( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தயவு செய்து பதில் எழுது


அன்புள்ள கடவுளுக்கு

     ம்மா துண்டு தமிழ்நாட்டை ஆளுகின்ற தலைவர்களே நிக்க நேரமில்லை, உட்கார பொழுதில்லை என்று லொங்கு லொங்குயென வேலையிருக்கோ இல்லையோ ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.  நீ ரொம்ப பாவம் இவ்வளவு பெரிய உலக்கத்தை ஒத்த ஆளா ஆட்சி நடத்தற, உனக்கு எம்புட்டு வேலையிருக்கும்.

கண்ணுக்கே தெரியாம நிறைய உசுரு இருக்காமே.  அதுங்க தொடங்கி வயிறு பெருத்த மனுஷன் வரைக்கும் தினசரி நீ சோறு போட்டாகனும்.  கோடம்பாக்கத்துல மழை வந்துதா?  கோவில்பட்டியில வெயில் அடிக்கிறதா? என்பதையும் பார்த்தாகனும். 


   செத்தது எத்தனை பேரு, புதுசா பொறந்தது எத்தனை பேரு, அவனுக்கு என்ன கதை, என்ன பாத்திரம் என்று பிரிச்சு கொடுத்தாகனும்.

  ரெண்டு செகண்டு கண் மூடி உன் வேலையை பற்றி யோசிச்சா தலையே கிறுகிறுத்து போகிறது.  இருந்தாலும் எங்கோ ஒரு மூலையில் உன்னால் படைக்கப்பட்ட இந்த சின்ன ஜீவனின் கடிதத்தை நீ படிப்பாய் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

ஆமாம் கடவுளே உனக்கு என்ன பாஷை தெரியும்.  எங்க ஊரு ஐயரு சமஸ்கிருதத்தில பேசுனா தான் உனக்கு புரியும் என்கிறார். 

  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை தமிழ் மொழி தான் ஆதி மொழி அது தான் உனக்கு பிரியமானது என்று எங்க ஊரு தமிழ் வாத்தியார் சொல்றார்.   


  இதில் எது நெசம்.  இவங்க இரண்டு பேரும் சொல்கிற மாதிரி தமிழோ, சமஸ்கிருதமோ இரண்டில் ஒன்று உனக்கு தெரியும் என்றே வைத்து கொள்வோம்.  சீனாகாரனும், ஆப்ரிக்காகாரனும் உன்கிட்ட எப்படி பேசுவான்?

   அவனுக்கு தான் தமிழும், சமஸ்கிருதமும் தெரியவே தெரியாதே.  ஒரு வேளை உனக்கு காதுகளே கேட்காதோ? இங்க உள்ளவங்க தான் வீணாக குடுமியை பிடித்து சண்டை போட்டு கொள்கிறார்களோ? இது சம்பந்தமா உன் கருத்து என்னென்னு எனக்கு கண்டிப்பா பதில் எழுது.

இப்ப கொஞ்ச நாளாகவே என் மண்டைக்குள்ள ஒரே குழப்பம்.  எங்க ஊரு கறிகடை பாய் அல்லா மட்டும் தான் ஒரே கடவுள் அவரை விட்டா கடவுளே இல்ல என்கிறார்.  


  அவரு சொல்லுகிற விதத்தை பார்த்தா ஒருவேளை இவரு சொல்வது தான் சரியாக இருக்குமோ என்று ஒரு நிமிஷம் தோணியது. 

 அடுத்த நிமிசமே டீ கடை ராபர்ட் சொன்னது நினைப்பில் வந்து போச்சு.  இந்த உலகில் கர்த்தர் மட்டும் தான் வணங்க கூடிய கடவுள்.  அவரே எல்லா ஜீவன்களின் போஷகராய் இருக்கிறார்.  இப்படி ராபர்ட் சொன்னது சரியா? பாய் அண்ணாச்சி சொன்னது சரியான்னு? புதிய குழப்பமே வந்து போயி இட்லி கடை வைத்திருக்கும் ராகவாச்சாரியாரிடம் அல்லா கடவுளா? கர்த்தர் கடவுளா? என்று கேட்டேன். 

