( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

செத்து போனால் எனக்கொரு உதவி செய்


    ன்புள்ள மகளுக்கு 506 என அரசாங்கத்தால் அழைக்கப்படும் ஆயுட் கைதியான உன் அப்பா எழுதும் அன்பு மடல்.  நானும் சிறையில் என்னோடு இருக்கும் முக்கால் பங்கு நல்லவர்களும், கால் பங்கு சந்தர்ப்ப கைதிகளும் நலம்.  அங்கு உனது அம்மா பாட்டி எல்லோரும் நலமா?

  எல்லா குழந்தைகளுக்கும் என் அப்பா வியாபாரம் செய்கிறார்.  தாலுக்கா ஆபிஸில் வேலை செய்கிறார் என்று சொல்லி கொள்ள சந்தோஷமாக இருக்கம்.  என் அப்பா ஜெயிலில் இருக்கிறார் என்று உன்னால் எப்படி சந்தோஷமாக சொல்ல இயலும்.  அன்பு மகளே வேலை வெட்டி எதுவுமில்லாமல் தெருவில் சுற்றி கொண்டிருந்த பொறுப்பற்ற பொறுக்கியான என்னை தகப்பன் என்ற அந்தஸ்த்தை கொடுத்து சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நடக்க செய்த உனக்கு நான் கொடுத்த பரிசு குற்றவாளியின் மகள் என்ற பட்டம் மட்டுமே.  சோறு போட்ட கைகளுக்கு மண்ணை வாரி கொடுத்தவன் நான்.  ஆனாலும் எனக்கு நீ மகளாக பிறந்துவிட்டதினால் என்னை நீ மன்னித்தே ஆக வேண்டும்.


  காவலர்கள் வந்து கைவிலங்கு பூட்டி என்னை இழுத்து வரும் போது உன் அம்மாவின் கிழிந்த சேலையில் கட்டிய தொட்டிலில் வண்ணத்து பூச்சி போல படுத்து இருந்தாய் நீ.  உன் சிறிய பாதங்களை எடுத்து கண்களில் ஒற்றி முத்தமிட்ட பிறகு தான்  சிறைசாலைக்கு வந்தேன். 

  அன்று முதல் இன்று வரை உன்னை நான் காணவில்லை.  இங்கு சிறைச்சாலை மைதானத்திலுள்ள மரங்களில் கூடு கட்டி வாழும் பறவைகளும், குஞ்சுகளையும் காணுகின்ற போதெல்லாம் என் வயிற்றுக்குள் அக்னி குண்டம் பற்றி எரிகிறது மகளே.  கன்னங்கரிய காக்கைக்கும், சின்னஞ்சிறிய குருவிகளுக்கும் கூட தன் மக்களை வாரி அனைத்து கொள்ளும் பாக்கியத்தை கொடுத்து படைத்தவன் என் வண்ணகிளியான மகளை தோளிலில் தூக்கி சுமக்கும் சுகத்தை கொடுக்கவில்லையே என்று நினைக்கும் போது மனித பிறப்பின் மீதே கோபம் வருகிறது.

  நீ ஒன்று என்னை கேட்கலாம் மகளே சிறையில் தரும் விடுப்பு நாளில் கூட வீட்டிற்கு வந்து என்னை பார்க்கலாம்.  ஊருக்குள்ளே வர கூச்சமாகயிருந்தால் அம்மா சிறைசாலைக்கு உன்னை பார்க்க வரும் போதாவது என்னை கூட்டி வரச்செய்து பார்க்கலாம்.  இப்படி எத்தனையோ வழிகள் இருக்கும் போது அத்தனையையும் விட்டுவிட்டு பறவைகளை பார்த்து பரிதவிப்பது ஏன்?  என்று நீ வினவலாம். 


