Store
  Store
  Store
  Store
  Store
  Store

குடிகாரர்களை ஓட ஓட விரட்டுங்கள்

       காவல்துறை கண்காணிப்பளாராக பணிபுரியும் எனது நண்பர் ஒரு நாள் மிக வருத்தத்துடன் காணப்பட்டார்.  பொதுவாகவே காவல்துறையில் பணியில் இருப்பவர்கள் இரண்டு விஷயத்திற்காக தான் மிக வருந்துவார்கள்.  ஒன்று சரியாக மாமூல் வரவில்லை அடுத்தது அரசியல்வாதியின் பாதுகாப்புக்காக வெயிலில் கால்கடுக்க நிற்பது,  பொத்தாம் பொதுவாக எல்லா காவல் துறையினரையும் அப்படி சொல்வது தவறு என்று எனக்கும் தெரியும். தூயவர்களின் எண்ணிக்கை அரசியலில் வேண்டுமென்றால் குறைவாக இருக்கலாம்,  காவல்துறை அப்படி அல்ல,  பல நெருக்கடிக்கிடையில் பணி செய்ய நேரிட்டாலும் கூட நேர்மையை தவறவிடாத பலர் சமுதாய அக்கறை உடைய பலர் அந்ததுறையில் உண்டு அவரிடம்  காரணம் என்னவென்று கேட்டேன்.  அவர் சொன்ன பதில் என்னை மட்டுமல்ல நாட்டை நேசிக்கும் எவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கும்.  வேலை முடித்து மதியம் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தேன்,  இரவு முழுவதும் உறங்காத எரிச்சல் கண்களிலும் மனதிலும் பற்றி எரிந்து கொண்டிருந்தது அப்பாடா என்று கால்களை பரப்பி படுக்க வேண்டும் என்ற ஆவலில் வந்து கொண்டிருந்தேன் என் வீட்டிற்கு வரும் வழியில் மதுபான கடை ஒன்று உண்டு, பள்ளி சீருடை அணிந்த இரண்டு பையன்கள் மதுபாட்டிலை வாங்கி கால்சட்டை பைக்குள் திணிப்பதை பார்த்தேன். பள்ளி நேரத்தில் இவர்களை மது வாங்க யாரோ அனுப்பி இருப்பார்கள், சற்று மிரட்டிவிட்டால் மதுக்கடை பக்கமே வரமாட்டார்கள் என்று வண்டியை நிறுத்தி அவர்கள் அருகில் சென்றேன்,  அந்த பையன்கள் இருவரும் மது அருந்தி இருப்பது அவர்களிடம் இருந்து வரும் நாற்றத்திலேயே தெரிந்து கொண்டேன்,  என்னை கண்டதும் அவர்கள் திருதிருவென விழித்தார்கள்,  நகர்ந்து ஒடவும், பார்த்தார்கள், அவர்களை மடக்கி விசாரித்தேன், தாங்கள் குடித்துவிட்டு தங்களது நண்பர்களுக்காகவும் வாங்கி செல்வதை ஒத்துக் கொண்டனர், மது அருந்திய அந்த இரண்டு பையன்களும் இவர்கள் வாங்கி வரும் மதுக்காக காத்திருக்கும் நண்பர்களும் எந்த வகுப்பில் படிக்கிறார்கள் தெரியுமா? நம்பினால் நம்புங்கள், எல்லோரும் ஒன்பதாம் வகுப்பு, என்ற தகவலை சொல்லிவிட்டு அவர் அமைதியானார்.


