Store
  Store
  Store
  Store
  Store
  Store

இந்துமதம் அக்கா, வேதம் தம்பி !


இந்து மத வரலாற்று தொடர் 3
 துவரை சிந்து சமவெளி நாகரீகத்தில் இந்து மதத்தின் மூலக் கூறுகள் பதிந்திருப்பதை விரிவாக சொல்லியதற்கு மிக முக்கியமான காரணங்கள் உண்டு.  அதாவது சிந்துவெளி நாகரீகமும் வேதகால நாகரீகமும் வேறு வேறானது இரண்டுக்கும் சம்பந்தம் இல்லாதது என்பதை தெளிவுபடுத்துவதே முக்கிய நோக்கமாகும்.  இதில் சிந்து வெளி நாகரீகம் வேதகாலத்திற்கு முந்தியதா பிந்தியதா என்ற முடிவை இதுவரை எந்த ஆராய்ச்சியாளனும் எட்டவில்லை என்றாலும் சிந்து மக்கள் பயன்படுத்திய சமய சின்னங்கள் வேதங்களுக்கு முற்பட்டவை என்பதில் எந்த மாற்றமும் இல்லை.  இதற்கு வேதங்களிலேயே பல ஆதாரங்கள் கிடைக்கின்றன.  நான்கு வேதங்களை மிக நுணுக்கமாக ஆராயும்பொழுது இந்த உண்மை நமக்கு தெரியவருகிறது.
  இந்தியாவின் பூர்வகுடிகள் ஆரியர்களா, திராவிடர்களா என்பதை இதுவரை யாரும் அறுதியிட்டு கூறமுடியவில்லை என்றாலும் இந்த இரு இனங்களுக்கு முன்பே மனித சமூகம் இந்தியாவில் நல்ல முறையில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பல உள்ளன. அந்த மனித சமூகத்திடமிருந்து திராடவிடர்களோ ஆரியர்களோ நாகரீகத்தை பெற்றிருக்கிறார்கள் என்பது மிகவும் உறுதியாகும்.  அதாவது நாகரீகத்தை பெயர் தெரியாத இந்திய பூர்வ குடிகள் இவ்விரு இனத்தாருக்கு வழுங்கியிறுக்கிறார்கள்.  அத்தகைய நாகரீக தானத்தை முதன் முதலில் பெற்றவர்கள் திராவிடர்களாகவே இருக்க வேண்டுமென்று பரவலான கருத்து உள்ளது.  அதை மறுப்பதற்கு போதிய ஆதாரம் இன்று வரை இல்லை என்பதனால் திராவிடர்களே வேதகாலத்திற்கு முற்பட்டவர்கள் என்பதை ஏற்று கொள்வதை தவிர இன்று நமக்கு வேறு வழியில்லை.  இதன் அடிப்படையில் இந்து மதம் வேதங்களுக்கு முன்பு எப்படி இருந்தது அது எப்படி வேதங்களோடு இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை விரிவாக பார்ப்போம்.