    நியாயம் தான் மகளே.  உன் அப்பன் குற்றம் செய்து விட்டு சிறைக்கு வந்தவன் அல்ல.  குற்றவாளியாக ஆக்கப்பட்டு சிறைக்கு வந்தவன்.  தப்பே செய்யாத என்னை சிறை கம்பிகளுக்கு மத்தியில் நீ பார்த்தால் அப்பனை நினைக்கும் போதெல்லாம் சிறைச்சாலையின் கதவுகள் தான் ஞாபகத்துக்கு வரும்.  பொங்கி பிரவாகமாக பாய வேண்டிய நதியான நீ கட்டுப்பட்டு குட்டையாக ஒரே இடத்தில் தேங்கி விடுவாயோ என்று நான் பயப்படுகிறேன்.

 எனது பயம் அர்த்தமற்றதாக கூட இருக்கலாம்.  தவறானதாகவும் இருக்கலாம்.  ஆனால் நான் பயப்படுவது போல நடந்துவிட்டால் என் வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமலே போய்விடும்.  காரணம் இதுவரை நான் அர்த்தமற்ற வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டு இருந்தேன்.

 மகளே!  நான் மனிதர்களை நம்பினேன்.  கண்ணில் தென்படும் ஒவ்வொரு மனிதனையும் நம்பினேன்.  அவர்களின் வார்த்தைகளையும் நம்பினேன்.  செயல்களையும் நம்பினேன்.  ஆனால் நான் நம்பின யாரும் துரதிஷ்டவசமாக யோக்கியர்களாக இல்லை.  அயோக்கியர்களை மட்டுமே அவர்களின் கவர்ச்சியை மட்டுமே உண்மையென்று நம்பியதினால் என் அருகில் இருந்த நல்லவர்களை நான் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. 


   உன்னை போல சின்னவனாக இருந்த போது பள்ளிகூடம் போ என உன் பாட்டி சொன்னாள் எனக்கு பள்ளி கூடத்தை விட மாமர தோப்பு, கவர்ச்சியாக இருந்தது.  கல்லை வீசி கீழே வந்து விழும் மாங்காயின் பாலை கழுவாமல் கடித்து திண்பதும், புளிப்பால் முகம் சுளிப்பதும் சுவையாக இருந்தது.

 அப்பாவின் சட்டை பையில் காசை திருடி உள்ளே வெளியே ஆட்டத்தில் தோற்ற போதும் கூட அப்பாவின் கஷ்டம் புரியவில்லை.  இன்னும் பணத்தை திருடி எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென்ற வெறி தான் பிறந்தது.  உள்ளே வெளியே ஆடும் கூட்டத்தோடு கும்மாளம் போட்ட எனக்கு அங்கு கிடைத்த நண்பர்கள் தேவ தூதர்களாக கண்ணில் பட்டார்கள்.  அதுவரை நான் பார்த்தறியாத சொர்கத்தின் கதவுகளை எல்லாம் அவர்கள் திறந்து காட்டினார்கள்.

 மீசை முளைக்காத வயதினிலேயே எனக்கு சொக்கலால் பீடியின் சுகமும், சாராயத்தின் சுவையும் தெரிந்துவிட்டது.  நான் போதையை தேடி ஓடினேன்.  என் தகப்பனாரோ என்னை தேடி தெருவெல்லாம் ஓடினார்கள்.  எந்த சந்து முனையில் விழுந்து கிடப்பேன், எந்த மொட்டை சுவர் ஓரமாக உட்கார்ந்து இருப்பேன் என்று அவருக்கு தான் தெரியும்,


   உச்சி முடியை பிடித்து இழுத்து வந்து வீட்டில் போட்டு அடித்து உதைத்து பார்த்தார்.  பல நேரங்களில் தப்பு செய்யாதே என்று கதறியும் அழுதார்.  அம்மா சமைக்கும் சாதத்தின் சுவையை உணராதவன் சாராய கடையின் சால்னாவின் சுவையை மெச்சிய எவனும் உருப்பட்டதாக சரித்திரம் இருக்கிறதா?