    ஒன்பதாம் வகுப்பு என்பது பால் வழியும் பருவம் தான்,  என்பது நமக்கு தெரியும்.  அந்த பருவத்திலேயே குழந்தைகள் கெட்டு போவதற்கு குடிகாரர்களாவதற்கு யார் காரணம், அப்பன்காரன் மகா குடிகாரன், கடையில் போய் குடிப்பதும் இல்லாமல் பிள்ளையை அனுப்பி வாங்கி வர வைத்து வீட்டிலும் குடிப்பான்,  பையனுக்கு என்ன தெரியும், அப்பா குடிப்பதை நாமும் குடித்து பார்க்கலாமே என்ற ஆசையில் குடிக்க ஆரம்பித்திருப்பான். பிள்ளைகள் கெடுவதற்கு பெற்றோர்கள் தான் காரணமென்று சிலர் குற்றம் சாட்டுகின்றார்கள்,  என்னால் மட்டுமல்ல வேறு எவராலும் கூட  இதை ஒத்து கொள்ள முடியாது, நான் கேட்பதெல்லாம் பிள்ளைகளை விடுங்கள் பெற்றோர்கள் குடிகாரர்களாக ஆனதற்கு யார் காரணம், என்பது தான்.

     மனிதர்கள் மது அருந்தும் பழக்கத்திற்கு இன்று நேற்று அடிமையாகவில்லை, வேதகாலம் தொட்டே அடிமையாகத்தான் கிடக்கிறார்கள்,  இரண்டாயிரம் வருடத்திற்கு முந்திய சமுதாயத்தில் மது அருந்தும் பழக்கம் இருக்க போய்தான் வள்ளுவருக்கு கள்ளுண்ணாமை அதிகாரத்தை எழுதுவதற்க்கு நிர்பந்தம் ஏற்பட்டுயிருக்கிறது. அப்போது குடி பழக்கம் இல்லையென்றால் அவர் ஏன் குடிக்காதே என்று எழுதப் போகிறார், எனவே மது பழக்கமென்பது தொல் பழங்காலந்தொட்டே மனிதர்களிடம் உள்ளது என்று நமக்கு தெரியும்.


     பழமையான பழக்கமென்றாலும் அந்த பழக்கும் உடைய எவரையும் பொது ஜனங்கள் மதிப்பது கிடையாது திருடர், பொய்யர் போன்றோர்களுக்கு எத்தைகைய மரியாதை காட்டப்பட்டதோ அதே மரியாதை தான் குடிகாரர்களுக்கும் காட்டப்பட்டது, இதனால் குடிகாரர்கள் குடித்துவிட்டு சமுதாய நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தடுத்தனர்,  தங்களது தீய பழக்கம் மற்றவர்கள் அறியாத வண்ணம் ரகசியமாகவே இருக்கும் படி செய்து கொண்டனர்,  இதனால் குடிகாரர்களின் எண்ணிக்கையும் குறைவாகயிருந்தது, குடிபழக்கம்  மீது மோகம் கொள்வோர்  எண்ணிக்கை மிக சொற்பமாக இருந்தது என்பதை விட இல்லாமல் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்,  அரசாங்கம் மதுக்கடைகளை என்று திறந்ததோ அன்றே குடிகாரர்களுக்கு குளிர் விட்டுவிட்டது.  குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி விட்டது.

    சமீபத்தில் வெளிவந்த ஆய்வறிக்கை இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் தமிழகத்தில் மது பழக்கம் இல்லாத இளைஞர்களை, மதுக்கொடுமைக்கு ஆளாகத குடும்பத்தை காண்பதே மிகவும் கஷ்டம் என்று சொல்கிறது, மது அருந்துவது ஒரு சமுதாய அந்தஸ்து என்ற மனோபாவம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.  ஒட்டு மொத்த தமிழ்நாடே குடிகாரர்களின் கூடாரமாக மாற கூடிய அபாயத்தை ஏற்படுத்தியது யார்? சமூக பழக்க வழக்கமா? தனிமனித மன வக்ரமா? என்று கேட்டால் இரண்டும் இல்லை அரசாங்கம் தான் மிக முக்கிய குற்றவாளி என்று அடித்து சொல்லலாம்.


