Store
  Store
  Store
  Store
  Store
  Store

என்னை கண்டுபிடித்தால் 10 கோடி பரிசு


   ன்புள்ள அம்மா, அப்பாவிற்கு உங்களால் செல்லக்குட்டி என்று அழைக்கப்படும் கரைந்து போன வெல்லகட்டி எழுதும் கடிதம், நீங்கள் நலமா? நம் வீட்டின் பின்னால் வளர்ந்து நிற்கும் வாழைமர மடலுக்குள் பதிங்கியிருக்கும் தேரைக்குட்டி நலமா? அந்த தேரைக்கு கூட உங்களோடு இருக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. ஆனால் எனக்கு எந்த பாக்கியமும் இல்லை.

      அம்மா அன்றொரு நாள் நம் வீட்டு மண் தொட்டியில் பூத்திருந்த ரோஜா பூவை நான் பறிக்க போன போது செடியில் இருந்து பூவை பறிக்காதே, அது பாவம் என்றாய் பூவும் செடியுமே பிரிவதை தாங்கமுடியாத உன்னால் உன் வயிற்றிக்குள் இருக்கும் கதகதப்பான மையிருட்டில் தொப்புள் கொடி சுவாசத்தில் கைமடக்கி, கால் மடக்கி இல்லாத சிந்தனையால் கண் சுருக்கி சுருண்டு கிடந்த நான் கருப்பையின் வாயிலை முட்டி மோதி உன் உதிரத்தை சிந்த வைத்து பூமியில் வந்து விழுந்த என்னை உன் மார்பு காம்பில் பசி மறந்து உலகையே மறந்து துயின்ற உன் குல கொழுந்தை எப்படி பிரிய மனது வந்தது.



    உன் வயிற்றிலிருந்து பூமியில் விழுந்தவுடன் நான் கை விரல்களை மூடிக் கொண்டு வீறிட்டு அழுதது ஏன் தெரியுமா? இதுவரை காணாத வெளிச்சம் வந்து என் பூப்போன்ற கண்ணை குத்தியது பூமியின் காற்று முதல் முறையாக என் சுவாச பைக்குள் சென்றதனால் குறுகுறுப்பு தாங்க முடியவில்லை. அதனால் தான் அழுதேன் அம்மா அப்போது அழுதவுடன் அள்ளி அணைத்து கொண்டாய், ஒரே ஒரு நிமிடம் கூட என்னை முழுமையாய் அழவிட்டதில்லை நீ. என் கண்ணத்தில் மீது வந்து உட்காரும் சின்னஞ் சிறிய ஈ கூட உனக்கு ஜென்ம பகையாளியாக தெரியும், அது கடித்தாலும் கடிக்காவிட்டாலும் நான் அழுது விட கூடாது என்பதற்காக ஒடி வந்து என்னை தூக்கி அனைத்து கொள்வாய். இன்று நாள் கணக்காக ஹாஸ்டலின் மூலையில் கிடந்து அழுது முகம் சிவக்கிறேன், ஆறுதலாய் ஒரு வார்த்தை சொல்ல அருகில் நீ இல்லை. என் அழுகை சத்தம் உன் காதுகளுக்கு கேட்கவில்லை என்றாலும் உன் இதயத்திற்கு கேட்குமே? கேட்டும் கேளாதிருப்பது தான் உனது உண்மையான இயல்போ?

   காசுப்பணம் என்பதும் சொத்து சுகம் என்பதும் குழந்தைகளுக்காக தான் என்று யாரோ எப்போதோ சொன்னது எனக்கு நினைவுயிருக்கிறது நீ கூட என் பிள்ளையின் வளர்ச்சிக்காக தான் வேலைக்கு போகிறேன் என்று அப்பாவிடம் சொன்னாய். அப்பாவும் ஆமோதித்து தலையசைத்தார். எனக்காக நீங்கள் இரண்டு பேரும் வேலைக்கு போனதினால் உருண்டு புரண்டு தவழ்ந்து நடைவண்டி பழகி விழுந்து எழுந்து அழுது கைதட்டி சிரித்து உங்கள் மடியில் கிடக்க வேண்டிய நான் குழந்தைகள் காப்பகத்தில் ஆயா புகட்டிய புட்டி பாலை மூச்சு திணற திணற குடித்துவிட்டு கனத்த வயிற்றை சுமக்க முடியாமல் மல்லாந்து படுத்திருப்பேன். மயக்கத்தில் கண்களை மூடினால் மீசை ரோமங்கள் குத்தும் அப்பாவின் முகத்தில் தலை சாய்ப்பது போல கனவு வரும். அந்த கனவில் தத்தி தத்தி நான் நடப்பதை கை நீட்டி ஊக்குவிக்கும் உன் முகமும் தெரியும், பகல் எல்லாம் கனவில் உங்களுடன் வாழ்ந்து  விட்டு இரவில் விளையாட நான் விழித்திருந்தால் களைத்து நீங்கள் தூங்கிவிடுவீர்கள்.

