Store
  Store
  Store
  Store
  Store
  Store

நடுவீட்டிற்குள் நடமாடும் பேய்கள்!


     டி மாதத்தில் மாரியம்மன் கோவில்களில் திருவிழாக்கள் வந்து விட்டால் கிராமங்களில் விடிய விடிய கரகாட்டம் நடத்தப்படுவது அன்று பல இடங்களில் வாடிக்கையாக இருந்தது.  இன்றும் நிலைமை அப்படியே இருக்கிறது என்றும் சொல்ல முடியாது.  காரணம் இன்று மக்களுக்கு திருவிழாவின் மீதுள்ள கவர்ச்சி கொஞ்ச கொஞ்சாம குறைந்து  கொண்டே வருகிறது.  அதற்கு என்ன காரணமென்று இப்போது நாம் ஆராய போவதில்லை. ஆனால் அன்று கரகாட்டத்தை ரசிக்கும் இளவட்டங்களை பெரியவர்கள் விமர்சித்ததை திரும்ப ஒருமுறை நினைத்து பார்ப்பதற்கு தான் ஆடிமாத திருவிழாவை வம்பிழகிழத்தேன்.

    கரகாட்டம் என்றால் என்னவென்று நமக்கு நன்றாக தெரியும். இன்றைய  இளைய தலைமுறையினர் நேரடியாக அந்த ஆட்டத்தை கிராமத்தில் பொது மைதானத்தில் பார்த்திருப்பது மிகவும் அரிது இரண்டு  பேர் நையாண்டி மேளம் வாசிப்பார்கள். ஒன்றை நாயனத்தில் ஸ்ருதியே இல்லாமல் சினிமாபாட்டு வாசிக்கப்படும்.  தாளத்திற்கும் அசைவிற்கும் சம்பந்தமில்லாமல் இரண்டு பெண்கள் ஆடுவார்கள் கோமாளி மாதிரி இருக்கும் ஒர் ஆண் இடையிடையே இரைட்டை வசனத்தில் பேசுவார் இதில் பாராட்ட வேண்டிய ஒரே அம்சம் எந்தவித ஆதாரமும் இல்லாமல் தலையின் மீதிருக்கும் கரகம் இவர்களின் அங்க சேட்டைகளுக்கு எல்லாம் ஈடு கொடுத்து சம்மென்று உட்கார்ந்து இருக்கும். 


    கரகாட்டம் ஆடுகின்ற பெண்களின் மேல் சட்டையில் பணம் குத்துவதற்கு ஊர் மைனர்களிடம் போட்டா போட்டியே நடக்கும் இதில்அடிதடியாகி மண்டை உடைந்து போலிஸ் ஸ்டேஸன்  வரை செல்வது வாடிக்கை கரகாட்டம் முடிந்த மறுநாள் ஊர் பெண்கள் இரவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஆண் பிள்ளைகளின் சேட்டைகளை கரகாட்ட பெண்களின் அரைகுறை ஆடை அலங்காரத்தை மிக கேவலமான வார்த்தைகளில் விமர்சிப்பதை கேட்க முடியாமல் நம் காதுகள் தானாகவே மூடி கொள்ளும்.  தமிழில் இத்தனை வகையான கெட்ட வார்த்தைகள் உண்டா?  அல்லது இவர்களே அந்த வார்த்தைகளை உற்பத்தி செய்கின்றார்களா?  என்று வியப்பு தான் ஏற்படும்.  வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் இந்த அசிகங்கத்தை கூட தாங்கி கொள்ள முடியாத நமது தாய்மார்கள் தினசரி தமது வீட்டின் வரவேற்பறையில் இதை விட அசிங்கமானதை பார்த்து ரசித்து கொண்டிருப்பது வேடிக்கையல்ல வேதனையாகும்.