  அவர் ஒரே, போடாக அட போடா அசட்டு அம்பி, அல்லாவும் இல்ல கர்த்தரும் இல்ல.  பெருமாள் தான்டா உண்மை தெய்வம்ன்னு சொல்லி புது குழப்பத்தை உருவாக்கி விட்டார்.


  இத போயி சாதாரணமா ஒரு பைத்தியகாரனின் கேள்வின்னு தூக்கி போட்டுடாத.  நீ படைத்த பூமியில இன்றைக்கு பத்தி எரியும் பிரச்சனை இது தான். 

  ஒரு பக்கம் உள்ளவன் எல்லோரும் மனம் திரும்புங்க.  கர்த்தரை ஏத்துங்க என்று ஆசை வார்த்தை காட்டி பார்க்கிறாங்க.  மசியாதவர்களை கையில ஆயூதத்தை கொடுத்து ஒருத்தனுக்கு ஒருத்தன் வெட்டி சாகுபடியா செய்கிறான்.

இன்னொருத்தனோ அல்லாவ ஏத்துக்காத எவனும் பூமியில வாழ கூடாதுன்னு அங்கங்க குண்டு போடுகிறான்.  கடவுள் படைச்ச உசுருகளை அழிக்கலாமன்னு திருப்பி கேட்டா அல்லாவை வணங்காதவன் எவனும் சாத்தானின் மக்களே அவர்களை கொல்லுவது தான் புனித போர் என்கிறான்.


தொப்பியும் சிலுவையும் தான் முரட்டு தனமா இருக்கிறது என்று காவி வேட்டி கட்டியவனின் பேச்சை கேட்டால் இன்னும் கொடுமையாக இருக்கிறது.  நான் தான் ஆதியில வந்தவன்னு பாதியில் வந்தவன் தான் அவனுங்க இரண்டு பேரும் அவனுங்கள ஒழிச்சு கட்டினா தான் பூமி அமைதியாகும்ன்னு சூலத்த தூக்கி கிட்டு குத்த வரான்.

  இந்த இடத்துல நீ என்ன பார்த்து ஒரு கேள்வி கேட்கலாம்.  ஏன்டா அவனுங்ககிட்ட போன அப்படியும் இல்லாம இப்படியும் இல்லாம நடுவுல இருக்கிறவன் கிட்டையோ கடவுளும் கிடையாது.  மண்ணாங்கட்டியும் கிடையாது என்கிறவன் கிட்டையோ போய் விளக்கம் கேட்க வேண்டியது தானே என்று.

   நீ கேட்பதுவும் சரிதான்.  அப்படிபட்ட மனுஷங்கிட்டையும் போய் கேட்டேன்.  அவன் என்னடான்னா இவனுக மூணு பேரை விடவும் மோசகாரனா இருக்கிறான்.


 ஒருத்தன் சொல்கிறான் அல்லா உசத்தின்னு சொல்கிறவனுக்கும் ஆமாம் போடு, அடுத்தத உசத்தி பேசறவனுக்கு ஆமாம் போடு, ஆனா குறிப்பா நீ போட்ட ஒவ்வொரு ஆமாவுக்கும் கராரா காசை வசூல் பண்ணிடு.  எந்த ஆடு முட்டிகிட்டா நமக்கு என்ன நமக்கு தேவை ரத்த வறுவல் தானே என்று கண்ணை சிமுட்டுகிறான்.

  கடவுளே இல்லை என்பவனிடம் போனேன்.  கடவுள் இருப்பத ஒத்துக்கிட்டா கண்ணுக்கு தெரியாத நியாய தர்மத்தையும் ஒத்துக்கணும். 