 வேதங்களுக்கு முற்பட்டதாக கருதப்படும் திராவிட நாகரீகத்தில் வேதக் கருத்தக்களின் சேர்க்கையால் இந்து மதக் கருத்துக்கள் உருவானதா அல்லது வேத நாகரீகத்தில் திராவிடக் கருத்துகளின் சேர்க்கையால் அவை உண்டானவைகளா என்ற குழப்பங்கள் வலுவாக இருந்தாலும் இந்து மதக் கருத்துக்கள் என்பது வேத நாகரீகத்திலிருந்து வளர்ந்த எளிய வளர்ச்சி அல்ல என்பதை உறுதியாக நம்ப முடிகிறது.  வேத சார்பில்லாத மூலக் கருத்துக்கள் இந்து மதத்தில் பரவி கிடப்பதனால் இந்த நம்பிக்கை நமக்கு ஏற்படுகிறது.
 திராவிடன் என்ற சொல் குறிப்பாக எந்த பொருளை சுட்டிக் காட்டுகிறது என்று தெளிவாக கூறமுடியாது.  இச்சொல் மொழிவாரியான இனத்தை குறிக்க ஒரு மக்கள் குழுவை குறிக்க அல்லது ஒரு நாகரீக தொகுதியை குறிக்க பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.  வட மொழியின் தாக்கம் திராவிட மொழிகளில் வலுவாக இருந்தாலும் கூட அவைகள் தனது தனிதன்மையை முற்றிலுமாக இழந்துவிடவில்லை.  நமது நாட்டில் ஏற்பட்ட இனக்கலப்புகள் இன்று எவரையும் ஆரியன் என்றோ திராவிடன் என்றோ பிரித்து கூற இயலாவிட்டாலும் வடமொழியில் கலந்துள்ள திராவிடச் சொற்களை இன்று கூட மிக எளிதாக பிரித்துக் காட்டிவிடலாம்.  அதாவது மனித இனங்கள் கலப்பினால் தனது சுயத் தன்மையை இழந்து விட்டாலும் மொழிகள் தனது தற்சார்பை இழக்கவில்லை இதனால் வேத இலக்கியங்களில் கலந்துள்ள மாறுபட்ட தன்மைகளை நம்மால் சுலபமாக பிரித்தரிய முடிகிறது.  இதனால் வேதத்தில் மூலப்பாடத்தில் உள்ளவைகளோடு சம்பந்தப்படாத கருத்துகளை வேதத்திற்கு முற்பட்டக் கருத்துகள் அதில் காலம் தாழ்ந்து இணைந்த கருத்துகள் என்று கருதமுடிகிறது.

 நமது நாட்டு கருத்துகளின் வளர்ச்சியில் காடுகள் பெரும்பங்கு ஆற்றியுள்ளன.  முனிவர்களின் தவச்சாலைகளே அக்காலத்திய கருத்து கருவூலங்களாக இருந்திருக்கின்றன.  அத்தகைய தவச்சாலைகள் காடுகளிலேயே பெருவாயாக இருந்திருப்பதினால் இந்திய கருத்துக்கும் காட்டிற்கும் உள்ள தொடர்பை தாய், மகன் தொடர்போடு ஒப்பிட்டு சொல்லலாம்.  ஆனால் இத்தகைய காடுகளின் சமூக பங்கு உபநிஷத காலத்திலிருந்தே தொடங்குவதாக பலர் சொல்லுகிறார்கள்.  அதாவது வேதகால நாகரீக சிந்தனைகளுக்கும் காடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கருதப்படுகிறது.



   முதல் வேதமான ரிக் வேதத்தின் ரிஷிகள் ஊர்களிலும் நகரப்பகுதிகளிலும் வாழ்ந்தவர்களே ஆவார்கள் இவர்கள் ஆழமாக சிந்திப்பதற்கு தியானம் செய்வதற்கும் காடுகளை நாடியது இல்லை.  வேதத்தின் பிற்பகுதியான பிரமாணங்களும் காட்டு புற நாகரீகத்தை சார்ந்து இருக்கவில்லை.  ஆனால் ஊரைவிட்டும் வீட்டைவிட்டும் ஒதுங்கி இருந்து கல்வி கற்கவேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் மைத்ரேய ஆரண்யத்தில் காண்கிறோம்.  அதாவது ஒரு இந்துவின் வாழ்க்கை முறையில் கல்வி கற்பதை தனித்திருந்து கற்க வேண்டும் என்ற கருத்தை வேதங்களோ பிரமாணங்களோ கூறாமல் பிற்காலத்தில் எழுந்த ஆரண்யங்கள் மட்டுமே வற்புறுத்துவதினால் தவச்சாலைகள் என்பது காடுகளில் ஏற்படுத்தப்பட வேண்டும்.  என்ற கருத்து வேதகாலத்திற்கு பிறகே ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நம்பத் தோன்றுகிறது.  இதற்கு வேறு சில ஆதாரங்களையும் குறிப்பிடலாம்.
  வேதவர்ணனைகளில் படம்பிடித்து காட்டப்படும் தெய்வங்கள் அக்கால நாகரீக சின்னங்களாக கருதப்பட்ட குதிரைகள் பூட்டிய தேர்களிலேயே பவனி வருவதை காணமுடிகிறது.  காடு சார்ந்த வாழ்க்கையில் மிக முக்கிய தொழிலாக கருதப்படும் வேட்டையாடுதலை இந்த வேத தெய்வங்கள் மேற்கொண்டதாக தெரியவில்லை.  மாறாக வேதங்களில் அதி தேவதைகளாக கருதப்படாத மற்ற தெய்வங்களை குறிப்பிடும் பொழுது வேட்டையாடுதல் என்பது இணைத்து பேசப்படுகிறது.  ஏறக்குறைய இந்து மதத்தின் மிக முக்கிய பிரிவுகளில் ஒன்றான சைவ சமய தெய்வங்களை பற்றி பேசப்படும் பொழுது அவைகளோடு வேட்டையாடுதலும் பேசப்படுகிறது.

 இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தை சிந்தித்து பார்க்க வேண்டும்.  மனித சமூகம் தான் தோன்றிய காலத்திலேயே விலங்குகளை பழக்கப்படுத்தி தங்களது தேவைகளுக்கு துணை புரிவதாக ஆக்கி கொள்ளவில்லை ஆரம்ப கால மனிதன் விலங்குகளை வேட்டையாடி அதன் மாமிசங்களை உண்பதற்கு தெரிந்து வைத்திருந்தானே தவிர அவைகளை வேளாண்மைக்கும் பயணத்திற்கும் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து வைத்திருக்கவில்லை.  எனவே ஆதிகால மனிதன் தனது சிந்தனையில் தன்னை போலவே கடவுள்களும் வேட்டையாடுதலை தொழிலாக கொண்டிருக்கும் என்று கருதுவானே தவிர தேர்களை ஓட்டுவது பற்றி சிந்தித்திருக்க மாட்டான்.  எனவே வேட்டையாடும் தொழிலை மேற்கொள்ளும் தெய்வங்கள் சைவ சமய சார்பில் வேதங்கள் காட்டுவதால் வேதகாலத்திற்கு முன்பே இந்தியாவில் இருந்த சமயம் சைவ சமயம் என்றும் அது பிற்காலத்தில் வேதங்களோடு இணைக்கப் பெற்று செழுமை பெற்றிருக்க வேண்டும் என்றும் சிந்திக்க முடிகிறது.
  மேலும் வேதத்தில் பெருவாரியாக குறிப்பிடபடாமல் இந்து மதத்தில் முக்கியமாக கருதப்படும் தெய்வங்கள் அனைத்துமே காடுகளோடும் வேட்டையாடுவதோடும் தொடர்புடையதாக இருக்கிறது. அதே நேரம் சைவ சமய பிவுகளில் காட்டப்படும் முக்கிய தெய்வங்கள் அனைத்தும் வேத தெய்வங்களோடு சம்பந்தப்படாதவைகளாக இருக்கிறது அதனால் இத்தகைய தெய்வங்கள் இந்தியாவின் ஆதி குடிகளின் தெய்வமென்றும் அவைகளை பிற்காலத்தில் வேத சமூகம் தமதாக்கி கொண்டிருக்கின்றன என்பதும் தெளிவாகிறது.  அத்தகைய ஆதி தேவதைகளில் மிக முக்கியமானது காளி அல்லது துர்க்கை, ஐயப்பன் அல்லது சாஸ்தா என்ற இரண்டு தேவதைகளையும் தனித்து சுட்டிக்காட்டலாம்.

 சாஸ்தா எனும் ஐயப்பன் சிவனுக்கும் திருபாற்கடலை கடைந்த போது உருவான அமிர்தத்தை பகிர்ந்த போது உருவான மாயை என்ற விஷ்ணுவுக்கும் பிறந்ததாக கருதப்படுகிறது.  தென்னிந்தியாவில் சாஸ்தா தெய்வங்கள் இருக்கும் பகுதிகளை காவு என்ற பெயரில் இன்றும் அழைக்கப்படுவதை காணலாம்.  காவு என்ற வார்த்தைக்கு காடுகள் அல்லது சோலைகள் என்ற பொருளை சொல்லலாம்.  அதாவது காட்டுப் புறத்திலும் சோலை வனங்களிலும் சாஸ்தா வணங்கப்பட்டதாக சொல்லலாம்.  இன்று கூட திருநெல்வேலியின் எல்லை கிரமமாக இருக்கும் காரிக்கோயில் என்ற ஊரில் பூமிக்கு அடியில் கடலோரத்தில் உள்ள சாஸ்தா கோயில் காரி சாஸ்தா அல்லது காவு சாஸ்தா என்று அழைக்கப்படுவதை காணலாம்.