    ஓர தனியார் தொலைக்காட்சியில் வாரத்தில் இரண்டு நாட்களோ அல்லது மூன்று நாட்களோ சரியாக தெரியவில்லை ஒரு நடன நிகழ்ச்சி காட்டப்படுகிறது.  சின்னத்திரையின் நட்சத்திரங்களின் நடன திறமையை வெளிகாட்டுவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறதாம் நடனமாடுபவர்களின் நடன அசைவுகளாகயிருக்கட்டும் ஆடை அலங்கரமாக இருக்கட்டும் முழுகவர்ச்சி என்று சொல்லவே முடியாது.  மிகவும் மட்டரகமான ஆபாச தோற்றம் என்று சொல்லலாம்.  இந்த ஆபாசத்தை கூட மன்னிக்கலாம் நிகழ்ச்சிக்கு நடுவர்களாக இருக்கும் சில நீதிபதிகளின் உடை அலங்காரமும். அரட்டை லூட்டிகளும் கண்களையே குருடாக்கும் அளவிற்கு சகிக்க முடியாமல் இருக்கிறது. தற்செயலாக இந்த சேனலை ஒரு நிமிடம் பார்க்க நேரிடும் நமக்கே அதன் அருவருப்பை தாங்கமுடியவில்லை. மணிக்கணக்காக சிறியவர்களும் பெரியவர்களும் அதை எப்படித்தான் பார்க்கிறார்களோ தெரியவில்லை.


    நடன நிகழ்ச்சி என்றால் சற்று முன்னே பின்னே தான் இருக்கும் என்று நம்மை நாமே தேற்றிக் கொண்டு இசை போட்டிகளை பார்த்தால் அது இதைவிட கேவலமாக இருக்கிறது. நீதிபதிகள் என்று வருபவர்கள்அந்த வார்த்தையின் பொருளுக்காவது மரியாதை கொடுக்கலாம். இவர்கள் என்னவோ அலங்கார அணிவகுப்பில் பூனைநடை போடுபவர்கள் போல் ஆடை அணிந்திருப்பது கண்களுக்கு குமட்டுகிறது.

    இந்த காலத்து சின்ன பிள்ளைகள் நாம் சிறியவர்களாக இருந்தபோது அம்மாஞ்சிகளாக இருந்தது போல இருப்பதில்லை.  நீதிபதி என்றால் கருப்பு கோட் தானே போட வேண்டும் இவர்கள் கோட் அணியவில்லை என்றாலும் புடவையாவது கட்டலாமே என்கிறார்கள் வேறுசில பிள்ளைகள் இவர்கள் வீட்டில் மிகவும் வறுமை போல் இருக்கிறது. முழமையான உடையை வாங்குவதற்கு பணமில்லாமல் அரைகுறையாக அணிந்திருக்கிறாகள் என்று கிண்டலும் செய்கிறார்கள்.  இந்த மாதிரி அரைகுறை ஆடைகள் அணிவது பண்பாட்டு சிறப்பை வளர்ப்பதே நோக்கமாக கொண்ட தமிழ் சேனலில் மட்டுமல்ல மலையாளம்,  தெலுங்கு, இந்தி என்று எந்த வேற்றுமையும் இல்லாமல் எல்லா மொழி சேனல்களிலும் பரவிகிடக்கிறது.

    பழைய சினிமா மற்றும் நாடகங்கள் பெண்களை குலவிளக்குகளாகவும், பண்பாட்டு தீபங்களாகவும், சோதனைகளின் சுமை தாங்கிகளாகவும் சித்தரிப்பார்கள்.  இப்பொழுது தொலைக்காட்சி தொடர்களில் ஆட்களை கடத்துவது கொலை செய்வது. கட்ட பஞ்சாயத்து செய்து  பழிவாங்குதல்,  சதி செய்தல்,  போன்ற இன்னும் பிற வன்முறைகளை பெண்களே செய்வதாக காட்டப்படுகிறது.  இதை பார்த்து ரசிப்பது,  உருகிபோவது ஏரளமான பெண்களே தவிர ஆண்களல்ல,  ஒரு சமுதாயத்தில் கெட்டு போகாதவர்களாக பெண்கள் இருக்கின்ற வரைதான் அந்த சமுதாயம் நல்ல சமுதாயமாக திகழும்,  குடும்ப அமைப்பும் சீர் கெடாமல் இருக்கும்.  இன்றைய தொலைக்காட்சி தொடர்கள் பெண்களிடத்தில் உள்ள நல்ல இயல்புகளை விஷம் வைத்து கொன்று வருகிறது.