  நியாய தர்மம் என்பதே பத்தாம் பசலித்தனம்.  அதன்படி எல்லாம் நடக்க ஆரம்பிச்சா மனுஷனா பிறந்த சுகத்த அனுபவிக்க முடியாது.  வாழ்வது கொஞ்ச நாள் தான்.  அந்த காலத்துக்குள்ள கிடைக்கிறத அனுபவிச்சி செத்து போகப்பாரு  


  வீணா கடவுள் அது இதுயென்று காலத்த வீணடிக்காத என்கிறான்.  ஒவ்வொருத்தனும் தன் சுகத்தையே பெரிசா பார்த்தா உலகம் பூரா சுடுகாடாகத் தானே மாறும்?

அதனால தான் உங்கிட்ட இந்த கேள்விய கேட்க போறேன்.  யோசிச்சு நிதானமா பதில சொல்லு,  ஒண்ணும் அவசரம் இல்லை.
  •  உண்மையிலேயே நீ யாரு?
  • உன் பெயர் என்ன?
  • அல்லாவா? 
  • கர்த்தரா? 
  • பெருமாளா?
   இந்த மூணுமே உன் பெயர் இல்லையின்னா இவங்க மூணு பேரும் யாரு?

   அவங்களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?

  நாங்க யாரும் அவுங்கள பார்த்தது இல்ல.  நீயாச்சும் பார்த்து இருக்கியா? நீ சொல்ல போற பதிலில் தான் இந்த உலகத்தோட எதிர்காலமே இருக்கு. 
அடுத்து முக்கியமா இன்னொரு கேள்வி.  ஒரு மனுஷனுக்கு முக்கியமா என்ன வேணும்? மானத்த மறைக்க ஒரு துணி மழைக்கு, வெயிலுக்கு ஒதுங்க ஒரு கூரை பசியெடுத்தா ஒரு பிடி சாதம் அவ்வளவு தான்.  


    ஆனா எங்க நாட்டுல பல பேரு ஊர கொள்ளையடிச்சி கோடி கோடியா மறைச்சு வைக்கிறான்.  சொத்து சுகத்துகாக ஆத்தாளையும், அப்பனையும் கூட வெட்டி மாய்க்கிறான்.  

    இத்தன பணம் மனுஷனுக்கு எதுக்கு? பத்து துணிய ஒரே நேரத்துல போட்டுக்க முடியுமா? பத்து வூட்டுல ஒரே ராத்தியில் படுத்து தூங்க முடியுமா?  பசி வந்தா காச வறுத்து திங்க முடியுமா?  இவை எல்லாம் முடியாதுன்னு எல்லா மனுஷனுக்கும் தெரிஞ்சும் பணத்த நோக்கியே ஏன் ஓடுகிறான்?

  மனுஷன் ஓடுவது இருக்கட்டும் நோய குணப்படுத்தினா, கல்யாணம் பண்ணிகிட்டா? பிள்ளை குட்டி பெத்துகிட்டா உனக்கு கூட உண்டியலில் காசு போட சொல்கிறாயாமே.  உலக பொருட்களில் ஆசை வைக்காதேன்னு உபதேசம் செய்கிற நீயே நகையும் நட்டும் பணமும் காசும் காணிக்கையாக கேட்பது ஏன்? அல்லது உன் பெயரால் யாரோ வசூல் செய்கிறார்கள் என்றால் எல்லாம் தெரிந்த நீ அதை அனுமதிப்பது ஏன்?


  இப்படி இன்னும் ஏராளமான கேள்விகள் பதிலே இல்லாமல் எனக்குள் மலை மாதிரி குவிந்துக்கிடக்கிறது.  அத்தனையும் இந்த ஒரே கடிதத்தில் கேட்டால் பாவம் உனக்கு தலைசுற்றல் வந்து விடும்.

   எங்கள் ஊரில் குடி தண்ணீர் குழாயில் வீட்டுக்கு வருவது இல்லை.  இரண்டு கிலோ மீட்டர் நடந்து போயி தான் தண்ணீர் கொண்டு வர வேண்டும்.

