி சக்தி, மனிதனின் அசட்டைப்போக்கால் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே அதாவது கீழ்நிலைக்கே சென்றுவிட வாய்ப்புண்டு. இக்கால கட்டத்தில் சத்தியமும், உறுதியும், விடாமுயற்சியும் தேவை என்று ஞானிகள் கூறுகிறார்கள்.

குண்டலினி சக்தியானது விசுத்தி,ஆக்ஞா ஆகிய சக்கரங்களில் ஏறி இயங்கும் போது ஆகாய் தத்துவத்தை அடைகிறது.  ஆக்ஞா மனோதத்துவத்தின் சிகரம். இங்கு சதாசிவத்தின் ஆட்சி நடைபெறுகிறது. விசுத்தி தேக சம்மந்தத்தை அறுந்து போக வைக்கிறது. ஆகாய தத்துவம் இங்கே மலர்கிறது. உருவங்கள் இல்லாத அருவத்தை நோக்கி தியானம் முன்னேறுகிறது. தன்னை உடம்பாக கருதுகிற மனிதன் குண்டலினி சக்தி இந்த இடங்களுக்கு வந்தபிறகு ஒளியாக தன்னை காண்கிறான். எங்கும் ஞான ஒளியே நிறைந்திருப்பதை பார்க்கிறான் தமோகுணம் , ரஜோகுணம் ஆகிய இரண்டும் மடிந்து சத்வகுணம் மேலோங்கி நிற்கிறது. சத்வகுணத்தில் ஆத்மா வெற்றிக்களிப்பை அனுபவிக்கிறது. நடராஜா தத்துவத்தின் நிலையறிந்து இறைவனின் பாதங்களில் அமைதி காண்கிறது.

குண்டலினி சக்தி மனித உடம்பில் இந்த வகையில் தான் பயணம் செய்கிறது. ஒவ்வொரு பயணத்திலும் சக்கரங்களில் தங்கும் போது இந்த அனுபவங்களை தானும் பெற்று நம்மையும் பெற வைக்கிறது. இது குண்டலியின் பயணம். இது சித்தர்களின் முடிவு. இந்த பயணத்தை குண்டலினி சக்தி துவங்குவதற்கு என்ன செய்யவேண்டும்? அதன் வழிமுறைகள என்ன? என்று நம் முன்னே ஆயிரம் கேள்விகள் இருக்கிறது அவை அத்தனைக்கும் சித்தர்கள் பதிலைத்தெளிவாக கூறி இருக்கிறார்கள் அதையும் பார்ப்போம்.


Contact Form

Name

Email *

Message *