   புலிப்பால் கொண்டு வர சாஸ்தா அனுப்பப்பட்டதும் எருது முக அரக்கனோடு காளி தேவி சண்டையிட்டதும் சாஸ்தா, காளி ஆகிய இரு தெய்வங்கள் காடுசார்ந்த சமய வளர்ச்சியால் உருவானவைகள் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லும்.  இந்த இரு தெய்வங்களும் வேதங்களால் ஆரம்பத்தில் சிறப்பித்து கூறப்படவில்லை என்பதிலிருந்தும் இவைகள் தென்னிந்திய சாயலில் வர்ணிக்கபடுவதிலிருந்தும் வேதங்களுக்கு முற்பட்டே இத்தெய்வ வழிபாடுகள் நமது நாட்டில் இருந்திருப்பது நன்கு புலனாகும்.

  இத்தகைய வேதம் சாராத அல்லது வேதங்களுக்கு முற்பட்ட சமய வளர்ச்சியின் கூறுகள் வேத சிந்தனைகளுக்கு  செரிவூட்டி இருப்பதை யாரும் மறுக்க முடியாது.  இத்தகைய சமய பங்களிப்பு வேதங்களில் புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.  வேத நாகரீகம் என்பது வைதீக சடங்குகளையும் யாகங்களில் சோமரசத்தை அளிப்பதையுமே முக்கியமானதாக இருந்தது.  வேதத்தின் மூலப்பாடங்கள் இம்மாதிரி சடங்குகளில் மிக நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தாலும் கடவுளை ஆத்மாவை சீர்தூக்கி சிந்தித்து பார்க்கும் தன்மையை முற்றிலுமாக கருத்தில் கொள்ளவில்லை என்று சொல்லி விட முடியாது. ரிக் வேத ரிஷிகளில் பலர் கடவுளோடு ஒன்றுபடும் உணர்வுகளை துல்லியமாக பெற்றிருந்தனர் என்பது தெரிகிறது.  ஆனால் புலன் கடந்த உணர்வுகளை யோக மார்க்கத்தில் பெறுவதை வேதங்கள் தனக்கு முன்பிருந்த மக்களிடமிருந்தே பெற்றிருக்க வேண்டும்.