  ராத்திரி நேரத்தில் தலைவலி, காய்ச்சல் என்றால் தெருவில் இறங்கி மருத்துவமனைக்கு போக முடியாது.  காரணம் தெருவில் விளக்கு இல்லை.  தெரு நாய் தொல்லை ரோடெல்லாம் ஆளை விழுங்கும் பள்ளம்
 இத்தனையும் தாண்டி டாக்டர் பீஸ் கொடுப்பதற்கு பொண்டாட்டி தாலியை அடகு வைக்க வேண்டும்.  கரண்ட் பில்லோ மூட்டை அளவு என்றாலும் பணத்தை கட்டுகிறோமே தவிர விளக்கெரிக்க கரண்ட் வருவதில்லை. 


  விலையேற்றத்தால் தங்க நகைகளை மறந்து போனது போல காய்கறிகளின் விலையும் ஏறி போனதினால் மாதத்தில் ஒரு நாள் தான் சாதத்திற்கு சாம்பாரே கிடைக்கிறது. வெங்காயம் கத்தரிக்காய் என்ற பெயர்களை மறந்து போச்சி

 ஸ்கூல் பீஸ் கட்டி மாளாது என்பதினால் எங்களில் பலர் பிள்ளைகளை பெற்று கொள்வதையே விட்டுவிட்டோம்.

   ஆகாய உசரத்திற்கு மண்ணு விலை ஏறி போனதினால் சொந்த வீடுன்னு நினைச்சு பார்க்கவே முடியாது. 

  வாடகை வீட்டுக்கு பணம் கொடுத்தே பாதிப்பேர் பிளாட்பாரத்திற்கு வந்து விட்டோம். 

  வயசுக்கு வந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க கனவுல கூட முடியல.

  படிச்ச பசங்களோட உள்ளங்காலும் செருப்பும் வேலை தேடியே தேய்ந்து போனது. 

 எங்க ஊரு தலைவருங்க தங்கள் பேரன் பேத்திக்கும் பெற்ற மக்களுக்கும் பதவி கிடைக்கலைன்னா அரசாங்கத்தைமே மிரட்டுவாங்க

  தப்பித் தவறி ஊழல் செய்து மாட்டிக்கிட்டா ஜாதிப் பெயரைச் சொல்லி தப்பிக்க பார்ப்பாங்க

  தன்னோட கட்சி வளருவதற்காக மதச்சண்டைகளை தூண்டி விடுவாங்க

  இத்தனை நெருக்கடியில் தான் உனக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.  என் நெருக்கடி எப்போதுமே தீரபோவதில்லை.  என் தலையெழுத்து இப்படி தான்.  ஆனாலும் நீ சிறிது ஆறுதலை நான் அடைந்து விட்டு போகட்டுமே என்று தயவு செய்து பதில் எழுது.  அரசியல்வாதி பெற்ற விண்ணப்பத்தை குப்பை கூடையில் போடுவது போல் போட்டு விடாதே.

                                                            http://www.toonpool.com/user/849/files/penetrating_pen_91585.jpg  இப்படிக்கு சாமான்ய மனிதன்                                                        


+ comments + 30 comments

ரசிக்கலாம். அந்த நையாண்டியும், நிஜமும் இரண்டையும். வேறு யார் என்னசெய்ய முடியும்?
ஒருவேளை கடவுள் பதில் சொன்னால் இங்கு பதிவாய் அதனை இடுவீர்கள் , நம்புகிறேன்:)

Anonymous
09:56

கவி கவிதா

அருமை அற்புதம்.... மத பிரச்சினையை இவ்வளவு அழகா சொல்லிவிட்டீர்கள். நிஜம் நிஜம். பிரச்சினை செய்பவரிடம் சமாதனம் செய்யப் போனால் நாம் இறந்து தான் போவோம்

