( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அந்த நாள், எந்த நாள்?


    லகின் ஒரே வல்லரசாக அசைக்க முடியாத சக்தியாக அமெரிக்கா எழுந்து நிற்பதற்கு என்ன காரணம்.  அந்த நாட்டின் ஆரம்பகால வரலாற்றை புரட்டி பார்த்தோம் என்றால் செவ்விந்தியர்களின் படுகொலைகள், கருப்பர்களின் அடிமைத்தனம் போன்றவைகளை தவிர்த்துவிட்டு பொருளாதார வளர்ச்சியை அதன் அடிப்படை சித்தாந்தத்தை மட்டும் காணும் போது அயல் நாட்டிலிருந்து வருபவனாக இருந்தாலும், உள்நாட்டிலேயே இருப்பவனாக இருந்தாலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற தொழில்களை செய்ய சகல விதத்திலும் அரசாங்கம் உதவி செய்தது.  வெளிநாட்டு மூலதனத்தை வரவேற்கும் அதே நேரத்தில் அந்நிய பொருட்களின் முதலீட்டை பெருமளவு தவிர்ப்பது.  இது தான் அந்த நாட்டின் ஏகப்போக வளர்ச்சிக்கு ஆதாரம் என்று சொல்லலாம்.

        இதை இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் வெளிநாடுகளில் இருந்து அமெக்காவில் குடியேறிய எவருக்கும் சொந்தமாக நிலம் வாங்கவோ, தொழில் துவங்கவோ எந்த வித தடையும் இல்லை.  அந்த நாட்டில் கிடைக்கின்ற வளங்களை வைத்து துவங்கப்படுகின்ற எந்த தொழிலுக்கும் அரசாங்கம் எல்லா வித சலுகைகளையும் தடையில்லாமல் வழங்கும்.  அதே நேரம் அயல்நாட்டிலிருந்து எதாவது பொருட்களை வரவழைத்து தொழில்களை நடத்த வேண்டுமென்றால் அதற்கு அவ்வளவாக அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது.  இது தான் அமெரிக்காவின் ஆரம்பகால பொளாதார அஸ்திவார பணியாகும்.  இந்த கொள்கையால் நாட்டினுடைய இயற்கை வளங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு நாடு செழுமைப்பட்டது.
         ஆனால் நம் நாட்டு நிலைமையோ தலைகீழானது.  உள்நாட்டு தொழில்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. உள்நாட்டு இயற்கை வளங்களை யார் அள்ளி கொண்டு போனாலும் கவலையில்லை அயல்நாட்டு முதலீடு வந்தால் போதும் அயல்நாட்டு பொருட்கள் வந்து இந்திய பொருட்களளை சந்தையிலிருந்து விரட்டினாலும் அரசாங்கத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும் வரவேண்டியது வந்தால் போதும் என்ற நிலைமை தான் இருக்கிறது.

        நம் நாடு ஒரு விவசாய நாடு.  கிழக்கிலிருந்து மேற்காக 2600 கிலோ மீட்டரும், வடக்கிலிருந்து தெற்காக 4500 கிலோ மீட்டரும் பரந்து விரிந்து கிடக்கும் பெரிய நாடாகும்.  இதை நில அளவை கணக்கில் தோராயமாக சொல்வதென்றால் சற்றேறக்குறைய 32, கோடியே 90 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பாகும்.  இதில் விவசாயத்திற்கு ஏற்ற நிலம் மூன்றில் இரண்டு பங்கு மட்டும் தான்.  எந்த நாட்டிலும் இல்லாத அளவு வற்றாத ஜீவநதிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகம்.  சிந்து கங்கை, பிரம்மபுத்திரா துவங்கி தாமிரபரணி வரையிலும் அதன் எண்ணிக்கை விரிகிறது.
         ஆரம்பகாலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற கோஷத்தை முன் வைத்து அரசியல் நடத்தினார்.  அந்த கோஷம் மற்ற துறைகளுக்கு எந்தளவு சரியானதோ அது நமக்கு தெரியாது.  ஆனால் இயற்கையை பொறுத்த வரை மிகவும் சரியானது.  தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நீர் வளம் என்பது மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது மிக குறைவாகவே உள்ளது.  இதனால் இந்தியாவின் சமச்சீர் வளர்ச்சி என்பது இயற்கையாக இல்லை.  ஆனால் அரசாங்க நிர்வாகம் நினைத்தால் சமமான வளர்ச்சியை கொண்டு வந்துவிட முடியும்.  ஆனால் இந்தியாவை ஆளுகின்றவர்களும் தமிழ்நாட்டு தலைவர்களில் ராஜாஜி, காமராஜை தவிர மற்ற அனைவருமே வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்களாக இருந்து வருவதினால் தேசத்தின் நிலை தொடர்ந்து கேள்வி குறியாக இருந்து வருகிறது.

