Store
  Store
  Store
  Store
  Store
  Store

ரோமக்கால்களை குத்திட செய்யும் அமானுஷ்ய அனுபவம்

ந்திப்பொழுது முடிந்து 2 நாழிகைகள் ஆகி இருக்கும் அதற்குள் கிருஷ்ணபட்சத்து இருள் அந்த வனாந்தரம் முழுவதும் கவ்விக்கிடந்தது, கரிய வானில் ஒருசில நட்சத்திரங்கள் மட்டும் ஒளி மெலிந்து கண்சிமிட்டிக்கொண்டு  இருந்தன. இரவு நேரத்திற்கே உரிய விசித்திர புள்ளினங்களின் ஒலி தாளஜதி தட்டாமல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. அடர்ந்த உயர்ந்த விருட்சங்கள் சூழ்ந்த அந்த கானகத்தின் மத்தியில் பெரும் மலைப்பாம்பு ஒன்று நீண்டு நெளிந்து படுத்து இருப்பது போன்ற ஒற்றையடிப்பாதை இருளிலும் மங்கலாகத் தெரிந்தது.

    இரவு நேர இரைதேடலுக்கு தயாராகிவிட்ட சில துஷ்ட மிருகங்கள் அந்த பாதையில் சரேல் சரேல் என ஓடுவதும் தாறுமாறான உருவங்கள் அமைந்த பூதங்கள் போன்ற பெரும் மரங்கள் காற்றில் ஆடுவதும். மரங்களின்மீதும் தானே வளர்ந்து நெளிந்து கிடக்கும் காட்டுக் கொடிகளுக்கிடையில் புகுந்து வரும் அமைதியான காற்றின் விசித்திர ஒலியும் ஒருவித வாசனையும் காந்றின் வாசனையும் பய உணர்வால் ரோமக்கால்களை குத்திட செய்யும் அமானுஷ்ய அனுபவம் தரும் அந்தப் பொழுதில்- அந்த ஒற்றை அடிப்பாதையில் இரண்டு உருவங்கள் தள்ளாடி நடந்து வந்தன. ஆணும், பெண்ணுமாகிய அவர்கள் இருவரின் நடையில் தெரிந்த சோர்வும். தள்ளாட்டமும் இருளிலும் ஆடையிலும் உடலிலும் படிந்து இருந்த புழுதியும் நெடுந்தொலைவில் இருந்த இருவரும் நடந்தே வரவேண்டும் என்பதை உணர்த்தியது.

நட்சத்திரங்களின் சோவையான வெளிச்சத்தில் மங்கலாக தெரிந்த அவர்களின் முக லாவண்யம் அழகிலும் கம்பீரத்திலும் இருவரும் குறைந்தவர்களல்ல என்பதைக் காட்டியது, பெண்ணை விட ஆண் அணிந்து இருந்த ஆபரணங்களின் ஒளி வீச்சும் புழுதியிலும் பளிச்சிட வைக்கும் ஆடைகளின் நேர்த்தியும். அதிகாரத்திலும். அந்தஸ்திலும் அவன் உயர்ந்தவன் என்பதைக் காட்டியது, அந்தகார இருள் சூழப்போகும் நேரத்திலும் அந்தப் பெண்ணிடம் தெரிந்த ரூப லாவண்ய சௌந்தர்ய ஒளி இறைவன் அவளுக்கு வாரி வழங்கியது அழகை மட்டுமே என்பதை பறை சாற்றியது,