 சரித்திரம் என்றவுடன் தான் நினைவுக்கு வருகிறது.  பள்ளிகூடம் போகாமல் மாங்காய் அடிக்க போனாலும் கூட வருடத்தில் மூன்று மாதம் எப்படியோ படிக்க போய்விடுவேன் அப்போது தப்பி தவறி வாசிக்க கற்றதினால் பாடத்தில் வரும் சந்திரகுப்த மௌரியனும், ஷாஜகானும் பிடித்து போனார்கள்.

 அதனால் நிறைய சரித்திர கதைகள் படிப்பேன்.  படிப்பது ராமாயணம் இடித்தது பெருமாள் கோவில் என்று நினைத்துக் கொண்டாயா மகளே.  நிச்சயமாக என் வாழ்க்கை அப்படி தான்.  வள்ளுவனை படித்த நான்  கள்ளுகடையில் கிடந்தேன்.  கம்பனை ரசித்த நான் விபச்சாரியின் வீடுகளில் தவம் கிடந்தேன்.

 படிப்பு வாசனை என்பது சிறியதாக இருந்தாலும் அது பெரிய பயனை தருமென்று பலர் சொல்ல கேள்விபட்டு இருக்கிறேன்.  எனக்கும் பயனை தந்தது.  ஆனால் அந்த பயன் வித்தியாசமானது விபரிதமானது.  சரித்திரங்களை படித்த எனக்கு என்னையும் அறியாமல் சரளமாக எழுத வந்தது.  உதாரணங்களை காட்டி பேசவும் வந்தது.  எதாவது அரசியல் கட்சிகளின் வாசகங்களை எழுதி கொடுத்தால் சாரயத்திற்கான பணமும் வந்தது.  கூடவே வெள்ளை சட்டை ஆசாமிகளின் நட்பும் வந்தது.


  அரசியலில் இருப்பவனுக்கு பதவிகளை பிடித்து மேலே போக அடிதடி மட்டும் தெரிந்திருந்தால் போதாது.  அடுக்கு மொழியில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.  அப்படி தெரிந்தவன் தான் சூப்பர் தலைவன்.  ஆனால் எனது நண்பர்கள் பலருக்கு அடிதடி தெரியுமே தவிர அடுக்குமொழி தெரியாது.

 நான் பக்க பக்கமாக எழுதிகொடுத்த வசனங்களை மூச்சு விடாமல் மேடைகளில் பேசி நாற்காலியில் உட்கார்ந்தவர்கள் எத்தனையோ பேர்.  நண்பனை நாற்காலியில் அமர வைத்து விட்டு நான் மட்டும் நாற்சந்தியிலா நிற்பேன்.  பட்டை சாராயத்தையும், சுட்ட கருவாட்டையும் சுவை பார்த்த என் நாக்கு அயல்நாட்டு மது வகைகளில் மூழ்கி ஆனந்த கூத்தாடியது.

செல்வத்தை மகாலஷ்மி என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.  ஆனால் அந்த மகாலஷ்மி கிடைக்க கூடாதவன் கையில் கிடைத்து விட்டால் மகாகாளியை போல் ருத்ர தாண்டவம் ஆடிவிடுகிறாள்.  தன்னை வைத்திருப்பவனை  ஊழி காற்றாகவும் மாற்றிவிடுகிறாள். என் கையில் கிடைத்த பணமும் அப்படி தான் ஆனது.

சாதாரண மக்களின் ரத்தத்தை உறிஞ்சி குடித்து உடல் வளர்க்கும் அரசியல்வாதிகளை அண்டி பிழைப்பவன் தொண்டன் அல்ல.  கீழ்தரமான அடியான் என்பதை மறந்து நானே மந்திரி என்று பேயாட்டம் போட்டேன்.  என்னால் அடிப்பட்டு ரத்தம் சிந்தியது குடிசையில் இருக்கும் குப்பனும் சுப்பனும் மட்டுமல்ல என்னையே நம்பி இருந்த உன்னை பெற்றவளும், என்னை பெற்றவளும் தான்.