        கடல், காடு, மலைகள் மட்டுமல்ல நிலவளமும், நீர்வளமும், கனிமவளமும், மனிதனின் ஆரோக்கிய வளமும் தெளிவான விவசாய கொள்கைகளினால் மட்டுமே முன்னுக்கு வர இயலும்.  இன்னும் சொல்வதென்றால் நிலக்கரி, எண்ணெய் வளம், எரிவாயு, தங்கம் ஆகிய அனைத்துமே விவசாயத்தோடு சம்பந்தப்பட்டது தான்.  வன வளத்தையும் விவசாயத்தையும் புறக்கணித்து இப்போதைய நமது அரசாங்கம் செயல்படுகிறது.  நமது மக்களும் அதை பற்றிய அக்கறை இல்லாமல் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ ஆரபித்து விட்டார்கள்.  மக்களும் அரசாங்கமும் உடனடியாக மாறாவிட்டால் 2020-ல் வல்லரசாக வேண்டிய இந்தியா பிச்சைகாரனாகி உலக வீதியில் நின்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
        இயற்கை வளங்களையும் அது சார்ந்த உள்நாட்டு தொழில்களையும் கவனிக்காமல் விட்டால் காற்று மண்டலம் இன்னும் பாதிக்கப்படும்.  பயிர்களை வளர்ப்பதற்கு மட்டுமல்ல குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்ற நிலை ஏற்படும் மாசுப்பட்ட காற்றால் மூச்சுவிடக் கூட வழியில்லாமல் இந்திய சமூகமே சாக வேண்டிய நிலை வரும்.  ஓடி ஓடி சம்பாதிக்கும் ஒருவனை நிறுத்தி எதற்காக ஓடுகிறாய் என்று கேட்டால் என் பிள்ளை குட்டிகளுக்காக ஓடுகிறேன் என்பான்.  பிள்ளை குட்டிகளின் வாழ்விற்கு உழைப்பது நல்லது தான்.  ஆனால் அந்த குழந்தைகள் வாழ பூமி வேண்டும்.  நமது பூமியே கரிந்து சாம்பலாகி போன பிறகு குழந்தைகள் எப்படி வாழ்வார்கள்.  இதை ஒவ்வொரு தனிமனிதனும் கட்டாயம் நினைத்து பார்க்க வேண்டிய தருணம் இது.

    எல்லோரும் இப்படி தான் பேசுகிறார்கள்.  தலைவர்கள் சரியில்லை அவர்களது நிர்வாகம் சரியில்லை.  எல்லாவற்றிற்கும் மேலாக பொதுமக்களே சரியில்லை என்று வாய் கிழிய பேசுகிறார்கள்.  பேனாவில் மை தீரும் மட்டும் எழுதுகிறார்கள்.  ஆனால் யாருமே சிக்கலை தீர்ப்பதற்கு இது தான் வழி என்று சொல்லவில்லை.  நோய் இருப்பதாக சொன்னால் போதுமா?  அதனுடைய பின்விளைவுகளை விளக்கி கூறி பயமுறுத்தினால் போதுமா? நோய் தீருவதற்கான மருந்து இன்னதென்று வழிகாட்ட வேண்டாமா?  என்று சிலர் கேட்கலாம்.  அது தவறில்லை.
        ஆனால் நமது இந்திய நாட்டின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு புதிதாக எந்த வழிமுறைகளையும் நாம் தேட வேண்டியதும் இல்லை.  யாரும் காட்ட வேண்டியதும் இல்லை. பல்லாயிரம்  ஆண்டு காலமாக இந்திய மக்கள் மரபுவழியாக பின்பற்றி வந்த அனைத்து விதமான நடைமுறை வாழ்க்கை முறைகளையும் தொகுத்து சுதேசிய பொருளாதாரம் என்ற அற்புதமான சித்தாத்தை நமக்கு தந்து இருக்கிறார் தேச தந்தை மகாத்மா காந்தி.