    தொடர்ச்சியாக பழிவாங்கும் தொடர்களையே பார்த்து வரும் போது நம்மை அறியமலே அந்த உணர்வுகள் நமது மனதின் ஆழமான பகுதியில் அழத்தமாக பதிந்து விடுகிறது.  நம்மை சுற்றியிருப்பவர்கள் விளையாட்டாகவோ,  வேடிக்கையாகவோ,  அல்லது எதார்த்தமாகவோ நமது செயல்களை விமர்சிக்கும் போது அதை தாங்கமுடியாத வன்மம் மனதிற்குள் வளர்ந்து சம்பந்தபட்டவர்களை நிரந்தர எதிகளாகவே கற்பித்து கொள்ளும் சூழலும் ஏற்படுகிறது.  அந்த சீரியலில் வரும் கதாநாயகியை போல் நானும் நயவஞ்சர்களால் சூழப்பட்டிருக்கிறேன. அவர்களால் தொடர்ந்து அவமானப் படுத்தப் படுகிறேன்.  அவர்கள் ஒழியும் வரை அல்லது ஒழிக்கப்படும் வரை எனக்கு நிம்மதி இல்ல என்று வகையிலான மனோபாங்கு அமைந்து பெண்களை சண்டைகாரிகளாகவோ பலவீனமானவர்களாவோ மாற்றிவிடுகிறது.

    அடுத்தவர்களிடமிருந்து வரும் சின்ன சின்ன தாக்குதலை கூட தாங்கி கொள்ள முடியாத மனது சதாசர்வகாலமும் ஆர்பரித்த வண்ணமேயுள்ளது. இதனால் அமைதி பூங்காவாக இருக்க வேண்டிய குடும்பம் பல நேரங்களில் யுத்த பூமியாக மாறிவிடுகிறது. அமைதியான வாழ்க்கை என்பதே இந்த காலத்தில் பலருக்கு அமையாததற்கு அல்லது அமைத்து கொள்ள தெரியாததற்கு பல நேரங்களில் தொலைக்காட்சி தொடர்களே காரணமாகி விடுகிறது.

    அந்த காலம் முதல் இந்த காலம்வரை மாமியார் என்ற வார்த்தையே கொடுமைக்காரி என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல கணவனின் தகப்பானாரை தவிர மற்ற உறவு முறைகள் எல்லோருமே வீட்டுக்கு வந்த மருமகளை தொல்லைபடுத்துபவர்களாக தான் நம்பப்படுகிறது. தனது தாயார் தன்னை சனியனே என்று அழைத்தால் வருத்தப்படாத பெண்கள் அதே வார்த்தையை மாமியார் உபயோகித்தால் பொறுமை என்பதே இல்லாமல் மகாகாளியாக மாறிவிடுகிறார்கள்.


        நமது பிள்ளைகளிடம் நமக்கிருக்கும் உரிமைதான் நம் கணவரிடம் அவன் தாயருக்கு இருக்கிறது என்பதை பல நேரங்களில் பெண்கள் மறந்து விடுகிறார்கள். அதே நேரம் பெற்ற மகள் அவமரியாதை செய்தால் கூட சகித்து கொள்ளும் தாய்மார்கள் மருமகள் கடினமான ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் ஆர்பரித்து விடுகிறார்கள்.  ஆண்கள் மட்டும் உத்தம புருஷர்கள் என்று சொல்லிவிடமுடியாது தாயாரை தூண்டிவிடும் மகனும்,  மனைவிக்கு கொம்பு சீவும் கணவனும் பல பேர் உண்டு.  கடைசியில் தங்களை நியாயவானாக காட்டி கொள்வதற்காக ஒட்டுமொத்த பழியையும் பெண்கள் மீது போட்டு விடும் ஆண்களும் உண்டு,  மைத்துணி, மைத்துனன், ஓரகத்தி, அக்கா, தங்கை என்று புது பெண்ணிடம் நடத்து கொள்ளும் முறை இருக்கிறதே நின்றால் குற்றம்,  நடந்தால் பாவம்,  என்று ஏராளமான புகார்களை அள்ளி வீசிய வண்ணம் இருப்பார்கள் பல குடும்பங்களில் புதிய குழந்தை பிறந்துவிட்டால் நிலைமை சகஜமாகி விடும்.  ஆனால் இன்று நிலைமைகளை மேலும் முறுக்கேற்றுவதற்கு தொலைக்காட்சி தொடர்கள் நல்ல உரமாக இருக்கிறது அதில் வரும் காட்சிகளை உண்மையென்று நம்பியே தன்னை அறியாமல் கடைபிடித்தோ பல குடும்பங்கள் சந்தை கடையாகி கிடக்கிறது.  சில நீதிமன்ற வாசலிலும் நிற்கிறது.


