Store
  Store
  Store
  Store
  Store
  Store

இப்படித்தான் இருந்தது வேத காலம்


இந்து மத வரலாற்று தொடர் 4

  ந்து மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான்.  நம்மில் பலருக்கு வேதங்களின் பெயர்கள் தெரிந்தளவிற்கு அவற்றில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் என்னவென்று முழுமையாக இன்று வரை தெரியாது.  அதற்கு வேதங்கள் வடமொழியில் எழுதப்பட்டுள்ள விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியார் தவிர மற்றவர்களுக்கு படிக்க அனுமதி இல்லை என்று பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூட அவைகள் முற்றிலும் உண்மை என்று கருத இயலாது.  வடமொழி அறிந்தவர் கூட வேதம் படிக்கும் தகுதியை பெற்றவர் கூட வேதத்தின் உண்மை பொருளை உணர்ந்தவர்களாக இல்லை என்பது தான் உண்மை.

வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களே இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளபடாமலிருக்கும் போது வேதகால மக்களின் வாழ்க்கை தரம், வாழ்க்கை முறை எப்படியிருந்தது என அறிந்து கொள்வதும் கடினம்.  அறிய முயற்ச்சிப்பவர்களும் மிக குறைவு.  அப்படியே தப்பி தவறி முயற்சி செய்பவர்கள் ஒன்று வேதங்களை திட்டுபவர்களாகவோ அல்லது அதீதமாக போற்றி புகழ்பவர்களாகவோ இருந்து விடுகிறார்கள்.  இதனால் உண்மையான நிலவரத்தை அறிய ஆர்வமுடையவர்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.  எனவே இந்து மத வரலாற்றை முழுமையாக இல்லையென்றாலும் ஓரளவாவது அறிந்து கொள்ள வேதகால சமுதாயம் எப்படியிருந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.  அப்படி அறிந்தால் தான் வேத கருத்துக்களையும் இந்து மத சிந்தனைகளையும் நம்மால் புரிந்து கொள்ள ஓரளவு முடியும்.


   வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை குறிப்பிடும் போது அது இப்போது தோன்றி இந்த காலத்தில் முடிந்தது என காலவரையறை சொன்னால் தான் கேட்பவர்களுக்கு சரியான முறையில் கிரகித்து கொள்ள வசதியாக இருக்கும்.  ஆனால் வேத காலத்தை பற்றி சொல்லும் போது அது எப்போது துவங்கியது.  எப்போது முடிவுக்கு வந்தது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  வரலாற்று ஆய்வாளர்கள் எட்டிபார்க்க முடியாத மிக நீண்ட நெடிய காலத்திற்கு முன்பே வேதங்களின் காலம் துவங்கிவிட்டது என்று சொல்லலாம்.  இருப்பினும் ஒரு கணக்கு குறியீட்டுக்காக கி.மு.  ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தை வேதகாலம் என்று சொல்கிறார்கள்.  நான்கு வேதங்களில் முதன்மையானது ரிக்வேதம் என்று நமக்கு தெரியும்.  ரிக்வேதம் தோன்றி பல நூற்றாண்டுகளுக்கு பிறகு தான் மற்ற மூன்று வேதங்களும் தோன்றியிருக்கிறது.  ஆனாலும் ஆச்சர்யம் என்னவென்றால் பல நூற்றாண்டுகளின் இடைவெளியில் வேதங்கள் தோன்றியிருந்தாலும் கூட  அவற்றுகிடையில் மெல்லிய தொடர்ச்சி அவற்றை தனிதனியாக போகாமல் ஒருங்கிணைக்கிறது.