        காந்திஜி சொன்ன பொருளாதாரம் நகரங்களை மையமாக கொண்டு உருவானது அல்ல.  நமது இந்தியாவில் நகரங்கள் என்பது மிக குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளது.  குறைவான எண்ணிக்கையில் உள்ள எவற்றையும் மையமாக வைத்து செய்கின்ற செயல்கள் வீக்கத்தை கொடுக்குமே தவிர வளர்ச்சியை கொடுக்காது.  பரந்து கிடக்கின்ற கிராமங்களை மையமாக வைத்து தான் காந்தி தனது பொருளாதார திட்டங்களை வகுத்தார்.  அந்தந்த பகுதியில் கிடைக்கும் பொருட்களை வைத்து தொழில் துவங்கி தனது தேவைகளை அலையாமல் இருந்த இடத்திலேயே மனிதன் நிறைவேற்றிக் கொண்டால் இயற்கை வளங்களை அழிக்க வேண்டியதில்லை.  அபாயத்தில் சமுதாயத்தை நிறுத்த வேண்டிய நிர்பந்தமும் இல்லை.
         நடைமுறைக்கு ஒத்துவர கூடிய காந்திய பொருளாதார அமைப்பை கை கழுவி விட்டு அல்லது குழித்தோண்டி புதைத்து விட்டு சோஷலிச பொருளாதாரத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது தான் நமது நாட்டு வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாகும்.

        மகாத்மா காந்தியின் பொது வாழ்க்கையில் இரண்டு பெரிய குற்றங்களை இந்திய மக்கள் தைரியமாக சுமத்தலாம்.  ஒன்று விடுதலைக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை கலைக்காமல் விட்டுவைத்தது.  இரண்டு சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பதிலாக ஜவகர்லால் நேருவை பிரதமராக்கியது.  இன்று நாம் நமது தேசத்தில் அனுபவித்து வரும் பல சங்கடங்களுக்கு நேருவை முதல் காரணம், மூலக்காரணம் என்றும் சொல்லலாம்.

        நேரு இந்திய விடுதலைக்காக போராடியவராக இருக்கலாம்.  இந்த தேசத்தின் மீது அதிகமான பற்றுடையவராகவும் இருக்கலாம்.  ஆனால் அவர் மூளையும், மனமும் இந்திய தன்மையை விட ஐரோப்பிய தன்மையையே அதிகம் விரும்பியது என்பது கசப்பான உண்மை.  அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, லண்டன் போன்ற நாடுகளின் பொருளாதார சிந்தனைகளே அவர் மனம் முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தது.  மேற்கு நாடுகளில் நிறுவப்படும் கனரக தொழிற்சாலைகளே இந்தியா முழுவதும் நிறைய வேண்டுமென்று கனவு கண்டார்.  இந்த கனவு மெய்ப்படவில்லை என்பது வேறு விஷயம்.  இந்த கனவால் இந்தியாவின் பாராம்பரிய தொழில்கள் முற்றிலுமாக செத்துவிட்டது என்பது தான் முதன்மையான விஷயம்.
        ஐரோப்பிய பொருளாதார சிந்தனை என்பது முதலாளிகளை மையமாக வைத்து உருவானதாகும்.  சோஷலிச பொருளாதாரமோ மக்களை பற்றி கவலைப்படாமல் அரசாங்கத்தின் கஜானாவை பற்றி மட்டுமே கவலைப்படுவதாகும்.  இந்த இரண்டு பொருளாதார தத்துவத்தை விட காந்திய பொருளாதார சிந்தனை முற்றிலும் மாறுபட்டதாகும்.  இது மக்களின் பணத்தை மக்களுக்காக நேரடியாக செலவிடுவது அல்லது மக்கள் தங்கள் தேவைக்கு தாங்களே பொருளியியலை உருவாக்கி கொள்வதாகும்.  இந்த நடைமுறை சித்தாந்தத்தை விரும்பாத நேரு ஐரோப்பிய பொருளாதார பாணியை அதாவது அரசாங்கமே முதலாளி என்ற பாணியை சோஷலிசம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தினார்.

        காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமான அறிவு ஜீவிகளின் கூட்டமும், காங்கிரஸ் கையில் இருந்த அரசாங்க செய்தி ஊடகங்களும் நேருவின் சோஷலிச பொருளாரதாரத் திட்டத்தை திருமதி. இந்திரா காந்தி ஆட்சி வரையில் கூட துதிப்பாடி தீர்த்தார்கள்.  நாலாபுறமும் சோஷலிசம் என்பது தான் மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க கூடிய கற்பக தரு என்று பிரச்சாரம் நடந்தால் மக்கள் பாவம் என்ன செய்வார்கள்.  பொய்யை நிஜம் என்று தான் நம்புவார்கள்.  இப்படி சகல தரப்பாராலும் போற்றப்பட்ட சோஷலிச சித்தாந்தமும் இந்த நாட்டில் இந்த நிமிடம் வரை முப்பது கோடி மக்களை வறுமை கோட்டிற்கு கீழே வைத்திருக்கிறது என்பது தான் எதார்த்த நிலையாகும்.
        திரைப்பட நடிகர்களின் ரசிகர்களாக இருக்கும் பக்குவமற்ற விடலைகளை தாங்கள் விரும்பும் கதாநாயகன் எந்த உடையை அணிந்து இருக்கிறானோ அதே மாதிரி உடையை அணிந்து கொண்டு பரிதாபமாக தெருவை சுற்றிவருவார்கள்.  அதே போலவே ரஷ்யா உலகிற்கு முதல் முறையாக அறிமுகப்படுத்திய ஐந்தாண்டு திட்டம் என்ற கற்பனையான இலக்கை இந்தியாவும் நடைமுறைப்படுத்த துவங்கியது.  சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இந்தியாவில் போடப்பட்டுள்ள ஐந்தாண்டு திட்டங்கள் எதுவும் நிஜமாகவே வெற்றி அடைந்ததா?  அதன் பயனை இந்திய மக்களில் கால்பங்கு பேராவது அனுபவித்தார்களா?  என்பது யாருக்குமே தெரியாத ரகசியமாகும்.  அதாவது ஐந்தாண்டு திட்டங்களின் உண்மையான நிலை நிதி ஒதுக்கீடு செய்து அரசியல்வாதிகள் பகிர்ந்து கொள்வது தான்.

        அந்த நிதியை அரசியல்வாதிகள் சுயநலமாக பயன்படுத்தி கொண்டார்கள் என்று நான் சொல்வதை சிலர் மறுக்கலாம்.  முற்றிலும் கற்பனையான குற்றச்சாட்டு என்று வாதிடவும் சிலருக்கு தோன்றலாம்.  அவர்கள் எல்லாம் அடிப்படையான ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்.  ஐந்தாண்டு திட்டம் என்பதே ரஷ்யர்களின் மூளையில் உதித்த திட்டங்கள் தான்.  சோவியத் யுனியன் அரசாங்கத்தால் போடப்பட்ட ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் பல லட்சம் கோடி ரூபாய்கள் மக்களிடம் இருந்து வரிப்பணமாக பெறப்பட்டன.  அந்த பணம் ரஷ்யாவின் ராணுவ நோக்கத்திற்காகத் தான் பயன்படுத்தப்பட்டது.  இதனால் ரஷ்ய மக்கள் பலர் வறுமையில் வாடினாலும் வெளி உலகத்திற்காக சோஷலிச போர்வையால் மூடப்பட்டனர்.
         கொதித்து கொண்டிருக்கும் நீராவியை எத்தனை நாள் கொப்பறையில் அடக்கி வைக்க முடியும்.  இன்று இல்லை என்றாலும் நாளை அது வெடித்து தான் தீரும்.  அப்படி வெடித்து தான் 1992-ல் சோவியத் யுனியன் சிதறுண்டு போனது.  சோவியத் மக்களின் வரிப்பணமாவது ஆயுதங்களாக மாறியது.  இந்தியாவில் ஐந்தாண்டு திட்டங்களுக்காக வசூலிக்கப்பட்ட வரிப்பணம் என்ன ஆனது, எங்கே போனது?  நிச்சயம் மக்களிடத்தில் அது வந்து சேரவில்லை.  பிறகு அரசாங்கம் நடத்துபவர்களின் சட்டைபையில் தானே அது இருக்க வேண்டும்.