    இரண்டு பெண்கள் பேசிக் கொண்டார்கள். ஒருத்தி சொன்னாள் விரல்கள் நாடகத்தில் சுதாகரனை கட்டிக் கொள்வதாக கவிதா வாக்குறுதி கொடுத்திருந்தாள் அல்லவா?  கடைசி நேரத்தில் சுதாகரனை கட்டகூடாது என்று கவிதாவின் கணவன் தடுத்துவிட்டனாம்.  எதற்காக அவன் தடுத்தான் என்றால் அவன் கள்ளகாதலின் கணவன் தான் கவிதாவின் முதல் காதலனாம். முதல் காதலனை கைவிடுவது பாவமென்று கணவன் சொன்னதினால் யாரோடு வாழ்க்கை நடத்துவது என்று குழம்பிய கவிதா கடைசியில் தன் அலுவலகத்தில் பணிபுரியும் ரமேஷோடு தனிக்குடித்தனம் நடத்துகிறாளாம்

    இன்னொருத்தி பேச ஆரம்பித்தாள்  இது பரவாயில்லை.  அரளிச்செடி தொடரில் அரவிந்தன் இப்போது என்ன செய்கிறான் தெரியுமா?  கல்யாணம் பண்ணிய அழகான மனைவி வீட்டில் இருக்க தனது பி.ஏ-வுடன் சுற்றி அலைந்து குழந்தையும் கொடுத்து விட்டு யாரோ  ஒரு நாற்பது வயதுகாரியுடன் குடித்தனம் நடத்தினானாம்.  பம்பாயில் இருந்து வந்த அவன் நண்பன் சுரேஷ் சொன்னான் என்று பெண்ணாக மாற ஆப்ரேஷன் வேறு செய்து கொண்டானாம்.  நாற்பது வயதுகாரியையும் விடிமுடியாமல் மனைவியோடும் வாழமுடியாமல் நண்பன் ரமேஷியுடன் தனிக் குடித்தனம் நடத்துகிறான்.  இவன் மீண்டும் ஆண்மை பெற அமெக்காவிலிருந்து ஒரு டாக்டர் வேற வர போகிறாராம்.  பாவம் இவன் எப்படியும் மீண்டும் ஆண்பிள்ளையாக மாறி மனைவியோடு குடித்தனம் நடத்த வேண்டுமென்று என் மனது கிடந்து அடிக்கிறது.

    இதுதான், இதேதான் இப்போதைய தொலைக்காட்சி தொடர்களின் மைய கதை. பெயர் மாறியிருக்கலாம். நடிகர்கள் மாறியிருக்கலாம் அரங்க அமைப்பு மாறியிருக்கலாம்.  கதைமட்டும் மாறவே இல்லை. தனியார் தொலைக்காட்சிகள்  ஆரம்பித்த காலத்திலிருந்து இதே மாதிரியான கதைகள் தான் தொடர்ந்து வந்து கொண்டுயிருக்கின்றன.  இதை பார்க்கும் பெரியவர்களின் மனமே கெட்டு குட்டி சுவராகி விடும் எனும்போது குழந்தைகளின் மனோநிலையை பற்றி கேட்கவே வேண்டாம்.  பிஞ்சியிலே வெம்பி விடுகிறார்கள்.பதினாறு வயது பிறப்பதற்குள்ளாகவே ஆண்குழந்தைகளும், பெண் குழந்தைகளும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு வக்கர குணம் படைத்தவர்களாகி விடுகிறார்கள் பாய் பிரண்ட், கேர்ள் பிரண்ட் என்ற வகை ஒருபுறம்.  அவர்களோடு சில மணிநேரம் செல்போனில் அரட்டை இன்னொரு புறம்.  இரவு முழுவதும் போர்வைக்கடியில் செல்போன் உரையாடல் போதாது என்று எஸ்.எம்.எஸ் தகவல்கள் வேறு.