   அம்மா உன்னிடம் ஒன்று கேட்க வெகு நாளைய ஆசை எனக்கு, நீயும் என்னை போல் குழந்தையாக இருந்த போது தொட்டிலில் உன்னை போட்டு ஆராரோ ஆறாரோ என்று தாலாட்டு பாடி தூங்க வைப்பாளாம் பாட்டி, நீ அப்போதும் தூங்கவில்லை என்றால் தோளில் சாய்த்து முதுகில் தட்டி கொடுத்து நீ தூங்கும் வரை நடந்து கொண்டேயிருப்பாராம் தாத்தா.


     அப்பா நீ கூட சின்னவனாக இருந்த போது உன் அப்பாவின் நெஞ்சில் நின்று தை தை என்று குதிப்பாயாம். அப்போது தாத்தா வலி என்பதே இல்லாமல் உன் குதியாட்டத்திற்கு ஏற்றாற் போல சங்கு சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடுது என்று பாட்டு பாடுவாராம். உன் அக்கா கூட நடு முற்றத்தில் உன்னை நிறுத்தி கை வீசம்மா, கைவீசு என்று பாடுவாளம் இதையெல்லாம் கேட்கும் போது எனக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏன் கிடைக்கவில்லை என்று கேட்க தோன்றுகிறது. அந்த கேள்வியெல்லாம் இருக்கட்டும் எனக்கு தாத்தா பாட்டி என்று யாருமே இல்லையா? அல்லது நான் வாசலில் தவழ்ந்து கொண்டிருக்கும் போது வீட்டை வித்தாவது எனக்கு பணம் கொடு, பணம் இல்லாமல் என் வாசல் படி மிதிக்காதே என்று ஒரு வயதான மனிதரை திட்டி அனுப்பினாயே அவர் தான் என் தாத்தாவா?

     அம்மா உன் வீட்டு தின்னை தரையெல்லாம் சாணம் பூசியிருக்குமாமே, ஈரமான சாணத் தரையில் மிட்டாய் வேண்டுமென கேட்டு விழுந்து புரண்டு கால்களை உதைத்து அழுவாயாமே? மரபாச்சி பொம்மைக்கு எண்ணெய் தேய்த்து தலைவாரி, முகம் அலம்பி பவுடர் பூசி, பொட்டு வைத்து, பூச்சூடி அலங்கரித்து அழகு பார்த்து பக்கத்தில் வைத்து கொண்டே கடைவாயில் எச்சு ஒழுக தூங்குவாயாமே? உன் அம்மாவின் முந்தானையை கிழிந்து, தாவணி போட்டு கதவுக்கு பின்னாள் மறைந்து கொண்டு, கண்கள் விரிய உன் அப்பாவை பார்த்து சிரிப்பாயாமே?

   புத்தக பைக்குள் புளிய பிஞ்சை மறைத்து வைத்து வகுப்பளையில் மிளகாய் தூள் தடவி உன் தோழிகளுக்கு எல்லாம் கொடுத்து கண்டுபிடித்து ஆசியர் அடிக்க இடது கையை நிட்டிக் கொண்டே வலது கையில் ஒட்டியிருக்கும் புளிங்காய் கலவையை நக்கி கொண்டே அழுவாயாமே? உன் அப்பாவின் தோள் மேல் உட்கார்ந்து அம்மன் கோவில் திருவிழாவில் சாமியாடுவதை ரசிப்பாயாமே.