        ஜனநாயக சூறாவளி ரஷ்யாவை தாக்கிய அதே 92-ம் வருடம் இந்தியாவின் பொருளாதாரம் என்பது ஏறக்குறைய திவாலான சூழலில் இருந்தது.  உலக நாடுகள் எதுவுமே நமக்கு கடன் தர தயங்கின, மறுத்தன.  இந்த நிலையில் ஐந்தாண்டு திட்டங்களின் மூலமாக பெறப்பட்ட வரிப்பணம் எதுவும் நாட்டை காப்பாற்றவில்லை.  சாதாரண இந்திய மக்கள் வங்கிகளில் சேமித்து இருந்த பணமே நமது பொருளாதார கட்டமைப்பை காப்பாற்றியது.
         நமது பாரத திருநாட்டில் ஆறு லட்சம் கிராமங்கள் இருக்கின்றன.  இந்த கிராமங்கள் பலவற்றில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை.  ஏராளமான மக்கள் வயிற்று பிழைப்பிற்காக நகரங்களை நோக்கி குடி பெயர்ந்து விட்டார்கள்.  அப்படி குடி பெயர்ந்த மக்களில் 75% பேருக்கு இரண்டு வேளை உணவு கூட சரிவர கிடைப்பதில்லை.  கிராமத்தை விட்டு நகராத பொது மக்களின் நிலையோ இன்னும் பரிதாபகரமானது.  பலர் இரவு நேரம் மட்டுமே சாப்பிடுவார்கள்.  இன்னும் பலரோ ஆரோக்கிய உணவு இல்லாமல் தவிக்கிறார்கள்.

        ஆனால் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் வறிய மக்களை சுரண்டி சம்பாதித்த கணக்கில் வராத கருப்பு பணம் இந்த நாட்டில் 50 லட்சம் கோடிகள் இருப்பதாக சொல்கிறது.  இப்படி சொல்வது எதிர் கட்சிகளை சார்ந்தவர்கள் அல்ல.  ஏன் என்றால் அவர்களும் ஆட்சியில் இருந்த போது உண்டு கொழுத்த உத்தமர்கள் தான்.  இந்திய ரிசர்வ் வங்கி தான் இந்த தகவலை தருகிறது.  இந்த 50 லட்சம் கோடி இந்தியாவில் சுற்றுகிற கருப்பு பணம் தான்.  அந்நிய நாடுகளில் நம்மவர்கள் பதுக்கி வைத்திருக்கும் பணம் இதை விட பல மடங்கு இருக்கும்.  இப்படியே வறிய மக்கள் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டு கொண்டிருந்தால் அனைவரும் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியே இல்லை.
         உள்நாட்டு பண முதலைகள் கொள்ளையடிப்பது ஒரு புறம் என்றால் தற்காலத்தில் புதிதாக முளைத்திருக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் என்ற பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பது வேறொரு விதம்.  இதில் வேதனை என்னவென்றால் காலகாலமாக தாங்கள் கொள்ளையடிக்கப்படுவதை பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் பெருவாரியான பொது ஜனங்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  யாராவது ஒரு நல்ல மனிதன் இதை எடுத்து சொன்னால் அவன் பேச்சை கேட்பதற்கு யாருமில்லை.  காரணம் அப்படி சொல்பவன் கவர்ச்சி மிக்க அரசியல் தலைவனாகவோ, சினிமா கதாநாயகனாகவோ இருப்பதில்லை.  இந்த நாட்டில் மட்டும் தான் நியாயத்தை சொல்வதற்கு கூட கவர்ச்சி தேவைப்படுகிறது.