மரியாதைக்குரிய குருஜி அவர்களுக்கு, உங்களின் கடிதத்தில் ஆதங்கம், கோபம், வருத்தம்,எரிச்சல், ஏக்கம் எல்லாம் இருக்கிறது. தங்களுடைய கடிதத்தில் இருக்கும் எல்லா விசயங்களிலும் எனக்கும் உடன்பாடே. ஒரு முஸ்லிம் என்பவன் கடவுள் இருக்கிறானா என்று மனதளவில் கூட கேள்விகேற்க கூடாது. இறைவன் இருப்பதை மனபூர்வமாக ஏற்றுக்கொள்வதே ஈமான். ஆனால் எனக்கு ஒரு இயல்பான சந்தேகம் என்ன என்றால் எத்தனையோ மகான்கள் மற்றும் சித்தர்கள் இறை நெருக்கம் பெற்றேன் என்று நமக்கும் அறிவித்து நல்ல முறையில் வாழ்கை நடத்தி நம்மையும் வழி நடத்தி செல்கின்றனரே அப்படியானால் அவர்கள் இறைவன் யார் என்று அறியாமலா இருப்பார்கள். அவர்களாவது வெளிப்டையாக தெரிவிக்கலாமே. மேலும் ஒரு யோசனை தாங்கள் ஆவி உலக தொடர்புகள் மூலமாகவாவது யாரவது மகனை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டு எங்களுக்கு விளக்கலாமே. தயவு செய்து இதனை முயற்சிக்க வேண்டுகிறேன்.
---முஹமது இஸ்மாயில், திருப்பூர்

mayu
10:39

நன்றாக உள்ளது.

கவி கவிதா
10:42

அருமை அற்புதம்.... மத பிரச்சினையை இவ்வளவு அழகா சொல்லிவிட்டீர்கள். நிஜம் நிஜம். பிரச்சினை செய்பவரிடம் சமாதனம் செய்யப் போனால் நாம் இறந்து தான் போவோம்.

ராஜா
10:54

கடிதம் நல்லா தான் இருக்கு , பதில் வருதான்னு பார்ப்போம்

உதயசுதா
11:16

எல்லாருக்கும் மனசுல இருக்கற கேள்விகள்தான் இது.ஆனா பதில்தான் கிடைக்கமாட்டேங்குது

வேணு
11:16

இதற்க்குமேல் எழுத தெரியவில்லை ...மனசு வலிக்கிறது ........

karun kumar
11:19

மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...
மிக மிக நன்றாக உள்ளது.
நன்றி நண்பரே

கார்த்திக்
11:35

நல்ல கடிதம் .....

இந்த கடிததுக்கு குரு ஜி பதில் சொல்லுவாரா ?

ராஜா
11:36

"இந்த கடிததுக்கு குரு ஜி பதில் சொல்லுவாரா ?"

இந்த கடிதம் கடவுளுக்கு எழுதபட்டுள்ளது குருஜிக்கள்ள.

கார்த்திக்
11:54

"இந்த கடிதம் கடவுளுக்கு எழுதபட்டுள்ளது குருஜிக்கள்ள."

ஹோ அப்படியா அண்ணா ? பதில் எப்போது வரும் ?

thanes_m
12:00

கடவுள் இதற்கு பொறுப்பல்ல..... மனிதன் மட்டுமே முழு காரணம்.... செய்வதை எல்லாம் செய்து விட்டு, கடவுளை குறை கூறினால்..

// thanes_m said...
கடவுள் இதற்கு பொறுப்பல்ல..... மனிதன் மட்டுமே முழு காரணம்.... செய்வதை எல்லாம் செய்து விட்டு, கடவுளை குறை கூறினால்..//இதுதான் உண்மை. செய்வதை எல்லாம் செய்து விட்டு கடவுளை குறை கூறினால் ? கடவுளை உண்டாகி காப்பாற்றுவதும் அவன்தானே!

முன்பு நிறைய விதவிதமாக பாம்புகளின் படங்களை போட்டு வாசகர்களை மிரள வைத்தீர்கள். இப்போது வித வித மான தாமரை அல்லி மலர்கள். ரம்யமாக இருக்கிறது.