    தீவிரவாதத்தின் தன்மை அதிகரிப்பதாலும் உள்நாட்டு பாதுகாப்பை அசட்டை செய்வதாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் தடைபடும் என்று பொதுவாக சொல்லப்படுகிறது, ஆனால் உண்மையில் இவைகளை எல்லாம் விட நம் நாட்டு வளர்ச்சிக்கு பெருத்த அபாயமாக இருப்பது சாராய சந்தை தான், ஆனால் இதை உணர்ந்து கொள்ளவோ, ஒத்துக்கொள்ளவோ, பொறுப்பு மிக்கவர்கள் தாயாராக இல்லை,  மரத்திற்கு உள்ளிருந்து அரிக்கின்ற கரையான் மரத்தை வீழ்த்தி அழிப்பது போல தேசம் அழிந்த பிறகு தான் இதை ஒப்புக்கொள்ள ஆள்வரும் என்று நினைக்கிறேன்.

    சென்னை மாகாணத்தின் முதல்வராக ராஜாஜி இருந்த போது மது கடைகளை மூடும் சட்டத்தை கொண்டு வந்தார்,  அதை பெரியார் மிக கடுமையாக எதிர்த்தார் ராஜாஜி மேல் ஜாதிக்காரர், கீழ்ஜாதிகாரர்களின் கஷ்டமும்  தொழிலாளர்களின் சிரமமும் அவருக்கு தெரியவே தெரியாது, உழைத்து உடல் வலியில் இருப்பவன் ஒரு கிளாஸ் தண்ணி போட்டால் தான் அசைந்து உறங்க முடியும், எனவே உடனடியாக சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றார் பெரியார்.

    அதற்கு ராஜாஜி என்ன பதில் சொன்னார் தெரியுமா? மது விலக்கு சட்டத்தை அமலபடுத்துவது மிகவும் கஷ்டமாக இருக்குமோ? பெருவாரியான மக்கள் அதை ஏற்க மாட்டார்களோ? என்று எல்லாம் எண்ணி பயப்பட்டேன், ஆனால் நண்பர் ஈ.வெ,ரா இந்த சட்டத்தை எதிர்ப்பதிலிருந்தே இதை  மிக சுலபமாக அமுல் செய்துவிட முடியும், எல்லா மக்களும் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதை புரிந்து கொண்டேன், ஏன்என்றால் பத்து பேர் ஏற்று கொள்வதை, பத்து பேருக்கு சரியெனப் பட்டதை பெரியார் தவறு என்பார், ஏற்று கொள்ளவும் மாட்டார் என்பது தான் ராஜாஜியின் பதில்.

    உண்மையில் பெரியார் ராஜாஜியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மதுவிலக்கு சட்டத்தை எதிர்த்தாரே தவிர மக்களின் மது பழக்கத்தை அவர் எப்போதுமே ஏற்றுக் கொண்டதில்லை,  மது இறக்குவதற்காக பயன் படுத்தப்பட்ட  நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை தனது தோப்பிலிருந்து வெட்டி வீ ழ்தியவர் பெரியார்,  ஆனால் பெரியாரின் வாரிசுகள் என்று தங்களை அழைத்து கொள்ளும் கழக கண்மணிகள் தான் 1967-ல் மதுகடைகளை திறந்து வைத்தார்கள் அன்று முதல் தமிழ் பெண்களுக்கு ஜென்ம சனி துவங்கிவிட்டது,  ஒரு தலைமுறையை கெடுத்த பாவம் கழக அரசுகளுக்கு தான் உண்டு.