        இந்த கொடுமையான நிலை மாற மிக அவசரமாக நமது நாட்டின் பொருளாதார கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்.  அந்நிய ஆட்சி நம் நாட்டில் இருந்து அகன்று அறுபத்தி மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் கூட பொருளாதார சுகந்திரத்தை இன்னும் நாம் அடையவில்லை.  எனவே அந்த விடுதலை அடைய சுதேசிய பொருளாதார அமைப்புடன் கூடிய தேசிய விவசாய சட்டம் அவசியமாகவும், அவசரமாகவும் தேவை.  சுதேசிய பாதுகாப்பு சட்டம் வந்தால் தான் இந்திய வேளாண்மையையும், பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியும்.  அப்போது மட்டும் தான் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும்.  அப்படி அமையாத வரை இந்திய சுதந்திரம் என்பது அண்ணாதுரை அவர்களின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் குஷ்டரோகி கை வெண்ணையே ஆகும்.
        தற்போதைய இந்திய அரசியல் தலைவர்கள் ஐக்கிய நாட்டு சபையின் பாதுகாப்பு போராயத்தில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வேண்டுமென்று உள்நாட்டிலும் பேசுகிறார்கள்.  வெளிநாட்டுக்கு சென்றும் பேசுகிறார்கள்.  வேறொரு சாராரே 2020-க்கு மேல் இந்தியா வல்லரசாகிவிடும் என்றும் கனவு காண்கிறார்கள்.  இவைகள் எல்லாம் நடக்க வேண்டுமென்றால் மேடை போட்டு பேசி திரிந்தால் போதாது.  நடைமுறைக்கு உகந்த சுதேசிய சட்டங்களை கொண்டு வர வேண்டும்.

        தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் போதிய வாய்ப்பு இல்லாமல் பின் தங்கி கிடக்கிறார்கள்.  அவர்களை முன்னேற்றுவதற்கு வேலை வாய்ப்புகளில் அதிகமான இட ஒதுக்கீடுகளை கொடுக்க வேண்டுமென்று சொல்லி சில தலைவர்கள் போராடுகிறார்கள்.  அரசாங்கமும் சில சலுகைகளை அவ்வபோது வழங்குகிறது.  இப்படி இட ஒதுக்கீடு வழங்குவதால் மட்டும் உண்மையான சமூக விடுதலை கிடைத்து விடும் என்று நினைப்பது கவர்ச்சியான பகல் கனவாகும்.  
  உண்மையான சமூக விடுதலை வேண்டுமென்றால் பொருளாதார விடுதலை இருந்தால் தான் முடியும்.  இட ஒதுக்கீடு வழங்குகிறோம், வந்து பெற்று கொள் என அழைத்தால் வறுமையில் கிடக்கும் தகப்பன் பிள்ளை பசியாற அதை வேலைக்கு அனுப்புவானா?  பள்ளிகூடம் அனுப்புவானா?  இலவச கல்வி என்று முட்டி மோதி படித்தாலும் கூட ஒரு ஏழை மாணவன் தொழிற் நுட்ப பயிற்சியை பணம் இல்லாமல் பெற எங்கே வழி இருக்கிறது?  எனவே தான் முழுமையான பொருளாதார சுதந்திரம் ஏழைகளுக்கு வேண்டுமென்று சொல்கிறேன்.

        அடித்தட்டு மக்களும் உடனடியாக பயனை அடைய கூடிய தொழில் விவசாயமும் அதை சார்ந்த வேலை வாய்ப்புகளாலும் தான்.  எனவே விவசாயிகளின் கஷ்டங்களை புரிந்து கொண்டு சட்டதிட்ட கொள்கைகளை அமுல் படுத்த வேண்டும்.  மேலும் விவசாயத் தொழில் பாதுகாப்புடன் நடக்க நீர் ஆதாரங்களை பெருக்க வேண்டும்.  விவசாயிகளுக்கு தங்களது உற்பத்தி பொருட்களை உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் சுலபமாக விற்பனை செய்ய வழி ஏற்படும் படி சட்ட சிக்கல்களை போக்க வேண்டும்.
  உலக வங்கியின் வழி காட்டுதல் படி இந்திய விவசாய கொள்கைகள் தீர்மானிக்கப்பட கூடாது.  அப்படி தீர்மானிக்கப்பட்டால் சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலை படு மோசமாக அழிந்து விடும்.  விவசாயத்திற்கு தடையில்லாத மின்சாரத்தை அரசாங்கத்தால் வழங்க முடியவில்லை என்றால் சூரிய சக்தியால் இயங்க கூடிய மின் மோட்டார்களை விவசாயிகள் அனைவருக்கும் வழங்கலாம்.