   பொதுவாக வேதகால சமுதாயத்தை ஆர்ய நாகரீகம் என்ற பெயரிலேயே பலர் அழைக்கிறார்கள்.  நாமும் அப்படி அழைத்தால் ஒன்றும் குடி மூழ்கி போய்விடாது.  ஆர்ய என்ற சொல்லிற்கு உயர்ந்த சிறந்த என்ற பொருட்கள் உண்டு.  பொதுவாக சமஸ்கிருதத்தையும் அதை சார்ந்த மொழிகளையும் பேசும் மக்களை இந்தோ ஆரியர் என்று அழைப்பது வழக்கம்.  ஆரியர்கள் இந்தியாவிற்குள் எங்கிருந்து வந்தார்கள்.  எப்போது வந்தார்கள் என்ற குழப்பம் பல காலமாக இருந்து வருகிறது.  காதல் கடவுளான மன்மதனை சிவபெருமான் நெற்றிகண் கொண்டு எரித்தாரா இல்லையாயென்று தொன்று தொட்டு லாவணி பாடல் இருந்து வருவது போல ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் என்று ஒரு  சாராரும் அல்ல அல்ல அவர்கள் இந்த நாட்டின் வந்தேரிகள் என்று வேறொரு சாராரும் தொடர்ந்து வாதம் செய்து வருகிறார்கள்.  இந்தவாத பிரதிவாத சிக்கலுக்குள் மூக்கை நுழைத்து கொண்டு அவதிப்பட வேண்டிய அவசியம் இப்போது நமக்கு இல்லை.  நாம் நேரடியாக அக்கால மக்களின் வாழ்க்கை எப்படியிருந்தது என ஆராய போய்விடலாம்.

  வேதகால குடும்பங்களின் தலைவராக தந்தையே இருந்தார்.  ஒரு குடும்பத்தின் வரம்பற்ற அதிகாரம் அவருக்கே இருந்தது.  திருமணம் முடிந்து குழந்தை குட்டிகள் பெற்ற பிறகும் ஒரு மகன் தந்தைக்கு அடங்கியனாகவே இருக்க வேண்டும்.  சமுதாயத்திற்கு  தீங்கிழைத்த ஒரு மகனை தந்தை குருடாக்கியதாக ரிக் வேதத்தில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.  அதே போல சூதாடியான ஒருவனை குடும்பமே வெறுத்து ஒதுக்கியதாகவும் அந்த வேதம் சொல்கிறது.  இக்கருத்துக்களின் அடிபடையில் பார்க்கும் போது அக்கால சமுகத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் இணக்கமான உறவு முறை இல்லையென்று சொல்ல முடியாது.  


 தந்தைக்கு பணிந்து நடப்பதை மரியாதை குறைவாக யாரும் கருதவில்லை.  மேலும் குடும்பத்தில் ஏற்படும் நல்லது கெட்டதுகளை சமாளிக்க தலைக்கு தலை முடிவு எடுத்தால் சிக்கல்களே ஏற்படுமென்று ஒருவரையே முடிவு எடுக்க விட்டுவிட்டு மற்றவர்கள் சுற்று வேலைகளை கவனித்ததினால் குடும்பத்தின் நிலை என்பது குறைவில்லாத வண்ணமே இருந்தது.  குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் செய்போவரையும் கௌரவ குறைவாக நடப்பவர்களையும் தண்டிக்கும் நிலை இருந்ததே தவிர மற்றப்படி குடும்ப ஒற்றுமையில் பாச பிணைப்புகளே அதிகம் இருந்தற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.  தகப்பனாரின் மறைவுக்கு பின்பு அவரின் அடுத்த சகோதரரோ அல்லது மூத்த மகனோ குடும்ப தலைவனாக ஆக்கப்பட்டிருக்கிறார்.  மிகபெரிய கூட்டு குடும்பங்களாகவே அக்காலத்தில் இருந்ததினால் நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாயும் எல்லோருக்கும் சமமாகவே பங்கிடப்பட்டுள்ளது.

  பருவ வயதை அடைந்த பிறகே பெண்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது.  இக்காலத்தை போலவே அப்போதும் ஆண் குழந்தைகளையே அதிகம் விரும்பியிருக்கிறார்கள்.  ஆனால் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால் கள்ளிபால் கொடுத்து சாகடிக்கும் கொடுமை அப்போது சுத்தமாக இல்லை என்றே சொல்லலாம்.  பிறந்த பெண் குழந்தைகள் பரிவும் பாசமும் காட்டி வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள். 

  ஆணுக்கு நிகரான கல்வி பெண்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.  வேதகால கல்வி முறை கவிதை புணைபவர்களை மதிக்க தக்க முறையில் நடத்தி இருக்கிறது.  சில வேத பாடல்களை ஆணுக்கு இணையாக பெண் கவிஞர்களும்  புணைந்து இருக்கிறார்கள்.  ஆண் பெண் இருவருக்குமே போர்கலை கற்று கொடுக்கப்பட்டிருக்கிறது.  ரிக்வேத காலத்தில் சமுகத்தில் ஆணுக்கு என்ன மரியாதை உண்டோ அதே மரியாதை பெண்ணுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.  பெண் அடிமைதனம் இருந்ததற்கான ஆதாரம் ரிக்வேதத்தில் இல்லை.