நடந்து வந்து கொண்டிருந்த அவள் திடீரென அளவுக்கதிகமான சோர்வில் ஆட்பட்டது போல் பாதையிலேயே மடிந்து அமர்ந்தாள். அமர்ந்த அப்பெண்ணை கைத்தாங்கலாக தூக்கிச் சென்று அருகிலிருந்த மரத்தடியில் அமர வைத்தான் படுக்கை நிலையில் சாய்ந்து கிடந்த அவளை அவன் வாஞ்சையுடன் பார்த்தது அந்த இருளிலும் தெளிவாக தெரிந்தது, அதன்பின் அன்பின் வெளிச்சம் பீறிட்டு எழும்போது எந்த இருளும் அதை மறைக்க முடியாது என்பதை அவளது பார்வையில் நாம் புரிந்து கொள்ள முடிந்தது, நெடுநேரம் அவர்கள் இருவரும் அந்த நிலையிலேயே இருந்தனர். முன்பை விட இருள் அடர்த்தியாக நாலாபுறமும் வியாபித்து விட்டது, தேய்பிறைச் சந்திரன் வானத்தில் மெல்ல எட்டிப் பார்த்ததுக் கொண்டு இருந்தான், வயிறு கிழியும் அளவிற்கு எங்கோ ஓர் ஓநாய் கடூரமாக ஊளையிட்டு நிலைமையை இன்னும் அச்சத்திற்குள்ளாக்கியது, சில கோட்டான்களின் அலறலும் சுவர்க்கோழியின் கீறிச்சிடுதலும் காற்றில் கலந்து இருந்த விசித்திர வாசனையும் அவனுக்குள் ஏதோ ஆக்ரோஷத்தை கிளப்பியது போல் சடரென எழுந்து சாய்ந்து இருந்த அந்த பெண்ணின் மார்பில் எதிர்பாராது உதைத்தான், மல்லாந்து விழுந்த அவளின் கழுத்தில் கால்களை ஊன்றி யானை பலம் கொண்டு அவள் கண்டத்தை அழுத்தினான்,

  குரல் வளையின் எலும்புகள் கடகடவென ஒடியும் ஓசையும் அவளிடமிருந்து எழுப்பிய கொர கொரப்பான சத்தமும் பரபரத்து துடித்த கைகள் தரைப்புற்களை பறித்து எறிந்த வேகமும் குதிகால் எலும்புகள் ஒடியும் வண்ணம் கால்கள் தரையை மாறி மாறி உதைத்த சத்தமும் அவனுக்கு கொலை வெறியை இன்னும் அதிகம் தூண்டியதோ என்னவோ கால்களில் அகர பலத்தைக் கொண்டு வந்து பற்களை நறநறவென கடித்தவாறு அதிவேகமாக அவள் கழுத்தை நசுக்கினான்

அந்த ஆக்ரோஷத்தில் அவள் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் குபுகுபுவென கொப்பளித்து குருதியின் ஈரம் அவள் உடலிலும். தரையிலும் பரவியது, இருளிலும் காணும் வண்ணம் இருந்தது, சிறிது நேரத்தில் அவளின் மரணப் போராட்டம் ஓய்ந்தது, உறுப்புகள் சலனமற்று நீண்டு துண்டன, உயிர்பறவை உடலிலிருந்து பறந்துவிட்டது என்பதை இது காட்டியது, அவள் கழுத்திலிருந்து கால்களை எடுத்த அவன் இரண்டு கைகளாலும் தனது தலையை பிடித்துக் கொண்டு குத்துக்காலிட்டு அவள் உடல் அருகில் அமர்ந்தான், அமர்ந்தவன் சிறிது நேரத்தில் குலுங்கி  குலுங்கி அழுதான்,
இந்த சம்பவம் கற்பனை அல்ல கதை அல்ல, மனித உணர்வை தூண்டும் உணர்ச்சிக்குக் கோவை அல்ல, சற்றேரக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த உண்மைச் சித்திரம் “பழையநூர் நீலி” வாழ்க்கைச் சரித்திரம் இது