        அபிவிருத்தி பணிக்கென இன்னும் எத்தனையோ நல்ல வழிமுறைகள் உள்ளன.  அவற்றில் ஒன்றிரண்டையாவது செயல்படுத்தினால் நிச்சயம் நம் நாடு உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும்.  மாறாக இப்படியே நிலைமை தொடரும் என்றால் பசியை பொறுத்து கொள்ளாத மக்கள் நிச்சயம் ஒரு நாள் கொந்தளிப்பார்கள்.  அப்படி ஒரு நிலை வந்தால் பல உயிர்கள் சுவடுகள் இல்லாமல் அழிந்து போகும்.  எனவே நாடு வாழ போலி சோஷலிச கொள்கைகளையும் முதலாளித்துவ கொள்கைகளையும் தூக்கி தூர எறிந்து விட்டு காந்திய பொருளாதார கொள்கைக்கு வர வேண்டும்.  அந்த நாள், எந்த நாள்?

+ comments + 10 comments

Anonymous
08:39

மிகத் தெளிவான சிந்தனை.
ஆரம்பத்தில், அடிப்படையில், கருவில்,DNA யில் தவறு நிகழும்போது, அதன் தாக்காம் எல்லாக்கட்டத்திலும் இருக்கும்.
அப்படிப்பட்ட அடிப்படைத் தவறுகள்தான் நேரு முதல் பிரதமரானதும் பட்டேல் ஒதுக்கப்பட்த்தும், காங்கிரசைக் கலைக்காததும் முற்றும் முழுமூடத்தனமான Secular Government எனப் பிரகடனப்படுத்தினதும் ஆகும்.சுதந்தரத்திற்கு முன்பு நாடு காந்திகையில் இருந்தது;சுதந்தந்திரத்திற்குப் பிறகு நாடு, நமது நாட்டு கலாச்சாரம், வாழ்வியல், சமூகவியல், இயற்கையியல் முதலிய பற்றி சிறிதும் அறிவற்று, கவலையற்று அயல்நாட்டு வழிமுறை மோகத்தில் கட்டுண்டு நாத்திக வாதி நேருகையில் இருந்ததுதான் நமது நாட்டின் சாபக்கேடு.நமது இளஞர்களும் இளிஞிகளும் சினிமாக் கவர்ச்சியில் மூழ்கி சினிமாத்திரையில் தம் தலைவைத்தேடி அப்படியே அமர்த்தும் முழுமூட வெகுளிகளாக இருப்பதுதான் கலியுகத்தின் வெற்றி. கலியுகம் இப்படித்தான் கேடு கெட்டிருக்கும் என்று சொல்லுவது நமது நாட்டுக்குமட்டுமே
இருக்கும் சிற்ப்பம்சமாகும்.

யார் என்ன சொன்னாலும் காரி உமிழ்ந்தாலும் அரசியல்வாதியாகட்டும், அதிகாரியாகட்டும் செவிடன் காதில் சங்கு ஊதினார் போலத்தான் ஆகப்போகிறது.

Pransan San
18:43

Etha avalagkal eppa marum?

தெளிவான கட்டுரை. மிக சிரத்தை எடுத்து எழுதியிருப்பது படிக்கும்போதே தெரிகிறது உங்களது இந்த் சமூக அக்கறைக்கு எனது வணக்கம்

Anonymous
12:03

வணக்கம்

சமூக கண்ணோட்டம் பலரிடம் கிடயாது அனால் செலறிடம் இருந்து செயல்படகிறார்கள்
அந்த செயல்பாடு அடிமட்டத்தில் இருப்பவருக்கு கிடைபதில்லை உண்மையான பயனாளிக்கும்
கிடைப்பதில்லை

அன்புடன் சந்திரசேகர்

Anonymous
01:56

என்ன சொன்னாலும் இந்த மக்கள் அப்படியே நம்புறாங்க!!! அமெரிக்காவில் 90% சீன பொருள்கள்தான் இருகின்றன! - Recent ABC local news - America

நன்றி!!! தங்கள் இந்திய மீது கொண்டுள்ள அக்கறைக்கு.....

நன்றி!!! தங்கள் இந்திய மீது கொண்டுள்ள அக்கறைக்கு.....

நன்றி!!! தங்கள் இந்திய மீது கொண்டுள்ள அக்கறைக்கு.....

Anonymous
21:11

Very good article. I am going through many of these issues as well..


Next Post Next Post Home
 
Back to Top