    அரசாங்கம் நடத்தும் மதுக்கடையால் எராளமான வருமானம் வருகிறது, பல கடைகளை இன்னும் திறப்பதன் மூலம் வருவாய் பலமடங்கு அதிகரிக்கலாம், அந்த வருவாயை கொண்டு ஏராளமான நலத்திட்டங்களை நடைமுறை படுத்தலாம் என்று அரசாங்கம் சொல்கிறது, இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு பெண்ணிடம் நீ கட்டிக்கொள்ள பட்டுபுடவை தருகிறோம், அலங்கரித்து கொள்ள நகைகள் தருகிறோம் உடலெங்கும் பூசிக் கொள்ள வாசனை திரவியம் தருகிறோம், அதற்கு கைமாறாக தாலியை அறுத்து விடு, மஞ்சள்  குங்குமத்தை எடுத்து விடு என்று சொல்வது போல் இருக்கிறது,  இன்னும் கொஞ்ச நாள் சென்றால் நமது அரசாங்கம் ஆணுக்கு பெண் எந்த விதத்திலும் சளைத்தவள் அல்ல, எல்லா வகையிலும் சமமானவள் என்று நிருபிக்க மது அருந்த வாருங்கள், மாதருக்கு அழகு மது அருந்துதல் என்று விளம்பரப்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை, ஆண்கள் மட்டும் குடிப்பதினால் வருவாய் பாதியளவு தான் வருகிறது,  பெண்களும் குடித்தால் அது இரட்டிப்பாகும், அரசுக்கு நலத்திட்டங்கள் செய்ய இன்னும் வருவாய் கூடும், பணம் நிறைய கிடைக்குமல்லவா? பேய் அரசாட்சி செய்யும் ஒரு நாட்டில் எது வேண்டுமென்றாலும் நடக்கும்.

    இன்று தமிழ்நாடு எப்படி இருக்கிறது என்றால் அரசு டாஸ்மாக்அதிகாரிகள், ஊழியர்கள், சாராய நிறுவனங்கள், இடைதரகர்கள் அரசியல்வாதிகள் எல்லோரும் இணைந்து மக்களை கொள்ளையடிக்கும் பரந்த கூடாரமாக திகழ்கிறது.  இன்னும் ஒரு படி மேலே சொல்வதென்றால் மேலே சுட்டிக் காட்டிய கூட்டணிகள் ஒரு மாஃபியா கும்பலாக நிழல் உலக தர்பாரை சட்டபூர்வமாக செய்துவருகிறது என்று துணிந்து கூறலாம்.

    நமது இந்தியாவை பொறுத்த வரை தமிழகம் பல துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்ட கூடியதாகவே இருக்கிறது,  சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குவதிலாகட்டும், ஊழல் வழக்குகளை குளிர்ந்து போக செய்ய விசாரனை கமிஷன் அமைப்பதிலாகட்டும் இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடிப்பதிலாகட்டும் எல்லாவற்றிற்குமான பிள்ளையார் சூழி தேசத்தில் முதல் முறையாக போட்டது தமிழ்நாடு தான், சினிமாகாரர்களை தேர்தலில் நிறுத்தினால் மகத்தான வெற்றி பெறலாம் என்ற பார்முலாவை உலகுக்கே கொடுத்தது தமிழகம் தான்,  அப்படிப்பட்ட நம் அருமை தமிழகம் இன்று சாராய கடைகளை நடத்தினால் ஏராளமே வருவாய் பெறலாம் என்று இந்தியாவிற்கே வழிகாட்டி வருகிறது.  நமது வழிகாட்டுதலை திறம்பட கடைபிடிக்கும் மற்ற மாநிலங்கள் தங்கள் மக்களின் குடலை பிடுங்கி பூச்செண்டு தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்,  ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகள் நாட்டின் இன்றைய நிலவரத்தை பற்றியும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயத்தை பற்றியும் எந்த வித அக்கறையும் இல்லாமல் உள்நாட்டு வங்கிகளிலும், அயல்நாட்டு வங்கிகளிலும் தங்களது கணக்கு இருப்பு அதிகரிக்க வேண்டும் என்று ஒரே நோக்கத்தோடு செயல்படுகிறார்களே தவிர உருப்படியான அணுமுறை எதையும் மேற்கொள்ளுபவர்களாக இல்லை.