 ஆரிய பெண்கள் மிக கட்டாயமாக ஆரிய இளைஞர்களை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நியதி இருந்ததே தவிர பெற்றோர்கள் பார்க்கும் மணமகனை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை காதல் திருமணத்திற்கு பெரிய எதிர்ப்புகள் இருந்ததற்கான சுவடுகள் இல்லை.  தந்தைவழி உறவினர் சகோதர்களாக கருதப்பட்டதினால் உறவு முறைக்குள் திருமணம் செய்து கொள்வதை அவர்கள் விரும்பவில்லை.

 பலதார மணமும் அப்போது வழக்கத்தில் இருந்தது தெரிகிறது.  இருப்பினும் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஒழுக்க முறையே பலராலும் பின்பற்றப்பட்டது.  ஆண்களுக்கு வழங்கப்பட்டிருந்த பலதார சலுகை பெண்களுக்கு இப்போது போலவே அப்போதும் வழங்கப்படவில்லை.  ஆனாலும் கணவனை இழந்த இளம் பெண் கணவனின் சகோதரனோடு கூடி வாழ்வதை யாரும் குற்றமென கருதவில்லை.  உடன்கட்டையேறும் பழக்கம் ரிக்வேத காலத்தில் எங்கும் காணப்படவில்லை.  


 வரதட்சனை கொடுக்க வேண்டிய அவசியம் அக்கால பெண்களுக்கு இல்லை.  மணமகனே அதாவது வரனே முன் வந்து தட்சணை கொடுத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.  மாப்பிள்ளை பணம் கொடுப்பதினால் தான் வரதட்சனை என்ற வார்த்தையே உருவாகி இருக்கிறது என்று பல அறிஞர்கள் சொல்கின்றன விருப்பம் இல்லாத பெண்ணை வலுகட்டாயமாக தூக்கி சென்று மண முடிக்கும் நிலையும் அப்போது இருந்திருக்கிறது.  விமாதா என்பவன் பொருமித்ரா என்பவரின் மகளை இப்படி தூக்கி சென்று திருமணம் செய்ததாக ரிக்வேதம் சொல்கிறது.  இத்தகைய திருமண முறைக்கு காந்தர்வ ராட்சஸ திருமணம் என்று ரிக்வேதம் பெயர் சூட்டுகிறது.

 ரிக்வேதம் பத்தாம் அத்தியாயம் எண்பத்தி ஐந்தாவது பாடல் ஒரு மண விழாவை அழகுற வர்ணிப்பதை சற்று பார்ப்போம்.  மணமகன் வீட்டார் ஊர்வலமாக கிளம்பி மணப்பெண்ணின் வீட்டை சென்றடைகிறார்கள்.  அங்கு அலங்கரிக்கப்பட்டு புதிய கணவனின் வருகைக்காக பெண் காத்து இருக்கிறாள்.  பெண் வீட்டார் பிள்ளைவீட்டாரை வரவேற்று உபசரித்து உட்கார வைக்கிறார்கள் அனைவருக்கும் விருந்து பரிமாரப்படுகிறது.  விருந்து முடிந்த பிறகே திருமண சடங்குகள் ஆரம்பிக்கின்றன.  மணமகனின் கைகளில் வயதில் மூத்தவர் பெண்ணின் கையை பிடித்து ஒப்படைக்கிறார்.  மணமக்கள் நெருப்பை வலம் வந்து அனைவரிடமும் ஆசிர்வாதம் பெறுகிறார்கள்.  இத்தோடு சடங்குகள் முடிவுக்கு வருகிறது.

 இங்கு மிக முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.  திருமணம் முடித்து வைக்க புரோகிதர்கள் யாரும் இருப்பதாகவோ மந்திர முழக்கம் செய்வதாகவோ வேதத்தில் குறிப்பு இல்லை.  இது மட்டுமல்ல மணமகன் மணமகளுக்கு திருமாங்கல்யாணம் பூட்டுவதாக கூட வேதம் சொல்லவில்லை.  எனவே வேதகால திருமணம் என்பது இப்போதைய வைதீக திருமணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு எளிமையாகவே இருந்து இருக்கிறது.  காலபோக்கில் தான் திருமண சடங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.  திருமண சடங்குகளை போலவே உபநயனம் விஷயத்திலும் அக்காலத்தில் மாறுபட்ட நடைமுறையே இருந்திருக்கிறது.  தாலிகட்டும் முறை எப்படி பிற்காலத்தில் ஏற்பட்டதோ அப்படியே உபநயன சடங்கும் பிற்காலத்தில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு வேதங்களில் வலுவான ஆதாரங்கள் உண்டு.