சிம்பாலிக்காக ஏதாவது சொல்ல வருகிறீர்களா என்ன?

அருமையான கடிதம் அய்யா இதைவிட விவரமாக ஒரு கடிதம் யாரும் எழுத முடியாது பதிலுக்காக காத்திருக்கிறோம்
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்

உம் கடிதம் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி.

என்னைப் பற்றிய கவலையில் உன்னை நினைக்க மறந்தாயோ மானிடா..?
குறித்துக்கொள்....

நீ கடவுளாய் காணும் எதிலும் கடவுள் இல்லை. உன் அறிவு கொண்டு தேடும் பொருள் அல்ல கடவுள். தேடலும் ஆடலும் நிறுத்தப் படுகிற பொழுதினில் புலப்படும் ஞானம். மனதை நிலைநிறுத்திக்கொள்ள தேவைப்படுகிற மூன்றாம் ஊன்று கோலாய் மட்டுமே மனித அறிவு இறையை நாடுகிறது.

உன் அதிகப் பட்ச ஆசைகள் தாண்டி யோசிக்கும் அறிவை பெறாத வரை உன்னால் என்னை நெருங்க முடியாது. எல்லா மதங்களின் தோற்றம் என்னிடமிருந்தல்ல. உங்களின் கோட்பாடுகளில் எனக்கு உடன்பாடில்லை. கட்டில்லா உலகத்தில் மட்டில்லா வாழ்க்கையை இயற்கையாய் தந்திருக்கிறேன்.

மலரை முகர்பவன் இதழ்களை தின்று விட்டு மலர் என்பது எது..? என யோசிப்பது அறிவீனம். மனைவியை அனுபவிப்பவன் ஆசைகள் தீர்ந்தப் பின் பெண் என்பது எது...? என தேடுவது அறிவீனம். உனக்குள் உணரப்படுவதும், உணர்வதும் எது...? என யோசிப்பாயேயானால் ஒரு வேளை உன்னை உன்னால் உணர முடியக் கூடும். உன்னை உன்னால் உணர முடியாத வரை, என்னைத் தேடுவதை நிறுத்து.

நீ நீயாகும் போது மட்டுமே, நான் நானாகிறேன். புரிந்து கொள்.

என்னை உணர உன்னை உணர்.

மற்றது மற.

இன்றைய நிலையில் கடவுளுக்கு என்னைபோல ஒவ்வொரு மனிதனும் கேட்க விரும்பும் கேள்விகள் அடங்கிய கடிதமே...இது என்னை போன்ற சாமான்யன் கேட்க விரும்பும் கேள்விகள். அனால் அதற்க்கான விடைகளை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது??? உங்களை போன்ற பெரியவர்கள் அதை தெரிந்து என்னை போன்றவர்களுக்கு விளக்கி சொன்னால் கொஞ்சம் தெளிவடைவோம்,,,, செய்யுங்களே அய்யா.... கடவுளை நாங்களும் உணர வழி செய்யுங்கள் ....

thanes_m
19:00

கடவுள் இதற்கு பொறுப்பல்ல..... மனிதன் மட்டுமே முழு காரணம்.... செய்வதை எல்லாம் செய்து விட்டு, கடவுளை குறை கூறினால்.....

எல்லாருடைய மனதிலும் ஓங்கி நிற்க்கும் அதே கேள்விகள்,பதில் வந்தால் தயவு செய்து சொல்லவும்.

Anbu ullam
01:03

'Cute letter'for God. என் சிந்தனையில் அடிகடி தோன்றும் பல கேள்விகளை உங்கள் கடிதம் நினைவு படுத்துகின்றன.

கடவுள் என்பது யார்?
அவர் எந்த மதத்தை சேர்ந்தவர்?
அவருக்கு என்ன வேண்டும்?

நாமாக கேட்டு பிறக்கவில்லை. பிறந்த நமக்கும் இப்படி தான் வாழ வேண்டும் என்று அவனே சரியான வழி முறைகளை சொல்லி தந்திருக்க கூடாதா?