    சமீபத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் சில உறுப்பினர்கள் அரசாங்கம் மதுகடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தபோது வள்ளுவர் வழி தான் தன் வழி என வாய்கிழிய பேசிவரும் நமது முதல்வர் வள்ளுவருக்கு கோட்டத்தையும், குமரி கடலில் பிரம்மாண்ட சிலையையும் ஏற்படுத்திய வள்ளுவரின் அவமானகரமான வாரிசு திருக்குவளையில் உதித்த திருவிளக்கு திருவாய் மலர்ந்தது என்ன தெரியுமா அரசாங்கம் மதுகடைகளை மூடி விட்டால் 35,000 ஊழியர்களின் வேலை பறி போய்விடுமே? இதனால் அவர்கள் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்குமே? என்று விளக்கம் கூறி வருத்தப்பட்டார்,  மதுகடைகளை மூடி வேலை இழக்கும் ஊழியர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதற்கு எந்த ஒரு வகை இல்லை  என்பது போல் அவரது கூற்று அமைந்துள்ளது, உண்மை நிலை அதுவல்ல, கலைஞரின் இலக்கிய வாரிசு கனிமொழியும் அரசியல் வாரிசு ஸ்டாலினும்  இன்னும் பல கழக கண்மணிகளும் சாராய ஆலை நடத்துகிறார்கள்.   அரசாங்கம் அவர்களிடமிருந்து தான் பெருமளவு மதுவை கொள்முதல் செய்கிறது.  கடையை மூடி விட்டால் ஆலைகளுக்கு வேலை இருக்காது, ஆலையின் மூலம் வருகின்ற வருவாய் தனது குடும்ப கஜானாவை வந்து அடையாது என்பதற்காக தான், ஆளும்கட்சியின் நாசகார வேலையை எதிர்கட்சி கண்டிக்கலாமே? மக்கள் கொள்ளை அடிக்கப்படுவதை தடுக்கலாமே என்று நாம் நினைக்கலாம்,  ஆனால் செல்வி ஜெயலலிதா அவர்கள் அப்படிப்பட்ட தவறை எப்போதுமே செய்யமாட்டார்.  அவரது ஆருயிர் தோழி சசிகலா நடராஜனின் உறவினர்களில் பலர் சாராய ஆலை நடத்தி நேர்முகமாகவும், மறைமுகமாகவும் அரசாங்கத்திற்கு விற்று வருகிறார்கள், மக்களுக்காக குரல் கொடுக்க போய் தோழியின் மனதை நோகடிக்க வேண்டிவரும் என்பதற்காக அவர் மௌனம் தான் சாதிப்பார்.


     போராட்டம் நடத்துவதே அன்றாட வாழ்க்கையாக கொண்ட பொதுவுடமை கட்சிகாரர்கள் மக்களை கெடுக்கும் இத்திட்டத்தை தடுத்து நிறுத்த போராடலாமே என்று நமக்கு தோன்றும்.  ஆனால் உண்மையில் உழைப்பவர்களுக்கு மது வேண்டும் என்று உலகம் முழுவதும் பிரச்சாரப்படுத்தி வருபவர்கள் அவர்கள், ஒட்டுமொத்த ரஷ்ய மக்களை ஒட்கா பானத்தில் அறிவை மழங்க வைத்து அடிமைபடுத்தி அரசியல்நடத்தியது அவர்கள்,  அதனால் அவர்கள் நாவுகள் மதுவிற்கு எதிராக திரும்பவே திரும்பாது, அப்படி திரும்பியது போல் சில சமயங்களில் அவர்கள் பேசலாம்,  அது எல்லாமே பகல் வேஷம் தான்.

    காந்திய வழி  நடக்கும் காங்கிரஸ்காரர்களும், இந்து மதத்தின் காப்பாளர்களான பா.ஜா.க.காரர்களும் மதுவை எதிர்பதற்கு முதுகெலும்பு இல்லாதவர்கள்.  தர்க்க ரீதியில் திறமையற்றவர்கள், காரணம் இவர்கள் ஆளுகின்ற மாநிலங்களில் மது வெள்ளமென ஒடுகிறது மக்களின் ரத்தத்தை அரசு இயந்திரம் இரக்கமின்றி குடித்து வருகிறது.