 வேதகால மக்கள் எழுத்துக்களை பற்றிய அறிவை பெற்றிருந்தனரா என்பது விவாதத்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது ஒருவர் சொல்ல கேட்டு இன்னொருவர் மனபாடம் செய்து கொள்வது தான் அக்கால வேத கல்வி முறை என்பதினால் எழுத்துகளை அவர்கள் அறிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவுயென சிலர் சொல்கின்றனர்.  இந்தியாவில் ஆரிய நாகரிகம் ஏற்படுவதற்கு முன்பாக இருந்த திராவிடர்களின் சிந்து சமவெளி நாகரிக படிவங்களில் பல வகையான எழுத்து உருவங்களை காண்கிறோம்.  திராவிடர்களுக்கு பிறகு தான் ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்றாலும் அவர்களும் திராவிடர்களை போலவே பழமையான மரபை சார்ந்தவர்கள் என்பதினால் ஆரியர்களின் பூர்வீகம் வழிநடை பாதை என்று சொல்லப்படுகின்ற இடங்களில் பழமையான எழுத்து வடிவங்கள் கிடைத்திருப்பதினால் அவர்களும் எழுத்துக்களை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள்.  இதில் எது சரி, எது தவறு என்று நமக்கு தெரியவில்லை.  சரியான ஆதாரங்கள் கிடைக்கும் வரை வேத காலத்தில் எழுத்துக்கள் இருந்தன என்பது சர்ச்சைக்குரிய விஷயமாகவே தொடரும்.

 இதே போலவே ரிக்வேத கால பண்பாட்டில் ஜாதி முறையானது நடைமுறையில் இருந்ததா?  இல்லையா?  என்றும் நம்மால் உறுதியாக அறிந்த கொள்ள முடியவில்லை. ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூத்தகம் விராட் புருஷனின் அங்கங்களில் இருந்து பிராமண, ஷத்ரிய, வைசீக, சூத்திர ஜாதியினர் தோன்றினர் என சொல்லப்பட்டு இருப்பதினால் அக்கால சமூகத்தில் நிச்சயம் ஜாதி பாகுபாடு இருந்திருக்க வேண்டும் என்று ஒரு சாரார் வலியுறுத்தி வருகிறார்கள்.  



  அப்படி இருப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை.  ரிக்வேதம் உட்பட மற்ற வேதங்களிலும் இது சகல மனிதருக்கும் பொதுவானது என்ற கருத்துக்கள் தான் கூறப்பட்டிருக்கிறதே தவிர மனிதர்களை பற்றிய ஏற்றதாழ்வு மிக்க கருத்துக்கள் எதுவும் இல்லை.  மேலும் ரிக் வேதத்தின் முழுமையான மொழி நடைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது.  எனவே ரிக்வேதத்தில் புருஷ சூத்தகம் இடைசெருகலாக தான் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்வதோடு வேதகால சமூகத்தில் ஜாதி பாகுபாடு இல்லையென அழுத்தமாக சிலரும் சொல்கிறார்கள்.

மேலும் வேதகாலத்தில் ஜாதிகள் உண்டு என வாதிடுபவர்கள் தொழிலின் அடிபடையில் நிச்சயம் ஜாதிகள் இருந்திருக்க வேண்டும்.  அதவாது வேளாண்மை செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், போர் தொழில் புரிபவர்கள், சமய சடங்குகளை நடத்தி வைப்பவர்கள் என்ற பிரிவினர் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.  இதற்கு ஜாதியின்  அடிப்படையில் வேதகால தொழில்கள் இல்லை.  உதாரணமாக பிராமணர் என்ற சொல் கடவுளை துதிபாடல்களால் மகிழ்விப்பவர்கள் என்ற பொருளில் தான் வழங்கப்பட்டதே தவிர தொழிலின் அடிப்படையில் அல்ல என்று மறுப்பும் சொல்லப்படுகிறது.