 கடவுளுக்கு உருவம் கொடுத்து வழிபடுவது என்பதே மனதை ஒரு நிலை படுத்தும் யோக மார்க்கத்திற்கு ஒரு எளிய வழியாகும்.  இந்த உருவ வழிபாட்டு முறையை வேதங்கள் சிறப்பித்து கூறவில்லை.  யாகங்கள் செய்வதையும் வேறு சில சடங்கு முறை செய்வதையுமே வேதங்கள் வலியுறுத்தி கூறுகின்றன.  ஆனால் வேதகாலத்திற்கு முற்பட்ட இந்திய சமூகம் உருவ வழிபாட்டை குறிப்பாக லிங்க வழிபாடு சிவ வழிபாடு ஆகியவைகளை ஆழமாக கொண்டிருந்தனர்.  இந்த ஆழமான உருவ வழிபாடு வேதங்களில் அவ்வளவாக வற்புறுத்த படாததை பார்க்கின்ற போது அது மிகவும் காலம் தாழ்ந்து வேதங்களில் சேர்க்கபட்டிருப்பது புலனாகும்.  இதனாலும் உருவ வழிபாடுடைய இந்து மதம் வேதகாலத்திற்கு முற்பட்டது என்பது உறுதியாகும்.
  பராக்கிரம் பொறுந்திய செயற்கய செயல்களை புரிந்த மனிதர்களை தெய்வ நிலைக்கு உயர்த்தி வழிபடும் வழக்கம் வேதகாலத்தில் இல்லை.  ஆனால் சிந்து வெளியில் கிடைகின்ற சில முத்திரை சித்திரங்களில் மனிதனை தெய்வமாக வழிபடும் தன்மை இருந்திருப்பதாக அறிய முடிகிறது.  இந்த தன்மையே பிற்காலத்தில் மக்களை காப்பாற்ற கடவுள் மனிதனாக இறங்கி வரும் அவதாரக் கொள்கையாக வேதங்களில் பேசப்படுகிறது.  இதற்கு உதாரணமாக அங்கிரஸ் என்ற மகரிஷியின் வாழ்க்கை விபரம் வேதத்தில் கூறப்பட்டதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.  பகவான் விஸ்ணு அவதாரங்கள் பல எடுத்திருந்தாலும் அந்த அவதாரங்கள் எல்லாமே வேதங்களில் விவரிக்கப் படவில்லை.  அண்ட சராசரங்கள் அனைத்தையும் மூன்று அடிகளால் அளந்த வாமன அவதாரத்தை பற்றிய சிறு குறிப்பும் வராக அவதாரத்தை பற்றிய சிறு குறிப்புகளுமே வேதத்தில் காணப்படுகிறது.  ஆகவே இந்து மதத்திலுள்ள அவதாரக் கொள்கை என்பது வேதகாலத்திற்கு முற்பட்டதாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்களுக்கு தனித்தன்மையும் தனி உருவமும் இல்லை.  அதாவது தேவதைகளை அருவமாக வழிபடுவதே  வேத மரபாகும்.  அதனால் வேதக் கடவுளான இந்திரன், வருணன், வாயு, அக்னி இவைகளுக்கு தனிப்பட்ட வகையில் எந்த உருவமும் ஆதியில் கொடுக்கப்படவில்லை.  இன்று சிலை வடிவங்களால் காட்சி அளிக்கும் அந்த தெய்வ உருவங்கள் மிக சமீப காலத்திலேயே உருவாக்கப்பட்டது ஆகும்.  ஆனால் சிவனுக்கும் அம்பிகைக்கும் கொடுக்கப்பட்டுள்ள உருவங்கள் வேதத்திற்கு மிகவும் முற்பட்ட உருவங்கள் ஆகும்.  அது மட்டுமல்ல வேதங்கள் ஆலைய வழிபாட்டை வலியுறுத்தவே இல்லை.  தனிதனி குழுக்களாகவோ அல்லது சமுதாய கூட்டங்களாகவோ மனிதர்கள் ஒருங்கிணைந்து வேள்விச் சடங்கை செய்யச் சொல்லி தான் வேதங்கள் வற்புறுத்துகின்றன.  ஆனால் பூர்வ கால இந்திய மக்கள் உருவ வழிபாட்டை முதன்மையாக கொண்டவர்களாகவும் வழிபாட்டுக்கு என்று தனி இடத்தை  தேர்ந்தெடுத்து செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.


 ஆதிகால மக்கள் ஆலய வழிபாட்டை மேற் கொண்டவர்களாக இருந்தாலும் கூட பின்னர் வந்த வேதகால கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர்கள் ஆலய வழிபாட்டை கைவிட்டு விட்டனர் என்றே தோன்றுகிறது.  இதனால் தான் ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் மற்றுமுள்ள பழைய புராணங்களிலும் ஆலயங்களை மன்னர்கள் புதிதாக உருவாக்கியதாகவோ மக்கள் அதில் சென்று வழிபாடு நடத்தியதாகவோ எந்த குறிப்பும் இடம் பெறவில்லை.