   கட்டிய பிறகு கணவன் குடிகாரன் என்றால் அது அப்பாவி பெண்ணின் தலையெழுத்து கட்டுவதற்கு முன்பே அவன் குடிகாரன் குடிகேடன் என்பதை தெரிந்தும் ஒருத்தி கழுத்தை நீட்டுகிறாள் என்றால் அவளை பைத்தியகாரி என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது. 

  உனது பாட்டி தனது அண்ணன் மகளான உன் அம்மாவிடம் என்னை கட்டிக் கொள்ள சொல்லி கண்ணீர் விட்டு அழுதாளாம்.  கட்டுக்கடங்காத மகனை கால் கட்டு போட்டால் கட்டுபடுத்தி விடலாம் என்று பாட்டி தப்பு கணக்கு போட்டாள் உன் அம்மாவும் அத்தை மகன் தானே அவனை கரை சேர்க்க வேண்டியது நம் கடன் தானே என்று கழுத்தை நீட்டினாள் அவளுக்கு நான் கட்டியது தாலி கயிறு அல்ல.  அவளின் இன்பவாழ்க்கையை தொங்கவிட்ட தூக்கு கயிறு.  அடிப்பட்டாள்.  உதைப்பட்டாள், உன்னை வயிற்றில் சுமக்கும் போதும் கூட இடுப்பில் மிதிப்பட்டாள்.

நீ மருத்துவ மனையில் பிறந்திருப்பதாக செய்தி வந்த போது நான் எங்கேயிருந்தேன் தெரியுமா?  மகளே ஒரு தகப்பன் மகளிடம் சொல்ல கூடாத விஷயம்.  ஆனாலும் நீ இந்த உலகத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லியே ஆக வேண்டிய விஷயம். 


   என் எழுத்தை பேசி பதவிக்கு வந்த மந்திரியின் ஆசை நாயகியை அந்தபுரத்திற்கு அழைத்து வர காத்துகிடந்தேன்.  அப்போது தான் நீ பிறந்த சேதி எனக்கு வந்தது.  என்னுடைய வாரிசாக நீ பிறந்திருக்கிறாய் என்று ஓடி வந்து உன்னை தொட்டு தூக்கி நெஞ்சோடு அனைத்து கொள்ள வேண்டாமா?  அது நல்ல தகப்பன் செய்கின்ற வேலை.  ஆனால் நான் அப்படியல்ல மந்திரியின் மஞ்சத்திற்கு விருந்து வைக்க யார் வீட்டு வாசலிலோ காத்து கிடந்தேன்.  அதற்கெல்லாம் எனக்கு நல்ல பரிசு வட்டியும் முதலுமாக கிடைத்தது.

 பிள்ளை பிறந்துவிட்டாள் என்ற சேதி வந்தவுடன் போய் பார்க்க துப்பில்லாத தகப்பனுக்கு பிள்ளையை பார்க்கவே முடியாத தண்டனை கிடைத்தது.  சரியானது தான் இன்று நீ சிறியதாக ஒரு தவறு செய்தால் நாளை அதனுடைய விளைவுகள் அதிகமாக இருக்கும் என்பதற்கு நானே சிறந்த உதாரணம்.

 நான் படித்த சரித்திரங்களை உணர்வுடன் படித்திருந்தால் மற்றவர்களின் வேதனை என்னவென்று புரிந்து இருக்கும்.  அதனால் மகளே, நீ எல்லாவற்றையும் படி.  கண்ணில் பட்டது அனைத்தையும் படி.  நல்லது கெட்டது என படிப்பில் பேதம் காட்டாதே.  படித்து முடித்த பிறகு நிதானமாக சிந்தனை செய்.  அவற்றில் உனக்கு சுலபமாக தெரிவதை உனக்கு ஈடுபாடாக உணர்வதை உடனே கடைபிடிக்காதே.  எது கடினமாக தெரிகிறதோ அதை கடைபிடிக்க முயற்சி செய்.  அதற்காக கடுமையாக போராடு.  நிச்சயம் உனது வாழ்க்கை என் வாழ்க்கை போல சீரழிந்து போகாது.