நியாயமான வழியில் வாழ்பவன் அணு தினமும் துன்ப பட்டு கொண்டே தான் இருக்கின்றான்....

தவறான வழியில் நடப்பவனும் சந்தோஷமாக தான் இருக்கின்றான். ஏன் அப்படி?

நல்லவர்களை கடவுள் ரொம்ப சோதிப்பார் அனாலும் கடைசியில் கை விட மாட்டார் என்று சொல்ல்வார்களே....

அது எதுக்காக?

சோதனைகளை தொடர்ந்தார் போல கொடுப்பதை கை விட மாட்டார் என்று அர்த்தம் படுமோ என்று நினைக்கிறன். இதை பற்றி யாரிடமாவது விளக்கம் கேட்டால் உடனே பாவ புண்ணியங்களை பற்றி பேசுவார்கள். இந்த ஜென்மத்தின் கர்மாவுக்கு இந்த ஜென்மத்திலே பலன் கிடைக்கும் படி செய்தால் என்ன?

கடவுள் படைத்த இந்த உலகில் அனைவரும் நல்லவர்களா இருக்க கூடாதா?

பேராசை, பொறாமை, பழி வாங்கும் எண்ணம்,பொய் பித்தலாட்டம், தில்லு முள்ளு, நம்பிக்கை துரோகம்.... இதெல்லாம் மேலோங்கி நிற்கும் படியாக ஏன் இந்த நய வஞ்சகம் நிறைந்த உலகமாக மாற வேண்டும்?

இதற்கெல்லாம் மனிதன் தான் கரணம் என்பார்கள் அனாலும் அந்த மனித எண்ணங்களையும் சிந்தனைகளையும் கடவுள் நினைத்தால் மாற்றி அமைக்க முடியாத என்ன?

அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று தானே சொல்ல்வார்கள். கடவுள் இருக்கிறான் என்று நம்பும் ஆத்திகன் வாழ்க்கைக்கும் கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகன் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இருப்பது போல எனக்கு ஒன்றும் தெரியவில்லையே.

கடவுள் உண்டு என்று சொல்லவதும் அவராலே....
இல்லை என்று சொல்லவதும் அவர் தானே காரணம் இருக்கனும்....

அப்படிஎன்றால் கடவுள் என்பவர் மனிதர்களை பகடை காய்களா வைத்து விளையாடுகிறாரா?

கடைசியில் நாம் எல்லோருமே அவரிடம் தான் ஐக்கியமாகி விடுவோம் என்றால் இந்த பிறவி எடுத்ததின் அர்த்தம் தான் என்ன?

ஒன்னுமே புரியல....
எல்லாம் மர்மமாய் இருக்கு. ஹ்ம்ம்ம்...

நான் கடவுளுக்கு கடிதம் எழுத விரும்பவில்லை, நேரில் பார்த்து நிறைய கேட்க வேண்டும் போல இருக்கு.

வினோத் கன்னியாகுமரி
02:34

இதே கேள்விகளுமாய் நானும் இணைந்து கொள்கிறேன்

rajudranjit
02:37

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்! எப்போது இப்படி நம்ப முடியாமல் தவிக்கிறானோ அப்போது அவன் மீது உள்ள நம்பிக்கையில் அவனில்லை என்றாகி விட்டது!

நீ தான் கடவுள்! உன்னில் கடவுள் உண்டு அதை காண்! நம்பிக்கை எதில் வைக்கின்றாயோ அது உன் கடவுள்! " நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்" திருமூலர் வாக்கு!

"எண்ணி துனிக கருமம் துனிந்த பின்
எண்ணுவம் என்பதிழுக்கு" ஐயன் வள்ளுவன் வாக்கு உண்மையும் அது தான்!


கடவுளை சொன்னவன் சென்று விட்டான் சூழ்சியாளன் பற்றிக் கொண்டான் உண்மையறிய புறப்பட்டால் உன்னை நீ மறந்து போவாய்!