    நாட்டியமாடி இறைவனை மகிழ்விக்கும் “தேவதாசி பரம்பரையில்” வந்தவள் நீலி  அவளை காதலித்தவன், அந்தண குலத்தைச் சேர்ந்த கோயில் நம்பி நீலியின் அழகாலும் அறிவாலும் ஈர்க்கப்பட்ட நம்பி அவளை மணமுடிக்க துடித்தான், அவன் துடிப்புக்கு எதிரிடையாக குலமும் கோத்திரமும் நின்றது, சமுதாய எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் அவளோடு வாழ்ந்தே தீருவது என்று “பழகை நல்லூர்” என்ற பழையநூரிலிருந்து கேரளத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் ஓர் பெண்ணிற்காக தனது தகுதி தராதரம் அனைத்தையும் இழப்பதா? மதிப்பும் மரியாதையை விட்டு வாழ்வது ஓர் வாழ்க்கையா? தாசிக்குல பெண்ணை மணந்தால் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஓர் நாள் சமுதாயம் நம்மை அந்தணன் என்று அங்கீ கரிக்குமா? என்று பலவாறாக சிந்தித்து அவன் அந்தஸ்த்தையும் இழக்க முடியாமல். அவளையும் விட்டுக் கொடுக்க முடியாமல் மனஎழுச்சி ஏற்பட்டு தனக்குள்ளது பிறர்க்கு போககூடாது என்ற வக்ர எண்ணத்தின் உச்சத்திற்கு சென்று அவளை கொலை செய்தான்,

  கொலை செய்யப்பட்ட நீலிஆவி வடிவில் ரௌத்திரம் அடைகிறாள், கோயில் நம்பியை அவனது அடுத்த பிறவியில் பழிவாங்குகிறான், அதன் பின் ரத்தவெறி  ஏற்பட்டு தான் காணும் அனைத்து இளம் ஆண்களையும் பெண்களையும் ரத்தம் கக்க சாகடிக்கிறாள், பின்னர் சாஸ்திர முறைப்படி சாந்தப்படுத்தப்பட்டதால் “இசக்கி” ஆகுகிறாள்,

இசக்கி என்ற பதத்திற்கு கன்யாகுமரி திருநெல்வேலி பகுதி மக்கள் இணங்கி இருப்பவள் என பொருள் கொள்கிறார்கள், அதாவது ருத்ரமாக இருக்கும் ஆவி மந்திரங்களுக்கு கட்டுபட்டு அருள் பாலிக்கும் தன்மைக்கு இணங்கி வருவதால் இசக்கி என அழைக்கப்படுவதாக அவர்கள் கருதுகிறார்கள் இந்த நீலியை போலவே நயவஞ்சகமாக கொலை செய்யப்படும் கற்புத்தன்மையுள்ள பல பெண் தெய்வங்கள் இசக்கியாகவே அழைக்கப்படுகிறார்கள், உதாரணமாக கடலை சாமியால் பழி வாங்கப்படும் காளிப்புலையனின் மகளை “மாஇச்ககி” என்று சீவலப்பேரி பகுதி மக்கள் வழிபடுகிறார்கள்,
இசக்கி என்று மட்டும் முடிந்தால் அது ஆவி வழிபாட்டைக் குறிக்கும் இசக்கி அம்மன் என்று முடிந்தால் அது சிறு தெய்வ வழிபாட்டை குறிக்கும்.

ஆவியா? தெய்வமா? என நாம் தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ள ஒரு வழி உண்டு, மரங்களுக்கு அடியில் பீடங்களோ அல்லது ஒரு கை ஓங்கிய நிலையிலும் மறுகையில் குழந்தையோடும் சில ரூபங்களை அமைத்தல் இருந்தால் அது ஆவி வழிபாடு ஆகும்,

   மயானக் கரையிலோ ஊரின் எல்லையிலோ பரட்டைத்தலை கொட்டை வழி கோரைப்பற்கள் முதலிய அசுர அம்சங்கள் தொனிக்கும் சிலை வடிவில் அமைந்து இருந்தால் அது தெய்வ வழி சக்தியாகும், ஏன் என்றால் அங்காள பரமேஸ்வரி அம்மைனையே தென்பகுதியில் இசக்கி அம்மனாக வழிபடுகிறார்கள். இதை சூடாமணி நிகண்டு குறிப்பிடும் துர்கா மேதம் என்ற வார்த்தையால் சாட்சிப்பூர்வமாக உணரலாம், இனி ஆவியான இசக்கியையும் நுட்பமாக ஆராய்வோம்.