  கல்வியும், புத்தகங்களும் சிறந்த உலகம் தான்.  ஆனால் அதைவிடவும் சிறந்த அறிவு உலக நிகழ்வுகளில் மறைந்து கிடக்கிறது.  வெட்ட வெளியில் படுத்திருந்து வட்டமிட்டு பறக்கும் பறவைகளின் வண்ண மயமான அழகை ரசித்து பார்.  சூரிய வெளிச்சத்தில் மின்னும் தேனீக்களின் அழகையும், சுறு சுறுப்பையும் ஊன்றி கவனி.  பொன்மயமான மாலை நேரத்தில் மலையடிவார ஓரத்தில் நடந்து பார்.  அங்கே பூத்து குலுங்கும் வர்ண ஜால மலர்கள் ஆயிரம் பாடங்களை கற்பிக்கும் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு இயற்கையையும், ரசிக்க தெரிந்தவன் தான் அதன் ரகசிய பரிபாஷயை புரிந்தவன் தான் சிறந்த புத்திசாலியாக திகழ முடியும்.

 என்னிடம் இருந்த எழுத்து திறமைக்கு அதை நான் சரியாக பயன்படுத்தி, இருந்தால் செத்த பிறகும் எனது பெயர் நிற்கும்.  ஆனால் நான் அற்ப பணத்திற்காகவும் போதைக்காகவும் பயன்படுத்தி வாழும் போதே செத்து கிடக்கிறேன்.  அதனால் என் அன்பு மகளே நீ எப்போதும் உனது செயல் திறனுக்கும் அறிவாற்றலுக்கும் உச்சமான ஊதியம் பெறும் சாமார்த்தியத்தை வளர்த்து கொள்.  ஆனால் அந்த சாமார்த்தியம் உன் இதயத்திற்கும் ஆத்மாவிற்கும் விலைபேச முடியாதபடி பார்த்துக்கொள்.  மனசாட்சியை விலை பேசிய பிறகு மனிதனாக வாழ்வதில் அர்த்தமில்லை.

 நான் மனசாட்சியின் குரலை பல முறை சாகடித்து இருக்கிறேன்.  அப்படி சாகடிப்பது எனக்கு சந்தோஷமாகவும் இருந்திருக்கிறது.  அப்படிப்பட்ட சந்தோஷத்தின் விலை தான் இந்த சிறைவாசம்,  மந்திரிக்கும் அவர் வைப்பாட்டிற்கும் நடந்த தகராறில் சுடப்பட்டாள் அவள். 

  சுட்டது மந்திரி தான் என்பது வெளியில் தெரிந்தால் அவர் மரியாதை என்னவாவது.  அதனால் வாய் தகராறில் நானே சுட்டுவிட்டேன் என்று கொலை பழியை ஏற்றுக்கொள் என் செல்வாக்கால் உன்னை எப்படியும் வெளியே கொண்டுவந்து விடுகிறேன் என வாக்குறுதி கொடுத்தார்.

  செய்யாத கொலையை செய்வதாக சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை ஆயிரம் தப்புக்கள் செய்தாலும் அதை நெஞ்சை நிமிர்த்து ஏற்று கொள்வது தான் உன் அப்பனின் மனம்.  ஆனால் மற்றவன் கெஞ்சுதலுக்கு உடன்பட்டு உள்ளுணர்வை குழி தோண்டி புதைத்து விட்டு செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்டேன்.

 எப்படியும் காப்பாற்றுவேன் என்று வாக்குறுதி தந்த அமைச்சர் நான் அவளை சுடும் போது கண்ணால் பார்த்ததாக நீதிமன்றத்தில் சாட்சி சொன்னார்.  இந்த நாட்டில் சாதாரண மனிதன் உண்மை பேசினால் அதன் பெயர் பொய், கோழைத்தனம்.  அதே நேரம் அதிகாரத்தில் உள்ளவன் பொய் சொன்னால் கூட அது அரிச்சந்திர வாசகம் நீதிமன்றமும் அதை ஏற்றுக் கொண்டது அதனால் தான் உனக்கு ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன்.