  பொதுவாக ஆரியர்களின் பண்டையகால வாழ்க்கை முறையை சற்று உன்னிப்பாக கவனித்தால் அவர்கள் நிரந்தரமாக ஒரே இடத்தில் வாழ்பவர்கள் அல்ல.  கால்நடைகளை மேய்பதற்காக புல் உள்ள பகுதிகளை நோக்கி பயணப்பட்டு கொண்டிருப்பவர்கள் என்பது தெரியவரும்.  நாடோடிகளாக இருக்கும் மக்கள் கூட்டத்தில் உடல் உழைப்பு செய்பவர்களுக்கும் காவல் காக்கும் வீரர்களுக்கும் தான் மதிப்பு மரியாதை இருக்குமே தவிர சடங்குகள் புரியும் உடல் உழைப்பு இல்லாத மனிதர்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இராது.  அதாவது அவர்கள் விரும்பதகாத சுமையாகவே கருதப்படுவார்கள்.  ஆரியர்கள் கால்நடைகளை நம்பி வாழ்க்கை ஓட்டியவர்கள் என்பதினால் நிரந்தரமான வேளாண்மையை நிச்சயம் அவர்கள் செய்திருக்க வாய்ப்பு இல்லை.  எனவே குறைந்த பட்சம் ரிக்வேத காலத்தில் மட்டுமாவது ஜாதி வேற்றுமைகள் பாராட்டப்பட நடைமுறை சாத்தியமில்லை.  என்பதை ஆழ்ந்து சிந்திக்கும் போது உணர முடிகிறது.

 கால்நடைகளை நம்பியே வாழ்க்கையை ஓட்டிய ரிக்வேத கால மக்கள் அதிகப்படியான மாமிச உணவுகளையே கொண்டவர்களாக இருந்தார்கள்.  ரிக்வேத ஆதாரப்படி திருமண சடங்குகள் யாகங்கள் போன்ற வழிபாட்டு நிகழ்வுகளின் மாமிச விருந்துகளே அதிகம் இருந்ததை அறியமுடிகிறது.  செல்வத்தின் இருப்பிடமான பசுவை கொல்வது பாவம் என்ற பொருளில் அகணியா என்ற வார்த்தை ரிக்வேதத்தில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் மாட்டு இறச்சியானது அக்காலத்தில் ஒதுக்கப்பட இல்லை என்று பல இடங்களில் அறிய முடிகிறது.  மாமிசம் தவிர பார்லி, அரிசி, யவம் போன்ற தானியங்கள் பிராதன உணவாகவும் இருந்து இருக்கிறது.  பால், தயிர், வெண்ணெய், காய்கறிகள், பழங்கள் போன்றவைகளும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.  போதை தருகின்ற சோம பானம், சுறா பானம் போன்றவைகள் விருந்து காலங்களில் ஏகமாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.


  நகைகள் அணிவதில் இந்தியர்களுக்கு எப்போதுமே அலாதியான ஆர்வம் உண்டு.  இந்திய மண்ணின் தன்மையே பொன்னின் மீது ஆசையை வரவழைத்து விடும் போல.  இதற்கு ஆரியர்கள் மட்டும் விதிவிலக்காக முடியுமா  என்ன?  ஆரிய ஆண்களும் பெண்களும் கழுத்திலும், காதிலும் கையிலும், மூக்கிலும் ஏன் தலைமுடியிலும் கூட தங்க ஆபரணங்களை அணிந்து அழகு பார்த்திருக்கிறார்கள்.  தாடி, மீசை வைத்த ஆண்களும், மழுங்க சிரைத்த ஆண்களும் இப்போது போலவே அப்போதும் இருந்திருக்கிறார்கள்.  பெண்கள் மலர்களால் தங்களை அழகுப்படுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.  மெல்லிய ஆடைகளும், கம்பளி ஆடைகளும் அவர்களின் உடையாக இருந்திருக்கிறது.  ரிக்வேதகால ஆண்களும், பெண்களும் நடனமாடுவதில் வல்லவர்கள்.  வீணை, புல்லாங்குழல், முரசு போன்ற இசை கருவிகள் அவர்களின் இனிமையான வாய்பாட்டிற்கு மெருகூட்டி இருக்கின்றன.  தேரோட்டம், குதிரை சவாரி அவர்களின் பொழுது போக்கு.