இசக்கி அல்லது இயக்கி என்ற சொல்லுக்கு பல்வேறுபட்ட பொருட்கள் சொல்லப்படுகின்றது, “ஜைன” மதத்தில் சொல்லப்படும் “யட்சினி” என்ற வார்த்தையே இசக்கி என ஆனது என கூறுவோரும் உண்டு, சிலப்பதிகாரத்தில் யட்சி என்ற சாந்த தெய்வம் வருவதை இதற்கு ஆதாரமாக கூறுவார்கள், மேலும் “பூங்கன் இயக்கி” என்று சிலப்பதிகாரத்தில் வரும் வார்த்தையை ஒட்டியே சீவகசிந்தாமணியிலும் கூறப்பட்டு இருக்கிறது, சமண தெய்வமான சாத்தனாரின் இரண்டு பணியாளர்களில் சங்கிலி பூதத்தார் ஒருவர். மற்றொருவர் இசக்கி ஆவார், 18 கணங்களான தேவர். அசுரர். முனிவர். கின்னரர். கிம்புருடர். சுருடர். நாகர். பூதத்தார். வேதாளத்தார். தாராகனம். ஆகாசவாசி. போகபூமியார். இயக்கர். ராக்கதர். கந்தர்வர். சித்தர். சாரணர். வித்யாதாரர் ஆகியோரில் இயக்கர்களின் இனத்தை சேர்ந்தவர் இயக்கி என்ற ஓர் கருத்தும் வரலாற்று அறிஞர்களால் கருதப்படுவது உண்டு.

“இயக்கியர் அறுபத்து நால்வரை எண்குணம் செய்த ஈசனே”

  என்கிறார் திருஞான சம்பந்தர், திருவாசகத்திற்கு உரை எழுதிய காளித்தாண்டவராயர் என்பவர் இயக்கிமாரான செட்டிப் பெண்கள் என்று சொல்வதாலும். உத்ரகோச மங்கை புராணத்தில் இசக்கியமார் கதையில் சொல்லப்படும் கருத்துக்களும். ஞானசம்பந்தரின் திருவாலங்காட்டு பதிகத்தில் ஒன்றாகவே உள்ளன.அதாவது மனித உள்ளத்தை மரணத்திற்கு அஞ்ச செய்து ஞான மார்க்கத்தில் அதை செலுத்தி மானுடப் பிறப்பை உயர்வடைய செய்வதற்கு இயக்கி பாடுபடுகிறாள் என்ற கருத்தை மையப்படுத்தி மேற்கண்ட ஞானபுருஷர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள்,



  இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு சிக்கல் வருகிறது, இசக்கியை பரமேஸ்வரியின் வடிவாக ஒரு சாரரும். கற்புடைய பெண்கள் வடிவாக ஒரு சாரரும். சமண தெய்வமாக மற்றொரு சாராரும் கருதுகிறார்களே இதில் எது உண்மை? இசக்கி ஆதிபராசக்தியா? ஆவியா? சமண தெய்வமா? மூன்றுமே தெள்ளத் தெளிவான உண்மைதான், ஒரே பெயரில் மூன்று சக்திகளும் சொல்லப்பட்டு இருக்கிறது, இதை பிரித்து அறிவதில்தான் நமது மதிநுட்பம் இருக்கிறது, சாக்த வழிபாட்டில் வரும் தந்திரசாதனத்தில் காளி தேவியின் தரிசனம் பெற பல உபாயங்கள் கூறப்பட்டு உள்ளன, அதில் மிக முக்கியமானது நான்கு திசையிலும் கபாலங்களை புதைத்து பிணத்தின் மார்பு மீது அமர்ந்து அர்த்த ஜாமத்தில் மயான பூமியில் செய்யும் ஒருவித தாந்திரீக சாதனை உள்ளது,

  சாதனை முற்றுப் பெறும் நேரத்தில் பூசணிக்காய் போன்ற தலையும். கோழி முட்டைகளை போன்ற கண்களும். விரிந்த வாயில் தொங்கும் நாக்கும். இரத்தம் கசியும் பற்களும். சிசுக்களின் கைகளை அறுத்து கோர்க்கப்பட்ட மார்புக் கச்சையும் நெற்குதிர் போன்ற வயிறும் வெட்டுண்ட மனித கால்களை சேர்த்துப் பினைத்த இடுப்பு ஆடையும். இரத்தம் ஒழுகும் மனிதத் தலைகளாலான மாலையும். சர்பங்களாலான கால் தண்டைகளும். ஒரு கையில் கொடுவாளும். மறு கையில் அகர தலையும் கொண்டு காளி காட்சி தருவாள்,