     அப்பா நீ கூட தென்னை மரத்தின் மீதேறி தூக்கனா குருவி கூடு எடுக்க போகும் போது மேல் இருந்து இறங்கிய பச்சை பாம்பை கண்டு கிணற்றுக்குள் குதித்து விட்டாயாயமே? தேய்ந்து போன சைக்கிள் டயரை தெரு தெருவாய் உருட்டிக் கொண்டு நீ சுத்த பாட்டி உனக்கு சாதம் பிசைந்து கையில் வைத்து கொண்டே உன்னை சுற்றி வருவாளாமே தாத்தா பையில் திருட்டுதனமாய் காசு எடுத்து சொக்கலால் பீடி வாங்கி பற்ற வைக்கும் போது தாத்தா வந்து விட்டார் என பயந்து பீடிநெருப்பை வைக்கோல் போரில் வீசிவிட்டு ஒடினயாமே? வீட்டில் கட்டிய காளை மாட்டில் பால் கறக்க போய் மாட்டிடம் உதைப்பட்டு முன்னம் பல்லை பறிக்கொடுத்தாயாமே என்னதான் குறும்பு செய்தாலும் தாத்தா உன்னை அடிக்க பாட்டியின் முந்தானைக்குள் மறைந்து கொண்டு அழுவாயாமே, இதில் ஒன்று கூட என் வாழ்க்கையில் நடக்கவில்லையே அது ஏன்?

    மாலை நேரம் வந்தால் திருவிழா கூட்டம் போல தெருவெல்லாம் பிள்ளைகள் விளையாடுவார்களாமே? அது உண்மையா? அவிழ்ந்து போகும் டவுசரை ஒரு கையால் இறுகி பிடித்து கொண்டு மறு கையால் ஐஸ் சூப்புவார்களாமே? ஒருவர் இடுப்பை இன்னொருவர் தொட்டு கொண்டு வரிசையாக ரயில் வண்டி போல் ஒடுவதும் ஒளிந்து மறைந்து கண்ணாமூச்சி ஆடுவதும், பம்பரத்தின் ஆணியை கூராக்க பெருமாள் கோவில் படிக்கட்டில் அனல் பறக்க தீட்டி வேறொரு பையனின் பம்பரத்தை குத்தி பிளப்பதும், பட்டாம் பூச்சியை பிடிக்க உச்சி வெய்யில் தோட்டம் துரவுயெல்லாம் அலைவதும், கபடி, கில்லி, சின்ன சின்ன சொப்புகளை அடுக்கி, மணலில் சோறாக்கி, மழைநீரை சாம்ராக்கி மகிழ்வதும் கொட்கிற மழையில் கைகளை விரித்து வானம் பார்த்து ஆலாவட்டம் சுற்றுவதும், மனதில் தோன்றுகின்ற படியெல்லாம் பாடுவதும், ஆடுவதும் என்று இரவு வரையில் வீதியெல்லாம் அமர்க்ளபடுமாமே? நிஜமாகவே அவையெல்லாம் நடந்ததா? அல்லது எங்களின் ஏக்கத்தை வளர்ப்பதற்கு கற்பனையாய் சொல்லப்பட்டதா? பொய்யோ மெய்யோ? அதை நினைத்து பார்ப்பதற்கே கண்கள் சொக்குகிறது. நிஜமாக பார்த்தால்..?


    தடுப்பூசி போடுவதற்காக அம்மா என்னை தூக்கி போன மாலை நேரத்தில் தான் முதன் முதலாக தெருவை பார்த்தேன். நான் பாட புத்தகத்தில் படிக்கும் பாலைவனம் போல் தான் அது எனக்கு தெரிந்தது. விளையாட அல்ல, தெருவில் குறுக்கும் நெடுக்கும் நடக்க கூட எந்த பிள்ளைகளையும் நான் காணவில்லை. பிள்ளைகளை மட்டுமா? சூரியன் மேற்கு வானில் இறங்குவதற்குள் வெளி முற்றத்தில் நீழ் தெளித்து கோலம் போடுவார்களாம். நான் கோலத்தையும் பார்கவில்லை. கோலம் போடும் ஆட்களையும் பார்கவில்லை. பல் இல்லாத கிழவிகள் ஒன்று இரண்டு பேரைதான் வாசலில் பார்த்தேன், எல்லோரும் டி.வி. பார்க்க உட்கார்ந்து விட்டார்களோ என்று அம்மா மூணுமூணுப்பதையும் கேட்டேன்.

    கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று கண்ணால் காணாமல் நம்ப முடியாது என அப்பா ஒரு நாள் யாருடனோ செல்லில் பேசி கொண்டிருந்தார். அப்படித்தான் இந்த விளையாட்டுகளை எல்லாம் கண்ணால் பார்க்காமல் என்னால் நடந்ததை நம்ப முடியவில்லை. ஒரு வேளை கடவுளும் ரொம்ப பழைய காலத்தில் எல்லோர் முன்னாலும் நடமாடி கொண்டுயிருந்துருப்பார். இந்த விளையாட்டுகளை போலவே மறைந்து போயிருப்பார் என்று எனக்கு நானே கூறிகொள்வேன்.