    சமீபத்தல் திண்டுகல்லில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும ஒரு பெண் குழந்தை தான் ஒரு குழந்தை பெற்று கழிவறையிலே போட்டுவிட்டு வகுப்பறையில் வந்து உட்கார்ந்து கொண்டதாம்.  அந்த குழந்தையை ஏமாற்றியது யார்?  அதன் எதிர்காலம் என்னாவது?  என்பதெல்லாம் வேறு வகை விவாதம்.  அது இங்கு தேவையில்லை பள்ளிக்கு செல்லுகின்ற தன் பெண் குழந்தை வீட்டிற்கு வருவதற்குள் வழியில் செய்வது என்ன?  எதிர்கொள்வது என்ன?  என்பதை கூட அறிய முடியாவில்லை என்றால் அதில் தவறில்லை.  ஆனால் வீட்டில் பத்துமாதம் கர்ப்பமாகி அந்த குழந்தை இருந்த போதும் அதை பெற்றோர்கள் கவனிக்கவில்லையென்றால் அவர்களுக்கு பெற்றோர்களாக இருக்கும் தகுதியே இல்லை. மாதமாதம் தன் பெண்ணுக்கு ஏற்படும் இயற்கை உபாதையை கூட ஒரு தாய் கவனிக்கவில்லை என்றால் குடும்பம் எப்படி தான் நடக்கும். ஜனங்களின் மனநிலை இந்தளவு மறுத்து போனதற்கு நிச்சயம். இத்தகைய தொலைக்காட்சி தொடர்களே முக்கிய காரணம் எனலாம்.

         தொலைக்காட்சி நடத்தும் நிர்வாகிகள் சமூக பொறப்புள்ளவர்களாக இருந்தால் நிச்சயம் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை தங்களது சேனல்களில் ஒளிபரப்ப மாட்டார்கள்.  யார் எக்கேடு கெட்டால் என்ன எனது கல்லா பெட்டி நிறைந்தால் சரி என்று நினைப்பவர்களே இத்தகைய சமூக கொடுமைகளுக்கு காரண கர்த்தா எனலாம்.  நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசியலிலும், சமூகத்திலும் மதிப்புமிக்க இடத்தில் இருப்பவர்களே தொலைகாட்சிகளை நடத்துகிறார்கள்.  கழுகு உயரத்தில் பறந்தால் கூட அழுகிய மாமிசத்தை தான் தேடும் என்பது போல தகுதியிலும் பதவியிலும் உயர்ந்ததாக இருந்தாலும் தனது தராதரம் என்பது இவ்வளவு தான் என்று காட்டுகின்ற தொலைக்காட்சி நிர்வாகிகள் சற்றேனும் யோசித்து திருந்த வேண்டும்.

    கடைசியில் ஒரு பாராட்டை சொல்லியே ஆக வேண்டும்.  ஜாதி சங்கம் வைத்து வளர்ந்த ராமதாஸ்,  ஜாதிகளுக்கிடையில் காழ்புணர்ச்சியை வளர்த்த ராமதாஸ், வன்னியர்களின் பாதுகாவலர் என்று தனது குடும்பத்தை மட்டுமே உயர்த்திய ராமதாஸ், தனது கட்சிக்காக அடிபட்டு உதை பட்டவர்களை கீழே பிடித்து தள்ளிவிட்டு தனது மகனுக்கு அமைச்சர் பதவியை வாங்கி கொடுத்து ராமதாஸ் நித்தம் ஒரு கூட்டணி, மணிக்கொரு உறவு என்று கொள்கைகளையே கோமாளி தனமாக்கிய ராமதாஸ் தான் நடத்துகின்ற மக்கள் தொலைகாட்சியை மாசற்ற பெட்டகமாக குறை சொல்ல முடியாத கோபுரமாக அறிவு கதவை திறக்கம் கருவூலமாக நடத்துகிறார். ஆச்சர்யம் தான் என்றாலும் நல்லதை பாராட்டாமல் இருப்பது நாகரீகமல்ல என்பதினால் மக்கள் தொலைக்காட்சிக்கு நம் பாராட்டுகள்.








Contact Form

Name

Email *

Message *