  இதே தோற்றத்தில்தான் ஆதிகாலத்தில் இசக்கியின் சிற்பங்களும் ஓவியங்களும் வடிக்கப்பட்டுள்ளன, இன்று நாகர்கோவிலின் அருகில் இருக்கும் முப்பந்தல் இசக்கி அம்மனின் முகத்தோற்றம் இதே கோணத்தில் இருப்பதை நாம் பார்க்கலாம்

புறநானூற்றில் கள்ளி நிழல் கடவுள் என குறிப்பிடப்படும் பெண் தெய்வம் இதே தன்மையோடு வர்ணிக்கப்படுகிறாள், விரித்த கூந்தலோடும் வரும் மனைவி கள்ளி நிழற்கடவுகிள் உருவ ஒற்றுமைக்கு புலவரால் ஒப்பிடப்படுகிறாள், இலக்கியம் மற்றும் ஓயவி சிற்ப சாஸ்திரங்கள் இசக்கி அன்னை பராசகத்தியின் மறுவடிவே என்பதை ஐயம் திரிபர வலியுறுத்துகின்றன, ஜைன தேவதையும் கற்பு வடிவமான ஆவி தேவதையும் மக்களின் அதீத பக்தியால் பராசக்தி வடிவமாகவே பார்க்கப்பட்டதால் இசக்கி என்ற ஒரு பெயரிலேயே மூவரையும் அழைத்தனர் போலும்,

  இறை சக்தியாகவும். கற்பு சக்தியாகவும் இருக்கும் இசக்கி அம்மன். இறை சக்தியாக இருக்கும் போது காவல் தெய்வமாகவும் ஆவி சக்தியாக இருக்கும்போது ஏவல் தெய்வமாகவும் இருக்கிறாள், குமரி மற்றும் நெல்லைப் பகுதியில் இசக்கி அம்மனுக்கென்று தனித்தனியாக பல பெரிய சிறிய கோவில்களும் கட்டப்பட்டுள்ளது, சிவன். விஷ்ணு ஆகிய பெருந்தெய்வங்களுக்கு எடுக்கப்படும் ஆலயங்களில் இசக்கி அம்மனுக்கு தனி சன்னதிகள் உள்ளன, திருநெல்வேலி வெங்கடாசலபதி கோவிலிலும். நான்கு நேரி வானமாமலை பெருமாள் கோவிலிலும் முன் மண்டபத்தில் கொடி மரத்துக்கு புறத்தே தானிப் பீடங்களில் அன்னை இசக்கி வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறாள்,

  இசக்கியம்மன் கோவில்களில் குழந்தை பேறு வேண்டுபவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறிய உடன் நேர்ச்சை கடனாக மரத்தொட்டில்கள் செய்து வைக்கிறார்கள், கருகமணி பாசியும் கருவளையல்களும் இசக்கி அம்மனுக்கு மிகப்பிடித்தமான காணிக்கை பொருட்களாகும், இசக்கி அம்மனிடம் நேர்ச்சை நேர்ந்து விட்டு காரியம் வெற்றி அடைந்தபின் அதை நிறைவேற்றாவிட்டால் இசக்கி அம்மன் சும்மா விடமாட்டாள், தனக்குரியதை கறாராக வசூல் செய்வதில் அவளுக்கு நிகர் அவளே ஆகும்,