    நான் பார்க்காத உறவுகளை, நான் அனுபவிக்காத சந்தோஷங்களை நீயும் அம்மாவும் அனுபவித்திருக்கிறீர்கள், எனக்கு நிஜமான சந்தோஷம் இது தான் என்பதை கூட அறியாமல் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகளையும், தங்க வைர நகைகளையும் சேகரித்து வைக்கிறீர்களே அந்த நோட்டுகட்டில் ஒரு ரூபாய் கூட வெற்று காகித கப்பல் தரும் சுகத்தை எனக்கு தராது என்பதை நீங்கள் மறந்து போய்விட்டது ஏன்? பொம்மைகளில் இல்லாத அழகு நகைகளில் இருப்பதாக நான் எப்படி நம்ப முடியும்.

   அம்மா ஒரு நாள் அதிகாலையில் அப்பாவின் வயிற்றின் மேல் கால் போட்டு அயர்ந்து உறங்கி கொண்டிருந்தேன், எப்போதோ எழுந்துவிட்ட நீ தூக்கம் கலையாமலே என்னை தூக்கி சென்று மூச்சு திணற திணற குளிக்க வைத்தாய். டவல் கூட வலி தாங்காமல் கதறும் வண்ணம் அவசர அவசரமாய் துவட்டி எடுத்தாய் சோள கொல்லை பொம்மையை ஆடைகளுக்குள் திணிப்பது போல் என்னையும் திணித்தாய். சுகந்திரமாய் மணல் மீது நடமாடிய என் பாதங்களை ஷீ என்ற சிறைசாலைக்குள் அடைத்தாய் சாப்பாடு என்று எதையோ என் வாய்க்குள் திணித்து, என்னை போல் தூக்கம் கலையாமல் பள்ளி பேருந்துக்குள் நசுங்கி கொண்டிருந்த குழந்தைகளோடு குழந்தையாக என்னையும் அமுக்கி திணித்து கதவை சாத்தி டாட்டா காட்டி சிரித்தாய் தான் அழுவது அறியாமலே.




   முகத்தில் பவுடரும் கையில் பிரம்பும் கண்களில் தூக்கமும் கொண்டு எனக்கு பாடம் எடுக்க வந்த ஆசிரியையின் குரல் கரையான்கள் அறிப்பது போல் என் காதுகளில் நமநமத்தது. பாத்ரூம்க்கு அழைத்து சென்ற ஆயாவின் பலமான கைகள் என் உடல் எங்கும் எரிச்சலை தந்தது. விசில் அடித்தால் விளையாடுவதும், அதே விசில் சத்தம் மீண்டும் வந்தால் நிறுத்தி கொள்வதும் தூக்கு கயிற்றை கழத்தில் மாட்டி மீண்டும் எடுத்து கொள்வது போல் இருந்தது. அ;தனால் தான் நான் பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அடம் பிடித்தேன். அதை புரிந்து கொள்ளாத நீங்கள் பள்ளத்தில் விழந்தவனை தூக்கி கிணற்றுக்குள் போட்டது போல் ஹாஸ்டலில் என்னை சேர்த்து விட்டிர்கள், இங்கு என்னை சுற்றி முள் மரங்கள் நிற்பது போல் சுவருகள் நிற்கின்றன. நான்கு புறமும் எழுந்து நிற்கும் சுவர்களுக்கள் அழுது வடியும் குண்டு பல்பின் வெளிச்சம் நிழல் அரக்கர்கனை உருவாக்கி என் நெஞ்சமெல்லம் பய நெருப்பை மூட்டி விடுகிறது. மூட்டை பூச்சிகள் ஊறுவதும் கொசுக்களின் இரச்சலும் என் உறக்கத்தை பிடுங்கி திண்கிறது.

   எனது வகுப்பறை முன்னே ஒங்கி வளர்ந்து நிற்கும் அசோக மரத்தை இமை கொட்டாமல் பார்க்கிறேன். இந்த மரமும் ஒரு காலத்தில் என்னை போலவே சின்ன சிறியதாக இருந்து தான் இத்தனை உயரம் வளர்ந்து இருக்கிறது. அது செடியாக இருந்த போதும் மரமாக வளர்ந்த போதும், பசுமையையும் மலர்ச்சியையும் இழக்கவே இல்லை. அது சூரிய வெளிச்சத்தை வாங்கி வளர யாரும் தடைசெய்யவில்லை பள்ளிக்கூடம் போகாமலே அதற்கு துளிர்க்க தெரிகிறது. காய்க்க தெரிகிறது. காலகாலத்தில் இலைகளை உதிர்க்க தெரிகிறது. எனக்கு மட்டும் ஏன் இத்தனை தடைகள் நான் மரத்தை விட கீழான பிறவியா?