    அரசாங்க மதுகடைகள் ஊருக்கு என்றில்லாமல்  தெருவுக்கு இரண்டு என்ற கணக்கில் காணும் இடமெல்லாம் காட்சி தருகிறது.  அப்பாவி மக்களை குடிகார நோயாளிகளாக்க இவ்வளவு விரிவான ஏற்பாடுகளை செய்திருக்கும்  நமது அரசு மது அடிமைகளை மீட்பதற்கு பரந்து விரிந்த தமிழகத்தில் எத்தனை மறுவாழ்வு மையங்களை நடத்தி வருகிறது தெரியுமா? கேட்டால் வயிறு எரிகிறது, வெறும் எட்டே எட்டு மையங்கள் தான்,  ஒட்டுமொத்த தமிழகத்திற்கும், இந்த  எட்டு மையங்களின் செயல்பாடுகள் கூட ஆமை வேகத்தில் தான் உள்ளது,  அப்படி ஒருமையம் இருப்பதே பெரும்பாலான மக்களுக்கு தெரியாது.



    அரசாங்கத்தின் இந்த அலட்சிய போக்கை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பல தனியார் மயமான குடிகாரர்களின் டாக்டர்கள் அப்பாவி பெண்களிடமிருந்து ஆயிரக்கணக்கான பணத்தை ஊசி  இல்லாமலே உறிஞ்சி எடுத்து விடுகிறார்கள், பல தினசரிகள், வார, மாத இதழ்களில் குடியை மறக்க மருந்து தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வருகின்றன.  அத்தகைய விளம்பரம் கொடுப்பதில் தொன்னூறு சகவிகித சித்த, ஆயுர்வேத, யுனானி, மருத்துவர்கள் போதிய அனுபவம் இல்லாதவர்களாகவும் மருத்துவ அறிவு இல்லாதவர்களாகவுமே இருக்கிறார்கள்.

    சிலர் ஏதோ  சூரணம் தருகிறார்கள், சிலர் குதிரை மூத்திரத்தில் பிராந்தி கலந்து கொடுக்கிறார்கள், இதை குடிகாரர்களுக்கு கொடுத்த உடன் மிக பயங்கரமாக வாந்தி எடுக்கிறார்கள் சோர்ந்தும் போய்விடுகிறார்கள்.  உண்மையில் இது  மிக தவறுதலான சிகிச்சை முறையாகும்.  உடல் பலவீனமானவர்களுக்கு இத்தகைய சிகிச்சை  கொடுத்தால் இதயம் நின்று போய் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.  குடிகாரர்களை இத்தகைய மருத்துவ முறைகளால் நிச்சயம் திருத்தி விட முடியாது,  தகுந்த ஆலோசனை, சில யோக பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் திருத்துவதற்கு வாய்ப்புள்ளது, எவ்வளவு தான் சிகிச்சையளித்தாலும் குடிகாரனின் மனோ நிலை மாறாதவரையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.

    அரசாங்கம் என்பது வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் வணிக நிறுவனம் அல்ல.  தங்களுக்கு நன்மை செய்வதற்காக மக்களால் ஏற்படுத்தப்பட்ட சமூக நிறுவனமே அரசாங்கமாகும்,  ஆனால் இன்றைய அரசுகள் உருவான கருப்பையை சிதைப்பது போல மக்கள் நலத்தை குழித் தோண்டி புதைத்துவருகிறது.  மக்களிடமிருந்து நிதிவசூல் செய்வதில் மட்டுமே அரசுகளின் கவனம் உள்ளது.

    முதலில் நாடு முழவதும் இருக்கும் மதுகடைகள் மூடப்படட வேண்டும்.  அப்படி மூடி விட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா? ஒவ்வொரு முள்புதருகுள்ளும்  கள்ளச்சாராயம் காய்ச்சப்படாதா? என்று கேட்கலாம்,  சாதாரணமாக சைக்கிளில் அலுவலகம் செல்லும் மதுவிலக்கு காவலர்கள் வந்து சேரும் மாமூல் பணத்தில் புதிய கார், புதிய வீடு என ஏராளமாக சேர்த்து விடமாட்டார்களா? என்றும் கேட்கலாம், இவைகள் எதுவுமே தவறான கேள்விகள் அல்ல,  மதுவிலக்கு அமுலிலிருந்த போது நாம் நேரடியாக அனுபவித்த விஷயங்கள் தான் இந்த கேள்விகள்.