 இதை விட முக்கியமான இன்னொரு ஆதாரம் உள்ளது.  அது சிந்து நதி பள்ளத்தாக்கு நாகரீகத்தில் மிகத் தெளிவாகக் காணும் வேதத் தொடர்பில்லாத தன்மையை நமக்கு உள்ளங்கை நெல்லிக் கனிபோல் எடுத்து காட்டுகிறது.  அதாவது இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறையாகும்.  இந்தியாவின் பூர்வ குடிகள் தெற்கே வாழ்ந்த போதும் சரி வடக்கே நகர்ந்த போதும் சரி இறந்தவர்களை தாழிகளில் வைத்து புதைக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தனர்.  எப்பொழுதுமே அவர்கள் இறந்த உடல்களை எரித்துவிடவில்லை.  புதைத்தே வைத்தனர்.  ஏன் அப்படி அவர்கள் செய்தார்கள் என்பதில் ஒரு உண்மை தெளிவாக ஒளி ந்து கிடக்கிறது.
  ஆதிகால மக்கள் உடலைவிட்டு உயிர் பிரிந்ததும்  உயிரின் வேலை முடிந்து விடுவதாக கருதவில்லை.  உலகை விட்டு சென்ற உயிர் மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் என்று அவர்கள் நம்பினார்கள்.  அப்படி வருகின்ற போது உயிர்கள் வாழ்வதற்கு உடல்கள் தேவை என்பதினால் அந்த உடலை எரிக்காமல் புதைத்து வைப்பதே சிறந்த வழி என்று கருதினார்கள்.  இன்று கூட ஆன்மீக உயர் நிலையை அடைந்த ஞானிகளின் உடலை எரிக்காமல் புதைப்பதும் அந்த நம்பிக்கையினால் தான்.  வேதங்களை நெறியாகக் கொண்ட மக்கள் உடல்களை புதைப்பது இல்லை எரித்து விடுவார்கள்.  ஏன் என்றால் வேதங்கள் உயிர்களின் மறு வருகையை பற்றி எதுவும் கூறவில்லை.

 வேதங்கள் மறுபிறப்பை பற்றி எதுவும் சொல்லவில்லை என்றாலும் இந்து மதத்தின் ஆதாரக் கொள்கையாக இருப்பது மறுபிறப்பு கொள்கையாகும்.  வேத காலத்திற்கு முற்பட்டகாலத்திலிருந்தே மறு பிறப்பு பற்றிய சிந்தனைகள் இந்து மக்களிடையே ஆழமாக வேறூன்றி இருப்பதனால் இந்து மதம் வேதக் கொள்கைகளை தனக்கு ஆதாரமாக கொண்டிருந்தாலும் கூட வேதம் சாராத கொள்கைகளையும் தனக்குள் அடக்கி இன்று வரை நிலைத்து வருகிறது. 

 இங்கு நாம் வேதத்தில் இல்லாத கருத்துக்களும் நடை முறைகளும் இந்து மதத்தில் இருக்கிறது என்று சொல்வது வேதம் வேறு இந்து மதம் வேறு என்று சொல்வதற்காகவோ வேதங்களை குறைத்து மதிப்பிடுவதற்காகவோ அல்ல.  இந்து மதம் என்பது வேதத்தை விட தொன்மையானது மனித சமூகத்தன் முதல் மதமாக இருப்பது என்பதை நிலை நிறுத்தி காட்டுவதற்காகத் தான்.  சரித்திர ஆசியர்கள் குறிப்பிடுவது போல் வேதகால மக்கள் வெளியிலிருந்து உள்ளுக்குள் வந்தவர்களாக இருந்தாலும் திருமண பந்தங்கள் மூலமாக உள்ளூர் மக்களோடு இரண்டற கலந்து விட்டதனால் எப்படி அவர்களும் இந்தியாவின் பூர்வ குடிகளாக இருக்கிறார்களோ அதே போன்றே பூர்வ குடிகளின் கருத்துக்கள் வேதங்களில் கலந்து வேதங்களை இந்து மதத்தின் ஆதாரங்களாக ஆக்கி கொண்டது.  பூர்வ சிந்தனைகளும் வேத சிந்தனைகளும் கலந்து காலங்கள் பல கடந்து விட்டதனால் வேத காலத்திலிருந்து தான் இந்து மதம் தோன்றியிருக்கலாம் என்று நாம் தவறுதலாக கருதிவருகிறோம் உண்மை நிலை முன்பே இருந்த மதத்தில் வேதங்கள் கலந்து அதை செழுமை உடையதாக்கியது என்பதாகும்.



Contact Form

Name

Email *

Message *