  ரிக்வேதகால மக்கள் சிறந்த மருத்துவ அறிவு பெற்றவர்கள்.  விஸ்பலா என்பவன் கால்கள் துண்டிக்கப் பெற்றபிறகு செயற்கை கால்கள் பொருத்தியதாக ரிக்வேத பாடல் ஒன்று சொல்வதை வைத்து பார்க்கும் போது நமக்கே ஆச்சர்யம் வருகிறது.  அறுவை சிகிச்சை செய்வதில் அவர்கள் நிபுணத்துவம் பெற்றிருக்காவிட்டால்  நிச்சயம் செயற்கை கால் பொருத்த முடியாது.  மருத்துவ தேவதைகளான அஸ்வினி குமாரர்கள் பல நோய்களுக்கான அரிய மருந்து வகைகளை அடுக்கடுக்காக சொல்லியிருக்கிறார்கள்.  யசஷ்மா என்ற நோய் பற்றி வேதம் அடிக்கடி சொன்னாலும் அந்த நோயின் பாதிப்பு என்பது நமக்கு முழுமையாக தெரியவில்லை.  அவர்களின் மருத்துவத்தை பற்றி பேசப் போனால் ஏராளமான பக்கங்கள் செலவாகும்.



 வழி நடை பயணத்திலேயே வாழ்க்கையின் பெரும்பகுதியையும் ஆரியர்கள் செலவிட்டாலும், ரிக்வேத காலத்தில் சில இடங்களில் தங்க நேரிடும் போது வேளாண்மை தொழிலையும் அவர்கள் செய்திருக்கிறார்கள்.  நிஷ்கா என்ற நாணயம் அவர்கள் பயன்படுத்தினாலும் கூட பெருவாரியான வியாபாரம் பண்டமாற்று முறையில் தான் நடந்திருக்கிறது.  நங்கூரம், பாய்மரம் போன்ற சொற்களை அவர்கள் அதிகம் பயன்படுத்தவில்லை என்பதினால் கடல் வாணிபம் அவர்கள் இடத்தில் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள்.  ஆனால் கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தை பற்றி ரிக்வேதம் பேசுவதால் கடல் பயணத்திற்காக அல்ல என்றாலும் நதிகளில் பயணப்படவும் அதன் மூலம் அவர்கள் பொருட்களை ஈட்டவும் அதிக வாய்ப்பு இருந்தது என்று சொல்லலாம்.

  ரிக்வேதகால கிராமங்கள் அதிகப்படியான தூரத்தில் அமையாமல் பாதுகாப்பிற்காக அருகருகிலேயே அமைந்திருந்தன.  பொதுவாக வீடுகள் மண்ணால் கட்டப்பட்டு தாவர உப பொருட்களால் கூரை வேயப்பட்டாலும் கூட மரத்தால் ஆன மச்சு வீடுகளும் மூங்கில் வீடுகளும் இருந்திருக்கின்றன.



   ரிக்வேத காலத்தில் இறைவழிபாடு என்பது இயற்கை வழிபாடாகவே இருந்தது.  கடவுகளுக்கு அவர்கள் எந்த தனிப்பட்ட உருவத்தையும் கொடுத்தது இல்லை.  இயற்கை சக்திகளை வருணன், அக்னி, வாயு, பிருத்வி என்று பல்வேறு பெயர்களில் துதி செய்து வழிபட்டனர்.  அப்படி வழிபட்ட தெய்வங்களில் ரிக்வேதத்தில் மட்டும் இருபத்தி மூன்று சக்திகளாகும்.  ஆரம்ப காலத்தில் வேதகால மக்களால் தீயஸ் என்னும் கடவுளும், பிருத்வி என்ற கடவுளும் பெரிதும் வழிப்படபட்டனர்.  காலம் செல்ல செல்ல இத்தெய்வங்கள் சிறப்பாக கொண்டாடப்படவில்லை.  அதற்கான காரணம் என்னவென்று சரிவர தெரியலில்லை.  இடி இடித்து மழை பெய்விக்கும் வருணணும், மேக கடவுளான இந்திரனுமே நான்கு வேத காலங்களிலும் முதலிடம் பெற்றிருந்தனர்.  அதிலும் வருணனுக்கு தனி இடம் கொடுக்கப்பட்டது.  திராவிடர்களிடமிருந்து திருமாலை பற்றிய  அறிவை பெற்ற பிறகு எப்படி திருமாலானவன் பாவங்களை மன்னிப்பவனாக கருதப்பட்டானோ அப்படியே வருணனும் வேதகாலத்தில் கருதப்பட்டான்.