    ஆனால் ஒரு அரசாங்கம் மனதுவைத்தால் அரசு தலைமை பீடத்தில் இருப்பவர்கள் செயல்படுத்தியே ஆக வேண்டும் என்று உறுதிக் கொண்டால் சாத்தியப்படாதது என்று எதுவுமே இல்லை.  காமராஜர் முதலமைச்சராக இருந்த போது அரசாங்கத்தின் எல்லா துறைகளும் வேகமாக செயல்பட்டன.  லஞ்சம் என்பதே அத்திபுத்தாற்போல் அரிதாக இருந்தது.  கடைநிலை ஊழியர்கள் கூட கைநீட்ட அஞ்சினார்கள், தமிழகத்தில் நிஜமான பொற்கால ஆட்சியே நடந்தது, காமராஜரால்  மட்டும் அத்தகைய நிர்வாகத்தை எப்படி கொடுக்க முடிந்தது, அவர் என்ன கடவுளா? அவதார புருஷரா? இரண்டும் இல்லை,  நம்மை போன்ற சாதாரண மனிதர் தான் அவர்.  அவரால் மட்டும் எப்படி முடிந்தது என்றால் அவர் நேர்மையாக இருந்தார், மக்களுக்கு நன்மை மட்டும் தான் செய்ய வேண்டுமென்று உண்மை உறுதியோடு இருந்தார், அதனால் அவரால் முடிந்தது, சொந்தபந்த சிக்கலில் மாட்டி தவிக்கும், சுயநலமே வடிவான கருணாநிதியும், ஜெயலலிதாவும் கூட நேர்மையாக ஆட்சி நடத்த விரும்பினால் காமராஜர் சாதித்து காட்டியதை இவர்களாலும் சாதிக்க முடியும்.  ஆனால் தமிழ்நாட்டின் விதியா? தமிழர்கள் பெற்ற சாபமா? என்னவென்று தெரியவில்லை, நேர்மையாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், வரவேற்கப்படுவர்களோ அயோக்கியர்களாக இருக்கிறார்கள்.



    சாராய விஷயத்தை பொறுத்தவரை அரசாங்கத்திற்கும் அரசியல்வாதிக்கும் சாட்டையடி கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் பெண்களுக்கு இருக்கிறது.  காரணம் மதுவின் பாதிப்பால் நேரடியாக தாக்கப்படுவது பெண்கள் மட்டும்தான் குடும்பத்தில் உள்ள கணவனோ, மகனோ அண்ணனோ, தம்பியோ எந்த ஆண்மகன் குடிகாரனாலும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அவதிப்படுவது அவர்கள் தான், எனவே தமிழ்பெண்கள் மதுகடைகளை திறக்கும் எந்த அரசியல்வாதிக்கும் ஒட்டு போட கூடாது.

    திறக்கமாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு கடையை திறந்த அரசியல் கட்சிகளை முற்றிலுமாக புறக்கணிக்க  வேண்டும்,  அந்த கட்சிகாரர்களை தங்கள் பகுதிக்குள் அண்ட விடாமல் துரத்தியடிக்க வேண்டும்.  இது மட்டுமல்ல குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் ஆண்களுக்கு சோறு போட கூடாது, அவன் தாக்க வந்தால் மனசாட்சி, மரியாதை என்பதையெல்லாம் தூக்கி தூரபோட்டு விட்டு பதிலுக்கு பதில் தாக்க வேண்டும்.  காரித்துப்ப வேண்டும்.  புறநானூறு காலத்தில் புலியை விரட்டிய தமிழச்சிக்கு புருஷனை விரட்டுவது ஒன்றும் பெரியகாரியம் இல்லை.  தடி எடுத்தால்தான் தர்மம் பிழைக்கும் என்றால் தடியெடுப்பதால் தவறே இல்லை.  அதனால் தடி எடு பெண்ணே தடி எடு சமூகம் பிழைக்க.

மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்   http://www.verdicms.com/images/goButton.gif

Contact Form

Name

Email *

Message *