 ஊரும் உலகமும் கூடி நின்று ஒரே குரலில் கூச்சல் இட்டாலும் நியாயம் என்று நீ நினைப்பதை நிலை நாட்டுவதற்கு அயராது போராடு.  எந்த சூழலிலும் பிறரின் குற்றத்தை ஒப்புக்கொள்ளாதே.  அதே நேரம் உன் குற்றத்தை மறைக்காதே.  உண்மையை எதிர்கொள்ள தைரியம் மட்டும் இருந்தால் போதாதது உண்மை மட்டும் தான் கடைசியில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் வேண்டும்.


  நான் சிறைசாலையை தண்டனை கூடமாக பார்க்கவில்லை.  இளமையில் தவறவிட்ட பள்ளிகூடமாக பார்க்கிறேன்.  உள்ளே வருகின்றவனின்  அழுகையும், வெளியே போகுபவனின் சிரிப்பும் எனக்கு எத்தனையோ பாடங்களை கற்று தந்தது.  சாராயத்தில் வரும் போதையை விட அதை ஒதுக்குவதில் உள்ள சந்தோஷம் இப்போது எனக்கு தெரிகிறது. 

  என்னை கொலைகாரனாக்கிய அமைச்சரின் உறவுக்கும், குற்றவாளியாக நான் நின்றாலும் வயிற்றில் அடித்து ஆளும் அம்மாவின் உறவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. 

 என் தண்டனை காலம் அடுத்த வருடத்தோடு முடிகிறது.  என் கனவுகளை நினைவாக்க உன்னை காண ஓடோடி வருவதற்கு இப்போதே என் கால்கள் பற பறக்கிறது.  என்னை பெற்றவள் போலவே இருக்கும் உன்னை தூரத்தில் பார்க்கும் போதே மண்டியிட்டு வணங்கி நின்று அழவேண்டுமென்று நெஞ்சம் துடிக்கிறது.

ஆனால் மகளே நான் வெளியே வந்தவுடன் உண்மையை பேசிவிடுவனோ என்ற அச்சம் அமைச்சர் கும்பலுக்கு வரலாம்.  இந்த உலகில் நல்லவனாக வாழ்பவனுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. என்ற உண்மை நிலையில் நான் கொலை செய்யவும் படலாம். 

  அப்படி நான் செத்து போனால் எனக்கொரு உதவி செய் மகளே.  எப்படி வாழகூடாது என்பதற்கு நான் உதாரணம் என்பது போல எப்படி வாழ வேண்டும் என்பதற்கு நீ உதாரணமாக இருக்க வேண்டும்.  என்னை பார்த்து காரி துப்பிய சமூகம் உன்னை பார்த்து கை எடுத்து கும்மிட வேண்டும்.  அதை செத்து போனாலும் பார்ப்பதற்கு பூமிக்கு தினம் தினம் வருவேன்.


   இப்படிக்கு
                உன் அப்பா.

+ comments + 3 comments

மிகவும் அருமை இப்படி பலரின் வாழ்க்கைகள் வெளியே தெரியாமலே சிறைக் கம்பிகளுக்கிடையிலேயே முடிந்து போகிறது பலர் வீட்டிலேயே முடங்கி கொண்டு தன்னை அழித்துக்கொள்கின்றனர்..இதற்க்கு தீர்வே இல்லையா? குருஜி..........

19:15

மிகவும் அருமையான கதை குருஜி. ஒரு திரைக்கதை வசனகர்த்தா எழுதியது போல் கச்சிதமான வாசகங்கள். கதையின் நேர்த்தி அருமை

Thanjaavooraan
19:36

இதை படித்துமுடிக்கும்போது என் கண்களில் ஊறிய அந்த ஒருசொட்டுக் கண்ணீர், இவர்களைப்போல் பிரிவால் வாடும் உறவுகளுக்காக...
பகிர்வுக்கு நன்றி அன்பரே


Next Post Next Post Home
 
Back to Top