     காய்ந்த ரொட்டியையும், நாற்றம் எடுக்கும் குருமாவையும் தினம் தினம் சாப்பிட்டு என் வயிறு கனத்து போய்விட்டது. இப்போது என் கால்கலுக்கு வலியாக இருக்கிறது. ஒரு நாள் இரவில் என் அடிவயிற்றில் உஷ்ணம் ஏறி வலிக்க ஆரம்பித்தது. நேரம் ஆக ஆக வலியின் கைகள் என் வயிற்றை பிசைய ஆரம்பித்தது. டாய்லெட் போய் உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. ஆனாலும் எழுந்திருக்க பயம், மின்சாரம் இல்லையென்பதனால் கண்ணை திறந்தாலே இருட்டுக்குள் ஏதேதோ உருவங்கள் தோன்றி என்னை நெருக்க வந்தன. சத்தமே இல்லாமல் அழுதேன். வலியும், அழுகையும் இருட்டும் நரகம் இது தான் என்று அறிமுகப்படுத்தியது. அம்மா உன் வயிற்றுக்குள்ளேயே நான் செத்து போய் இருந்தால் அரவணைப்பில் தூங்க வேண்டிய காலத்தில் அனாதையாக கிடக்காமல் தப்பியிருக்கலாம். ஆனாலும் என்ன செய்வது? உன்னை மலடி என்று ஊரார் திட்டாமல் இருக்க வந்து பிறந்து தொலைத்து விட்டனே. எத்தனை நேரம் அப்படியிருந்தேன் என்று எனக்கே தெரியாது. அவஸ்தையோடு உறங்கி போனேன்.


    உறக்கத்தில் ஒரு கனவு வந்தது. கனவில் உன்னை போலவே அம்மா ஒரு பெண் வந்தாள ஆனால் அவளுக்கு வெளிச்சமாய் இருண்டு சிறகுகள் இருந்தன. நறுமணம் வீசும் அவள் கைகளில் என்னை அனைத்து மடியில் உட்கார வைத்து தலையை வருடி கொடுத்தாள், ஏன் அழுகிறாய் கண்ணோ, நீ தாயில்லாத பிள்ளை இல்லை. உன்னை அணைத்து ஆனந்தமாய் கொண்டாட அம்மா இருக்கிறாள் நீ வேண்டிது எல்லாம் வாங்கி தந்து உன்னை தோளில் சுமைக்க தகப்பன் இருக்கிறான். தாயும் தந்தையும் இல்லாத பிள்ளைகள் தான் அழ முடியாமல் நெஞ்சு பொங்கி தனக்குள் வெம்பி சாவார்கள். நீ அப்படி வெம்மலாமா மகளே, என்று கேட்டு என் கன்னத்தில் மென்மையாக முத்த மிட்டாள் அவள் உதடுகளில் இருந்து வீசிய நறுமணம் என் நெஞ்சை கூடுயெல்லாம் நிறைந்து சிலிர்ப்பை தந்தது.

   நீ யாரோ எனக்கு தெரியாது அம்மா எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று இல்லாதது போல் என் மனது கனத்து கிடக்கிறது. இரும்பு குண்டை கால்களில் கட்டி நடப்பது போல் கஷ்டம் என்னை தொடர்கிறது. உடம்பில் வலி என்றால் இங்கே வலிக்கிறது என்று தொட்டு காட்ட முடியும். என் மனதில் வலிக்கிறது. அதனால் தான் அது என் வலி என்று என்னால் சுட்டிகாட்ட முடியவில்லை என்று சொல்லி அந்த பெண்ணின் அழகான வழு வழுப்பான கழுத்தில் என் முகத்தை புதைத்து கொண்டு விம்மி அழுதேன். உன் மனவலிக்கு காரணம் உன்னை நீ தொலைத்து விட்டது தான் மகனே உன்னை தேடி கண்டுபிடி, அப்போது உனக்கு ஆறுதல் கிடைக்குமென்று அந்த அழகு தெய்வம் மறைந்துவிட்டது.