தன் கையில் வெண்ணை இருக்க நெய்யிற்க்கு அலையும் கதையாகிவிட்டது சிலருக்கு!

நீயே கடவுள்!
நீயே கடவுள்!
நீயே கடவுள்!

கடவுள் ஒரு அண்ட வெளி அவர் பெயர் மொழிக்கு தகுந்தது போல் அமையும் ஆனால் பொருள் ஒன்று தான்!

அல்லாஹ் என்றாலும், கர்த்தர் என்றாலும், பெருமாளானாலும் நீ எதுவாக உன் நம்பிக்கையை வைக்கிறாயோ அதுவே உன் கடவுள்!

இல்லை என்பவனுக்கு இல்லை, உண்டு என்பவனுக்கு உண்டு!

நீ மஹத்துவமானவன் உன் மீது நம்பிக்கை வை முதலில்!

சூரியன் மேற்க்குதிக்க செய்து பிறை கிழக்குதிக்க செய்யும் தெய்வம் உண்டா?

அப்படி யார் இந்த மூவரில் செய்கிறார்களோ அவரே தலை சிறந்தவர்!

கருவூரிலிருந்து வந்தது தான் அனைத்தும், நிலமூரும் செல்வார்,தீயூரும் செல்வார்!

மீண்டும் நம்மை கருவூரில் அழைத்து நம் எண்ணம் நிறைவுற செய்பவருண்டா?

உன்னில் இருக்கும் தெய்வத்தை எல்லாமும் நீயென பார், நீயே கடவுள்!

சித்தம் தெளிந்து, பித்தம் கொள்ளாமல் உத்தமனாக வாழ்பவனே கடவுள்!

நீ தான் கடவுள்!
நீயே கடவுள்!

maniajith007
11:20

நண்பர்கள் கடவுளுடன் ஒரு உரையாடல் என்ற நூலை படித்தால் தெளிவு கிடைக்கும்

தமிழ்நேசன்1981
11:21

இது கலிகாலம்.. இங்க உண்மைய சொன்னா பொய்யாயிடும்.
பொய்யெல்லாம் உண்மையாயிடும்.. அப்படியும் சில நல்ல மனுசனுங்க இருக்கறதாலதான் பூமி ஒழுங்கா சுத்திட்டிருக்கு....

infentarokiaraj
18:40

என்னை பொருத்தவரை இயற்கையும் கடவுள் தான்.

malathi
18:41

நட்டகல்லை தெய்வம் என்று நாலு புஸ்பம் சாத்தியே
சுத்திவந்து முனுமுனுண்னு சொல்லும் மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவையரியுமோ இது திருமூல்ர் எழுதியது அல்ல சிவவாக்கியர் எழுதியது ' உடம்பினுள் உறுபொறுள் தோன்றிடக் கண்டேன்" இது திருமூலர் வாக்கு

இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல‌

06:28

இது கடிதமே அல்ல ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தேடல் இதுதான் ய்தார்த்தம். இதை உணர்ந்தால் போதும் தினம் தினம் இதை மனதில் நினைக்க வேண்டும். நமக்கு என்ன தேவையோ அது இதில் இருக்கிறது.
கடிதம் வாயிலாக வெளியிட்ட குருஜிக்கு நன்றி

malathi
21:10

நானுமல்ல நீயுமல்ல நாதனல்ல ஓதுவேன்
வானிலுள்ள சோதியல்ல சோதி நம்முளுள்ளதே
வள்ளலார்

குருஜி,உங்கள் ஒவ்வொரு பதிவும் மிக மிக அருமையாக உள்ளது.டாக்டர்.j .பாஸ்கர்,பெங்களூரு

குருஜி,உங்கள் ஒவ்வொரு பதிவும் மிக மிக அருமையாக உள்ளது.டாக்டர்.j .பாஸ்கர்,பெங்களூரு


Next Post Next Post Home
 
Back to Top