குருஜி அவர்களுக்கு வணக்கம். எனக்கு முதல் திருமணம் நடந்து இரண்டாவது வருடத்திலேயே சிறுநீரக நோயினால் கணவர் இறந்துவிட்டார். குழந்தைகள் யாரும் இல்லை. கடந்த ஐந்து வருடங்களாக அப்பாவின் பாதுகாப்பில் தான் இருக்கிறேன். இப்போது ஒருவர் என்னை இரண்டாம் தாரமாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறார். அவருக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் மனைவி இல்லை நான் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது என் தகப்பனாருக்கு பிடிக்கவில்லை. குடும்ப கௌரவம் கெட்டுவிடும் என்று நினைக்கிறார். என் ஜாதகப்படி நான் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என் தகப்பனார் ஒத்து வருவரா? என்பதை தயவு செய்து தெரியபடுத்தவும்.
இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
ஒரு ஆண் தவறு செய்தால் அவன் வாழ்க்கை மட்டுமே கெடும். ஒரு பெண் செய்தாலோ தலைமுறையே கெடுமென்று கூறுவார்கள். அதாவது பண்பாட்டு மூலங்களை காக்க வேண்டிய பொறுப்பு பெண்ணுக்கு இருப்பதாக இந்திய சமூகம் நம்புகிறது. இந்த நம்பிக்கையை தவறு என்று ஒதுக்கிவிட முடியாது. அதே நேரம் சில நெகிழ்வுகளை நம் சமூக அமைப்பு கொண்டிருக்கிறது என்பதையும் மறுக்க கூடாது.
புகழ்பெற்ற இந்திய இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் சிதறி கிடக்கும் மாமிச துண்டுகளை பருந்துகள் கொத்துவது போல பாதுகாப்பு இல்லாத பெண்களை சமூகம் கெடுத்துவிடும் என்று கூறுகிறது. ஆயிரம் நவீனத்துவம், பெண்ணியம் என்று பேசினாலும் இதுவரை உண்மை என்னவோ இது தான். பாதுகாப்பு இல்லாத பெண்களை குறிவைத்து தாக்கும் பழக்கம் நம் நாட்டில் மட்டுமல்ல மிகவும் முன்னேறிய அமெரிக்க தேசத்தில் கூட இருக்கிறது எனவே பெண்ணிற்கு பாதுகாப்பு துணை மிகவும் அவசியம்.
பெற்றோர்களால் ஒரு குறிப்பிட்ட காலம் வரையும் தான் பாதுகாப்பை தரமுடியும். காலம் கடந்தும் பாதுகாப்பும் அரவணைப்பும் தருவது வாழ்க்கை துணை நலம் தான். ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் துணை வேண்டுமென்று நமது முன்னோர்கள் இதனால் தான் கூறினார்கள். கணவன் இல்லாத நிலையில் மனைவி விரும்பினால் வேறொரு ஆடவனை திருமணம் செய்து கொள்ள எந்த தடையையும் சாஸ்திரம் கூறவில்லை.
பதினான்கு வருடங்கள் கணவனை பற்றிய அதாவது அவன் உயிரோடு இருக்கின்றனா இல்லையா என்பதை அறியாத பெண் கூட மறுமணம் செய்து கொள்ளலாம். அதாவது அவள் விரும்பினால் என்று வேதங்கள் கூட சுதந்திரம் தருகிறது. இது பலருக்கும் தெரிவதில்லை அதனாலேயே வீண் பிடிவாதம் பிடித்து துயரங்களை சம்பாதித்து கொள்கிறார்கள்.
உங்களுக்கு நடக்கபோகும் இரண்டாவது திருமணம் எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக இருக்கும். எனவே அதை பற்றிய அச்சம் தேவையில்லை. உங்களது தந்தையார் பரிபூரணமான சம்மதத்தை தந்து திருமணத்தை முன்னின்று நடத்தி வைக்க ஒரு மண்டலகாலம் ராமாயணத்தில் உள்ள சுந்திர காண்டத்தை பக்தி சிரத்தையோடு படித்து வாருங்கள் நல்லது நடக்கும்.