  அதனால் தான் அம்மா உனக்கு இந்த கடிதம் எழுதுகிறேன். என்னை நான் எப்போது தொலைத்தேன், ஏன் தொலைத்தேன் எனக்கு எதுவுமே தெரியவில்லை. நான் பிறப்பதற்கு முன்பே என் வளர்ச்சிக்காக மருந்து சாப்பிட்டவள் நீ என்னை விட உனக்கு தான் என்னை அதிகமாக தெரியும். அதனால் தான் கேட்கிறேன் அம்மா எப்போது நான் தொலைந்து போனேன்.

  எ ல் கே ஜி -யில் என்னை சேர்த்த போது போகமாட்டேன் என்று அப்பாவின் இடுப்பை பிடித்து கொண்டு அலறி அழுதேனே அப்போது நான் தொலைந்து போய் இருப்பேனோ?

  மொட்டை மாடியில் உட்கார்ந்திருந்த காக்காவிற்கு கையில் இருந்த சாக்லேட்டை தூக்கி போட்ட போது என் விரல் மீதே அடித்தாயே வலி தாங்க முடியாமல் விழுந்து அலறினேனே அப்போது தொலைந்து போய் விட்டேனோ?

  வாசல்படியை விட்டு இறங்கி முழங்கையில் வழிந்த பிட்டாய் எச்சிலை விரலால் தொட்டு நக்கிய போது முதுகில் அடித்து தரதர வென இழுத்து வந்தாரே அப்பா அப்போது தான் தொலைந்து விட்டேனோ?

  ஒரு நாள் வீட்டில் செய்த அதிரசத்தை பக்கத்துவிட்டு பப்புலுக்கு உனக்கு தெரியாமல் எடுத்து கொண்டு போய் கொடுத்ததற்கு நீ முறைத்தாய் அதற்காக கொஞ்ச நேரம் நான் கோபத்தில் பேசாமல் இருந்தேன். அந்த கோபத்தால் என்னை நானே தூக்கி எங்காவது பரண் மீது போட்டு விட்டேனா?

  என்னை விட உயரமாக புத்தகங்களை அடுக்கி தூக்கி கொண்டு போ என்று அப்பாவும் நீயும் வற்புறுத்திய போது புத்தகத்தோடு சேர்த்து என்னையும் சுமப்பது சிரமமாக இருக்கிறது என்று என்னை மட்டும் பள்ளி கூட மைதானத்தில் தன்னந்தனியாக விட்டுவிட்டு வந்து விட்டேனா?

என்னை கண்டு பிடித்து தருபவர்களுக்கு பத்து கோடி ரூபாய் தருவதாக விளம்பரம் செய்யலாமா ?

  எல்லாம் சரி என்னை தொலைத்து விட்டேன், என்னை தொலைந்து விட்டேன் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறேனே, கையும், காலும் வாயும் தலையோடு முழுமையாக உட்கார்ந்து உனக்கு கடிதம் எழுதி கொண்டிருப்பது யார்? அது நான் இல்லையா? அது என் வெறும் உடம்பு என்றால் நான் தொலைத்து விட்ட நான் யார்? என்ற யோசனை இப்போது வருகிறது. அந்த யோசணையில் முழ்கி சிறிது நேரம் கடிதம் எழுதுவதை நிறுத்தி வைத்து உட்கார்ந்து விட்டேன்.

  ஹாஸ்டலுக்கு வெளியே யாரோ ஒரு பெரியவர் ஒலி பெருக்கியில் பேசினார். இன்றைய கல்வி முறை குழந்தைகளிடத்தில் இருந்த குழந்தை தனத்தை தொலைத்து விட்டது என்று,

  அம்மா அந்த பெரியவர் சொன்ன குழந்தை தனம் என்பது தான் நானா? என் குழந்தை தனத்தை நான் தொலைத்து விட்டு தவியாய் தவிக்கிறேனா? தொலைந்து விட்ட குழந்தை தனத்தை மீண்டும் எனக்கு நீ பெற்று தருவாயா? அம்மா எனக்கு தெரிந்து நானாக அதை தொலைக்கவில்லை, நீயும் அப்பாவும் சேர்ந்து தான் உங்கள் கனவுக்காக என் குழந்தை தனத்தை பிடுங்கி எங்கோ மறைத்து வைத்து விட்டிர்கள், தயவு செய்து அதை கொடுங்கள் ஒரு நாள் ஒரே ஒரு நாள் குழந்தை தனத்துடன் வாழ்ந்து பார்க்கிறேன்.

                                                                                                                                           இப்படிக்கு
                                                                                                                                        உங்கள் மகன்


Contact Form

Name

Email *

Message *