  இந்த விஷயத்தில் எனக்கு ஓர் நேரடி அனுபவம் உண்டு, 1995 டிசம்பர் மாதம் அன்னை பகவதியை தரிசிக்க கன்யாகுமரி சென்று இருந்தேன், திரும்பி வரும் வழியில் முப்பந்தல் இசக்கி அம்மன் ஆலயத்தின் எதிரே நான் பயணம் செய்த வாகனம் ஏதோ காரணத்தினால் நின்று விட்டது, ஓட்டுநர் அதை சரிபார்த்துக் கொண்டு இருந்த அந்த இரவு நேரத்தில் மூடிக்கிடந்த இசக்கி அம்மன் ஆலயக் கதவை பார்த்து வணங்கி நமது விவேகானந்தா சேவா சமிதி அமைப்பதற்கு நிரந்தர அலுவலக இடம் வேண்டும் தாயே அதை நிறைவேற்றிக் கொடு உன் ஆலயத்திற்கு உனது உருவ பொம்மையை காணிக்கை ஆக்குகிறேன் என்று வேண்டிக் கொண்டேன், அதை அரகண்டநல்லூர் வந்த மூன்றாவது நாளிலேயே எனது இஸ்லாமிய பக்தர் கமருதீன் அக்பர் ராவுத்தர் தனது இடத்தை சமிதிக்கு நன்கொடையாக கொடுத்தார்,

  சில மாதங்களிலேயே பலர் ஒத்துழைப்போடு கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டது, ஆனால் நான் அன்னைக்கு கொடுத்த வாக்கை மறந்துவிட்டேன், நான்கு ஆண்டுகள் கழித்து எனது பிரதான சீடர்களில் ஒருவரான சந்தானத்தின் கனவில் அன்னை தோன்றி எனது வேண்டுதலையும் அவளின் நேர்திக்கடன் நிற்பதையும் நினைவுபடுத்தினாள்,

 
“குருஜி. நீங்கள் சாலை ஓரத்தில் மரங்கள் சூழ்ந்த பகுதியிலிருக்கும் ஓர் அம்மன் ஆலயத்தில் சிறிய அம்மன் சிலை வாங்கி வைப்பதாக வேண்டிக் கொண்டீர்களா? நீங்கள் அப்படி வேண்டிக் கொண்டதாகவும் அதை இன்னும் நிறைவேற்றாமல் இருப்பதாகவும் தேஜஸ் நிரம்பிய ஒரு பெண் இரண்டு மாதங்களாக தொடர்ந்து என் கனவில் வந்து கூறுகிறாள்” என்று சந்தானம் என்னிடம் கூறியவுடன் நெற்றிப்பொட்டில் அறைந்ததைப் போல் சுரீர் என்று முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் நினைவிற்கு வந்தது, எந்தவித கால தாமதமும் செய்யாமல் உடனடியோ அன்னையின் ஆலயத்திற்கு சென்று தவறுக்கு மன்னிப்புக்கோரி வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுவதாக பிரார்த்தித்து வணங்கி திரும்பினோம்.

  மானுட சக்தியிலிருந்து அமானுட சக்திக்கு உயிர் ஆனது பயணப்படும்போது நல்லது கெட்டது இன்பம் துன்பம் வெளிச்சம் இருட்டு என்ற பாகுபாடுகள் ஏற்படுவது இல்லை, அந்த உயிர் சக்தியானதை மந்திரத்தால் வசமாக்கி நமது விருப்பங்களை நிறைவேற்ற சொல்லும்போது அதனால் ஏற்படும் பாவபுண்ணியங்கள் மந்திரத்தை பிரயோகிப்பவனையே சாரும், அமானுட சக்தியை அது தீண்டுவது இல்லை.

  இன்னொரு விஷயத்தையும் இந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டும், அதீத சக்திகளால் நாம் துன்புற வேண்டும், அந்த துன்பத்தால் நம் ஆத்மாவானது பக்குவப்பட வேண்டும், சுத்திகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இறைவன் இத்தகைய மந்திரங்களும் அமானுஷ சக்திகளையும் பூமியில் விட்டு வைத்திருக்கிறான், இவை எல்லாம் அவனது திருவிளையாடலில் ஓர் அங்கமே அதை நாம் உணர வேண்டும், அப்படி உணர்ந்து கொண்டோமானால் எதன் மீதும் நமக்கு அதிருப்தியும் குரோதமும் ஏற்படாது


-- 



Contact Form

Name

Email *

Message *