  வருணன் இந்திரன் ஆகிய கடவுள்களை தவிர மருத்துகள் புயல் கடவுளாகவும் ருத்திரன் மின்னல் கடவுளாகவும் வணங்கப்பட்டான்.  சிவன், திருமால், விநாயகன், முருகன், பார்வதி மகாலஷ்மி போன்ற கடவுள்களைப் பற்றிய நேரடியான குறிப்புகள் வேதங்களில் இல்லையென்றாலும் கூட அவர்களை பற்றிய மறைமுகமான குறியீடுகள் வேதத்தில் உள்ளன.  மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவை விதாத்,ஹிரன்யகர்ப்பன், பிரஜாபதி பிராமணஸ்பதி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

 இவைகளையெல்லாம் பார்க்கும் போது வேதகாலத்தில் பல கடவுள் வழிபாடு இருந்ததாக நமக்கு தோன்றும்.  நான் பல சமயங்களில் இந்து மத சிறப்புகளை சொல்லுகின்ற போது சில பகுத்தறிவாத நண்பர்களும் மாற்றுமத சகோதர்களும் இந்து மத வேதங்கள் கடவுள் பல என சொல்லி தவறான பாதையை காட்டுகிறது என்று குறைபட்டவர்களும் உண்டு.  குற்றம் சாட்டியவர்களும் உண்டு.  அவர்களுக்கெல்லாம் எனது ஒரே பதில் இந்து மதத்தில் பல கடவுள் பெயர்கள் உண்டு.  அவைகள் கடவுளின் ஒவ்வொரு செயலிலும் அவருக்கு உள்ள பெயரே தவிர அவரே பல அல்ல, என்பது தான்.  உதாரணமாக இயற்கை மழையாக கொட்டுகின்ற போது இந்திரன் என்று அழைக்கப்படுகிறது.  மழை தண்ணீரே வெள்ளமாக பாயும் போது வருணன் என்று அழைக்கப்படுகிறது.  ஆனாலும் இயற்கை ஒன்றே தான்.  இந்து மத தத்துவப்படி கடவுள் இயற்கையாகவும் இருக்கிறார்.  இயற்கைக்கு அப்பாற்பட்டும் இருக்கிறார்.  இயற்கையை வழிநடத்துபவராகவும் இருக்கிறார்.  இதற்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேட்கலாம்.  அவர்களுக்காக ரிக் வேதத்தில் உள்ள ஒரு பாடலை கீழே தருகிறேன்.


 ‘இந்திரனென்றும், மித்திரனென்றும், வருணனென்றும்,
அக்கினியென்றும், தெய்விகம் பொருந்திய கருடமதன்
என்றும் உன்னை வழங்குவர்.’

‘ஒரு பொருளாம் உனக்குக்
கவிஞர் பல பெயர்கள் அளிப்பார்
அக்கினியும், யமனும் மாதிசுவனும்
நீயே அன்றோ?’

இதை விட சிறந்த ஆதாரம் வேறு எதையும் தர இயலாது.  இன்னும் ஒருபடி மேலே சொல்ல வேண்டுமென்றால் இன்று கடவுள் ஒருவரே என்று சொல்லுகின்ற மதங்கள் கூட இந்திய வேதத்தில் இருந்து தான் ஒரு தெய்வ வழிபாட்டை பெற்றிருக்கின்றன என்று சொல்லலாம்.  அதாவது பாரசீகத்தில் தோன்றிய சொராஸ்தியர் என்பவர் உபநிஷத ஞானியொருவரின் உபதேசத்தை கேட்ட பிறகே அஸ்சரமஸ்தா என்ற முழுமுதற் கடவுளை அறிந்து சொராஸ்திய மதத்தை ஸ்தாபித்தார்.  அவரின் அஸ்ரமஸ்தா தான் யுத மதத்தின் ஜெகோவா கடவுளானார்.  ஜெகோவா கடவுளே கிறிஸ்துவத்தில் பரிசுத்த ஆவியானார்.  இந்த பரிசுத்த ஆவிதான் இஸ்லாம் சொல்லும் அல்லா.  எனவே உலகிலுள்ள எல்லா மதங்களுக்கும் ஆதார தத்துவத்தை கொடுத்தது இந்து மத வேதங்கள் தான்.  



Contact Form

Name

Email *

Message *